ஆண் வயிற்றில்
உலக்கை பிறக்குமா?
“பாரத யுத்தம் முடிந்தபின், துவாரகையில் கிருஷ்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் அரசாண்டான். கிருஷ்ணனுடைய குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகன், அந்தகர்கள், போஜகர்கள் என்று பல பெயர்கொண்ட யாதவ குமாரர்கள் வரம்பு கடந்த சுகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அவ்வாறு நடத்திய சுகவாழ்க்கையினால் அடக்கமும் ஒழுக்கமும் இழந்தார்கள்.
ஒரு நாள் சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தார்கள். அப்போது பெரியவர்களிடம் அலட்சியம் கொண்ட யாதவர்கள், ரிஷிகளைப் பரிகசிப்பதற்காகத் தங்களுக்குள் ஒருவனுக்கு பெண் வேஷம் போட்டு, முனிவர்களிடம் சென்று, “சாஸ்திரம் படித்தவர்களே! இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்? சொல்லுங்கள்’’ என்று கேட்டார்கள்.
ரிஷிகள் இந்தப் பொய்யையும் பரிகாசத்தையும் கண்டு கோபம் மேலிட்டு, “இவனுக்கு உலக்கை பிறக்கும். அந்த உலக்கை உங்கள் குலத்துக்கு யமனாகும்’’ என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். முனிவர்களின் சாபத்தைக் கேட்டு, வேடிக்கையாகச் செய்தது இப்படி ஆயிற்றே என்று யாதவர்கள் பயந்தார்கள். மறுநாள் ரிஷிகள் சொன்னபடியே ஸ்திரீ வேஷம் தரித்த சாம்பன் பிரசவ வேதனை அடைந்து, ஓர் உலக்கையைக் குழந்தையாய் பெற்றான். இதைக் கண்டு ரிஷிகள் சாபம் உண்மயாகவே முடியும் என்று யாதவர்கள் மிக்க மன வேதனையடைந்தார்கள். உலக்கையை யமசொரூபமாகக் கருதினார்கள். எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்து, உலக்கையை எடுத்துச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டுக் கடற்கரையில் இறைத்துவிட்டார்கள். அடுத்த வருஷம் அந்தச் சாம்பலின்மேல் மழை பெய்து, அந்த இடத்தில் கோரைப்புல் ஏராளமாக முளைத்தது. தங்களுடைய பயம் தீர்ந்துவிட்டது என்று யாதவர்கள் சாபத்தை மறந்தார்கள்.
பிறகு ஒரு நாள் யாதவர்கள் கூட்டமாகக் கடலோரம் சென்று, உல்லாசமாகக் கூத்திலும் மதுபானத்திலும் காலம் கழித்தார்கள். கள்ளினுடைய வேகம் வேலை செய்ய ஆரம்பித்தது.
யாதவ குலத்தில் கிருதவர்மன் கவுரவர்கள் பக்கத்திலும், சாத்யகி பாண்டவர்கள் பக்கத்திலும் சேர்ந்து யுத்தம் செய்தார்கள் அல்லவா?
“எந்த க்ஷத்திரியனாவது தூங்குகிறவர்களைக் கொல்வானா? ஓய் கிருதவர்மரே! யாதவ குலத்துக்கே ஒரு பெரிய அவமானத்தைக் கொண்டு வந்துவிட்டீரே!’’ என்று சாத்யகி, கிருதவர்மனைப் பார்த்துப் பரிகாசம் செய்தான். போதையிலிருந்த மற்றும் பலர் இந்தப் பரிகாச வார்த்தையை ஆமோதித்தனர். கிருதவர்மனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.
“யுத்தத்தில் கை அறுக்கப்பட்டுப் பிராயோபாவேசம் செய்து யோக நிலையில் இருந்த மகான் பூரிசிரவசுவைக் கசாப்புக்காரனைப் போல் கொன்ற நீ, என்னைப் பற்றி எப்படிப் பேசலாம்?’’ என்றான் கிருதவர்மன். அதன்மேல் வேறு பலர் சாத்யகி செய்த அநாகரிகத்தை எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள். பிறகு, எல்லா யாதவர்களும் கலகத்தில் சேர்ந்து கொண்டார்கள். சண்டை பலமாக முற்றிக் கொண்டது.
“தூங்கியிருந்தவர்களைக் கொன்ற பாதகன் இதோ பார்! தன் முடிவை அடைந்தான்’’ என்று சொல்லிச் சாத்யகி கிருதவர்மன் பேரில் பாய்ந்து, கத்தியால் அவன் தலையை வெட்டி வீழ்த்திவிட்டான்.
அதைக் கண்டு பலர் சாத்யகியைச் சூழ்ந்துகொண்டு அங்கிருந்த பான பாத்திரங்களை அவன்மேல் எறிந்து தாக்கினார்கள். இவ்வாறு சாத்யகியைச் சூழ்ந்துகொண்டு தாக்கியவர்களைக் கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் எதிர்த்துப் போராடினான். அவனைப் பலர் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். பிரத்யும்னனும் சாத்யகியும் உயிரிழந்தார்கள். அதன்பேரில் கிருஷ்ணனுக்குக் கோபம் மேலிட்டு, அவ்விடம் கடலோரத்தில் வளர்ந்து நின்ற கோரைப் புல்லைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டு எல்லோரையும் தாக்கினான். அவ்வாறே யாதவ கூட்டத்தார் எல்லோரும் கோரைப் புல்லைப் பிடுங்கி, ஒருவரையொருவர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
உலக்கைச் சாம்பலிலிருந்து உண்டான அந்தக் கோரைப் புல் எல்லாம் ரிஷிகளுடைய சாபத்தால் பிடுங்கிய உடனே உலக்கைகளாயின. அந்த உலக்கைகளால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு, யாதவ குலம் முழுவதும் கள்வெறியில் நடந்த இந்த இழிவான கலகத்தில் மாண்டார்கள்.’’ என்கிறது இந்துமதம்! உலக்கை மரத்திலிருந்து எடுத்த கிளையில் தச்சரால் உருவாக்கப்படுவது. அது குழந்தையாய் பிறந்தது. அதுவும் ஆணின் வயிற்றில் குழந்தையாய் பிறந்தது என்று கூறும் இந்து மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
தலைமுடியிலிருந்து அழகிய பெண்ணும், அகோர பூதமும் பிறக்க முடியுமா?
“வசந்த காலம். மரங்களும் செடிகளும் கொடிகளும் எல்லாம் அழகிய மலர்கள் நிறைந்து வனம் சோபித்தது.
உலகமெல்லாம் மன்மதன் வசம் இருந்தது. ரைப்யருடைய ஆசிரமத்தில் புஷ்பித்த செடிகளின் மத்தியில் பராவசுவின் மனைவி தனியாக நடந்துகொண்டிருந்தாள். அழகும் தைரியமும் பரிசுத்தமும் ஒன்றுகூடி ஒரு கின்னர ஸ்திரீயைப் போல் விளங்கினாள். அச்சமயம் யவக்கிரீதன் அவ்விடம் வந்து, அவள் வடிவத்தைப் பார்த்து மனமாறுதலை அடைந்தான்.
காமத்தால் மதியிழந்த யவக்கிரீதன், “அழகியே இங்கே வா!’’ என்று அவளை அழைத்தான். அவள் வியப்பும் வெட்கமும் அடைந்தாள். ரிஷி புத்திரனுடைய சாபத்துக்குப் பயந்து, அவன் சொன்னபடியே அவன் நின்ற இடத்திற்குச் சென்றாள். அவன் அழைத்துச் சென்று, காம மயக்கத்தால் தூண்டப்பட்டு, அவளுக்கு வெட்கம் உண்டாகும்படி நடந்து கொண்டான்.
ரைப்யர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். நடந்த நிகழ்ச்சியால் துன்புறுத்தப்பட்டு அழுதுகொண்டிருந்த மருமகளைப் பார்த்து, “-ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?’’ என்று விசாரித்தார். நடந்த அவமானத்தைச் சொன்னாள். ரைப்யர் கோபாவேசமாகி, தன் தலையிலிருந்து ஒரு ரோமத்தைப் பிய்த்து அக்னியில் மந்திரம் சொல்லிப் போட்டார்.
அவருடைய மருமகளின் அழகுக்குச் சமமான வடிவம் கொண்ட ஒரு பெண்ணுருவம் ரோமத் தீயிலிருந்து கிளம்பிற்று. மறுபடியும் ஜடைமயிலிருந்து ஒரு ரோமத்தை எடுத்த ஹோமம் செய்தார். அதன் பயனாக ஒரு பயங்கரமான பூதம் நெருப்பிலிருந்து கிளம்பிற்று. இந்த இரண்டு உருவங்களையும் பார்த்து ரைப்யர், “போய் யவக்கிரீதனை வதம் செய்யுங்கள்’’ என்று நியமித்தார். “அப்படியே!’’ என்று அந்த இரு பூதங்களும் சென்றன.
காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்த யவக்கிரீதனருகில் பெண் பூதம் சென்று, நகைத்தும் விளையாடியும் அவனை ஏமாற்றி, அவன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டது. அந்தச் சமயத்தில் ஆண் பூதம் சூலத்தைக் கையில் ஓங்கி ரிஷி குமாரன் மேல் பாய்ந்தது.
யவக்கிரீதன் பயந்து எழுந்தான். அசுத்த நிலையில் தன் மந்திரங்கள் உதவ மாட்டா என்று அறிந்து, கால் கழுவக் கமண்டலம் எடுக்கப் போனான். அது இல்லாததைக் கண்டு தண்ணீர் இருக்கும் குளத்தைத் தேடி ஓடினான். குளம் வற்றிக் கிடந்தது. பக்கத்திலிருந்த ஓடைக்குச் சென்றான்.அதுவும் வற்றிக் கிடந்தது. எங்கு சென்றாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. பயங்கரத் தோற்றத்துடன் பூதம் துரத்திக் கொண்டே வந்தது. எங்கும் தண்ணீர் காணாமல் பூதத்தால் துரத்தப்பட்டு விரதவலியை யிழந்து ஓடிய யவக்கிரீதன், கடைசியாகத் தன் தகப்பனாருடைய அக்கினி ஹோத்திர சாலைக்குள் புகுந்து தப்பித்துக்கொள்ளப் பார்த்தான். சாலை வாயிலில் இருந்த காவலாளி அரைக் குருடன். பயந்து கத்திக்கொண்டு ஓடிவரும் யவக்கிரீதனுடைய அடையாளம் தெரிந்துகொள்ளாமல், யாரோ என்று தடுத்தான். இதற்குள் பூதம் வந்து யவக்கிரீதனைச் சூலத்தால் குத்திக் கொன்றது.’’ என்று இந்து மதம் கூறுகிறது. நெருப்பில் தலைமயிர் போடப்பட்டால் பொசுங்கிப் போகும் என்பது அறிவியல். ஆனால் நெருப்பில் போட்ட முடியிலிருந்து அழகிய பெண் பிறந்தாள்! கூடவே பூதம் பிறந்தது என்பதைப் போன்ற ஓர் மடமைக் கருத்து வேறு உண்டா? இப்படிப்பட்ட மடமைக் கருத்து கூறும் மதமான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்…)