பல ஊர்களில் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளின் ஒரு பகுதியாக, பொது ஆலயங்களுக்குள் அவர்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது தொடர்வது தெரிந்த விசயம். தலித் மக்கள் வணங்கும் சாமிகளின் ஊர்வலங்கள் ஆதிக்க ஜாதியினரின் தெருக்கள் வழியாகச் செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாமிகளுக்குள்ளேயே ஒரு வகையான தீண்டாமை நிலவுவது பற்றிய செய்தி அதிர்ச்சி தருவதாக வந்துள்ளது.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக்கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் திருக்கோயில் உள்ளது.
ஆண்டுதோரும் அய்ப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப்படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும், மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும். அந்த உலா தேவநாதசாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம், பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
தீண்டத்தகாதவர்கள் என்று கூறி கதவைச் சாத்துவது மட்டுமல்ல, மாமுனிகள் வீதி உலா வந்த மாட வீதிகளில் சாணியை கரைத்து ஊற்றி தீட்டைத் துடைத்து விடுவதும் நடக்கிறது.
தினமும் தேவநாதசாமி கோயில் கதவு திறந்தால் உச்சிக்காலம் முடிந்த பிறகுதான் சாத்தப்படும். ஆனால் உற்சவகாலத்தில் மட்டும் காலை 9 மணிக்கே மூடிவிடுவார்களாம். மாமுனிகள் சாமி உலா கடந்து சென்ற பிறகுதான் மீண்டும் திறக்கப்படுமாம்.
செவ்வாய்க்கிழமை (அக்.29) மணவாள மாமுனிகள் கோயிலில் உற்சவம் தொடங்கியது. வழக்கம்போல் காலை மணவாள மாமுனிகள் சாமி வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டனர். அப்போது தேவநாதசாமி கோயில் பூசாரிகளுக்கும், மணவாள மாமுனிகள் சாமி கோயில் பூசாரிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள்ளே உள்ள வடகலை, தென்கலை பிரச்சினையால் ஆண்டாண்டுதோறும் இந்தப் பிரச்சினை தொடருகிறது என்று பல ஆண்டுகளாக இதைக் கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை படம்பிடித்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் புகைப்படக்காரர்களை தேவநாதசாமி கோயில் தரப்பினர் மிரட்டி படம் எடுக்கக்கூடாது என தடுக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாமுனிகள் தரப்பினர் “ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சினை கைகலப்பாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்’’ என்று கூறுகின்றனர். இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்தும் அதிகாரிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வியை ஊரில் உள்ள பொதுவான மக்கள் எழுப்புகின்றனர்.
(‘தீக்கதிர்’ – 30.10.2013 பக்.7)