தந்தை பெரியார்அவர்கள் வெய்யில் காலங்களில் ஏர்க்காடு வருவதனால் சிறு வாடகை வீடு அமர்த்திக் கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட இல்லாத வீட்டைப் பிடித்துத் தங்கினார்கள். தங்கி இருந்த வீட்டைச்சுற்றி, மிக்க ஏழ்மையில் உழலும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் சிறு, சிறு குடிசைகளில் வசித்தனர். அனேகமாக ஏர்க்காட்டில் அப்படிப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அன்று வசித்தார்கள். சிலர் மாடு கன்றுகளை வைத்துப் பால் கறந்து பிழைத்து வந்தனர்.
தந்தை பெரியார் அவர்கள் ஏர்க்காட்டில் வந்து தங்கி இருக்கின்ற செய்தி நகரில் பரவிவிட்டது. தினம் காலை முதல் இரவு வரையில் ஏராளமானோர் தந்தை பெரியார் அவர்களைக் கண்டு வணக்கம் செலுத்தி அளவளாவிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இரண்டு, மூன்று தினங்களுக்குப் பிறகு சில இளைஞர்கள் அய்யா அவர்களைச் சந்தித்து “இவ்வூர் மக்கள் தங்கள் அறிவுரையினைக் கேட்க மிக்க ஆவல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நாங்கள் ஓர் கூட்டம் ஏற்பாடு செய்கின்றோம். அய்யா அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்று வந்து பேச வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டனர்.
“ஆகா! அப்படியா மிக்க மகிழ்ச்சி. போய் ஏற்பாடு பண்ணுங்கள் அவசியம் கலந்து கொள்கின்றேன்’’ என்று கூறினார்கள்.
வந்த தோழர்களும் அய்யாவிடம் விடை பெற்றுக்கொண்டு சென்று கூட்டத்திற்-கு ஏற்பாடு செய்தனர்.
கூட்டம் ஏரிக்கரையருகே இருந்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏர்க்காடு நகர மக்களே ஒருசேர ஓர் இடத்தில் திரண்டு விட்டார்கள் என்று சொல்லும் வண்ணம் ஆண்களும், பெண்களும் மிகத் திரளாக குழுமி இருந்தனர்.
தந்தை பெரியார் கடவுள், மதம், ஜாதி ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், அவைகளால் விளைந்துள்ள கேடுகள் பற்றியும், மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்க உரையாற்றிக் கொண்டே வரலானார்.
கூட்டத்தில் திடீர் கேள்வி!
ஏற்கனவே நான்கு, அய்ந்து நாட்களாக மக்கள் ஆண்களும், பெண்களுமாகக் கூட்டம் கூட்டமாக தந்தை பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அய்யா அவர்களைக் கண்டு களித்து அளவளாவி வருவது கண்டு பொறாமை அடைந்து இருந்த காங்கிரஸ்காரர்கள். கூட்டத்தில் தங்களின் கைப்பாவையான இரண்டொரு அப்பாவிகளைப் பிடித்து கூட்டத்தின் நடுவே எழுந்து கேள்வி கேட்குமாறு தூண்டி விட்டுவிட்டு தாங்கள் தூரவே இருந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒருவர் திடீர் என்று எழுந்து “அய்யா, இப்படி எல்லாம் பேசி மக்களைக் கெடுத்துவிட்டுப் போகவா இங்கு வந்திருக்கின்றீர்கள்? ஜாதி கூடாது, மதம் கூடாது, உயர்வு தாழ்வு கூடாது என்று கூறுகின்றீர்களே, அது எப்படி முடியும்? கையில் உள்ள அய்ந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா உள்ளன? எனவே, எல்லா ஜாதி மக்களும் எப்படி ஒன்றாக முடியும்? சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வைத்தான் எப்படி ஒழிக்க முடியும்? அது நம்ம கையிலா உள்ளது? ஆண்டவன் கட்டளையினை மாற்ற நீங்கள் யார்? ஜாதி கூடாது, மதம் கூடாது என்று மேடையிலே பேசகின்றீர்களே, நாளை உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட வாலிபனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன் வருவீர்களா?’’ என்று கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் அந்தத் தோழரைப் பார்த்து, “அய்யா, பெண் விரும்பி இப்படி மணம் செய்துகொள்ள முன்வந்தால் கண்டிப்பா நான் தடுக்க மாட்டேன், மனமுவந்து செய்து வைப்பேன். ஆனால், எனக்குப் பெண்ணோ, பையனோ இல்லையே! ஆகவே, நான் அந்தக் கருத்துக்கு உடன்பாடு உடையவனே ஒழிய, நான் என்றுமே எதிர்க்க மாட்டேன்’’ என்று சொன்னார்.
உடனே கேள்வி கேட்டவர், “உங்களுக்கு பெண் இல்லை என்றால், உங்களுடைய அண்ணனுக்குப் பெண் பிள்ளைகள் இருக்கின்றனவே அவர்களுக்குச் செய்து வைப்பதுதானே?’’ என்று கேட்டார்.
அய்யா அவர்கள், “முதலிலே என்னுடைய பிள்ளைகளே இருந்தால் என் பேச்சை கேட்குமா என்பதே உறுதி இல்லாதபோது அண்ணன் குடும்பத்தையோ, உறவினர் குடும்பத்தையோ பற்றிச் சொல்ல நான் தயாராக இல்லை. மக்கள் எல்லாம் அறிவுள்ளவர்களாக ஆக்கி இந்தக் கருத்தைப் புகுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய பணியே தவிர, கட்டாயப்படுத்தி புகுத்துவதல்ல. யாராக இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி இப்படி பு-குத்தக் கூடிய காரியம் அல்ல.
எனவே, மக்களுடைய அறிவினைப் பயன்படுத்தி அதன் மூலம் மக்கள் உணர்ந்து அந்தக் காரியத்தை மக்களாகச் செய்ய வேண்டுமென்பதுதான் எங்களுடைய வேலை. அதற்காகத்தான் நான் பாடுபடுகின்றேன். அதற்கு வேண்டிய காரண காரியங்களை எல்லாம்தான் நான் எடுத்துச் சொல்லி வருகின்றேன். மக்கள் அவர்கள் புத்தியினை திருத்தி இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்.
ஆனால், எனக்கு என்று ஒரு பெண்ணோ, பிள்ளையோ இருக்குமேயானால், கூடுமான வரையில் அவர்கள் அறிவினைப் பயன்படுத்தி என்னுடைய வழியிலேதான் செய்ய பெரிதும் முயற்சிப்பேன்’’ என்று சொன்னார்.
அதற்கு அவர், “அது போகட்டும், நீங்களே உங்கள் மனசாட்சிப்படி சொந்தமாக முடிவெடுக்கக்கூடிய ஒன்றினைக் கேட்கின்றோம். செய்வீர்களா?’’ என்று கேட்டார். அய்யா அவர்கள் அதற்கு, “நீங்கள் எது கேட்டாலும் நானாகச் சொந்தமாக முடிவெடுத்துச் செய்யக்கூடிய காரியமாக இருந்தால் செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன்’’ என்றார்கள்.
அதற்கு கேள்வி கேட்டவருக்குத் துணையாக நின்று கொண்டு இருந்த ஒருவர், “ஜாதி கூடாது, மதம் கூடாது, எல்லோரும் சமத்துவமாக பழக வேண்டும் என்று கூறுகின்றீர்களே! தாழ்த்தப்பட்டவர்களாகிய எங்கள் வீட்டில் நாளைக்கு நீங்கள் சாப்பிட வருவீர்களா?’’ என்று கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். “அய்யா, மிக்க நன்றி, நான் யார் வீட்டிலே வேண்டுமானாலும் சாப்பிடத் தயாராக இருக்கின்றேன். நாக்குக்கு ருசியாகவும், மூக்குக்கு மணமாகவும் யார் சாப்பாடு போட்டாலும் நான் சாப்பிடுவேன். நீங்கள் சொல்லும் வீட்டில் தாராளமாகச் சாப்பிட வருகின்றேன். எப்போது வரவேண்டும்? என்றைக்கு வரவேண்டும்?’’ என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவரோ திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
அந்தக் காலத்தில் இப்படி அய்யா அவர்கள் கூறியது அவர்களுக்குப் புதியதாகவும், அதிசயமாகவும் பட்டது. அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.
உடனே, ஏராளமான தாழ்த்தப்பட்டத் தோழர்கள் எழுந்து, “அய்யா நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்! எங்கள் வீட்டுக்கு வாருங்கள்! என்று உணர்ச்சி மேலிட்டவர்களாக அய்யா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அய்யா அவர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். “எல்லார் வீட்டுக்கும் வருவதானாலும் தினம் ஒரு வீட்டுக்கு வருகின்றேன். எனக்கு சாப்பாட்டுச் செலவு மிச்சமாயிற்று.’’
ஆனால், நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு பண்ணிக்கொண்டு யார் வீட்டுக்கு வர வேண்டும், என்றைக்கு வர வேண்டும் என்பதைக் கூறுங்கள் வருகின்றேன்.
இன்னொன்றும் சொல்கின்றேன். நான் வருவதாக இருந்தால், நான் மட்டும் தனியாக வர முடியாது. மணியம்மையார் மற்றும் நான்கைந்து பேர்களாவது கூட வருவார்கள்.
உங்களுடைய நிலைமைக்கு இத்தனை பேருக்கும் உணவு போட வசதி இருக்காது. இதற்கு நான் ஒரு வழியும் சொல்கின்றேன். தாராளமாக நீங்கள் இன்னும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யுங்கள். நான் வேண்டுமானால் அரிசி, பருப்பு செலவுக்கு பணம் ஆகியவைகளும் கொடுக்கின்றேன்.
நீங்கள் சமைத்து உங்கள் இடத்திலேயே போடுங்கள். உங்கள் கஷ்ட நிலைமையை நன்றாக உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் சொல்லுகின்றேன்.
நான் கொடுத்துச் செய்யச் சொல்லுகின்றேன் என்பது தங்களுக்கு இழுக்கு என்று தயவுசெய்து கருத வேண்டாம். மீண்டும் சொல்லுகின்றேன். உங்கள் நிலையினை அறிந்து சொல்லுகின்றேன். ஏனென்றால், உற்சாகத்தில் நீங்கள் சாப்பாடு போடுவதாக ஒப்புக் கொண்டு வீட்டுக்குச் சென்று தடுமாற வேண்டாம். ஆகவேதான் சொல்லுகின்றேன்’’ என்று கூறிவிட்டு மேடைக்கு பின்புறத்தில் அமர்ந்து இருந்த அன்னை மணியம்மையார் அவர்களை அழைத்து, “அம்மா, நாளைக்கு இவர்கள் வருவார்கள். எத்தனை பேருக்கு சாப்பாடு செய்கின்றார்களோ அதற்குத் தேவையான வைகளை எல்லாம் கொடுத்து விடு’’ என்றார்.
பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களின் அறிவுரையினைக் கேட்டுவிட்டு அனைவரும் வீடு சென்றனர்.
அடுத்த நாள் இரண்டு மூன்று ஆண்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் இரண்டொ ருவருமாக அய்யாவின் இருப்பிடத்திற்கு வந்து “நாங்கள் சுமார் 20, 25 பேர்களுக்கு சமைக்கலாம் என்று இருக்கின்றோம்.
இந்த ஊரில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்க்கின்றோம். யார் யார் வருகின்றார்கள் என்று பார்த்து விடுவதாக உள்ளோம். தங்களைப்பற்றி எங்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி வைத்தவர்-களுடைய வண்டவாளமும் இதில் இருந்து விளங்கிவிடும்.
அய்யா, நீங்களும் உங்களைச் சார்ந்தவரும் அவசியம் வரவேண்டும்’’ என்று அழைத்துவிட்டு அம்மா அவர்கள் தயாராக வாங்கி வைத்து இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றைய தேவையான பண்டங்களையும் பெற்றுச் சென்றார்கள்.
சாப்பாடு இரவு வேளைக்கு வைத்து இருந்தார்கள். அய்யா அவர்களோடு தந்தை பெரியார் அவர்களிடம் செயலாளராக இருந்த காலஞ்சென்ற அமைச்சர் திரு.என்.வி.நடராஜன், சேலம் பிரபல வியாபாரியும் தந்தை பெரியாரிடம் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவருமான காலஞ்சென்ற திரு.ரோ.சு.அருணாசலம், அம்மா மற்றும் இரண்டொருவருமாகச் சென்றார்கள். விருந்து நடந்தவிடம் ரோட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கி சந்து வழியாக உள்ளே போக வேண்டும். கீழே மாட்டுக் கொட்டகைகள் நிறைய மாடுகள் கட்டக்கூடிய இடம் அது. ஏர்க்காடு மலைப் பிரதேசம் ஆனபடியால் குளிர் அதிகம். வெய்யிலும் அதிகம் அடிக்காது. ஆகவே, அங்கு மாட்டுச் சாணங்கள், மூத்திரங்கள் எல்லாம் சீக்கிரத்திலே காயாது. அதனாலே ஈரம் எப்போதும் சொத சொத என்று இருந்து கொண்டே இருக்கும்.
வசதியற்ற சூழ்நிலையில் வசித்த அவர்கள் அதன்பின் மிகுதியால் தங்கள் குடிசையிலேயே சாப்பாடு, கோழி எல்லாம் செய்து வைத்துவிட்டு பரிமாறுவதற்கு வசதி இல்லாததினால் பக்கத்தில் இருந்து மாடுகளை எல்லாம் வேறு இடத்துக்குக் கொண்டுபோய் கட்டிவிட்டு, மாட்டுக் கொட்டிலில் இருந்த மாட்டுச் சாணம் கும்பிகளை எல்லாம் வழித்து எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அதன் மேலே மணலைத் தூவி அதன் மேல் வைக்கோலைப் போட்டு அதன் மேலே ஏதோ தங்களிடம் இருந்த தடுக்குகளை எல்லாம் பரப்பி அதன் மீது இலைகளைப் போட்டுப் பரிமாறி அவர்களையெல்லாம் உட்கார வைத்தார்கள்.
என்னதான் அவர்கள் இடத்தைச் சுத்தம் செய்து மண்ணைக் கொட்டி வைக்கோல் போட்டு இருந்தாலும் காலை வைத்தால் உள்ளே அழுங்குகின்றது. ஏன் என்றால் நீண்ட நாட்களாகவே அவைகள் ஊறிக்கொண்டு இருந்த இடம் ஆயிற்றே. எவ்வளவுதான் அவர்கள் கும்பிகளை எல்லாம் வழித்துச் சுத்தம் செய்திருந்த போதும் அந்தத் துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கவே முடியவில்லை.
விருந்தும் பரிமாறப்பட்டு விட்டது. ஒரு பக்கம் துர்நாற்றம், இன்னொரு பக்கம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஜில் என்று ஈரம் ஏறுகின்றது. இரவு நேரமானபடியால் குளிரோ தாங்க முடியவில்லை.
அந்தக் காலகட்டமோ அம்மா அவர்கள் அப்போதுதான் அய்யாவிடம் தொண்டு புரிவதற்காக வந்து சேர்ந்த புதிது. அம்மா அவர்கள் மிகத் துடிப்பாகப் பணியாற்றுபவர் என்றபோதிலும் அம்மா அவர்களுக்கே அது புதிய அனுபவமாக அமைந்துவிட்டது. “என்னால் அன்று அந்த நாற்றம், ஈரம், குளிர் முதலியவைகளை தாங்கிக்கொள்ள முடியாதவளாகி, குமட்டலும், வாந்தியும் ஏற்படும்படி ஆகிவிட்டது’’ என்று அம்மா அவர்களே கூறியுள்ளார்கள்.
அம்மா அவர்கள் இலையில் வைக்கப்பட்ட சாப்பாட்டினைச் சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டும், யாரும் பார்க்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக இலைக்கு அடியிலே எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
இதனை எப்படியோ பார்த்துவிட்ட தந்தை பெரியார் அவர்கள், “சாப்பிடு அம்மா, சாப்பிடு அம்மா’’ என்று சொல்லிக்கொண்டு அம்மா அவர்கள் கீழே வைத்து இருந்த சாப்பாட்டை எல்லாம் அவரது இலையிலேயே அள்ளி அள்ளிப் போட்டார். அம்மா அவர்களோ சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டதால் சாப்பிடாமல் தயங்கித் தயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அய்யா அவர்கள் அந்த வீட்டுக்கார அம்மாவைப் பார்த்து (அந்த அம்மா பெயர் மங்காணி), “மங்காணி கொஞ்சம் குழம்பு கொண்டு வா அம்மா!’’ என்று கூறினார்கள். அந்த அம்மாவும் வீட்டிற்குள் குழம்பு எடுக்கச் சென்று விட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் அம்மா பக்கம் திரும்பி கன்னத்தில் ஓங்கி ஓர் அடி கொடுத்தார். அவ்வளவுதான். அந்த அம்மா குழம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள்ளாக இலையில் இருந்த சோறு, கறி எல்லாம் உள்ளே போய்விட்டது.
பக்கத்தில் உள்ள இலையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திரு.என்.வி.நடராசன் அவர்கள், திரு.ரோ.சு.அருணாசலம் மற்றவர்-களும் கபக், கபக் என்று அவர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள்.
அம்மா அவர்கள் அந்த நிகழ்ச்சியினைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பக்குவப்படாத அந்தக் காலத்தில் பட்ட அந்த அடி எனக்கு என்றென்றைக்கும் உதவும்படியான பல படிப்பினைகளை எல்லாம் தந்தது’’ என்று பல தடவைகள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
பெரியார் தான் சொல்லிய சொல்லுக்கும் செய்த செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்த தலைவர் என்பதற்கு உதாரணமான நிகழ்வு இது.
பெரியார், ‘யாருக்குப் பெரியார்’ என்று தெரிகிறதா?
1937ஆம் ஆண்டு பழைய தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3ஆவது அரசியல் மாநாடு’ நீடாமங்கலத்தில் நடந்தது. மாகாண காங்கிரஸ் அமைச்சர் யாகூப் ஹாசன் திறந்து வைத்த இந்த மாநாட்டின் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அதனை முன்னின்று நடத்தியவர் நீடாமங்கலம் பெருநிலக்கிழார் டி.கே.பி. சந்தான ராமசாமி உடையார்.
மாநாட்டில் சமபந்தி விருந்துண்ணல் நடந்தது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களும் இந்த விருந்தில் உட்கார்ந்தார்கள். இதைப் பார்த்த சிலர், பொறுக்காமல் அவர்களைத் தாக்கினார்கள். இந்த விவசாயக் கூலிகள் எந்தப் பண்ணையில் வேலை பார்க்கிறார்களோ அவர்களுக்கு மறுநாள் தகவல் தரப்பட்டு, அங்கும் தண்டிக்கப்பட்டார்கள். மரத்தில் கட்டி வைத்து உதைத்தும், மொட்டை அடித்தும், சாணிப் பாலை வாயில் புகட்டியும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டும் அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டனர். சுமார் 20 பேர் இத்தாக்குதலுக்கு உள்ளானார்கள். தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
நீடாமங்கலம் நிகழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது ‘குடிஅரசு’ம், ‘விடுதலை’யுமே. ‘ஹரிஜனங்களுக்கு காங்கிரஸ் மரியாதை _ பந்தியில் இருந்து சாப்பிட்டவர்களுக்கு அடி, தலைமயிர் மொட்டை, சாணி அபிஷேகம், தென் தஞ்சை அரசியல் மாநாடு அலங்கோலம்’ என்ற ‘விடுதலை’ செய்தி வெளியிட்டது. நீடாமங்கலம் சுயமரியாதை இயக்கத் தலைவர் அ.ஆறுமுகம், பெரியாருக்கு இந்தத் தகவலை தந்தி மூலம் தெரிவிக்கிறார். ‘விடுதலை’ ஆசிரியர் குழுவில் இருந்த அ.பொன்னம்பலனாரை பெரியார் நீடாமங்கலத்துக்கு அனுப்புகிறார். நீடாமங்கலம் சென்ற பெரியாரிடம் அவ்வூரைச் சோர்ந்த தாழ்த்தப்பட்டத் தோழர்கள் கையெழுத்திட்டு ஒரு முறையீடு தருகிறார்கள். அது ‘விடுதலை’யில் வெளியானது. தனக்கு நடந்த கொடுமைகளை விளக்கி தேவசகாயம் அனுப்பிய கடிதம் 17.1.1938 ‘விடுதலை’யில் வெளியானது. ஆறுமுகம், ரெத்தினம், தேவசகாயம் ஆகியோர் படத்தை ‘குடிஅரசு’ தனது அட்டையில் வெளியிட்டது.
இவர்களால் அந்த ஊரில் இருக்க முடியவில்லை. எனவே, ஈரோடு வந்து பெரியாரின் பாதுகாப்பில் இருந்தார்கள். தூத்துக்குடிக்கு 13.2.1938 அன்று ஈரோட்டில் இருந்து மோட்டார் காரில் வந்த பெரியாருடன் இவர்களும் வந்துள்ளார்கள். ‘எதிரிகள் ஈரோட்டில் இருக்கிறார்கள்’ என்று டி.கே.பி.எஸ்.உடையார் புகார் தந்துள்ளார்.
‘நீடாமங்கலத்தில் நடந்ததென்ன?’ என்ற தலைப்பில் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட தேவசகாயமும் இதில் கலந்துகொண்டு பேசினார். தேவசகாயம் பேச்சு ‘விடுதலை’, ‘குடிஅரசு’வில் வெளியானது. சேலம் பொதுக்கூட்டத்திலும் இவர்கள் கலந்து கொண்டார்கள். தஞ்சை மிராசுதார்களின் கொத்தடிமைகளாக ஆதிதிராவிடர்கள் எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ‘குடிஅரசு’ எழுதியது. தங்களைப் பற்றித் தொடர்ந்து அவதூறுச் செய்திகளை வெளியிடுவதாக டி.கே.பி.எஸ்.உடையார் ‘விடுதலை’ இதழுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். 6.2.1938இல் நடந்த ஓமலூர் தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நீடாமங்கலம் தேவசகாயமும், ஆறுமுகமும் கலந்துகொண்டு தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையைச் சொன்னார்கள். தூத்துக்குடி, தஞ்சை, வல்லம், பெரம்பலூர் கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொண்டார்கள்.
திருத்துறைப்பூண்டி மாவட்ட ஆட்சியர் முகாமில் ‘விடுதலை’ வெளியீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ‘விடுதலை’ ஆசிரியர் எஸ்.முத்துசாமி பிள்ளை ஆகிய இருவர் மீதும் டி.கே.பி.எஸ்.உடையார் மானநஷ்ட வழக்குப் போட்டார். 15.6.1938 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 200 ரூபாய் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் 4 மாத தண்டனை என்றும் தீர்ப்பு தரப்பட்டது.
“வழக்கின் நீதி இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப் பட்டதென்றே சொல்லலாம்’’ என்று எழுதும் துணிச்சல் ‘குடிஅரசு’க்கு இருந்தது. செசன்ஸ் நீதிமன்றத்தில் ‘விடுதலை’ மேல்முறையீடு செய்தது. அபராதத் தொகை ரூ.200இல் இருந்து ரூ.100ஆக செசன்ஸ் நீதிமன்றம் குறைத்தது. (இந்த நிகழ்வின் அனைத்து நடவடிக்கை களையும் அறிய, பேராசிரியர் அ.திருநீலகண்டன் எழுதிய, “நீடாமங்கலம் _ ஜாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’’ என்ற நூலைப் பார்க்கவும்.)
நீடாமங்கலம் வன்கொடுமை நடந்தபோது ‘விடுதலை’, ‘குடிஅரசு’ வெளியிட்ட 113 செய்திகளை வரிசைப்படுத்துகிறார் திருநீலகண்டன். நிகழ்வு நடந்த 3.1.1938 முதல் இன்று வரை வெளியான செய்திகளின் பட்டியல் இது. அதாவது, ஏதாவது ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டு முடங்கிவிடாமல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை எடுத்துச் சென்று சாதிப்பதுதான் பெரியாரின் செயலாக இருந்தது என்பதற்கு நீடாமங்கலம் ஒரு சாட்சி.
நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தோழர்கள் பி.சாமியப்பன், பி.உத்தராசி, ம.கோவிந்தசாமி, வை.வீரமுத்து, முருகையா, சாமியப்பன், பேச்சிமுத்து ஆகியோர் பெரியாரிடம் கொடுத்த மனுவின் இறுதிப் பகுதி:
“இந்தக் கொடுமையிலிருந்து எங்களை மீட்பதற்கு தங்களைத் தவிர வேறொருவரும் இல்லையென்றே எண்ணும்படியான நிலைமைக்கு வந்துவிட்டோம். ஆகவே, தங்களுடைய வாழ்நாளிலேயே எங்களுடைய விமோசனத்தை அடையும் மார்க்கத்தைக் காண்பிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம்.
பெரியார், யாருக்கான பெரியார் என்று தெரிகிறதா?
சுப்பாபுரம் என்ற கிராமத்தில் திடீரென்று தீ பற்றியது. ஜாதி இந்துக்கள், அதிகம் வாழும் இடம் அது. அருகில் இருந்த பட்டியல் இனப் பெண்கள் எல்லாம் குடங்கள் கொடுத்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆதிதிராவிட ஆண்கள் எரியும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை வெளியில் கொண்டுவர மும்முரமாக இறங்கினார்கள். நம்மிடம் ஜாதி வேறுபாடு பார்த்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். ஜாதிக் கொடுமைக்கு பேர் போன ஊர் இது. உயர்ஜாதியினர் வாழும் தெருவில் நடக்க முடியாது. தண்ணீர் எடுக்கச் செல்ல முடியாது. இதை மீறி தண்ணீர் எடுத்த மாடத்தி தண்டிக்கப்பட்டாள். இதேபோல் ஏராளமான சம்பவங்கள் அந்த ஊரில் நடக்கின்றன… என்று ஒரு நிகழ்வு ‘குடி அரசு’வில் 2.10.1948 எழுதப்பட்டுள்ளது. இது கதையா, உண்மை நிகழ்வா எனத் தெரியவில்லை. ஆர்.எஸ்.ஜே. என்பவர் எழுதி உள்ளார். இந்தச் சுப்பாவுரம் எங்கே இருக்கிறது என்ற குறிப்பும் இல்லை.
‘தீண்டாமைத் தீ’ என்ற இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி.
உயர்ஜாதி என்று சொல்லிக்கொள்ளும் அவர்களுக்கு ஆபத்து வந்திருக்கும். இன்று மாத்திரம், பள்ளர்கள் தெரு வழியே தீயணைக்கத் தண்ணீர் கொண்டுவரத் சம்மதிக்கிறார்கள். ‘முதலாளிமார்’ கிணற்றில் தாராளமாகத் தண்ணீர் எடுத்துவரச் சம்மதிக்கிறார்கள். அவர்கள் குடத்தையே தந்து தண்ணீர் எடுத்துவரச் சம்மதிக்கிறார்கள். அவர்கள் வீட்டுச் சாமான்களைத் தொட்டு அப்புறப்படுத்த அனுமதிக்கிறார்கள். அவர்களின் ஆபத்துக் காலத்தில் மாத்திரம் ஆதிதிராவிடன் என்ற தீண்டாமை இல்லை, பள்ளன் என்ற பாகுபாடு இல்லை, தாழ்ந்த ஜாதி என்ற துவேஷம் இல்லை. ஆனால், புஞ்சையில் மாடு மேய்கிறது என்று தாழ்ந்த ஜாதிக்காரி ஒருத்தி தண்ணீர் குடத்துடன் அவசரமாகத் தெருவழியே சென்றால் அதற்கு மன்னிப்பு இல்லை. அப்போது தீண்டாமை வந்து தடுக்கிறது.
கடைசியில் ஆதிதிராவிட சிங்கங்கள்தான் இந்த ஆடிக்காற்றுத் தீயை அணைக்க முடிந்தது. இவர்கள் எழுபது வீட்டுக்காரரும் செய்த தொண்டில்தான் ரெட்டியார் தெருவை தீ தாக்குமுன் அணைத்தார்கள். தீ அணைக்க கூரைமேல் ஏறி விழுந்து உயிர் துறந்ததும் இரு ஆதி திராவிடர்கள்தாம்.
தீ பிடிப்பதால் மாத்திரம் தீண்டாமை இல்லை. மற்றக் காலங்களில் தேகமெல்லாம் தீண்டாமை தீ. இது நியாயமா? _ கேட்டது ‘குடிஅரசு’. இதில் கேட்பது ஒடுக்கப்பட்டோர் குரலா? ஆதிக்க ஜாதியின் குரலா? (‘குடிஅரசு’ 2.10.2041)
பெரியார், ‘யாருக்கான பெரியார்’ என்று தெரிகிறதா?
பட்டுக்கோட்டை தாலுகா போர்டு நிர்வாகத்தில் உள்ள ஆதிதிராவிடப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் மாரிமுத்து. அப்போது தாலுகா போர்டு தலைவராக இருந்தவர் காங்கிரஸ்காரர் நாடிமுத்துப் பிள்ளை, மாரிமுத்துவை ஆசிரியர் பணியில்இருந்து விலக வைத்து தாலுகா போர்டு உறுப்பினராக ஆக்கியவர் நீதிக்கட்சித் தலைவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம். ஆதிதிராவிடரான மாரிமுத்து, தாலுக்கா போர்டுக்குள் வருவதா என்று நினைத்த நாடிமுத்துப்பிள்ளை அவரது பணி விலகல் கடிதத்தை ஏற்காமல் அவரை நடுவாட்டுக்கோட்டைக்கு மாற்றினார். ஆனால், நாடிமுத்துப் பிள்ளை வெளியூர் சென்றிருந்த போது, துணைத் தலைவரான அப்பாவு முதலியார், மாரிமுத்துவின் பணிவிலகலை ஏற்றுக்கொண்டார். இது நாடிமுத்துப் பிள்ளைக்கு கோபம் கொடுத்தது. தான் தலைவராக இருக்கும் போர்டில் ஆதிதிராவிடர் ஒருவரோடு சமமாக உட்கார மனம் இடம் தரவில்லை. மாரிமுத்துவுக்கே தெரியாமல் போர்டு கூட்டத்தை நாடிமுத்துப்பிள்ளை நடத்தினார். மூன்று கூட்டத்துக்கு வரவில்லை என்ற சொல்லி மாரிமுத்துவை நீக்கினார். இதை, பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தவர் கடுமையாக எதிர்த்தார்கள். போர்டு கூட்டம் நடக்கும்போதெல்லாம் ஊர்வலம் நடத்தினார்கள். சுயமரியாதை இயக்கத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை மத்திய சட்டசபையில் எம்.சி.ராஜாவும், மாநில சட்டசபையில் நீலகிரி முனிசாமியும், சுவாமி சகஜானந்தமும் பேசினார்கள். (முழு விவரம் 27.12.1936 ‘குடிஅரசு’)
ஏழரைக்கோடி ஆதிதிராவிடர்களுக்கு அநீதி செய்த நாடிமுத்துப் பிள்ளை!
“தாலுகா போர்டில் துரத்தப்பட்ட பரிதாபத்துக்குரிய மாரிமுத்து’’ என்ற தலைப்பில் இச்செய்தியை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது.
….பெரியார், யாருக்குப் பெரியார் என்று தெரிகிறதா?