ஏன் அவர் பெரியார்?

நவம்பர் 01-15

“பெரியார் பட்டம்’’ அளித்தவர்கள் பார்வையில்….

சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் முன்னிலையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதி. ஒரே சேறும், சகதியுமாகி-விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட சொன்னபோது பலரும் சாப்பிட-வில்லை. ஆனால், பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துக் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். இதைக்கண்ட பெண் தலைவர்கள் சிலர், காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம், நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அந்த திருமணத்தை பெரியாருடன் தலைமை ஏற்று நடத்தியர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அவருடன் பேசிக்கொண்டிருந்த பிற பெண் தலைவர்கள் நாராயணி அம்மையார் மற்றும் டாக்டர் தருமாம்பாள் அம்மையார். அப்போது அவர்கள் பேசி முடிவுசெய்த பட்டம் தான் “பெரியார்”.

1938, நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி, “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு-மில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றி, அத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்திய பெண் தலைவர்களான திருவரங்க நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ் அம்மையார், தாமரைக்கண்ணி அம்மையார், நாராயணி அம்மையார், டாக்டர் தருமாம்பாள் அம்மையார், மலர்முகத்தம்மையார், இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார் மற்றும் கலைமகளம்மையார் ஆகியோர் கூடி அப்பட்டத்தை வழங்கினர். அந்தப் பட்டத்தை வழங்கிய பெண் தலைவர்களோ, அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட 5000 பங்கேற்பாளர்களில் எவருமே கூட, பெரியார் என்ற அப்பட்டம் காலத்தை கடந்தும் அவரது பெயராக நிலைக்கொள்ளும் என்று எண்ணியிருக்க மாட்டார்கள்.

அப்படி இந்தியாவில் அதுவரையிலும் தோன்றிய சீர்திருத்த தலைவர்கள் செய்ய இயலாமல் போன என்னென்ன வேலைகளை பெரியார் செய்தார் என்று பார்க்க-வேண்டுமானால், நாம் அந்த காலக்கட்டத்திற்கு போக வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.

ஜாதி – தீண்டாமை ஒழிப்பு:

மனிதர்களை பிறப்பால் பாகுபடுத்தி, அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு பிரிவினைகளை உண்டாக்கும் ஜாதியை ஒழிப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகவே கொண்டிருந்தார் தந்தை பெரியார்.

பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பில் ஜாதிப்பெயரை பெயருக்குப்பின்னால் சேர்த்துக்கொள்வதென்பது மரியாதையாக கருதப்பட்டு, இயல்பானதொரு வழக்கமாகவும் இருந்துவந்தது. தந்தை பெரியாரும் கூட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டு வந்தார். 18.12.1927 வரை, ‘குடிஅரசு’ இதழிலும் அவரது பெயர் அப்படியே குறிப்பிடப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் நாயக்கர் என்றாலே பெரியாரைக் குறிக்கும் நிலைமையும் கூட இருந்தது. ஆனால், ஜாதி ஒழிப்பின் வடிவமாக, ஜாதி பெயர்களை நீக்கும் ஒரு இயக்கத்தை கட்டமைத்தவர் தந்தை பெரியார். அந்த வகையில், 25.12.1927-ஆம் தேதிய ‘குடிஅரசு’ இதழ் முதல், அவரது பெயரில் நாயக்கர் என்பது வெட்டப்பட்டது.

அதனை அவரோடு மட்டும் நிறுத்திக்-கொள்ளாமல், 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில், “பட்டப் பெயர்கள் ஜாதி குலங்களைக் குறிப்பதாலும், அவற்றின் மூலம் சமூகப் பிரிவுகளை வளர்த்துக்கொண்டு போவதாலும், மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும்” என்ற தீர்மானத்தையும் நிறை-வேற்றினார். ஜாதியமும், தீண்டாமைக் கொடுமைகளும் மிகவும் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், பொது இடங்களை பயன்படுத்தவோ, நீர்நிலைகளிலிருந்து குடிநீர் எடுக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பயணசீட்டோ, நுழைவுச் சீட்டோ வாங்கும் பொருளாதார தகுதி இருந்தாலும் கூட, நாடகங்களை பார்க்கவோ, பேருந்தில் பயணிக்கவோ ஒடுக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்-படவில்லை. அந்த அனுமதி சீட்டுகளிலேயே பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று அச்சிடப்பட்டிருக்கும். காங்கேயம் ஊத்துக்குளி பேருந்தில் பயணசீட்டு வாங்கி உட்கார்ந்திருந்த திரு. ஜான்பால் அவர்கள் ஆதிதிராவிடர் என்று அறிந்து, ஜாதி இந்துக்களின் உதவியோடு பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். இது 1926-இல், 1927-இல் திருப்பத்தூர் கட்டுக்குடிப்பட்டி என்னும் சிற்றூரில், மற்ற ஜாதியினரின் வீதிவழியே குடிநீர் எடுக்க ‘பள்ளர்’ சமூகத்தினர் செல்லக்கூடாது என்று மிகவும் முரட்டுத்தனமாக தடைசெய்யப்-பட்டனர். இத்தகைய கொடுமைகளை தொடர்ந்து கண்டித்து வந்த பெரியார்,

“மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களையெல்லாம் பொது மக்கள் பின்பற்றக் கூடாதென்றும், வருணாசிரமத்தையும், அதன் முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ள கூடாது என்றும்;

“மனித நாகரிகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் தீண்டாமையை ஒழித்து, எல்லா தெருக்கள், குளங்கள், கிணறுகள், பள்ளிக்கூடங்கள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள் முதலிய பொது இடங்களில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்; அப்படி பொது இடங்களில நுழைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிமை வழங்க வேண்டும், அதையும் மீறி தீண்டாமையைக் கடைப்பிடிப்போருக்கு 6 மாத சிறை தண்டனை என்று உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும்; இவ்வுரிமை மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து அறப்போரில் குதிக்க அனைவரையும் தயார் செய்வது என்று அரைக்கூவல் விடுத்து, அவற்றை 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு, 1930 ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாடு, 1932 லால்குடி தீண்டப்படாத கிறித்துவர் மாநாடு, 1933 லால்குடி ஆதிதிராவிட கிறித்துவ மாநாடு, 1936 திருச்செங்கோடு ஆதிதிராவிட மாநாடு, 1937 ஆம்பூர் ஆதிதிராவிட மாநாடு, 1938 அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மாநாடு என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியான மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *