நுண்ணோக்கி
காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.
தஞ்சை மாவட்டம், மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20_10_69 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கூடி, சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான, கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபால சாமி கோயிலில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கிளர்ச்சிக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.
1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். 16_11_69 அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது. தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கினார். அவர்களால் பிரேரேபிக்கப்பட்ட 8 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
“கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்’’ என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.
17-1-1970 – முதல்வர் கலைஞர் அறிக்கை
ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பதுபற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால், ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.
கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக்கூடாது. ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
– மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் (17.1.1970)
19-1-1970 – போரின் வெற்றி!
“தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதியவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 26_1_70 அன்று நடைபெறவிருந்த கிளர்ச்சி (கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி) ஒத்தி வைக்கப்படுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
12-3-1970 – கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி
“தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12_3_70 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
30-11-1970 – பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது
அர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் 30_11_70 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார்.
2-12-1970
தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழக சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 2_12_70 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.
திரு. எல்.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு (The committee on untouchability, economic and educational development of the Scheduled Castes and connected documents – 1969) மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் தீண்டாமை ஒழிப்புக்கு _ கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்பட்டது.
சட்டம் செயல்படாமைக்கு என்ன காரணம்?
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து சிறீபெரும்புதூர் கோயில் மட எதிராஜ் ஜீயரும், தஞ்சாவூரில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அல்லூர் கோயில் ஆகியவைகளில் உள்ளோர் உள்ளிட்ட பலர் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
10-6-1972
சென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 10_6_72 இரவு 7.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16_6_72 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நாள்தோறும் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியாருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகும் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
3.4.1974 தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார்.
6.5.1974 மத்திய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.
31.5.1974 மத்திய நிதி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.
24.8.1982 வேண்டுகோள் அறப்போர் 35 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.
10.5.2000 வேண்டுகோள் அறப்போர் 28 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.
5.7.2004 மாவட்டத் தலைநகரங்களில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாடுகள் பல நடத்தப்பட்டு வேண்டுகோள்கள் – தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக ஆட்சியின் செயல்முறைகள் யாவை? 19.3.2005
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே இதற்குச் செயல் வடிவம் கொடுக்க ஆணை பிறப்பித்து வரலாறு படைக்கட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா.
– திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
1.2.2006
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் மறியல் – 10 ஆயிரம் கழகத் தோழர்கள் கைது.
21.8.2006
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு திருத்தத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. (21.8.2006)
மாற்றுப் பாலம் அமைப்பதாலேயே பாலம் கட்டப்படாது என்று யாரும் சந்தேகப்படவோ அச்சப்படவோ தேவையில்லை – இறுதியில் யார் சிரிப்பார்கள் என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. (22.8.2006)
23.11.2006
நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞரிடம் அளித்தது.
28.2.2007
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம்
தந்தை பெரியாரின் இறுதி முழக்கமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசு அறிவிப்பினை வெளியிட்டது. வைணவ, சைவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
22.10.2012
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
4.5.2013
04.05.2013 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்.
(ஆகஸ்டு 1 (2013) சிறை நிரப்பும் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அடுத்த கணமே 1081 பேர் கையொப்பமிட்டுப் போராட்டக் களத்திற்குத் வர எழுந்தனர். இதில் பலரும் ரத்தக் கையொப்பமிட்டிருந்தனர்.)
16.12.2015இல் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான தடை நீங்கியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் பல அழுத்தங்கள் தந்தார்.
இறுதியில் தமிழக அரசின் அர்ச்கர் பயிற்சி முடித்த 206 பேரில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை பிப்ரவரி 26, 2018 அன்று மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு முதல் வெற்றி. பெரியாருக்கும் கலைஞருக்கும் பெரு வெற்றி!