மதவெறிக்கு மற்றுமோர் பலி!

நவம்பர் 01-15

மதுரை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராயிருந்த ஓ.வி.கே.நீர்காத்தலிங்கம் அவர்களது மகள் வசந்திக்கும், மகேந்திரனுக்கும் வாழ்க்கை ஒப்பந்தத்தை 08.11.1984 காலை 10 மணிக்கு மதுரை நவரத்தினபுரத்தில் நடத்தி-வைத்து-விட்டு, மறுநாள் 09.11.1984 அன்று ராசபாளையம் வத்திராயிருப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது காந்தியார் மறைந்தபோதும், இந்திரா இறந்தபோதும், பொறுப்போடு கழகம் செயல்பட்டதை விளக்கினேன்.

அடுத்த நாள் தளவாய்புரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் சத்தியசீலன் _ காளீஸ்வரி ஆகியோர் வாழ்க்கை ஒப்பந்த விழா 10.11.1984 காலை 10 மணிக்கு என் தலைமையில் சிறப்பாக நடந்தது.

ஆந்திரா மாநிலம் அய்தராபாத்திலிருந்து வெளிவரும் ‘நியூஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டுக்கு இடஒதுக்கீடு பற்றி நான் அளித்த பேட்டி 13.11.1984 இதழில் வெளிவந்திருக்கிறது. இந்தப் பேட்டி, கட்டுரை வடிவத்தில் வெளிவந்தது. ஜி.ஜோசில்லா வேதகுமார் பேட்டிகண்டு எழுதினார்.

“இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. அதனால் ஜாதி வளருகிறது என்பது தவறு; இடஒதுக்கீடு கொள்கை என்பது கடந்த சில ஆண்டுகளாகத்தான் இருக்கிறது; ஆனால், அரசியல் காரணமாக பல நூறு ஆண்டுகளாக மக்கள் தடுக்கப்பட்டுக் கிடந்தார்கள் என்று நறுக்குத் தெறித்தாற்போல் பதிலளித்தார் வீரமணி.

சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், எல்லா பிரிவினருக்கும் சம வாய்ப்புகள் உருவாக்குவதன் மூலமே ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை அமைக்க முடியும் என்றார் அவர். இன்னும் குறைந்தது 25 ஆண்டுகளாவது இடஒதுக்கீடு முறை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எங்களுக்கு பார்ப்பனர்கள் மீது வெறுப்பு இல்லை. பார்ப்பனீயத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். ‘நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்’ என்ற மனோபாவத்தை உருவாக்கும் அந்தத் தத்துவத்தையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் கி.வீரமணி அவர்கள் கூறினார்’’ என்று அக் கட்டுரையில் குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் இடஒதுக்கீட்டு உறுதியை உலகறியச் செய்தார்.

19.11.1984 அன்று ‘தினகரன்’ இதழ் ஆசிரியர் திரு.ஜெயபாண்டியன்       மறைவிற்கு இரங்கல் தெரிவித்தேன். “தமிழ்நாட்டு அரசியலில் ‘தினகரன்’ ஏடு சிறந்த இடத்தை வகிக்கிறது. அதனுடைய ஆசிரியராக இருந்த திரு.ஜெயபாண்டியன் நண்பர் திரு.கே.பி.கே.வின் கருத்துக்கு அழகிய உருகொடுத்த ஆற்றல்மிகு ஆசிரியர்’’ என்று அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

சீரிய கல்வி வள்ளல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது துணைவியார் திருமதி காந்தம்மா சுந்தரவடிவேலு அவர்கள் 22.11.1984 அன்று தனது 73ஆவது வயதில் மறைந்தார் என்ற செய்தி சுயமரியாதை உலகுக்கு மிகவும் துயரம் தரும் சோக செய்தியாகும். நான் இரங்கல் செய்தியை ‘விடுதலை’யில் 23.11.1984 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம் செய்த அமைதிப் புரட்சியின் சீரிய விளைவுகளில் ஒன்று அவர்களது ஜாதி மறுப்புத் திருமணம் ஆகும்.

இன்றைய காலகட்டத்திலேயே ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள் எளிதாக இல்லாதபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது எளிதல்லவே என்று நினைவு கூர்ந்து திரு.நெ.து.சு. அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

எனது முதல் மகன் செல்வன் வீ.அசோக்ராஜ் அவர்களுக்கும் சென்னை திருவாளர் சந்திரசேகரன் _ திருமதி பிரீதா சந்திரசேகரன் அவர்களது செல்வி சபீதா அடிலைன் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களது சீரிய தலைமையில், நமது இயக்க மூதாட்டியார் நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார் அவர்களால் 26.11.1984 அன்று பெரியார் நினைவிடம் முன்பு மேடை போட்டு நடந்தது.

இந்தக் காதல் ‘கலப்புத் திருமணத்தை’ நமது கொள்கைவயப்படாத மணமகளது பெற்றோர்கள் ஏற்று எங்கள் விருப்பப்படி நடத்திட அனுமதி அளித்தமை மிகுந்த பாராட்டுதலுக்கு உரிய ஒன்றாகும் என்று கழக குடும்பத்தினருக்கும் அன்பு தமிழர்களுக்கும் தெரிவித்தேன்.

திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், நீதிபதிகள், அரசு அலுவலகர்கள், வழக்கறிஞர்கள், பிரபல டாக்டர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் டாக்டர் மா.நன்னன், திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.சி.குழந்தைசாமி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பிரபல மருத்துவர் டாக்டர் பி.பழனியப்பன், மாண்புமிகு ஜஸ்டிஸ் மோகன், மாண்புமிகு ஜஸ்டிஸ் வேணுகோபால், தவத்திரு மதுரை குருமகா சந்நிதானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சில் கி.மனோகரன், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

இந்தக் குடும்பத்தில் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ஜாதி ஒழிப்புத் திருமணம் நடத்திக் கொண்டு வருவதை சிறப்பாக எடுத்துக் காட்டியும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இனமான பகுத்தறிவுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பாராட்டியும் உரையாற்றினார்கள்.

என் மீது பாசம் பொழியும் அமெரிக்கா மூதாட்டியார் திருமதி வெர்ஜினா கர்ச்சினர் அம்மையார் (Mom என்கிற Mrs. Virginia Kirchner) (வயது 69) அவர்கள் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் சென்னை வந்து 03.12.1984 அன்று சேர்ந்தார்கள். அவர்களை  நானும், எனது துணைவியார் மோகனா அவர்களும் மற்றும் என்னுடைய குடும்பத்தினரும் அவர்களை அன்போடும் பூரிப்போடும் வரவேற்றோம். திருவாட்டி வெர்ஜினா அவர்களுக்கு என்னுடைய இளைய மகள் கவிதா மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, திருமதி சுந்தரம் மற்றும் ஏராளமானோர் அன்போடு மாலைகளை அணிவித்து வரவேற்றனர்.

07.01.1985 அன்று “பொம்மலாட்டம் நடக்கிறதா?’’ என்ற தலைப்பில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவு பற்றி எழுதினேன். வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி டில்லி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை 401 இடங்களைப் பிடித்து உடனடியாக அமைச்சரவை அமைத்து திரு.ராஜீவ்காந்தி அவர்களது தலைமையில் செயல்படத் துவங்கியது.

“133 அ.இ.அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிட்டு, டில்லி காங்கிரஸ் வட்டாரத்தையே போய் இன்னும் பார்த்துக் கொண்டு இருப்பதைவிட கேலிக்கூத்து தமிழ்நாட்டின் சுயமரியாதையை அடகு வைத்து விட்டுள்ள நிலை வேறு உண்டா?

இதைவிட மகத்தான மானக்கேடு வேறு இருக்க முடியுமா? திராவிடப் பாரம்பரியத்தினை இப்படியா ‘மீட்கா அடகு’ வைப்பது? அனுதாபம் அறிவை மறைத்துவிட்டது’’ என்றும் எழுதினேன்.

08.01.1985 அன்று ‘விடுதலை’யில், “ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை இன்னும் எத்தனை நாள் சகிப்பது’’ என்று முக்கிய புள்ளி விவரங்களுடன் அறிக்கை எழுதினேன்.

09.01.1985 அன்று சிங்களக் கப்பல் படையின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தின் மீனவர் அல்போன்ஸ் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு நானும், மதுரை ஆதினமும் ஆறுதல் கூறியபோது அவர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

அவரது மனைவியும் 5 குழந்தைகளும், “அனாதைகளோடும் அனாதையாகிவிட்டோம்’’ என்று கதறியழுத காட்சி உள்ளத்தை குலுக்கியது. அவர்களது எல்லா குழந்தைகளையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை சார்பில், கல்வி பயிலுவதற்கான எல்லா வசதிகளையும் செய்து தருவதாக உறுதி கூறினேன். பாம்பன் போய்ச் சென்று அங்கு மறைந்த சிங்களவர்களின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சூசை நாயகத்தின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறினேன்.

சுயமரியாதை வீரர்களின் இழப்பு என்பது இயக்கத்திற்கு மட்டுமல்ல, இச்சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அவ்வகையில் ஒவ்வொருவர் இழப்பையும் தாங்கமுடியாத மன அழுத்தத்துடனே எதிர்கொள்ளும் நான், 17.1.1985 அன்று சேலம் ஆத்தூர் நகர திராவிடர் கழகத் தலைவரும், நீண்ட நாள் இயக்கத் தொண்டரும் கழகப் போராட்டங்கள் பலவற்றிற்கும் பங்கேற்றவருமான மானமிகு வி.ஆறுமுகம் அவர்கள் மாரடைப்பால் ஆத்தூரில் இயற்கை எய்தினார்கள் என்பதை அறிந்து மானமிகு ஆறுமுகம் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க நான் ஆத்தூர் புறப்பட்டுச் சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினேன். இறுதி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.

தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டர் சுயமரியாதை வீராங்கனை தஞ்சையைச் சேர்ந்த மூதாட்டியார் ஆனந்தம்மாள் அவர்கள் 04.02.1985 அன்று இரவு மாரடைப்பால் இயற்கை எய்தினார்கள். நான் செய்தி அறிந்தவுடன் 05.02.1985 அன்று மதியம் 1.30 மணி அளவில் அவர்களது உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம் 09.02.1985 அன்று காலை 10 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் கூடியது. தமிழகம் முழுவதுமிருந்து கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கழகப் பொறுப்பாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

கழகத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் _ நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும் _ தந்தை பெரியார் தற்காப்பு இளைஞர் அணி என்ற அமைப்பை மாவட்டம் முழுவதும் உருவாக்குவது என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் வகுத்துத் தந்த ஆத்தூர் தீர்மானப்படி தற்காப்பிற்காக ஒவ்வொருவரும் சட்டத்திற்குட்பட்ட அளவு கத்தி ஒன்றை கட்டாயம் வைத்துக்கொள்வோம் என்று 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெங்களூர் சீ.ராமபுரத்தில் 10.02.1985 அன்று இரவு 7 மணிக்கு மண்ணடிப்பேட்டையில் திராவிடர் கழகக் கொடி ஏற்று விழா நிகழ்ச்சி கர்நாடக மாநில திராவிடர் கழகத் துணைத் தலைவர் வ.சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நான் கழகக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றினேன். இந்தக் கொடி ஏற்று நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் பெரியப்பா, துரைசாமி, கர்நாடக மாநில திராவிடர் கழகச் செயலாளர் பாண்டியன், பொருளாளர் மு.ரெங்கநாதன், மகளிரணி அமைப்பாளர் சொர்ணா ரெங்கநாதன், மகளிரணி பொருளாளர் இளஞ்சியம் பாண்டியன், சுசீலா கிருஷ்ணன், காதர் சரீப், வீ.மு.வேலு, பொருளாளர் ஜெயராமன், ஸ்டாலின், ந.அர்ச்சுனன், கமலநாதன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

11.02.1985 அன்று கர்நாடக மாநில திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டமும் _ கழகக் குடும்பங்களின் கலந்துரையாடல் கூட்டமும் முற்பகல் பெங்களூர் பெரியார் நகரில் என் தலைமையில் நடைபெற்றது.

கர்நாடக திராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர் இளஞ்சியம் பாண்டியன் கடவுள் மறுப்பு கூறினார். பின்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுத்தறிவாளர் கழக ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும், பிராத்தனை மோசடி விளக்கப் பொதுக் கூட்டமும் 24.02.1985 அன்று 8 மணிக்கு தெர்மல் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தெர்மல் நகர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கே.பி.எஸ்.மணி தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் செயலாளர் ந.பிரேம் நவாஸ் வரவேற்றார். நான் சிறப்புரை ஆற்றினேன். கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பிராத்தனை மோசடி விளக்கத்தினை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினேன்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பி.சிவனணைந்த பெருமாள் அவர்களது மகள் மலர்க்கொடி _ கே.பாலசிங் ஆகியோர் வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் 24.02.1985 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா (முதலியார்)புரம் 1ஆவது தெருவில் நடைபெற்றது. மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி உரையாற்றினேன். “எப்படி கதிரவன் வரும்பொழுது இருள் நீங்குகிறதோ அதுபோல சுயமரியாதை வரும்பொழுது தானாகவே இருள் நீங்கி விடும். ஆண் மக்களாக இருந்தாலும், பெண் மக்களாக இருந்தாலும் சூத்திரர்களாக பஞ்சமர்களாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.

உரிமைகள் எப்பொழுது கிடைக்கும். புரட்சி மனப்பான்மை வந்தாலல்லவா உரிமைகளைப் பெறமுடியும்’’ என்று குறிப்பிட்டேன்.

தொடர்ந்து, தூத்துக்குடி, புளியங்குடி, திருவெறும்பூர், புதுகை நகரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

தூத்துக்குடி வ.உ.சி. ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 25.02.1985 அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன்.

“இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பால்தான் கீழ்நிலையில் உள்ளவர்கள் எல்லாம் மேலே அமர்திருக்கின்றார்கள்’’ என்று எடுத்துக் கூறினேன்.

மறுநாள், 26.02.1985 அன்று திருச்சி திருவெறும்பூர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரியார், அண்ணா ஆகியோர் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.

“தமிழன் வீட்டு இல்லத்தில் தமிழ்மொழி இல்லை. தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ்மொழி இல்லை. தமிழனுக்கு என்று ஒரு தனி நூலில்லை. தமிழன் தமிழ் நாட்டிலேயே அகதிகளாகத்தான் இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டேன்.

‘சோமு’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் வடஆற்காடு மாவட்டத்தில் திருவத்திபுரம் என்னும் நகரில் பிறந்தவர். அவர்களுடைய மணிவிழா 01.03.1985 அன்று அவர்களது இல்லத்தில் என் தலைமையில் நடைபெற்றது. விழாவில், நான் உரையாற்றும் போது, “மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் திராவிடர் கழகம் அறிவிக்கும் போராட்டங்கள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னை சிறைக்குள் பலமுறை அடைத்துக் கொண்ட அஞ்சாநெஞ்சர்  ஆவார்.

திராவிடர் கழகத்திற்கு பல நேரங்களில் சோதனை ஏற்பட்டபோதிலும் அந்தச் சோதனைகளையெல்லாம் சாதனையாக்கிய திராவிடர் கழக தூண்களில் இவரும் ஒருவர். பகுத்தறிவுப் பகலவன், அன்னை மணியம்மையாருக்குப், பிறகு நம் தலைமையின் கீழும் அணிவகுத்து நின்ற, நிற்கின்ற பட்டாளங்களில் முதல் சிப்பாயாக என்றும் நிற்கும் வீரனாவார்.

அய்யா ஒருமுறை பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று  கூறியவுடன் தமிழர் திருநாளை ஒரு வாரம் விமரிசையாகக் கொண்டாடி பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானவர். திருவத்திபுரத்தில் பொங்கல் விழா ஒரு வார விழாவாகப் பல ஆண்டுகள் நடைபெற இவரும், பா.அருணாசலமும் பெரிதும் காரணமாவார்கள்.

மேலத்தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் 04.03.1985 அன்று தந்தை பெரியார் 106ஆவது  பிறந்த நாள் விழாவும், கழக பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினேன். “அய்யா அவர்கள், அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும்’’ என்று சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள். நாடு முழுக்க, “அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும்’’ என்று ஒரு வாரம் அச்சடித்து 10 காசுக்கு அது நாடு முழுக்க விற்கப்பட்டது. 1957 நவம்பர் மாதம் அந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. இந்த ஊரிலிருந்து தோழர்கள் நூற்றுக்கணக்கில் சிறை சென்றார்கள் என்று பெருமதிப்புடன் குறிப்பிட்டேன்.’’ கூட்டத்தில் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து-கொண்டனர்.

திருவாரூர் கலைக்கல்லூரியில் வரலாற்றுப் பேரவை சிறப்புக் கூட்டம் 05.03.1985 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விழாவில் நான் சிறப்புரை ஆற்றினேன். “தமிழனுக்கு சம்பந்தப்பட்ட வரலாறுகள் என்றைக்கு பாடநூல்களிலே வருகின்றதோ அன்றைக்குத் தான் தமிழர்கள் இனவுணர்வு உள்ளவர்களாக வாழ்வார்கள்’’ என்று மாணவர்களிடையே சிந்தனையை தூண்டுகின்ற அளவிலே தமிழர்களின் இழிநிலைப் பற்றி ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறினேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பேத்தியும் இளங்கோவன் அவர்களது புதல்வியுமான செல்வி கண்மணிக்கும் செல்வன் ரமேஷ்பாபுக்கும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களது தலைமையில் டாக்டர் கலைஞர் அவர்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 06.03.1985 அன்று காலை நடத்தி வைத்தார்கள்.

சென்னை அண்ணாசாலை ‘ஆபட்ஸ்பரி’ திருமண மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் நானும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன். மணவிழா சுயமரியாதை மணவிழாவாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், ஜனதா கட்சித் தலைவர் செழியன், தி.மு.க. பொருளாளர் சாதிக் பாட்ஷா, இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் மங்கையர்கரசி ஆகியோர் ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து-கொண்டனர்.

சென்னை தேவநேயப்பாவாணர் நூலகக் கட்டிடத்தில் கவிஞர் எழிலரசு அவர்கள் எழுதிய, “இன்னொரு விடுதலை’ என்ற புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழா 08.03.1985 அன்று நடைபெற்றது. விழாவில், நான் நூலினை வெளியிட கவியரசர் பொன்னிவளவன் நூலினை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உவமைக் கவிஞர் சுரதா உள்ளிட்ட கவிஞர்கள் கலந்துகொண்டனர். நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினேன்.

09.03.1985 அன்று நடைபெற்ற பெரியார் திறந்த பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘சமஸ்கிருதமயமாக்கம்’ பற்றிய கருத்தரங்கில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.அய்.சுப்பிரமணியம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஜஸ்டிஸ்’ பி.வேணுகோபால், டாக்டர் க.த.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த கருத்தரங்கில் எடுத்-துரைக்கப்பட்ட அனைவரின் உரைகளையும் தொகுத்து ‘சமஸ்கிருத ஆதிக்கம்’ என்று தனி நூலாக வெளியிடப்பட்டது. தற்போது அது மீண்டும் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

16.03.1985 அன்று பழனியில் அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ பற்றி உரையற்றினேன்.

21.03.1985 அன்று “தாழ்த்தப்பட்ட சமூக சகோதரர்களுக்கு இவ்வளவு கொடுமையா?’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். சென்னையில் உள்ள தென்மண்டல உணவுக் கார்ப்பரேஷனில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஊழியர்கள் நான்காம் பிரிவு ஊழியத்திலிருந்து மூன்றாம் பிரிவு ஊழியத்திற்கு (திக்ஷீஷீனீ சிறீணீss மிக்ஷி tஷீ நீறீணீss மிமிமி) பதவி உயர்வு பெருகிறவர்களது பட்டியலை மண்டல மேலாளர் வெளியிட்டபோது (ஷி.சி., & ஷி.ஜி.) தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களது உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்கட்கு எவ்விதப் பிரதிநிதித்துவமும் அதில் தராமல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாம் 08.03.1985 அன்று.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில்,

43 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளை உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து, அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ரேட் முன்னிலையில் கொண்டு நிறுத்தி 15 நாள் காவலில் வைக்க ஆணை வாங்கி சிறையில் அடைத்துள்ளனர். அத்தியாவசிய சட்டத்தினை (ணிஷிவிகி) அக்கிரமாக தமிழக அரசு இதற்குப் பயன்படுத்தியுள்ளது. இதனை நாம் கண்டித்து, கழக வழக்கறிஞர்கள் குழு அமைத்து அவர்களுக்கு சட்ட உதவி அமைத்திட உதவிட விரைந்து செய்வோம்.

இதுகுறித்து பிரதமர் குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராவ் பீரேந்திர சிங் ஆகியோருக்கு நாம் தந்திகளை அனுப்பினோம். நியாயமான உரிமைகளுக்குப் போராடிய _ சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினேன்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *