வை. கலையரசன்
நோய் உள்ள இடத்தில் அல்லது நோயின் தாக்குதல் உள்ள இடத்திற்கு உடனடி மருந்து தேவை என்பதை அறிந்தவர் தந்தை பெரியார். ஜாதி ஒழிப்பு என்னும் சீரிய கொள்கையினை முதன்மையாகக் கொண்டு இயக்கம் கண்ட தந்தை பெரியார் அதற்கான செயல்களை ஆற்றினார். ஜாதி ஒழிப்பை ஒடுக்கப்பட்டோரிடம் மட்டும் கூறாமல், தம்மை உயர் ஜாதியினராக நினைத்துக் கொண்டிருந்தோரிடம் சென்று ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசினார்.
அவர் வழியில் திராவிடர் கழகம் தீண்டாமைக் கொடுமையும், ஜாதிய மோதல்களும் உள்ள இடங்களைத் தேடிச் சென்று ஜாதி ஒழிப்பை பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வரிசையில் அண்மையில் ஓசூர் சூளகிரியை அடுத்த வெங்கடேஷபுரத்தைச் சேர்ந்த நிந்தீஷ்_ஸ்வாதி ஜாதி_மறுப்பு காதல் இணையர்கள் ஆணவப் படுகொலைக்கு உள்ளானதைக் கண்டித்து ஜாதி_தீண்டாமை ஒழிப்பு மாநாடு டிசம்பர் 30 அன்று ஓசூர் இராம் நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாலை விடியல் கலைக்குழுவின் பறை இசையுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ.மதிமணியன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாநாட்டில் தலைவராக ஆசிரியரை முன்மொழிய இணைச் செயலாளர் அ.செ.செல்வம் வழிமொழிந்தார். மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் சட்டக் கல்லூரி மாணவி கா.வெற்றி கழகக் கொடியினை ஏற்றி இலட்சிய முழக்கமிட்டார். பெரியார் பிஞ்சு நன்மதி மழலைச் சொற்களால் கொள்கை முழக்கமிட்டார்.
தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். தமது உரையில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்புப் போராட்டத்தையும் மாநாட்டின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் ஓசூர் தொகுதி மேனாள் உறுப்பினருமான கோபிநாத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உரையாற்றினார். தமது உரையில் வருண தர்மத்தையும் அதன் விளைவுகளையும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமது உரையில், தந்தை பெரியாருக்கு முந்தைய ஜாதி ஒழிப்பு இயக்கங்களின் தோல்வியைச் சுட்டிக்காட்டி, ஜாதிக்கு மூலபலமான கடவுள் மதத்தை ஒழிக்க முற்பட்ட பெரியாரின் போர் முறையை விளக்கினார். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் கொள்கையுடைவர்களை ஒன்றிணைத்து நிற்போன் என்று கூறி நிறைவு செய்தார்.
இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் பி.சம்பத் அவர்கள் தன் உரையில், ஜாதி இந்தியாவில் நிலைபெற்றிருப்பதை விளக்கி ஜாதியைப் பாதுகாக்கும் குழந்தைத் திருமணங்களை வற்புறுத்தும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை விளக்கினார். 2019 மக்களைவைத் தேர்தலில் மதவாத சக்திகளை தூக்கி எறிவோம் என்று முழங்கினார்.
அவரைத் தொடர்ந்து ம.திமு.க. பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி உரையாற்றினார். அவர் தமது உரையில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மத பயங்கரவாத அமைப்பு திருவிழாக்களில் செய்யும் சூழ்ச்சிகளை விளக்கினார். தான் ஒரு இந்து அல்ல என்றும் வருணாசிரமத்தை ஏற்காதவன் என்றும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து மேனாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில், ஜாதி ஒரு முள்வேலியாக இருந்தால் வெட்டி எடுத்து விடலாம். ஆனால், அது மனநிலையாக இருக்கிறது என்னும் டாக்டர் அம்பேத்கரின் மேற்கோளை எடுத்துக்காட்டி, அதனை ஒழிக்க தந்தை பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை விளக்கி உரையாற்றினார். கலைஞர் அவர்கள் கொண்டுவந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நோக்கத்தை விளக்கினார். தந்தை பெரியார் வசதியான குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும், பெருமையாக சொல்லிக் கொள்ளத்தக்க ஜாதியில் பிறந்து ஒடுக்கப்பட்டோருக்காகவும், ஆணாகப் பிறந்து பெண்களுக்கும் போராடினார் என்பதை விளக்கினார்.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார். அவர் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தமது உரையைத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு தருமபுரியில் இளவரசன்_திவ்யா காதல் திருமணத்தினால் அங்கே கிராமங்கள் எரிக்கப்பட்டதையும், அந்தச் சூழலில் திராவிடர் கழகம் அப்பகுதிகளில் மாநாட்டை நடத்தியதையும் நினைவு கூர்ந்தார். பெற்ற மகளையே கொல்லும் அளவிற்கு சுவாதியின் பெற்றோரை மனநோயாளியாக மாற்றியது வருணாசிரமமே என்று விளக்கினார்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் தமது தலைமை உரையாற்றினார். அவர் தமது உரையில், ஜாதியின் மூல ஆதாரம் மனுதர்மம் அந்த மனுதர்மம்தான், தாம் வளர்த்து ஆளாக்கிய அதுவும் கொஞ்சி, அதற்காக பல தியாகங்களை செய்து வளர்த்த மகளையே கொல்லும் அளவிற்கு மனிதனை மனநோயாளியாக்குகிறது. எனவே, ஒரு நோயைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டுமானால் அந்நோய்க்கான மூலாதாரத்தையும் ஆராய வேண்டும். அந்தக் கிருமிகள் எங்கே இருக்கின்றன என்று ஆராய்ந்தால் அந்தக் கிருமி மனுஸ்மிருதியாக இருக்கிறது. அந்த மனுதர்மத்தைத்தான் இன்று அரசியலமைப்புச் சட்டமாக்க முனைகின்றனர். எனவே, மனுதர்மம் எரிக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரை பாதுகாக்க எந்த கூலிப்படையையும் பெரியார் படை சந்திக்கும் என்றார். கழக அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் தொகுத்து வழங்கினார். இறுதியாக தோழர் மாணிக்கம் நன்றியுரை ஆற்றினார்.
தீர்மானங்கள்
ஆணவக் கொலையால் மறைந்த ஜாதி ஒழிப்பு காதலர்களுக்கு வீர வணக்கம். ஜாதி வெறியர்களுக்கு கண்டனம். ஜாதி தீண்டாமையை ஒழிக்க அனைவரும் அர்ப்பணித்துக்கொள்ள உறுதிமொழி.
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை என்பதற்குப் பதிலாக ஜாதி என்று மாற்ற வேண்டும்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு தனி இடஒதுக்கீடு தேவை.
தமிழகத்தில் உள்ள தெரு, சாலைகளின் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டங்களை நீக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கு அரசு தனிப் பகுதியில் காலணிகளைக் கட்டாமல் ஊரின் நடுவில் கட்டித் தர வேண்டும்.
சமத்துவபுரங்களில் மத வழிபாட்டுச் சின்னங்கள் இருக்கக் கூடாது.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குக.
ஜாதி, மத மோதல்களைத் தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு தேவை.
மத வன்கொடுமைகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை.
அரசியலுக்காக ஜாதியை பயன்படுத்துவோருக்குக் கண்டனம்.
இந்து ராஜ்யம் -_ இராமராஜ்யம் என்பது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்.
ஜாதி_தீண்டாமை ஒழிப்பிற்கு அனைவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஜாதி_தீண்டாமை ஒழிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர்களிடம் ஜாதிப் பாகுபாட்டை புகுத்தும் கேவலமான நடவடிக்கைகளைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை.
ஜாதி, மத மறுப்பு திருமணம் செய்து கொள்வோரை பாதுகாக்க தனி கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும்.