அண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்

செப்டம்பர் 1-15

திராவிடர்  இயக்கத்தின் மிக முக்கியமான பிரச்சாரங்களில் ஒன்று இராமாயண எதிப்பு. இராமாயணக் கதையினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. சைவ, சமண, பவுத்த மதத்தினரும் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியே சைவர்கள் இட்டுக்கட்டிய கதையான இராமேசுவரத்தில் வந்து இராமன் லிங்க பூஜை நடத்தினார் என்பது. இக்கதையை சைவர்கள் இட்டுக்கட்டிப் பரப்பினாலும், வைணவ பக்தர்கள் இதை நம்புவதில்லை. குறிப்பாக இன்னும் கூட வைணவ மடாதிபதிகள் இராமேசுவரம் சென்று லிங்கத்தினை வழிபடுவதில்லை, மடிந்தும் புறந்தொழா மாண்புடைய வைணவர்கள் இப்படி இருப்பதில் ஆச்சர்யமில்லை. சிவகீதையைப் பரப்ப சைவர்கள் எடுத்த பிரச்சாரத்தை வைணவர்களின் பகவத்கீதைப் பிரச்சாரம் முறியடித்துவிட்டது என்பதே கண்கூடு.

இராமாயணத்தின் கதைகள் பலப்பல. அதில் முக்கியமானது வால்மீகி இராமாயணம். வால்மீகி இராமாயணத்தின் முக்கியப் பகுதிகளை தமிழக வாசகர்களுக்கேற்ப மாற்றி, வெட்டி, ஒட்டி, புதுக்கி கவிதைச் சுவையைக் கொஞ்சம் அதிகமாக ஊற்றி பிழிந்து செய்த அல்வாதான் ‘இராமகாதை’ என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுப் பின்பு ‘கம்பராமாயண’மாகப் பரிமாணமளிக்கும் கம்பனின் காவியம்.

பொதுவாக. எந்த ஒரு உள்ளூர்க் கதையும் உள்ளூரில் சொல்லும் போது அதற்கு  மதிப்பிருக்காது, வெளி இடத்திலிருந்து வரும் கதைகளை சற்றே மிகைப்படுத்தி அழகு சேர்த்து கற்பனைகளை அதிகம் தோய்த்து சொல்லும் போது அந்த சுவைக்காகவே கதையை வெகுவாக ரசிப்பார்கள், ஆகா, ஓகோ, என்று பாராட்டுவார்கள். நாளடைவில் கதையின் நாயகன் எல்லாம் வல்லவன், அவன் கதையைக் கேட்டாலும், பேசினாலும் பரப்பினாலும் நல்லவை நடக்கும் இல்லையேல் ஆறாத் துயர் வந்து சேரும் என்று மக்களை நம்ப வைப்பார்கள்,

“காலன் கண்டால் பொல்லாதவன் விடமாட்டான்
ராமதாசன் என்று சொன்னால் நம்மைத் தொடமாட்டான்”

என்று பாட்டுப் பாடுவார்கள். எங்கே என்றால் இறந்து போன ராம பக்தன் வீட்டில், இதைப் பற்றி அதிகம் சிந்திக்கவோ (அ) கேள்வி கேட்கவோ கூடாது. மீறினால் நமக்கு நரகம் கிடைக்கும் என்ற பயம் தான் காரணம். இப்படியே ராமன் கதை வைணவர்களால் பரப்பப்பட்டது.

சைவர்கள் பார்வையில் இராமன்

சைவர்கள் இதற்கு எதிராக நின்று ராமன் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல. சாதாரண மானிடப்பிறவிதான். மாயை என்பது  கடவுளுக்குக் கிடையாது. மாயையில் சிக்கி மாயமான் பின்னால் ஓடி, மனைவியை இழந்து தவித்த ராமன் கடவுள் ஆகமாட்டான் என்று ‘சிவஞான சித்தியா’ என்ற நூலில் அருள்நந்தி சிவாச்சாரியார் மூலம் ஒரு வைணவ அன்பரைப் பாத்து  கீழ்க்காணும் பாடலால் சொல்லப்பட்டுள்ளது

“மாயமான் தன்னைப் பொய்மான் என அறியா தரக்கன்
மாயையில் அகப்பட்டுத்தன் மனைவியை இழந்தான்தன்னை
மாயைக்குக் கர்த்தா என்பை மதிகெட்டங் கவனைக் கொன்று
நாயனா தமைப்பூ சித்தான் கொலைப்பழி நணுகிடாமோ’’

இராமாயண எதிர்ப்புப் பாதை

தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்தபோதே ‘ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்களை எரிக்கவேண்டும்’’ என்று காங்கிரஸ் மாநாடுகளில் ராஜகோபாலாச்சாரியார் முன்னிலையிலேயே பேசினார்.  அதற்கு உண்மையான காரணம் இரண்டு இதிகாசங்களும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுகட்டை போட்டு ஜாதி என்கின்ற அழுக்கு குட்டையில் மூழ்க வைத்திருப்பதால்தான். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை இராமாயண எதிப்புப் போர் திராவிடர் கழகத்தால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.


1943ஆ-ம் ஆண்டு அண்ணா இராமாயணம், பெரிய புராணம் போன்றவைகளை ஏன் எரிக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூடியிருந்த சென்னை சட்டக் கல்லூரி விவாத அரங்கில் தமிழறிஞர் இரா.பி.சேதுபிள்ளையோடும், பின்பு சேலம் செவ்வாய்பேட்டையில் நாவலர் சோமசுந்தர பாரதியாருடன் அண்ணா வாதிட்டு அதற்கான காரணத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். அதில் ஆபாசம், ஒழுக்கக்கேடு, இனவாதம், பார்ப்பன மேலாண்மை ஜாதியக் கட்டுப்பாடு போன்றவை நீடித்து நிலை பெற்றிட இராமயணம்  ஒரு முக்கியக் கருவியாக விளங்குவதே ஆகும் என்றார். சுயமாயாதை இயக்க தொடக்க காலத்தில் இராமாயண எதிர்ப்பு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், பட்டுக்கோட்டை அழகிரி, சாமி சிதம்பரனார், சந்திரசேகர பாவலர் போன்ற தலைவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு பதில் கூற இராம பக்தர்கள் இன்றும் திணறிவருவது கண்கூடு. இராமாயணத்தைப் பற்றி சொற்பொழிவாற்ற தந்தை பெரியார் எப்பொழுதெல்லாம்  பேசினாலும் அதற்கு அடுத்த மாதமே வால்மீகி இராமாயணத்தின் ஆபாச பகுதிகளும் அர்த்தமற்ற அறிவுக்குப் பொருந்தாத சில கதைகளும் சம்பவங்களும்  அடுத்தடுத்த பதிப்புகளில் நீக்கப்பட்டது என்பது ஆவணங்களின் அடிப்படையிலான உண்மையாகும்.

‘திராவிட நாடு’, ‘காஞ்சி’, ‘நம் நாடு’, ‘The Home Land’ ஆகிய   இதழ்களில்  எழுதப்பட்ட அண்ணாவின் கட்டுரைகளில் இராமாயண எதிர்ப்புப் போர் அதிகமாக வீரியத்தோடு எழுதப்பட்டதை நாம் காணலாம். அந்தக் காலக்கட்டங்களில் அதாவது 1940-களில் அண்ணா அவர்கள் துரோகம் செய்பவனை விபீஷணன் என்றும் செய்நன்றி பாராட்டும் நல்லக் கதாபாத்திரமாக கும்பகர்ணனையும் நாட்டு மக்களுக்கு  அடையாளம் காட்டினார். அடிமை வேலை செய்வதற்கு தொண்டூழியம் செய்வதற்கும் வந்தவர்கள் ஆழ்வார்கள் என்றும் நாட்டில் காட்டாட்சி  நடத்தி வருபவர்களை ‘ஆளவந்தார்’ என்று அடையாளம் காட்டி மக்களிடையே இராமாயணத்தின் கேடுகளை விளக்கினார்.

பாரிஸ்டர் இராமசாமியின் இராமாயண எதிப்பு

ஒரு சமயம் 1944ஆம் ஆண்டு தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழகம் முன்னணித் தோழர்களோடு ஆந்திராவிற்கு பயணமான அண்ணா பாரிஸ்டர் இராமசாமி என்கின்ற ஒரு வைதீக எதிர்ப்பாளர் மற்றும் இராமாயண எதிர்ப்புப் போராளியின் படத்திறப்பில் கலந்து கொண்டார். இதுபற்றி 11.06.1944இல் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரையில் இராம எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கு பேசும் பகுதியான ஆந்திராவிலும் எப்படி  வலுப்பெற்றது என்றும், தமிழ் நாட்டில் பெரியார் இராமசாமி செய்த இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் போல ஆந்திரத்தில் பாரிஸ்டர் இராமசாமி எப்படி இராம எதிப்புப் பிரச்சாரம் செய்தார் என்பதையும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றியது பற்றியும் கூறியுள்ளார். பாரிஸ்டர் இராமசாமி இராமராஜ்ய அலங்கோலத்தை விளக்கிக் காட்டும் ‘சம்பூக்’ என்ற நூலை எழுதியுள்ளார் என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். தந்தை பெரியார் எப்படி திருமணங்களிலேயே புராண அலங்கோலங்களைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாரோ அப்படியே பாரிஸ்டர் இராமசாமி அவர் நடத்தி வைத்தத் திருமணங்களில் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். பாரிஸ்டர் இராமசாமி எழுதிய சில புத்தகங்கள், “18 பாவங்கள் புரியும் பார்ப்பனர்கள், குல ஆச்சாரம் ஒரு கற்பனை, சாத்திரத்தின் அடிமை, சமுதாய புரட்சி’’ போன்றவை குறிப்பிடத் தகுந்தவையாகும், பாரிஸ்டர் இராமசாமி நெல்லூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தந்தை பெரியாரைப் பார்த்து பேசி பழகி இருவரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தவர்கள் என்பதை அறிந்து ஆனந்தம் அடைந்திருக்கிறார். தந்தை பெரியார் தெலுங்கிலே சில மணி நேரங்கள் பல  இடங்களிலே  இராமாயணத்தின் கேடுகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவுகளை  ஆற்றியுள்ளார். டார்பிட்டோ ஜனார்த்தனம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சீராளா என்கின்ற ஊலிருந்து 20 மைல்களுக்கு அப்பால் நாகட்லா என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேரடியாக பொது மக்களை சந்தித்து இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தியதைப் பற்றி அண்ணா எழுதியுள்ளதை இன்று படித்தாலும் இன உணர்ச்சி கொப்பளிக்கும். தந்தை பெரியார், அண்ணா, டார்பிட்டோ ஜனார்த்தனம் பேசிய கூட்டத்தில் நன்றியுரை கூற வந்த கோபிநாத் என்ற இளைஞர் நன்றியுரையினை ஆற்றும்போது இராமாயணத்தைப் படலம் படலமாக எடுத்துக்காட்டி பேசியதோடு, குறிப்பாக சம்பூக வதத்தினைப் பற்றி பேசியது மிக உணர்ச்சிகரமாக இருந்தது என்றும் இறுதியாக இராமாயணத்தை தீயில் இட வேண்டும் என்று கூறி, தீயும் கெட்டு விடும் தீய கருத்துகள் அடங்கிய இந்நூலை தீயிலிடுகையில் என்று தீப்பொறி பறக்கப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பரசம் டோஸ் நெ.1 முதல் 10 வரை

கம்ப நாட்டாழ்வார் எழுதிய இராம காதை ஆபாசங்கள் நிறைந்தது அருவருக்கத்தக்கது என்பதை ஆதாரப்பூவமாக எடுத்துக்காட்ட அண்ணா அவர்கள் கம்பரசம் டோஸ் நெ.1 என்று ஆரம்பித்து எழுதினார். அவர் எழுதிய கம்பரசத்திற்கு இன்று வரை யாரும் மறுப்புக்கூறி பதில் எழுதவில்லை. மாறாக உங்கள் கண்களில் அந்தப் பாடல்கள் மட்டும்தான் தெரிகிறதா வேறு எவ்வளவோ பாடல்கள் கவிநயத்துடன் இருக்கிறதே என்று சப்பைக்கட்டு கட்டும் போக்கும் அண்ணா நோக்கத்தை ஆராயாமல் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசுகிறார்களே தவிர ஆராய்ச்சி மனப்பான்மையோ அல்லது பகுத்தறிவு கண் கொண்டோ கம்பராமாயணத்தை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

இராவண காவியமும் அண்ணாவும்

இந்நிலையில் 1946ஆம் ஆண்டு புலவர் குழந்தை இராமாயணத்தை மறுத்து இராவண காவியம் என்கின்ற நூலினை எழுதி வெளியிட்டார். அதற்கு ஆராய்சி முன்னுரையினை அறிஞர் அண்ணா எழுதினார். அந்த ஆராய்ச்சி முன்னுரை மிக அருமையான ஒரு தேர்ந்த அறிஞருக்கே உரிய ஆய்வு மனப்பான்மையோடு எழுதப்பட்டதாகும். அதில் இராமனும் இராவணனும் கற்பனை உருவங்கள்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக  வலியுறுத்திக் கூறிய அண்ணா, சுயமரியாதை இயக்கத்தவர்கள் இராவண தாசர்கள் அல்ல என்றும் இராவணனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பூசாரியாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் எடுத்துக் கூறி, குறிப்பாக  இராமதாசர்களுக்கும் இராவணதாசர்களுக்கும் மறுப்புரை இராவண காவியம் அல்ல, மாறாக  “இராவண காவியம்’’ இராமதாசர்களுக்கு தன்மான தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து என்பதையும் இருவேறுபட்ட கலாச்சாரங்கள் அதாவது ஆரிய_திராவிடர் என்ற பண்பாடுகள் இருந்ததையும், ஆரியம் எவ்வாறு திராவிடத்தை வீழ்த்தியது என்பது பற்றியும் தனது ஆராய்ச்சி முன்னுரையிலேயே அருமையாகக் கூறியிருப்பார். “இராவண  காவியம்’’ எனும் நூல் பழமைக்குப் பயணச் சீட்டு புதுமைக்கு நுழைவுச் சீட்டு, தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச் சுவையறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம் தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர் நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும் இனப் பற்றும் ஒருங்கமைந்த ஓவியம், தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல், தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு, தமிழரசுக்குக் கால்கோள் விடுதலைக் கீதம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

நீதிதேவன் மயக்கம்

‘நீதிதேவன் மயக்கம்’ என்ற நாடக நூலில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட இராவணன் கேட்கும் கேள்விக்கு நீதிபதி பதில் சொல்ல முடியாமல் திணறி மயக்கம் அடைவது இன்றைக்குப்  படித்துப் பார்த்தாலும் மிகச் சிறந்த ஒரு வாதமாக இருக்கும். இப்படி அண்ணாவின் இராமாயண எதிர்ப்பு போரினை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இன்றைக்கு இராமன் என்கின்ற கடவுள் பாத்திரம் கலவரத்தைத் தூண்டும் ஓர் ஆயுதமாக மாறியிருப்பதற்கு மாற்றாக அறிஞர் அண்ணாவின் அறிவாயுதமான ‘கம்பரசம்’, ‘தீ பரவட்டும்’, ‘நீதிதேவன் மயக்கம்’ போன்ற அறிவு ஆயுதங்களை எடுத்துப் போராடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், 1934-ஆம் ஆண்டு தொடங்கி அண்ணா அவர்கள் மறைகின்ற வரை 35 -ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் 1680 ஆகும். அதில் அரசியல் தவிர்த்த கட்டுரைகளை விட்டு இலக்கியம் பேசும்  அறிஞர் அண்ணாவின் கட்டுரைகளில் இராமாயண எதிர்ப்பும் சனாதன எதிர்ப்பும் பழமைவாத எதிர்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தி அண்ணாவிற்கு நன்றி கடன் செலுத்தப் போகிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.   

 

– வழக்கறிஞர் சு. குமாரதேவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *