தேவை! தேவை! ஜாதி இல்லாத நாடு! சாமியார் இல்லாத இந்தியா!

செப்டம்பர் 1-15

நம் நாட்டில் பக்தி என்ற மூடநம்பிக்கை ஒரு மிகப் பெரிய தொற்றுநோய் _ வெறி போன்றது.
ஒரே வரியில் தந்தை பெரியார் அவர்கள், “பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்று மிக அருமையாகச் சொன்னார்!

ஏமாற்றுக்காரர்களும், ஏமாறுபவர்களும் எல்லா நாட்டிலும் உண்டு என்றாலும், ஜாதி போலவே சாமியார்களும், காவி உடை தரித்து காமாந்தகார காலித்தன ஆசிரமவாசிச் சாமியார்களும், தங்கள் மனம் போன போக்கில் எதையாவது கிறுக்குத்தனமாகச் செய்து அதையே தமது “பேடண்டு (றிணீtமீஸீt) மாதிரிகளாக’’ ஆக்கி, பிரபலம் அடைவது, பணம் சம்பாதித்து குறுக்கு வழியில் உல்லாச _  சல்லாப வாழ்க்கை வாழுவது என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது!
ஒருமுறை ஏமாந்தவர்கள் மறுமுறையாவது ‘புத்தி கொள்முதல்’ செய்து அறிவு பெறுகிறார்களா என்றால் ‘இல்லை’ என்பதே பதிலாகிறது.

“தன் முகத்தில் எச்சில் துப்பினால் நினைத்தது நடக்கும்’’ என்று நம்பும் முட்டாள் பக்தர்கள், “சாராய பாட்டில் தந்து குடித்துவிட்டு முகத்தில் துப்பினால் நல்லது நடக்கும்’’ என்று நம்பும் அறியாமை பக்தர்கள், பீடி சாமியார், ஓங்கி அறை கொடுக்கும் சாமியார் (அதை வாங்கிக் கொண்டு ‘காணிக்கை’ செலுத்தும் நோபல் பரிசு பெற வேண்டிய முட்டாள் பக்தர்கள், முத்தங்களைக் கொடுத்து ஆசி தரும் சாமியார்கள், இப்படி எத்தனை எத்தனையோ புதுப்புது ரக சாமியார்கள்!

வடநாட்டிலே, நிர்வாணச் சாமியார்கள்!

உடல் முழுவதும் தங்கத்தை _ நகைகளைப் போட்டு நடமாடி தங்கள் பால் கவனத்தை ஈர்க்க பொன்னுக்கு ஏங்கிய சாமியார்கள்.

‘யோகா’ என்ற ஒரு மூலத்தை வைத்து கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் சாமியார்கள்!

நடிகர்களின் ‘மேக்_அப்’ களையெல்லாம்கூட தோற்கடித்துவிடும் அளவுக்கு விதவிதமான உடை அலங்காரத்துடன் வித்தை காட்டி, தத்துவங்களை தமிழில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் பேசினால் தமக்குக் கிடைக்கும் அடிமைகள் அதிகம்; வருவாய் பெருக்கம் _ ஏழை விவசாயிகள் நிலத்தையும் அரசு நிலங்களையும் அபகரித்து, உலக மஹா சாமியார்கள் மற்ற நாட்டு முட்டாள் பக்தர்களின் மூலபலம் போட்டு, எலக்ட்ரானிக் கருவிகளைக் காட்டும் சாமியார்கள் _ இத்தியாதி! இத்தியாதி!

இவர்களின் பூர்வோத்திரங்களை விசாரித்தால், மாஜி கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து தப்பிக் காவிக்குள் ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்று நீக்கமற அய்க்கியமாகிவிட்ட அயோக்கியர்கள் என்பதை, தண்டனை அடைந்த பிரேமானந்தாக்கள் முதல் இன்று வடநாட்டு சிறைச்சாலைகளில் உள்ள பற்பல சாமியார்களும் சாட்சியர்களாவார்கள்!

இந்தப் பட்டியலில், அசாமில் ஒரு சாமியார் _முத்தம் கொடுத்தே எல்லாவற்றையும் _ நிறைவேற்றிட, பக்தர்களுக்கு ‘ஆசி’ வழங்குவாராம்!

பெண்களுக்கு முத்தம் கொடுத்தே அவர்கள் நினைத்ததையெல்லாம் நடைபெறும்படிச் செய்கிறார். எங்கே, கிழக்குப் பகுதியில் அசாம் மாநிலத்தில், ‘இந்து’ ஏட்டில் (இங்கிலீஷ்) 24.8.2018 அன்று இப்படி ஒரு செய்தி.

‘Assam Police arrest Kissing Baba’  ‘முத்தங்கொடுக்கும் பாபா’ _ ‘சாயிபாபா’ பழையது ஆகிவிட்டதால் ‘முத்தபாபா’ புதிய டெக்னிக்.

அதற்கு தெற்கே ஒரு அம்மையார் ஏற்கனவே ‘காப்பிரைட்’ வைத்துள்ளார்!

அவர் (அசாம் பாபா) விஷ்ணு அவதாரமாம்! முத்தம் கொடுத்தால் எல்லாம் மொத்தமாகக் கிடைக்குமாம்; அவரது அம்மாவே சாட்சி சொல்கிறாராம்! இவரைக் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளார்கள்!

சாமியார் பிரிவு, சாமியார் ஜெயில் என்று தனியே சிறைகள் தேவை; பல காவி முதல்வர் சாமியார்களும்கூட அங்கே ‘தியானம்’ செய்து முக்திக்கு வழி தேடுவார்கள் போலும்.


ஜாதி இல்லாத நாடு!

சாமியார் இல்லாத இந்தியா!

தேவை! தேவை!

– கி.வீரமணி,
ஆசிரியர், ‘உண்மை’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *