பெரியார் கொள்கைக்கு வெற்றி!
உண்மை (ஆகஸ்ட் 16_31, 2018) இதழின் அட்டைப் படத்தில் பெரியார் _கலைஞர் ஒளிப்படம் தத்ரூபமாக அமைந்திருந்தது. பல்வேறு கருத்துகள் சுவைபடவும், ரத்தினச் சுருக்கமாகவும் இருந்தன. குறிப்பாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் முதல் வெற்றி எனும் தலைப்பில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய _ அரிய செய்தியாக அமைந்தன.
மேலும், ஜாதி ஒழிப்புக் கொள்கையை தனது உயிர் மூச்சுக் கொள்கையாக அறிவித்து அதற்காக வாழ்நாள் முழுவதும் தன்னையே அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். அதன் இறுதிப் போராட்டமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் போராட்டத்தை அறிவித்தார். ஜாதி ஒழிப்பு வீரர் பெரியார். கலைஞர் ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையினை நிலைநாட்டும் வகையில் தனது பேனா முனையின் கூர்மையால் சட்டம் இயற்றி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முயன்றவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்.
அதன் பயனாய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மதுரை மாரிச்சாமி என்பவர் முதன்முதலாக அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, காலம் தாழ்ந்தாலும், தாழ்த்தப்பட்டாலும் ‘பெரியார் கொள்கை’ வெற்றியை அடைந்தே தீரும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வாழ்க பெரியார்! வெல்க அவரது கொள்கை!
– சீ.பத்ரா, வந்தவாசி
சிந்தனையைத் தூண்டும் கருத்துகள்!
சமூகத்தில் மண்டிக் கிடக்கும் மாளாத மூடநம்பிக்கை குப்பைகளை கணநேரந் தவறாமல் அகற்றி கொண்டுள்ள ‘விடுதலை’, ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ இதழில் ஆகஸ்ட் 1_15 வெளிவந்த அத்தனையும் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் தீட்டும் கட்டுரை மிக அற்புதம். மகளிர் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துகள் பல அதில் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரையின் இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ளதை போல் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை நிச்சயம் கிடைக்கும். உறுதியாக ஓர் நாள் ஆண்களைப் போலவே பெண்களும் மாலையணிந்து சபரிமலைக்கு செல்வார்கள். உயிர்களை உருவாக்கும் தாயாகிய பெண்கள் அர்ச்சகராகவும் பொறுப்பேற்பார்கள்.
“சிறந்த நூல்களிலிருந்து சில பகுதிகள்’ என்ற தலைப்பில் பல நூல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதியில் ஓர் நூலினைப் பற்றிய முழு விபரமும் குறிப்பிடப்பட்டு உள்ளதால் பொருட் செலவின்றியே சம்பந்தப்பட்ட அந்நூலின் மய்யக் கருத்தினை அறிந்துகொள்ள முடிகிறது. இப்பகுதி என்னைப் போன்ற மிக இளவயதில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. தங்களின் இந்தப் பணி இன்னும் பல்லாண்டு காலம் தொடர வேண்டும். அதற்கு என் வாழ்த்துக்கள்.
– ப.கார்த்தி, ஈரோடு