உப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்: திருப்பூர் மாணவி சாதனை
உலக அளவில் மனிதர் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர், மற்றொன்று எரிபொருள். உலகின் பெரும் தட்டுப்பாடாக மாறவிருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக மாற்று எரிபொருளை வெற்றிகரமாகக் கண்டு-பிடித்திருக்கிறார் திருப்பூர் மாணவி எம். யோகேஸ்வரி. இவர் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பையர் எனப்படும் ‘Innovation in Science pursuit for Inspired Research’ போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இந்தப் போட்டியில் முதல் பரிசை 17 பேரும் இரண்டாம் பரிசை 16 பேரும் மூன்றாம் பரிசை 17 பேரும் வென்றுள்ளனர். இவர்களுக்கு இடையில் மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
கண்டுபிடிப்பு
தன் கண்டுபிடிப்பு பற்றி யோகேஸ்வரி கூறுகையில், வீடுகளில் நீரைச் சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதைப் போல, உப்பு நீரில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, அது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என இரு அயனிகளாகத் தனித்தனியாகப் பிரியும். நான் கிராஃபைட் கம்பி கொண்டு உப்புநீரைச் சூடு செய்தேன்.
இப்படிச் செய்யும்போது, உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். அந்த ஹைட்ரஜன் நீர்க்குமிழி முட்டைகளில் இருந்து வெளியேறும் வாயுவைச் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்புநீரில் போட்டேன். அதன் வழியாகத் தயாராக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில் வாயுவைச் சேகரித்தேன். இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கிவிட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்கத் தொடங்கியது. இந்த ஆய்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை எனக்கு ரூ. 10,000 வழங்கியது. கிராஃபைட்டுக்கு மாற்றாக காரியம், தாமிரம், ஸ்டீல் இவற்றில் ஏதாவது ஓர் உலோகத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சோதனையை நான் பலமுறை செய்துபார்த்து இப்போது வெற்றி-கண்டிருக்கிறேன் என்றார்.