’கஜா’ புயல் நிவாரணத்திற்கு கைவிரித்த மோடி கும்ப(ல்)மேளாவிற்கு கொட்டிக் கொடுத்தது 7,100 கோடி!

பிப்ரவரி 01-15 2019

மஞ்சை வசந்தன்

கும்பமேளா என்பது என்ன?

அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா நடக்கிறது. கும்பமேளா தோன்றிய புராணக்கதை மொள்ளமாரித்தனத்தில் முளைத்தது.

“தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்களை இனி பார்த்து மகிழ முடியாது என்ற நிலை வந்ததால், உல்லாச வாழ்வை இழந்தனர்.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியதாம். இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் மனு கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின்படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால், அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ஓட்டத்தின்போது, அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.’’

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். ஆக சிந்திய நான்கு துளிகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்தி அதையும் உலகில் அதிகம் மக்கள் ஒன்றுகூடும் மதத்திருவிழா என்று வேறு பெருமை பேசி அலைகிறது மதவெறிக் கூட்டம். அந்த அமுதத்தின் பிறப்பே ஒரு மோசடியில் குடிகொண்டிருக்கிறது எனும் போது அதன் எச்சில் துளிகள் எப்படி பாவத்தை போக்கும்?

பல கோடி மக்கள் நீராடினார்கள், அரசு பல ஆயிரம் கோடி செலவழித்தது, வர்த்தக முதலாளிகள் பத்தாயிரம் கோடிகளை அள்ளினார்கள் என்று கும்பமேளாவின் கணக்குகள் எல்லாம் கோடிகளில்தான். கூடவே அலகாபாத் ரெயில் நிலைய நெரிசலில் முப்பது, நாற்பது பேர் இறந்து போயிருக்கின்றனர் என்ற கணக்கும் உண்டு. மதக்கூடல் நடக்கும் மெக்காவோ, இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்.

அலகாபாத் கங்கையில் குளித்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி பிறப்பில்லா முக்தி நிலை கைவரப்பெறுமாம். இந்த குறுக்கு வழி முக்தியில் பெரிய அளவு சிரமப்படத் தேவையில்லை என்று பலன் கூறப்படுவதால் வட இந்தியாவில் இருக்கும் எல்லா வகை சாமியார்களும் கும்பமேளாவில் குவிகிறார்கள்.

வாழ்நாள் முழுக்க மௌன விரதம் இருக்கும் பரிவாஜக சாமியார்கள் தங்கள் வருகையை மணி அடித்து தெரிவிப்பார்களாம். தங்களது உடலை வருத்தி முக்தியடையலாம் எனும் ஊர்த்துக வாஹூர சாமியார்கள், தலைகீழாக தவம் செய்யும் சிரசாசன சாமியார்கள், திசைகளை ஆடையாகத் தரித்த திகம்பர சாமியார்கள், நிர்வாணிகள், அப்புறம் நிர்வாண நாகா சாமியார்கள் என்று கும்பமேளாவில் கவர்ச்சியே இத்தகைய வேடிக்கை சாமியார்கள்தான்.

இவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் கங்கையில் குளிப்பார்களாம். இவர்களை பார்ப்பதற்கென்றே பெரும் கூட்டம் கும்பமேளாவிற்கு வருகிறது. விளம்பர நடிகை பூனம் பாண்டே கூட இந்த ஆண்டு கும்பமேளா சென்று குளித்து சாமியார்களின் ஆசிகளை வாங்கியிருக்கிறாராம்.

மூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை களமாக்கியுள்ளது.

நிர்வாண சாமியார்களின் அலங்கோலம்:

நிர்வாண சாமியார்கள் பணம் கொடுத்தால்தான் ஆசிர்வாதம் மட்டுமல்ல, காமிராவுக்கு போசே கொடுப்பார்களாம். இவர்களில் சிலர் பைக்கெல்லாம் வைத்து ஓட்டுகிறார்கள். சமயங்களில் நவநாகரிக அடைகளும் அணிகிறார்கள். காமிராவைத் திறந்தால் உடன் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

கஞ்சா முதலான போதை பொருட்கள், மக்கள் கொடுக்கும் பணம் என்று சாமியார்களின் வாழ்க்கை பேஷாகவே கழிகிறது. அரசர்களைப் போல அலங்காரத்துடன் உருத்திராட்சக் கொட்டை, காவிப்பட்டையுடன் வரும் சாமியார்களும் இங்கு உண்டு. இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள் போல பரிவாரங்களுடன் வருவார்கள். அடுத்து கும்பமேளாவின் விசித்திரக் காட்சிகளை பார்ப்பதற்கென்றே வெளிநாட்டாரும் கணிசமாக வருகின்றனர்.

அலகாபாத்தில் (பிரயாகை என்றும் சொல்லுவர்) திரிவேணி சங்கமம் உள்ளது. இதில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கின்றன. எல்லோரும் நேரில் பார்க்கலாம். இதில் சரஸ்வதி நதியும் கலக்கிறது என்று பொய்க் கதையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு நதியே கிடையாது என்பதுதான் புவியியல் உண்மையாகும். வரலாற்று ஆசிரியர்களும் சரஸ்வதி நதி என்றே கிடையாது என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்கள்.  அரியானா பகுதியில் சரஸ்வதி நதி ஓடியது என்றும், அது ஆரிய நாகரிகத்திற்கானது என்றும் இட்டுக் கட்டி நிலைக்க வைப்பதற்காக ஆரியர் கட்டி விட்ட கதையாகும்.

பக்தி என்று வந்து விட்டால் பெண்கள்கூட போதை மூளையில் ஏறி அவர்கள் அறிவற்று அலைகிறார்கள்.

புண்ணிய நதியா? புழுக்கள் நெளியும் சாக்கடையா?

இவ்வளவுக்கும் இவர்கள் குளிக்கும் நதிகள் இருக்கின்றனவே –  அவை புண்ணிய நதிகளா?  நோய்க் கிருமிகளின் ஒட்டு மொத்தமான சங்கமும் அதில்தான்!

இந்தப் புண்ணிய நதியில்தான் நகரப் புறங்களின் சாக்கடைகள்  கலக்கின்றன. கங்கை நதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு  தூக்கி எறியப்படுகின்றன. அப்படி செய்வது  அவர் களுக்குப் புண்ணியமாம். கிழட்டுப் பசுக்களும் உயிரோடு இந்த நதியில் தள்ளப்படுகின்றன (இது பசுவதை இல்லையா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை? ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ!)

1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி யிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் தொற்று நோய்ப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனார்கள்.

இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் ஆயிரத்துக்கு  94 குழந்தைகள்  மரணிக்கின்றன என்றால் காசி வட்டாரத்தில் மட்டும் 13,394 குழந்தைகள் மரணம் அடைகின்றன என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை!

மக்கள் நல அரசு என்றால் இந்தக் கொடுமை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே! மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே! மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  சொல்லுகிறதே – அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ!

மகா கும்பமேளா?

12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாம். 6 வருடங்களுக்கு ஒருமுறை விழா வருவது அர்த் கும்பமேளாவாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி நகதிகள் சங்கமிக்கும் இடம் திருவேணி சங்கமம். அதில் குளிப்பது, நீராவடுவது புனிதமாம். ஜனவரி 15 2019 முதல் மார்ச்சு திங்கள் 2019 முடிய 49 நாட்கள்.

இந்த கும்பமேளாவிற்காக ரூ.7,100/_ கோடிகள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி வருவாயை, மக்களின் வரிப் பணத்தை ஒதுக்கி, செலவிடப்பட்டுள்ளது. உ.பி.யின் காவி யோகி ஆளும் பா.ஜ.க. அரசு. இதற்கு முழு ஆதரவும் பொருளாதார பின்புலமும் மத்திய மோடி பா.ஜ.க. அரசின் மனமுவந்த ஒப்புதலும், ஆதரவும் தடையில்லாத அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

சாமியார்கள், சந்நியாசிகள், இந்துத்துவ வெறியர்கள் வந்தடைய ரூபாய் 12 கோடி ஒதுக்கி உள்ளது. உ.பி.யின் பா.ஜ.க. அரசு. சிறப்பு இரயில்கள் 800 வண்டிகளும், 500 பேருந்துகளும், 250 கி.மீ புதிய ரோடுகளும் 22 தொங்கு பாலங்கள், 9 மேம்பாலங்களும், 22 பெரிய பாலங்கள் கங்கை, யமுனை நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. புதுது புதிதாக 64 குறுக்கு சாலைகளும் 264 தெருக்களும் அகலமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 20 லட்ச சதுர மீட்டருக்கு சுவர் வண்ணம் தீட்டப்பட்டு தேசத்தின் பொருளாதாரம், மக்களின் வரிப்பணம் முற்றிலுமாக வீணடிக்கப்படுகிறது.

தரைவழி, நீர்வழி மற்றும் ஆகாய மார்க்கமாகவும் வருபவர்களை அழைத்துவர சகல ஏற்பாடுகளும் பல ஆயிரம் கோடிகளில் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சி என்ற பெயரில் மக்களுடைய வரிப்பணம் முற்றிலுமாக கொள்ளை போகிறது. எந்த வளர்ச்சிப் பணியிலும் பொருளாதாரம் முதலீடு இல்லை.

10 லட்சம் வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டில் 12_15 கோடி மக்களின் காவி(லீ)களை பெருமளவு திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட உ.பி. மாநிலம் மிகக் குறைந்த தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களைக் கொண்டது. வேலைவாய்ப்பு முற்றிலுமாக அற்றுப் போய்விட்ட நிலையில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புனிதநீராடல், கங்கையில் குளிப்பது, என்பது மக்களை இந்துத்துவாவின் பெயரால் வெறிகொள்ள செய்யும் காவிகளின் முயற்சியாகும்.

மகா கும்பமேளா பெயரில் மதவெறி ஊட்டும் சதித்திட்டம்:

மூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை களமாக்கியுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளதன் மூலம் சங்க பரிவாரம் பீதியடைந்துள்ளது. அதற்காக மத உணர்வை தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைத் திரட்டும் பணிகளில் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் நடக்கவுள்ள அர்த் கும்பமேளாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களை வசமாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது.

நெருங்கி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தை கைப்பற்றுவது சங்கபரிவாரத்துக்கு முக்கியம். அதனடிப்படையில் கும்பமேளாவைப் பயன்படுத்தி இந்துக்களை காவி அரசியலின் பக்கம் திருப்ப தீவிரமாக திட்டமிட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஆறு வாரங்களுக்கு அர்த் கும்பமேளா நடக்க இருக்கிறது. இரண்டு கும்பமேளாக்களுக்கு இடையே வருவது அர்த் கும்பமேளா.  இதில் கலந்துகொள்ள வரும் லட்சக்கணக்கான பக்தர்களை வழிநடத்தவும் உதவிகளை செய்யவும் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சீருடை அணிந்து வரவிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்சி-ன் வாரணாசி வடக்கு பகுதி தலைவர் நந்தலால் தெரிவிக்கிறார்.  கும்பமேளாவில் நேரடியாக இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் இவர் தெரிவிக்கிறார்.

உத்தரபிரதேசம் காவிகளின் மாநிலமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இங்கே தேர்தல் கட்சிகளையும் விடவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. உ.பியை ஆறு பகுதிகளாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் 25 வட்டார அமைப்புகளுடன் தனது விஷக் கிளையை பரப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.  ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து ஆறிலிருந்து ஏழுநூறு பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வார்கள் என்றும் அவர்கள் கும்பமேளாவில் நெரிசலை கட்டுப்படுத்துவது, கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்கிறார் நந்தலால்.  கும்பமேளாவில் வருகிறவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, ஒரு லட்சம் பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட இருப்பதாகவும் லால் தெரிவிக்கிறார். அதாவது, சேவையை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை பெற திட்டமிடுகிறது காவி கும்பல்.

ஆர்.எஸ்.எசி-ன் வரலாற்றை சொல்லும் நாடகம் ஒன்றும் அரங்கேற இருக்கிறதாம். அதன் பெயர் ‘சங்கம் சரணம் கச்சாமி’ (‘சங்பரிவாருடன் அடைக்கலமாகிறேன்’). ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பவுத்த பிரார்த்தனை வாக்கியத்தை மாற்றி இதை உருவாக்கியிருக்கிறார்கள். திருட்டு ஆர்.எஸ். எஸ். கும்பலால் ஒரு பிரார்த்தனை வாக்கியத்தைக் கூட உருவாக்க முடியவில்லை!

பாஜக ஆளும் உ.பி அரசின் உதவியோடு நடக்கும் மிகப் பெரிய விழாவில் இந்துத்துகளை மத ரீதியாக தூண்டி, அவர்களை வாக்குகளாக மாற்றும் உத்தியாகவே திட்டமிடப் பட்டிருக்கின்றன.  545 தொகுதிகள் கொண்ட மக்களவையில், உ.பி. மட்டும் 90 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2014ஆ-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 71 தொகுதிகளை வென்றது பாஜக. அந்தக் கட்சி வென்ற 282 தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு தொகுதிகள் உ.பி.யில் வென்றவை ஆகும்.

கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி கங்கைக்கு பூஜை செய்து, பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா உதவி மையத்தை தொடங்கி வைத்தார் மோடி. அதுபோல, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் அதிக அளவிலான மக்களை திரட்டி கும்பமேளாவில் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுத இருக்கிறார்.

முன்பு விசுவ இந்து பரிசத் மூலம் இயக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. மக்களவை தேர்தலில் தோற்றுவிடக்கூடும் என்கிற பயத்தின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இந்த முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

1989-ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளா, காவி கும்பலை அணி திரட்ட உதவியது. ராம ஜென்மபூமி என்ற முழக்கம் கிளம்ப அது அடித்தளம் இட்டுக்கொடுத்தது. அப்போது விசுவ இந்து பரிசத் இந்த காவி நாடகத்தை அரங்கேற்றியது. அது போன்றதொரு திட்டமிடலைச் செய்ய இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளாவை பயன்படுத்த பார்க்கிறது காவி கும்பல்.

முன்னாள் அலகாபாத் ஆன பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் அர்த் கும்பமேளாவில் வி.எச்.பி. சாமியார்களை ஒருங்கிணைத்து ‘தரம் சன்சாத்’ நிகழ்வை மீண்டும் நடத்த இருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ‘ராமர் கோயிலை கட்டியே தீர வேண்டும்’ என முழங்கியது இந்த காவி கும்பல்.

குற்றவாளிகளின் கூடாரமாகும் கும்பமேளா

கொடூர குற்றவாளிகள் 60-க்கும் மேற்பட்டோர் கைது!

ஓராண்டிற்கு முன்பு மகாராட்டிரா மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளி கும்பமேளாவில் குளிக்கச் சென்றபோது பிடிபட்டார். இதுவரை 60க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றவாளிகள் கும்பமேளாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சோனு அரிச்சந்திர சர்மா என்பவர் குறிப்பாக, 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்த கவ்லா சாய்பாபா, கொலை, கொள்ளைகளுக்காக மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா அரசுகளால் தேடப்பட்ட சோனு அரிச்சந்திர சர்மா, பிரபல கொள்ளையன் வினு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இதேபோல் 2016- ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற உஜ்ஜைன் சிம்மஹஸ்தா என்ற கும்பமேளா நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 40 ஆண்டுகளாக நான்கு கொலைகளைச் செய்துவிட்டு சாமியாராக வேடமிட்டுத் திரிந்த சாமியாரும் அடக்கம். இரண்டு மாதம் நடைபெற்ற உஜ்ஜைன் கும்பமேளா முடிந்த பிறகு 138 கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அப்போதைய மத்தியப் பிரதேச காவல்துறை இணை  ஆணையர் வி.மதன்குமார்  ஊடகத்திற்குப் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யுனஸ்கோ அங்கீகாரம் கண்டனத்துக்குரியது

கும்பமேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது கண்டனத்துக்குரியது. ‘மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு’ பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. கும்பமேளாவின் அடிப்படையே பண்பாட்டுக்கு எதிரானது. கும்பமேளா நீராடல் சுகாதாரத்திற்கு எதிரானது. நிர்வாண ஊர்வலம் கலாச்சாரத்திற்கு எதிரானது. கும்பமேளாவின் நடைமுறை மதநல்லினக்கத்தை தகர்ப்பது. இதையெல்லாம் அறியாது யுனஸ்கோ அங்கிகாரம் அளித்ததை திரும்பப் பெறவேண்டும்!

கேரவன் ஏட்டின் கணிப்பு

நேரடியாக ஆர்.எஸ்.எஸ். காவிகளின் கண்காணிப்பில் நடக்கவிருக்கும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் ஓர் எளிய இந்து பக்தர், தனது பழைய குணங்களுடன் திரும்புவது சந்தேகமே என கவலை தெரிவிக்கிறது இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் கேரவன் இதழ்.

பாசிசத்தின் வாரிசுகள் அவ்வளவு எளிதாக தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையுடன் அமைத்த ஆட்சியைத்  தக்கவைக்க எல்லா வகையான சதியிலும், மோசடியிலும் ஈடுபடுவார்கள்! மக்களை மத ரீதியாக திரட்ட கற்று வைத்திருக்கும் வித்தைகளை பரிசோதனை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

‘கஜா’ புயலில் மக்கள் வாழ்விழந்து கதிகலங்கி நிற்கும் நிலையில் போதிய நிவாரணம் அளிக்காது கைவிரித்த மோடி அரசு இந்த ஆபாசக் கூத்துக்கு 7,100 கோடி ரூபாய் ஒதுக்கி, ஒத்துழைப்பும் உதவியும் செய்வதன் உள்நோக்கத்தைப் புரிந்து அனைவரும் எச்சரிக்கையோடு எதிர்வினையாற்ற வேண்டியது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *