வியர்வை!

ஜூலை 16-31

 

உழைப்பின் அளவுகோல்

உளச்சலின் வடிகால்!

 

இறுக்கத்தின் கசிவு

நெருக்கத்தின் பிழிவு!

 

வாழ்நாள் கூட்டலுக்கு

வகை செய்யும் கழித்தல்!

 

வருவாய் மிஞ்ச

வழிசெய்யும் செலவு!

 

எந்திர யுகத்தில்

இறந்த கணக்கு!

 

சிந்தினால் சிறப்பளிக்கும்

விந்தை விளைவு!

 

சமத்துவச் சம்மட்டி

ஜாதிதான் கவுரவமென்று

முப்புரிகள்

மூளையில் விதைத்ததை

முனைந்து பிடுங்கிய சீலர்!

 

மதக் குட்டையில் மூழ்கி

மதியிழந்த மக்களை

மனித நேய கடல் பக்கம்

திருப்பிய கலங்கரை விளக்கம்!

 

பெண் என்றால் அடிமையென்று

பெண்களையே நம்ப வைத்த

சூழ்ச்சிக் கண்ணிகளை

சுக்கு நூறாக்கிய சம்மட்டி!

 

மூடச் சடங்குகளில்

மூழ்கிய தமிழினத்தை

மீட்டெடுக்கப் போராடிய

பெரு வெளிச்சம்!

 

தன்னலம் இல்லாது

பொது நலன் பேண

பெருங் கறுஞ்சட்டைச் சேனையை

கட்டமைத்த பொறியாளர்

 

உன் வீட்டுச் சோறு தின்று

ஊருக்கு பணியாற்ற வாவென்று

தன் தொண்டர்களுக்கு

ஆணையிட்ட தொண்டறம்

அவர்தான் பெரியார்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *