குற்றம் செய்தோர்க்கு விடுதலை;
குற்றம் செய்யாதோர்க்கு தண்டனை!
கே: “பெண்கள் எந்த வயதிலும் அய்யப்பன் கோயிலுக்குப் போகலாம்’’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் ‘போகக் கூடாது’ என பெண்களே மறியல் செய்வது பற்றி?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்து அக்காலத்தில் சில தேவதாசிகளே மாநாடு போட்டு, எங்கள் தொழில் போனால் என்ன செய்வது? தேவதாசி ஒழிப்புக் கூடாது என்றும்கூட சொல்ல வைக்கப்பட்டார்கள் என்பதுபோல -_ இதுவும் நடக்கிறது. எல்லாம் ஆர்.எஸ்.எஸ்._பா.ஜ.க. சித்து விளையாட்டு.
கே: உலகிலேயே பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை, பிரதமர் மோடி துவக்கி வைத்திருக்கிறாரே! இதனால், ஏழை எளிய மக்களுக்குப் பலன் கிடைக்க வாய்ப்புண்டா? இதுகுறித்து தங்கள் கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப : கார்ப்பரேட்டுகளுக்கும் அதைவிட பெரிய லாபம் என்ற இதுபற்றிய செய்தி பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
கே: மற்ற நேரங்களில் ‘கடவுள் சக்தி’யைப் பற்றி உயர்த்தி எழுதும் ‘ஊடக வியாபாரி’களும், ‘இந்துத்துவா’ சக்திகளும், இயற்கைப் பேரழிவின்போதும், சிலைத் திருட்டின்போதும் ஏன் வாயே திறப்பதில்லை?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
ப : ‘குட்டு’ வெளிப்பட்டுவிடும். கடவுள் புரட்டு அம்பலமாகிவிடும் என்பதால்-தான்!
கே: நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளில் எப்பொழுதாவது தந்தை பெரியார் இப்படி செய்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைத்ததுண்டா?
– செங்கதிர் திராவிடன், அரியலூர்
ப : சிந்தனை எனது ஆசானின் வேலை. செயல்படுவது எனது இராணுவக் கடமை. பிறகு எப்படி இப்படிப்பட்ட கேள்வி எழமுடியும்?
கே: மத்திய பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட பி.ஜே.பி.யைச் சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவது எதைக் குறிக்கிறது?
– அமரன், சென்னை-54
ப : காவி வண்ணம் தோல்வியின் சின்னம் என்பதால்!
கே: திராவிடப் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் கல்விஅறிவு பெற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் ஆரியச் சனாதனப் பிற்போக்கு தலையெடுக்குமா?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப : சனாதனப் போக்கை கல்வியோ, பதவியோ ஒழிக்காது; பெரியாரின் சுயமரியாதைச் சூரணம்தான் அதைச் செய்யும்; செய்ய முடியும்!
கே: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிச்சாமி செல்லத் தயங்குவதன் மர்மம் என்ன?
– கே.முனுசாமி, திண்டிவனம்
ப : மக்கள் எதிர்ப்பு என்ற உளவுத்துறை அறிக்கையினால் ஏற்பட்ட அச்சம்தான் காரணமாக இருக்கக் கூடும்!
கே: மக்களுக்கு அரசு இலவசங்கள் வழங்குவது தப்பா? ஏழைகளுக்கு மட்டுமே வழங்கினால் சரியா?
– அ.பலராமன், வந்தவாசி
ப : இலவசங்கள் வழங்குவது வறுமையுள்ள நாட்டில் தவறு அல்ல. அதில் வரைமுறை தேவை.
கே: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யாமல், மாணவிகளை எரித்த குற்றவாளிகளை விடுவித்தது சரியா?
– க.பழனி, தாம்பரம்
ப : முழுக்க முழுக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருவிளையாடலும் அ.தி.மு.க. அரசின் ஒப்புக்கு ஆடிய ஆட்டமுமே காரணம்! கவர்னருக்கு மந்திரிசபை முடிவை அலட்சியப்-படுத்தும் அதிகாரம் தந்து, சரண் அடைந்ததின் தீய விளைவு. பஸ் எரிப்புக்காரர்கள் விடுதலைக்கு கவர்னர் மாளிகை அளித்த விளக்கம் விசித்திரமானது! செய்த குற்றத்திற்கு விடுதலை! செய்யாத குற்றத்திற்கு தண்டனை!