எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)

செப்டம்பர் 1-15

திருவள்ளுவரின் குறள் என்றைக்கும்

                                            பயன்படும் ஒப்பற்ற நூல் – தந்தை பெரியார்

வள்ளுவர் எந்த மதத்தினை சார்ந்தவர் என்று தன்னை காட்டிக் கொள்ளவில்லை. இன்ன மதத்துக்கு என்று இலக்கியம் செய்யவில்லை. அறிவு சம்பந்தமானவற்றையே குறளில் காட்டியுள்ளார். எனவே, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையானவற்றிற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கின்றேன்.

நான் வள்ளுவர் குறள் முக்காலத்துக்கும் பயன்படக்கூடியது என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டேன். அந்தக் காலத்தில் ஏது ரயில், எலக்ட்டிரிக் விளக்கு மற்ற சாதனங்கள் எனவே, இன்றைக்கு வாழ்க்கைக்கு ஒத்துவருவதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறள் மாநாட்டிலேயே கூறியுள்ளேன். வள்ளுவர் எந்த இடத்திலும் தாம் இன்ன மதத்தினன் என்று காட்டிக் கொள்ளவில்லை. இன்ன கடவுள் நம்பிக்கை உடையவன் என்றும் காட்டிக் கொள்ளவே இல்லை. வள்ளுவர் குடும்பத்துடன் -உலகத்துடன் ஒட்டி வாழுகின்றவன் எப்படி வாழ வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அதுபோலவே துறவியாக வாழக் கூடியவன் எப்படி வாழ வேண்டும், சீர்திருத்தவாதியாக வாழக்கூடியவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் கருத்துக்களை கூறியுள்ளார்.

மனிதன் பொதுநலத் தொண்டனாக இருந்தால் எப்படி இருக்கவேண்டும், குடும்பத்தவனாக இருந்தால் அவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

“குடிசெய்வார்க்கு இல்லைபருவம் மடி செய்து

மானம் கருதக் கெடும்” என்று கூறுகின்றார்.

பொதுத் தொண்டனுக்கு தொண்டுக்குக் காலம் நேரமே பார்க்கக்கூடாது. சோம்பல் இருக்கக் கூடாது இதுகளையெல்லாம் விட பொதுத் தொண்டு செய்பவன் மான அவமானம் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் பொதுத் தொண்டு கெட்டே போகும் என்று கூறுகின்றார். குடும்ப வாழ்வில் உள்ளவனுக்குக் கூறும்போது காலம் பார்த்து செய்தால் ஞாலமே உலகமே கைகூடும் என்று கூறியுள்ளார். அதுபோலத்தான் மனிதன் வாழ்க்கைக்கு மானம் அவசியம். மானம் அழிந்தால் உயிரை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றார். குடும்ப வாழ்க்கையில் உள்ளவனுக்குச் சொல்லியதையும் பொதுத் தொண்டனுக்கு சொல்லியதையும் முரணாக இருக்கின்றதே என்று கருதி இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. குடும்பக்காரனுக்குக் கூறியது அது, பொதுத் தொண்டனுக்குக் கூறியது இது என்று பகுத்துணர வேண்டும்.

ஒரு மனிதன் ஏழையாக -இல்லாதவனாக-பிச்சைக்காரனாக இருக்கவும் ஒருவன் பணக்காரனாகவும் இருக்கின்றான் என்றால் இதற்கு கடவுள் செயல்தான் காரணம் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுகின்றவர்களை மண்டையில் அடிப்பது போல வள்ளுவர்,

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்”    – (குறள் 1064)

ஒரு மனிதன் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்று படைத்து இருப்பானே யானால் அந்த கடவுளை ஒழித்துக்கட்டு என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

“அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல”    – (குறள் 39)

தான் தேடிய பொருள் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்று கருதுவானேயானால் அதைப் பொதுவாக்கி விடவேண்டும். அந்தப் பொருள் உள்ளவரை அவன் இறந்தாலும்கூட புகழ் நிலைக்கின்றது. இவனது லட்சியம் இப்படி பொதுவுக்கு என்று ஆக்குவது மூலம் தான் கைகூடும்.
திருவள்ளுவரின் குறளில் என்றைக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் எவனாலும் கூறப்படாததுமான கருத்து. மனிதன் ஒவ்வொருவனும் அவன் அவன் புத்தி சொல்கின்றபடி நடக்கணும் என்று கூறியுள்ளார்.

“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றும்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றும் கூறியுள்ளார். சாஸ்திரங்களிலும், புராணங்களிலும், பெரியவர்கள் கூறியதை, சாஸ்திரங்களை ஆராய்பவன் தர்க்கிப்பவன் நாத்திகன் என்று கூறப்பட்டு உள்ளது. இப்படியே கூறி அடக்கி விட்டபடியால் இந்த கருத்தினைச் சொல்ல எவருமே முன்வரவில்லை. எவராவது முன்வந்திருந்தாலும் ஒழிக்கப்பட்டே வந்து உள்ளார்கள்.

இன்றைக்குக் கூட ஏதாவது சீர்திருத்தம் செய்ய முற்பட்டால் அது சாஸ்திரத்துக்கு விரோதம், தர்மத்துக்கு விரோதம், முன்னோர்கள் நடப்புக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகின்றவர்கள் இன்றும் உள்ளார்களே. உலகில் காட்டுமிராண்டிகளாக இருந்த நாடுகள் எல்லாம் அறிவு காரணமாக ஆகாயத்தில் பறக்க நாம் மட்டும் காட்டுமிராண்டியாக இருக்கிறோம் என்றால் காரணம் என்ன? நாம் அறிவைப் பயன்படுத்தாததுதானே?

வள்ளுவர் நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு”
என்று கூறியுள்ளார். இது என்றைக்கும் பொருந்தும். பலதரப்பட்ட குழுக்களை உடைய மக்கள் ஒரு நாட்டில் வாழ்ந்தால் அந்த நாடு உருப்படாது, வேறு வேறு லட்சியத்தை கொண்ட ஒரு கூட்டம் நாட்டில் இருந்தால் அவர்களுக்கு அந்த நாட்டைப் பற்றிய கவலை இருக்காது; அது நாட்டுக்கு நல்லது அல்ல என்கின்றார். அடுத்து, “பாழ் செய்யும் உட்பகையும்’’ பல்வேறு பேதங்களை உள்ள குரோதமான கூட்டம் இருந்தாலும் நாடு நாசமாகி விடும். அடுத்து, “அரசாங்கத்துக்கு விரோதமாக காரியம் ஆற்றுகின்ற கூட்டம் இருக்கக் கூடாது’’ என்கின்றார். இதுகள் எல்லாம் இல்லாதது தான் ஒரு சிறந்த நாடு என்கின்றார். இத்தகைய அருமையான கருத்துக்கள் இன்று செல்லுபடியாகவில்லையே. நாடோ ஜனநாயக நாடு இதில் எல்லோருக்கும் ஓட்டு. மக்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்படி உரிமை இருக்கும்போது எப்படி இந்த கருத்து செலாவணியாகும்? எப்படி கிருஸ்தவ மதத்துக்கு மூடநம்பிக்கையினைக் கண்டிக்க புராட்டஸ்டண்ட் மதம் ஏற்பட்டதோ அதுபோல வைதீக தர்மத்தின் கேடுகளைக் கண்டிக்க ஏற்பட்ட கண்டன நூல் திருக்குறள் ஆகும்.

சங்கராச்சாரியார் இராமாயணத்தைப்பற்றி கூறும்போது பார்ப்பனர்களுக்கு வாழ்க்கை கஷ்டம் வந்தால் இராமாயணத்தில் இராமனுக்கு எப்படி எப்படி கஷ்டம் வந்தபோது எப்படி எப்படி நடந்து கொண்டான் என்பதை பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இராமாயணம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ளுவது என்பதற்கு ஒரு “கோடாக’’ அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். திருக்குறள் ஆனது, தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி எப்படி நடந்துகொள்வது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்த அருமையான நூலாகும்.

                                                 

  (தொடரும்…)

– நேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *