அய்யாவின் அடிச்சுவட்டில்…

செப்டம்பர் 1-15

(இயக்க வரலாறான தன்வரலாறு – 209)

அண்ணா பெயரிலான அரசு சங்கராச்சாரிக்கு வரவேற்பளிக்கலாமா?


மதுரையில் 17, 18.12.1983 ஆகிய இரு நாட்களும் திராவிடர் கழக மாநில மாநாடும், ஈழ விடுதலை மாநாடும் மிகச் சிறப்பான முறையில், மதுரை மாநகரத்து மக்களுக்கு மட்டுமல்ல; மாநாட்டில் பங்கேற்ற லட்சோபலட்சம் தமிழர்களுக்கும் என்றென்றும் உள்ளத்தில் பதிந்துவிட்ட காட்சியாக மதுரை மாநாடுகள் அமைந்திருந்தது.

ஈழ விடுதலை மாநாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மாநாட்டில் நான் நீண்ட உரையாற்றினேன். திராவிடர் கழகத்துக்காரர்கள் யாராக இருந்தாலும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைப்பதற்குத் தாங்கள் வருகின்றோம் என்று சொல்லக்கூடிய உணர்வை யார் பெற்றிருந்தாலும், அவர்கள் இந்த மாநாட்டிற்குப் பிறகு முதலிலே செய்ய வேண்டிய பணி ஒன்று உண்டு.

அப்பணி என்னவென்றால் நீங்கள் உடனடியாக உங்கள் “மரண சாசனத்தைத் தயாரிக்க வேண்டும்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னதை மேற்காட்டிப் பேசினேன். மதுரை மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையைக் குலுக்கிய விடுதலைப் பேரணியில் பெண்களும், குழந்தைகளும், இளைஞர்களும்,  அணி வகுத்தனர். பேரணி ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்க ஒரு மணி 40 நிமிடம் பிடித்தது. வீதியின் இருமருங்கிலும் மக்கள் திரள். இனத் தலைவர்கள் பவனி, பேரணி முன் வரிசையில் கழக முன்னணியினர் அணிவகுத்து நின்றார்கள்.

மாநாட்டில் உலக விடுதலை இயக்க கண்காட்சியைத் திறந்து வைத்து வை.கோபால்சாமி எம்.பி. (தற்போது வைகோ) அவர்கள் பார்வையிட்டுச் சென்றனர். இரண்டாம் மாநாட்டில், ‘ஈழவிடுதலை  தந்தை செல்வா’ படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் திறந்து வைத்தார். உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் பொற்கிழி வழங்கினார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சர நிறுவனத்தின் சார்பில் 30.12.1983 அன்று, இயல்பியல் மற்றும் மறுவாழ்வு நிலையத்தின் இயக்குநர் டாக்டர் அய்.எஸ்.சண்முகம் அவர்களிடம் திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகில் உள்ள  வட்டம் ஆலவாயைச் சேர்ந்த, விபத்து காரணமாக _ நடக்கவியலாத தமிழாசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விசை பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி ஒன்று வாங்க ரூ.5,500/_ நன்கொடையை வழங்கினேன்.

திராவிட இயக்கம் பற்றிய பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எழுதிய  ‘‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’’ என்னும் நூலுக்கு 31.12.1983 முதல் 03.01.1984 வரை மறுப்பு தெரிவித்து ஆய்வுரைக் கூட்டம் நடைபெற்றது. திராவிட இயக்கம் பற்றிய நூலில் தந்தை பெரியாரைப் பற்றிய குறைவான மதிப்பீட்டை நிலைநிறுத்தும் லாவகமான பணியை திரு.பி.ராமமூர்த்தியார் செய்திருப்பதாய் நான் குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து, விளக்கியுரையாற்றினேன்.

நாள் தோறும் ‘விடுதலை’யில் வெளிவந்து பிறகு தனி நூலாக ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் உண்மை வரலாறு!’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை ‘விடுதலை’யில் பிரசுரிக்குமாறும், “விமர்சனம் என்னுடைய பல கருத்துகளுக்கு விரோதமாக இருக்கலாம். அதைப் பற்றிய தயக்கம், தயவு தாட்சண்யம் ஒன்று வேண்டாம்’’ என்று தோழர் பி.இராமமூர்த்தி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

13.01.1984 அன்று மலேசிய நேரப்படி இரவு 7.40க்கு நானும், எனது வாழ்விணையர் திருமதி மோகனாவும் கோலாலம்பூர் விமான நிலையம் சென்று அடைந்தோம்.

மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி, மத்திய, மாநில திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், நண்பர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து மாலைகள், கருப்புத் துண்டுகளை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.

மலேசியாவில் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்துவந்த நான், ஓய்வு ஒழிச்சல் இன்றி இடைவிடாது ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று தந்தை பெரியாரின் லட்சியங்களைப் பரப்பிடும் வாய்ப்பைப் பெற்றேன்.

இரண்டாம் நாள் 14.01.1984 அன்று காலை பத்திரிகைகள் பேட்டி காண வந்திருந்தன. தமிழ் நாளேடுகளான ‘தமிழ்நேசன்’, ‘தினமணி’(மலேசியா), ‘தமிழ்ஓசை’ பத்திரிகைகளுக்கு நான் பேட்டி அளித்து, தந்தை              பெரியாரின் தலைசிறந்த மனிதாபிமானத் தத்துவங்களை எடுத்துக் கூறினேன்.

04.02.1984 அன்று, “தமிழ்நாடு அரசு, அரசின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமாகவும், பெரியார், அண்ணா கொள்கைகளுக்கு மாறாகவும், அரசு சார்பில் சங்கராச்சாரியார்களுக்கு வரவேற்பு அளிப்பது தவறானதாகும். அந்த முடிவைக் கைவிடவேண்டும்’’ என்று தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினேன்.

அன்றே கழகத் தோழர்களுக்கு நான் விடுத்த வேண்டுகோளில், “அண்ணா பெயரில் இயங்கும் இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு சார்பில் சங்கராச்சாரியார்களுக்கு வரவேற்பு அளிக்கும் செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். நான் தமிழகத்தில் இல்லாத தருணத்திலும், தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் வகையில், கழகம் மேற்கொண்டிருக்கும் முடிவை வரவேற்கிறேன் _ பாராட்டுகின்றேன். பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படாத வகையிலும் திராவிடர் கழகத்திற்கென்று உரிய தனித்தன்மையுடன் கட்டுப்பாட்டுடன் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அரசின் மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும், அய்யா_அண்ணா கொள்கை மீது மதிப்பு கொண்டவர்களும் கட்சிகளை மறந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்த ‘டிரங்க்’ செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

11.02.1984 அன்று சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அலுவலகத்திற்குச் சென்ற நான், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ‘தமிழ்முரசு’_ன் தலைமை ஆசிரியர் திரு.ஜெயராமைச் சந்தித்து உரையாடினேன்.

நான் ‘தமிழ்முரசு’ அலுவலகத்தில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் தங்கியிருந்தும், ‘தமிழ்முரசு’ அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தேன். பின்பு ‘தமிழ்முரசு’_ன் ஆசிரியர் குழுவினர், செயலாட்சிப் பிரிவினர், அச்சுக் கோர்ப்பாளர்கள், பிழை திருத்துவோர் முதலியோருடனும் உரையாடினேன்.
மிகச் சிறப்பாக மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப் பயணம் முடித்து 14.02.1984 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்பினேன்.

14.02.1984 அன்று சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற காஞ்சி சங்கராச்சாரிக்கு தமிழக அரசே வரவேற்பு கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

19.02.1984 அன்று சேலம் உடையார்பட்டியில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், எங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

27.02.1984 அன்று வடலூர் பேருந்து நிலைய திடலில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய மேடையில் எனக்கு வரவேற்பு விழாவும் எடைக்கு எடை வெங்காயம் தரப்பட்டது. அப்போது, “திராவிட இயக்கத்தைப் பற்றிய உண்மை விவரங்களை எடுத்துக் கூறுவது இன்றைய இளந் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் அவசியமாகும்’’ என்று கூறினேன்.

09.03.1984 அன்று சென்னையில் பின்னி மில் ஆலை _ பார்ப்பன அதிகாரிகளின் நிர்வாக ஒழுங்கீனங்களால் மூடப்பட்டுக் கிடப்பதைக் கண்டித்து, பட்டாளம் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

10.03.1984 அன்று தாழ்த்தப்பட்ட _ பிற்படுத்தப்பட்ட தலைவர்களுடன், மண்டல் குழு பரிந்துரை; அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி, கர்ப்பூரி தாகூர்,

பாபு ஜெகஜீவன்ராம்  ஆகியோரையும் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

பெரியார் மாவட்டம் சென்னிமலையில் 11.03.1984 அன்று மாலை 6.30 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியான ‘மாட்டு வண்டி மலை ஏறுகிறது’ என்ற நிகழ்ச்சியை விளக்கிப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. என்னை அழைக்கப்பெற்று அதில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

மறுநாள் சேலம் மாவட்டம் மோகனூரில் ஒருவந்தூர் தி.க. தலைவர் கு.நடராசன், செல்லம்மாள் ஆகியோர் வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து உரையாற்றினேன்.

14.03.1984 அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திட்ட மன்றத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிடும் நல்ல வாய்ப்பு அது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எனது முன்னாள் பேராசிரியரும் பெரியார் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஏ.இராமசாமி அவர்களால் எழுதப்பட்ட “Dimensions of Indian Economoic problems” என்ற நூலின் வெளியீட்டு விழா 16.03.1984 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு நூலினை வெளியிட தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆணையர் எஸ்.ரெங்கமணி அய்.ஏ.எஸ். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

நான் விழாவில் கழகத்தின் சார்பில் சால்வை போர்த்தி பாராட்டு தெரிவித்து உரையாற்றினேன்.
சென்னை மாவட்டம் புதுவண்ணையில் பெரியார் மாளிகை திறப்பு விழாவும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் 18.03.1984 இரவு 7 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னை மணியம்மையார் இரவுப் பள்ளி திறப்பு விழாவும் நடைபெற்றது.

விழாவையொட்டி எழுச்சிமிக்க கருஞ்சட்டைப் பேரணி வடசென்னை பிரபாத் டாக்கீசிலிருந்து புறப்பட்டது. அணிவகுப்பில் திராவிடர் கழகத் தோழர்களும், மகளிர் அணியினரும், இளைஞர் அணியினரும், தொழிலாளரணியினரும் கட்டுப்பாடுமிக்க ராணுவ வீரர்களாய் அணிவகுத்துச் சென்றனர். விழாவில் நான் சிறப்புரையாற்றினேன்.

20.03.1984 அன்று லண்டன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தம்பதிகள் ஃபிராங்ரோவ்,   (திக்ஷீணீஸீளீ ஸிஷீஷ்மீ) திருமதி பவுலின்ரோவ் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் என்னை சந்தித்து திராவிடர் இயக்கத்தின் வரலாறு, கொள்கைகளைப் பற்றி கேட்டறிந்தனர். நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

21.03.1984 அன்று மறைந்த ‘நடிகவேள்’ எம்.ஆர்.இராதா அவர்களின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு அவர்களின் இறுதி ஊர்வலம் தந்தை பெரியார் வேனில் அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலின் மீது திராவிடர் கழகக் கொடி போர்த்தப்பட்டது. மறைந்த வாசுவின் சகோதரர் ராதாரவிக்கு நான் ஆறுதல் கூறினேன். வாசுவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

தென்னாற்காடு மாவட்டம் கடலூர் 25.03.1984 அன்று திருப்பாதிரிப்புலியூர் தேரடித் தெருவில் நான் வெளிநாடு சென்று வந்ததற்குப் பாராட்டு விழாவும் மற்றும் திராவிடர் கழகப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மறுநாள் கடலூரில் உள்ள பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை சார்பாக முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நான் சிறப்புரையாற்றினேன்.

01.04.1984 அன்று காலை 9 மணி அளவில் அலகாபாத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வாராம் அதார் அவர்களது இல்லத்தில் சந்திரஜித் யாதவ் மற்றும் தலைவர்களுடன் நான் சந்தித்து மண்டல் பரிந்துரை பற்றி விவாதித்தோம்.

02.04.1984 அன்று புதுடெல்லி சென்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் மண்டல் பரிந்துரை பற்றி பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் திரு.ஆர்.வெங்கட்ராமனைச் சந்தித்து, மண்டல் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினேன்.

முன்னேறிய சாதியினர் பட்டியலில் உள்ள சிலரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது என்றும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கனவே இருந்தவர்களை நீக்கியுள்ளது என்றும், அந்தப் பட்டியல் இப்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

08.04.1984 அன்று காரைக்குடியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானங்களை விளக்கி நடந்த பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு நீண்ட உரையாற்றினேன். மறுநாள், 09.04.1984 அன்று, கரூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி 11.04.1984 அன்று சென்னை வடபழனி சிங்காரவேலர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். கூட்ட மேடையின் எல்லாப் புறங்களிலும் நீண்ட தூரத்திற்கு மக்கள் கூட்டம் கடல்போல் காட்சியளித்தது.

அதேபோல், 14.04.1984 அன்று ஈழ விடுதலைக்கு ஆதரவாக _ சிங்கள அரசின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த மாபெரும் பேரணியில் ‘தமிழினக் காவலர்’ டாக்டர் கலைஞர், நான், காமராஜ் காங்கிரஸ் கட்சித் தலைவர் நெடுமாறன், மதுரை குருமகா சந்நிதானம் ஆகியோரும் சேர்ந்து சென்னை அண்ணாசாலையில்

உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று எழும்பூர் பெரியார் திடலை வந்தடைந்தோம். அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *