திருச்சி நகரில், தென்னூர் காண்ட்ராக்டர் சீனிவாசன் என்ற பெரியார் பெருந்தொண்டர் இருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இயற்கை எய்தினார். தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தங்கி இருக்கும் போதெல்லாம் தினசரி அவர்களைச் சந்தித்து அளவளாவக் கூடிய தொண்டர்களில் அவரும் ஒருவர். அவர் மட்டுமல்ல. அவரது உறவினர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அத்துணை பேரும் இயக்க ஈடுபாடு மிக்கவர்கள் ஆவார்கள். வாடிப்பட்டி சுப்பையா, காலஞ்சென்ற வாடிப்பட்டி கங்கண்ணன் போன்ற கழக முக்கியஸ்தர்கள் எல்லாம்கூட அவரது நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள்.
தந்தை பெரியார் திருச்சியில் தங்கி இருக்கக்கூடிய காலங்களிலும் சரி, சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு அவர்கள் திருச்சியில் இல்லாத காலங்களிலும் சரி, தந்தை பெரியார் கட்டளையினை நிறைவேற்றக் கூடியவராக, மாளிகையைச் சுற்றிக் கட்டடங்கள், சுற்றுச் சுவர் முதலியவற்றின் கட்டட வேலை சீனிவாசன் கண்காணிப்பில் தான் அய்யா அவர்கள் இறுதிக் காலம்வரை விட்டிருந்தார். திரு.சீனிவாசனின் ஒரே மகன் வெங்கிடுசாமி என்பவருக்குத் திருமணம். தந்தை பெரியாரின் ஆலோசனைப் படி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதுவும் அய்யா அவர்கள் விரும்பிய தேதியில் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
அதே தேதியில் தந்தை பெரியார் அவர்களுக்கு நீதிக்கட்சி காலம் முதல் நெருங்கிய நண்பரும், கோவை விஞ்ஞானியுமான ஜி.டி.நாயுடு அவர்களின் ஒரே மகன் கோபால் அவர்களின் திருமணத்தை ஜி.டி.நாயுடு அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.
திரு.நாயுடு அவர்கள் நேரிலும், தந்தி, தொலைபேசி முதலியவைகள் மூலமும் தக்கவர்கள் மூலமும் எப்படியும் தமது இல்லத் திருமணத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றார். தந்தை பெரியார் அவர்களுக்கோ இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைபோல மிகவும் சங்கடமாகி விட்டது.
என் நண்பர் ஜி.டி.நாயுடு வீட்டுத் திருமணத்தைவிட தொண்டன் வீட்டுத் திருமணம்தான் முக்கியம்!
ஒரு பக்கம் கழகத் தொண்டர் வீட்டுத் திருமணம். அதுவும் தமது அனுமதியுடனும், ஆதரவுடனும் நடக்கின்றது.
மறுபக்கம் நீண்டகால நண்பரும் இயக்க ஆதரவாளரும் ஆகியவர் வீட்டுத் திருமணம். திருமணத்திற்கு வருகை தருபவர்கள் எல்லாம் நான் ஏன் வரவில்லை என்று அல்லவா அவரைக் கேட்ட வண்ணம் இருப்பார்கள். நாயுடுவும் மனச்சங்கடம் அடையக்கூடுமே என்று எண்ணலானார்கள்.
இந்த நிலையில் அய்யா அவர்கள் திருமணத்திற்கு முதல்நாள் இரவு தூங்கவில்லை. நீண்டநேரம் கண்விழித்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். கூட இருக்கக்கூடிய நாங்கள் அய்யா அவசியம் ஜி.டி.நாயுடு வீட்டுத் திருமணத்திற்குத்தான் செல்லப் போகின்றார். சீனிவாசன் ஏமாற்றம் அடையப் போகின்றார் என்று கருதினோம்.
அய்யா அவர்கள் மணநாள் அன்று காலை எப்போதும் போல எழுந்து காலைப் பத்திரிகைகளை எல்லாம் படித்து முடித்து விட்டு காலை சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு முன்புறம் உள்ள ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். கூட இருந்தவர்களைப் பார்த்து ஏம்பா? நம்ம சீனிவாசன் இன்னும் வரவில்லையே, வந்து கூட்டிப் போவதாகச் சொல்லி இருந்தாரே, மணி ஆகிக்கொண்டே இருக்கின்றதே என்றார். அதற்கு நாங்கள் “அய்யா, நீங்கள் ஜி.டி.நாயுடு வீட்டுத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது அவருக்குத் தெரிந்து மிகவும் பயந்துபோய் உள்ளார். அவர்கள் குடும்பத்தினரும் மிகவும் வருத்தமாக உள்ளார்கள்’’ என்றோம்.
“அவன் ஏன் அப்படி நினைக்கணும்? பயித்தியக்காரன். நான் எப்படி வராமல் போவேன்? நான் முன்னின்று நடத்தவேண்டிய திருமணம்’’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும்போது சீனிவாசன் அவர்களும் வேர்க்க, விறுவிறுக்க வந்து சேர்ந்தார். தழுதழுத்தக் குரலில் அய்யா! என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அய்யா அவர்கள் அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை.
“நேரம் ஆகிறது, கிளம்புங்கள், திருமணத்திற்குப் போவோம், எல்லோரும் காத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றார். நண்பர் சீனிவாசனுக்கு ஒரே மகிழ்ச்சி; மேற்கொண்டு பேச நா எழவில்லை.
அவர், அய்யா அவர்கள் திருமணப் பந்தலுக்கு வருவதற்கு முன்னதாகவே விரைந்து சென்று, அய்யா அவர்கள் திருமண விழாவிற்கு வருகின்றார் என்று அவர் கூறிவிட்டு தமது குடும்பத்தினரோடும், உற்றார் உறவினர் களோடும் குழுமி நின்றும் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றார். அந்தத் தொண்டனின் குடும்பமும் உறவினர்களும் தம்மை மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டு வரவேற்பதைக் கண்ட தந்தை பெரியார் அவர்கள் உள்ளம் மிக நெகிழ்ந்து போனார்கள்.
பெரிய மனிதர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல எத்தனையோ பேர்!
தந்தை பெரியார் அவர்கள் திருமணத்தினை நடத்தி வைத்து பேசும்போது குறிப்பிட்டார்கள்: “இன்றைய தினம் நான் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வது கண்டு பலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். நான் நண்பர் சீனிவாசன் வீட்டுத் திருமணத்திலோ அல்லது அவர்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திலோ கலந்து கொள்ளாமல் போனாலும் அல்லது அவர்கள் என்னை அழைக்காமல் மற்றவர்களை வைத்துத் திருமணம் நடத்தினாலும் அதுதான் ஆச்சரியத்திற்குரியது.
திரு.சீனிவாசன் எப்போதுமே என்னுடனேயே இருக்கக்கூடிய எனது அன்பிற்குப் பாத்திரமான தொண்டன். இவர் மகன் திருமணத்திற்கு என் அனுமதியின் பேரில் தேதி நிர்ணயம் செய்து ஒரு மாத காலத்திற்கு மேலாகிறது.
இதே நாளில் கோவை நண்பர் ஜி.டி.நாயுடு அவர்களின் ஒரே மகன் திருமணம். நாயுடு அவர்கள் கட்டாயம் நான் திருமணத்திற்கு வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார். நான் ஏற்கெனவே இப்படி ஒரு தொண்டன் வீட்டுத் திருமணத்தினை நடத்தி வைப்பதாக ஒப்புதல் கொடுத்துவிட்டேன். இயலாமைக்கு மன்னிக்க வேண்டுமென்றேன். நாயுடு அவர்கள் விட்டப்பாடில்லை. அவர் திருமணத்திற்கு முந்திய இரவு வரையிலும் கூட தந்தி, தொலைபேசி மூலமும் தக்க பிரமுகர் மூலமும் அழைத்தவண்ணமாகவே இருந்தார். இந்த இக்கட்டான நிலைக்கு ஆளான நான், தீர ஆலோசித்து ஒரு தெளிந்த முடிவுக்கு இரவு வந்தேன். ஜி.டி.நாயுடு அவர்களோ பெரும் தொழில் அதிபர். செல்வாக்கு மிக்கவர். நம்மைப் போன்று எத்தனையோ நண்பர்கள் அவருக்கு உண்டு. நாம் போகாவிட்டால் அவர் வீட்டுத் திருமணம் இம்மி அளவுகூட சிறப்பு குன்றப்போவது இல்லை. எந்தவித பாதிப்பும் இராது. திருமணம் நன்றாகவே நடக்கும். ஆனால், இந்தத் திருமணம் அப்படியல்ல, சீனிவாசன் குடும்பத்தினர்களும் அவர்தம் உறவினர்களும் என்னையே தலைவனாக, வழிகாட்டியாக பொதுவாழ்வில் மட்டும் அல்லாமல் குடும்ப வாழ்விலும் ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள். இப்படிப்பட்ட தொண்டன் வீட்டு மகிழ்ச்சிகரமான திருமண விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்து விட்டு திடீர் என்று வராமல் வேறு ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்தத் தொண்டனின் மனம், அவர் குடும்பத்தினரின் மனம் எவ்வளவு துன்பப்படும் என்பதனை எண்ணிப் பார்த்தேன். நமது தொண்டன் சீனிவாசன் வீட்டுத் திருமணத்திற்கு செல்வதே சிறந்தது என்று கருதி இங்கு வந்தேன்’’ என்றார்.
நண்பர் சீனிவாசன் அவர்கள் தமது இறுதி மூச்சு உள்ளவரை அய்யா அவர்கள் காலத்திலும் சரி, அம்மா அவர்கள் காலத்திலும் சரி அவர்களுக்கு விசுவாசம் உள்ளவராக வாழ்ந்து மறைந்தவர் ஆவார்.
மேட்டுக்குடி மக்களை விட ஏழ்மைத் தொண்டனே எனக்கு முக்கியம்!
தஞ்சை மாவட்டம் திருவாரூர் அடுத்துள்ள குளிக்கரைக் கிராமத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் முதலியவைகளுக்குத் தேதி கொடுத்திருந்தார்கள். பல தடவை இந்த ஊருக்கு தந்தை பெரியார் அவர்கள் வருகை தந்திருந்த போதிலும்கூட இந்த தடவை மிகவும் சிறப்பாக ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்த கழகத் தோழர்கள் முனைந்தனர்.
இந்த ஊரில் பழைய ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வைத்தியலிங்கம் என்பவர் இருக்கின்றார். இவர் தந்தை பெரியார் கொள்கையில் மிக்க ஈடுபாடு உள்ளவர். பள்ளிகளில் மாணவர்களை இயக்கத்தில் சேர்க்கும் பணியில் முனைப்புடன் செயல்படுபவர். தந்தை பெரியார் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவரும்கூட. அவர் தந்தை பெரியார் அவர்களை அணுகி, “அய்யா தாங்கள் எங்கள் ஊருக்கு வருகின்றீர்கள். அப்படி வரும்போது எங்கள் இல்லத்தில் அவசியம் தங்க வேண்டும். இங்கு பயணியர் விடுதி போன்றவை இல்லாததனால் கழகத் தோழர்களும் இதனையே விரும்புகிறார்கள். எனவே நேரில் கண்டு அனுமதி பெற்றுப் போக வந்துள்ளேன்’’ என்றார். அய்யா அவர்களும் அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டார். அந்தத் தோழரின் வீடு ஒரு தென்னந்தோப்பில் இயற்கை சூழலில் அமைந்து இருந்தது. தென்னந்தோப்பில் பெரிய பந்தல் போட்டு அய்யா அவர்கள் தங்க பெரிய விழாக் கோலத்துடன் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் வருகையினை யொட்டி பெரிய விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார். அதே ஊரைச் சார்ந்த அய்யாவிற்கு வேண்டியவர்களும், முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களும் நேரே அய்யா அவர்கள் தங்கியிருந்த திருவாரூர் பயணியர் விடுதிக்குச் சென்று, அய்யா நீங்கள் குளிக்கரையில் எங்கள் இல்லத்தில் தான் தங்கவேண்டும். விருந்து உண்ண வேண்டும். எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டு இருக்கின்றோம் என்றார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், “அய்யா மன்னிக்கணும், நான் ஏற்கெனவே வைத்தியலிங்கம் என்ற தோழரின் வேண்டுகோளை ஏற்று அவரின் இல்லத்தில் தங்கவும், உணவு சாப்பிடவும் ஒத்துக்கொண்டு விட்டேன். வேண்டுமானால் அடுத்த தடவை பார்க்கலாம்’’ என்றார்கள். வந்தவர்களுக்கோ ஆத்திரம் பீறிட்டது. அவர்கள், “அய்யா, இந்த ஊருக்கு நீங்கள் வருகின்றீர்கள். உங்களை வரவேற்று உணவு அளித்து உபசரிக்கவும் வீட்டில் தங்க வைக்கவும் போயும் போயும் இந்த நபர்தான் கிடைத்தாரா? நீங்கள் எங்கள் இல்லத்தில் தங்காமலும், விருந்து உண்ணாமலும், அவரது இல்லத்திற்குச் செல்வது என்பது நீங்கள் எங்களையே அவமானப்படுத்தியது போல் உள்ளது.
நாங்கள் எங்கள் ஊரில் உங்களைக் கண்டு மரியாதை செலுத்த எப்படி அந்த நபர் இல்லத்திற்கு வரமுடியும்? உங்களுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது அந்த நபர்தான் வேண்டுமா என்பதை முடிவாகச் சொல்லிவிடுங்கள். நாங்கள் போகின்றோம்’’ என்றார்கள். அதற்கு அய்யா அவர்கள், “நீங்கள் எல்லாம் பெரிய தனக்காரர்கள், மேட்டுக் குடிமக்கள் அஸ்தஸ்தை பெரிதாகக் கருதுகின்றீர்கள். என்னிடத்தும், என் இயக்கத்தினிடத்தும் பற்றும் பாசமும் கொண்ட சாதாரண தொண்டன் வீட்டில் தங்குவதிலோ அல்லது அவர்கள் இல்லத்தில் சாப்பிடுவதிலோ நான் கவுரவம் பார்ப்பது இல்லை. அந்தஸ்து குறைந்துபோகும் என்று, என்றுமே நான் கருதியது இல்லை. நீங்கள் இங்கிருந்து போவதும், போகாததும் உங்கள் விருப்பம்’’ என்றார்கள். அழைக்க வந்தவர்கள் கோபித்துக் கொண்டு ‘சரெலெ’ன்று சென்றுவிட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் தம்மைக் காணவந்த கழகத் தோழர்களிடமும் இயக்க முக்கியஸ்தர்களிடமும் “நமது இயக்கம் மிட்டா மிராசு, பெரிய தனம் கொண்டவர்கள் இயக்கமல்ல. சாமான்ய மக்களுக்காக பாடுபடும் சாமானியர் நிறைந்த இயக்கம். நமது இயக்கத்திற்கே ஆதிக்கவாதிகள் வைத்துள்ள பெயர் பள்ளர், பறையர் கட்சி என்பதுதானே. நாம் அவர்களை கை தூக்கிவிடாமல், அந்தஸ்து, கவுரவம் பார்ப்போருக்கு துணைபோக முடியுமா? என்னை அன்போடு அழைத்துள்ள அந்த வைத்தியலிங்கம் என்ற தோழர் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். அவரது வீட்டிற்கு நான் போவது, அழைக்க வந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’’ என்றார்.
– புலவர். கோ. இமயவரம்பன்
[தந்தை பெரியார் 113ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்]
—————————————-
தீண்டாமை கொடுமை!
தலித் சிறுமி தொட்ட மதிய உணவை
நாய்க்கு கொட்டிய கொடுமை!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலே உள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர் கமலா வைஷ்ணவ், தலித் மாணவியை மிக மோசமான முறையில் திட்டி அவமானப்படுத்தியதுடன், தலித் மாணவி தொட்ட உணவு தீட்டுப்பட்டு விட்டதாக கூறி, உணவு முழுவதையும் நாய்க்கு கொட்டியுள்ளார். பள்ளி உதவியாளரின் இந்த தீண்டாமையால் தலித் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனிடையே, மதிய உணவை நாய்க்கு கொட்டப்பட்டதை வீடியோ எடுத்திருந்த ஒருவர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதால், தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகே கல்வித்துறை அதிகாரிகளும் இப்பிரச்சினையில் தலையிட்டுள்ளனர். தீண்டாமையைக் கடைப்பிடித்த உதவியாளரை தற்போது இடைநீக்கம் செய்துள்ளனர்.
– தரவு:
– ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ : 10-07-2018