நந்தலாலா
ஓர் ஆசிரியர் பாடம் நடத்தலாம்
‘பாடமாக’ முடியுமா? முடியும்!
பெரியாரின் மாணவராக இருந்தால்.
இந்த கணித சூத்திரத்தின் இலக்கிய
விளக்கமே கழகத் தலைவர் அய்யா
வீரமணி.
ஒரு மனிதனின் உடல் மொழி அவனின்
அக வெளியின் எழுத்துக்களால் ஆனது.
ஆசிரியரை கவனியுங்கள்-அவரின் நடை
சீரான ஒழுங்கில் தளைதட்டாமல் இருக்கும்.
சிரிப்போ அகப்பொறியின்
திறவுகோலாய் சுண்டி இழுக்கும்.
குரல் ஒலியில் ஒரு தேர்ந்த பாடகனின்
ஆலாபனையின் அழகு ஒளிந்திருக்கும்.
விரல் நீட்டிப் பேசும்போது, கூண்டில்
நிற்கும் வேதம்கூட தன்னைத்தானே
நொந்துகொள்ளும்.
பேச்சின் சூட்டால் ஆதாரங்கள்
நமக்கு பரிமாறப்படும்.
‘புத்தகங்களால்’ அவர் மட்டும்தான்
‘நூல்களை’ கேள்வி கேட்கிறார்.
கருப்புக்கு மட்டுமல்ல சிகப்புக்கும்
நீலத்துக்கும் கூட ‘அவரின் பாடம்’
அவர்களின் ‘திட்டத்தில்’ உள்ளது.
‘அப்பர் பர்த்தில்’ என் போன்ற ‘லோயர்கள்’
ஏறிப்படுக்கும் லாகவத்தில் துணை
நின்றது ரயிலின் கைப்பிடி அல்ல
பெரியாரின் கைத்தடி எனப் புரியவைத்த
உண்மை அவர்.
சிலரின் ‘ஆங்கிலம்’ பிம்பச் சிலைகளை
எழுப்பும். இவரின் ஆங்கிலம் சனாதனக்
கோட்டைகளை அழிக்கும்.
குறளின் இரு வரிபோல் எழுத்தும் பேச்சும்
இவருக்கு.
ஒரு பொருள் தரும்
இரு வரி குறள் இவர்.
‘வாழ்வியல் சிந்தனை’ ஆன்மீகவாதிகள்
பூர்விகச் சொத்தாய் ஆக்கிரமித்தபோது
வில்லங்கம் பார்த்து நமக்கான ‘பட்டா’
தந்த ஆட்சியர் இவர்.
ஆரியம் ஆடும் ஆட்டம்; ராஜாக்கள் போடும்
தாளம்
அதிகமாகும் இந்தியச் சூழலில்,
அய்யாவின் விளக்கை அதிகம் ஒளிவிடச்
செய்யும் மூத்த கை இவரின் கை.
‘உண்மை’யை மறைக்க எவர் முயன்றாலும்;
பெரியார் என்னும் வாளை ஏந்தி, சூத்திரனை
‘விடுதலை’
செய்யும் ஆசிரியர் பிறந்தநாள்தான்
நமக்கு உண்மையான ஆசிரியதினம்.
மகிழ்ச்சியுடன்
நந்தலாலா