கிராமப்புற பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் சாதனை!
அடித்தட்டு அறிவாளிப் பிள்ளைகளை அழுத்தி ஒழிக்க ‘நீட்’ தேர்வு நடத்தி வஞ்சிக்கும், அநியாயம் செய்யும் அயோக்கியர்களால் ஒதுக்கப்படும் நம் பிள்ளைகளின் சாதனையைப் பாரீர்!
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி வட்டத்தில் இருக்கிறது கல்யாணம்பூண்டி கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஜெயச்சந்திரன். கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை எளிய முறையில் பிரித்தெடுக்கும் அவரது திட்டம், மதுரையில் நடந்த 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் முதலிடம் வென்றுள்ளது.
வீட்டின் சமையற்கூடத்தில் பாத்திரத்தில் ஒட்டும் எண்ணெயைப் பார்த்து, அறிவியல் ஆசிரியரிடம் விளக்கம் கேட்ட மாணவர் ஜெயச்சந்திரன், அதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கடலில் கலக்கும் கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் எளிமையான வழிமுறையைக் கண்டறிந்துள்ளார். எண்ணூரில் கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கலந்து, அதனை வாளிகள் மூலம் அகற்றிய நிகழ்வும் மாணவரின் கண்டுபிடிப்புக்கு உந்துதலாக அமைந்தது.
இதுபற்றிப் பேசிய அறிவியல் ஆசிரியர் எம்.எஸ்.ராஜன், “சூடோமோனஸ் புடிடா என்ற கோல வடிவம் கொண்ட சாறுண்ணி பாக்டீரியாவைப் பயன்படுத்தி, சூப்பர் பக் சிறப்பு நுண்ணுயிரி மூலம் அகற்ற முடியும். ஆனால் வேறு எளிய முறையில் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்க முடியுமா என்று யோசித்தோம். நீரில் மிதக்கும் கச்சா எண்ணெயில் உருளிகளைச் சுழலச் செய்வதால், எண்ணெய்ப் படலம் உருளிமீது பரவுகிறது. சுழலும் உருளி மீது படிந்து மேலேழும்பும் கச்சா எண்ணெய், பின்னர் சுழலிகளோடு இணைக்கப்பட்ட உருளியுடன் அமைந்துள்ள பட்டைகள் மீது பட்டு உராய்வு விசையின் காரணமாகத் தனியே பிரிந்து வழிந்தோடும். அதனை தனிக் கலனில் சேகரித்து அப்புறப்படுத்தலாம்’’ என்று விளக்கினார்.
முதல் கட்டமாக தேங்காய் எண்ணெய், விளக்கெண்யெய், மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்துள்ளார்கள். இந்தச் சிறிய அமைப்பின் மூலம் ஒரு மதகின் வழியாக 1,200 மி.லி எண்ணெயைப் பிரித்தெடுக்க முடியும். கப்பல்கள், படகுகளில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது-போன்ற அமைப்பை உருவாக்கி, அதிக அளவில் கச்சா எண்ணையை பிரித்தெடுக்க முடியும் என்ற புதுமையான இந்தத் திட்டத்துக்கு மாவட்ட அளவில் இரண்டு முறை பரிசும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. கடைசியாக மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது.
பரிசு பெற்ற மாணவர் ஜெயச்சந்திரன் உற்சாகமாகப் பேசுகிறார். “எங்க வீட்டுல-தான் இந்த திட்டத்துக்கான ஐடியா கிடைச்சுது. அதை எங்க அறிவியல் ஆசிரியரிடம் கூறி விளக்கம் கேட்டேன். பாத்திரங்களில் ஏன் எண்ணெய் ஒட்டுகிறது என்ற எண்ணத்தில் இருந்துதான், நாங்கள் ஆய்வைத் தொடங்கினோம். இன்று பரிசு பெற்றிருப்பது சந்தோசமாக இருக்கு’’ என்றான்.
இப்படிப்பட்ட பிள்ளைகளை ‘நீட்’ தேர்வைப் புகுத்தி வஞ்சிப்பது மோசடி, அயோக்கியத்தனம், அநியாயம் அல்லவா? ‘நீட்’ தேர்வை ஒழிக்க பி.ஜே.பி.யை ஒழிப்போம்!