தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘உண்மை’ (செப்டம்பர் 16_30, 2018) இதழில் வந்துள்ள பெரியார் ஒளிப்பட அட்டை அனைவர் கண்களையும் வசீகரித்தன. ஒவ்வொரு ‘உண்மை’ இதழும் மிடுக்கோடும், புதுப் பொலிவோடும் வருவதை எண்ணி இளைய தலைமுறையினர் அகமகிழ்ந்து பாராட்டுகின்றனர்.
குறிப்பாக, எழுத்தாளர் மஞ்சை வசந்தனின் ‘உலகெங்கும் பரவிடும் பகுத்தறிவுப் பகலவன்’ கட்டுரையில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அமெரிக்கா, கலிபோர்னியா, வாஷிங்டன், நியூஜெர்சி மற்றும் சிகாகோ, சிங்கப்பூர், பெங்களூரு, ஆந்திரா, தெலுங்கானா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் கூடிய அரிய ஒளிப்படங்கள் இளைஞர்களையும், மாணவர்களையும் சிந்திக்கத் தூண்டியதுடன் பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வைத்துள்ளன.
தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்‘ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைர வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கும், அவரது ஒளிப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி பெரியார் கொள்கைகளை, அவரது தன்னலமற்ற தொண்டை இளைஞர்கள் _ மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து அவர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தி வருகின்ற ஓய்வறியா தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
உலகத் தலைவராக உயர்ந்து நிற்கும் தந்தை பெரியார் கொள்கைகளை பாமர மக்களிடையே எடுத்துக் கூறி அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் வாயிலாக இந்திய நாடு விரைவில் ‘பெரியார் நாடு’ என்பதாக உருப்பெற்று எழும் என்பது உறுதி!
-இல.சீதாபதி,
மேற்கு தாம்பரம், சென்னை – 45