பாரத பாத்திரங்கள் (1 )

மே 01-15

சு.அறிவுக்கரசு

(மத்தியில் மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு பெரும்பான்மை பலத்தோடு வந்தது முதல் மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை போன்றவற்றை பாடமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்கள் படிப்பதற்கு தகுதி இவற்றிற்கு உண்டா? பண்பாடு, அறிவு, ஒழுக்கம் இவற்றிற்கு எதற்த அளவிற்கு எதிரானவை என்பதைக் காட்டவும், இவற்றின் அவலம் பற்றியும் அறியவும் இத்தொடர்)                – ஆசிரியர்

வியாசன் 8800 பாடல்களைக் கொண்ட பாரதத்தை எழுதினான். வைகம்பாயணன் என்பான் 24 ஆயிரம் பாடல்களாகப் பெரிதாக்கினான். பாரதம் என்று பெயர் வைத்தவன் இவனே. சூதன் என்பான் அதனை மேலும் பெரிதாக்கி, ஏறத்தாழ ஒரு லட்சம் பாடல்களாக்கி, மகாபாரதம் என்று பெயரிட்டான். எனவே மூன்று பேர்களால் எழுதப்பட்டதுதான் இன்றிருக்கும் மகாபாரதம். பொது ஆண்டுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கி (கி.மு.500) ஆயிரம் ஆண்டுக்காலத்தில் பல கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் காலத்திற்கு ஏற்றாற்போல் செருகல்கள், திருத்தங்கள், திரித்தல்கள், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது ஆய்வு செய்த அறிஞர்களின் முடிவு.

மன்னர்களில் சூரியனைப் போன்று ஒளிவீசியவன் அசோகன் என்பது உலகின் வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த முடிவு. அசோகன் மவுரியப் பேரரசின் சிறப்பான மன்னன். சூத்திரன். சத்திரியன் அல்லாத பேரரசை உலகில் முதன்முதலில் உருவாக்கியவன். கலிங்கப் போருக்குப் பின் கொல்லாமையைக் கடைப்பிடித்தவன். பிறரைக் கடைப்பிடிக்கச் செய்தவன். புத்த நெறியைப் பின்பற்றியவன். அவன் வம்சத்து மன்னன் பிருகத்ரன் என்பானைப் பின்னாலிருந்து வாளால் வெட்டிக் கொன்றவன் அவனது படைத்தலைவன். பார்ப்பனன். புஷ்யமித்திரன்.

பவுத்த நெறிக்கு மாற்றாக சனாதன தருமம் எனப்படும் ஜாதிமுறைகளைக் கொண்ட மதம் வேரூன்றிடப் பாடுபட்டவன் புஷ்யமித்திரன். எனவே, அசோகனின் கொள்கைகளை விளக்கி நடப்பட்ட 84 ஆயிரம் கல்தூண்களை உடைத்தான். பவுத்த நெறியில் வாழும் ஒருவரைக் கொன்றால் 100 பவுன் தந்தான். வருணாசிரமக் கொள்கையைக் கொண்ட சனாதன மதத்தை வளர்த்தான். அதன் கொள்கைகளைக் கொண்ட நூலை எழுதச் செய்து அப்போது மக்களிடம் பரவியிருந்த பாரதத்தில் செருகிச் சேர்த்திட வேண்டிய தேவை ஏற்பட்டது. பாரதக் கதையில் செருகப்பட்டது கீதை. பாதராயணன் என்பான் எழுதிய பிரும்மசூத்திரம் இவர்களுக்குத் தேவையான அளவு உதவவில்லை. கீதை உதவியது. மக்களிடையே பரவியிருந்த சாங்கியத் தத்துவங்கள், கருத்துமுதல் வாதத்திற்கு எதிர்ப்பாக பொருள்முதல் வாதத்திற்குச் செல்வாக்கு பெற்றுத் தந்தவை. எனவே, கீதை சாங்கியத்தை வரித்துக் கொண்டது. புலனடக்கம், மனக் கட்டுப்பாடு போன்ற பவுத்தக் கொள்கைகளையும் எடுத்தாண்டது கீதை. வலுவானதாக ஆக்கப்பட்ட கீதை பாரதத்தில் நுழைக்கப்பட்டதால் பரவ ஆரம்பித்தது. மேலும் பெருமை சேர்த்திட, கீதையைச் சொன்னது கடவுள் என்ற கதையும் சேர்க்கப்பட்டது. கிருஷ்ணன் என்ற கடவுளால் உபதேசிக்கப்பட்டது என்ற கூடுதல் புளுகை பாமரர் நம்பத் தொடங்கினர். சனாதனம் வலுப்பெறத் தொடங்கியது.

அவனவன் ஜாதித் தொழிலைத்தான் அவனவன் செய்ய வேண்டும். குறையில்லாமல் பிறருடைய ஜாதித் தொழிலைச் செய்யக்கூடிய திறமை இருந்தாலும்கூட, ஒருவன் அவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும், குறைகள் இருந்தாலும், இதைத்தான் கீதை கூறுகிறது.

பாரதக்கதையின் வழி இடைச்செருகலான கீதையின் தர்மங்களை (சனாதனதர்மம்) நிலை நாட்டுவதே அவர்களின் இலக்கு. மனுதர்மமும், பாரதமும் மனித தர்மத்திற்கு எதிரானவை. ஆனால், இந்த பாரதந்தான் பாரத பண்பாட்டின் சின்னம் என்கின்றன இந்துத்வா அமைப்புகள். பாடத்திட்டதிலும் சேர்க்க முயலுகின்றனர். எனவே, இந்தப் பாரதத்தின் பண்பாட்டுச் சீரழிவை அறிய பாரத பாத்திரங்களின் உண்மை நிலையை இங்கு அப்பட்டமாக அடையாளம் காண்போம்.

வியாசன்

பாரதக் கதையைப் பாடியவன் வியாசன். மிகவும் கருப்பாக இருந்தவன். அதனால் துவைபாயனன் என்பதைக் க்ருஷ்ண துவைபாயனன் என்றாக்கி விட்டனர். அவன் பாடப்பாட வினாயகன் (பிள்ளையார்) தன் தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கி எழுதினான் என்கிறார்கள். எங்கே எழுதினான் என்றால் இமயமலையில் என்கிறார்கள். எவ்வளவு முட்டாள்தனமான கற்பனை!

சமஸ்கிருதத்தை எழுதாக்கிளவி என்பார்கள். எழுத்துக்கு வரிவடிவம் இல்லாத மொழியாம். எனவே சொல்லத்தான் முடியும். கேட்பவன் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். அப்படித்தான் எல்லாக் கதைகளும் பரப்பப்பட்டன. சொன்னவன், கேட்பவன், ஒப்பித்தவன் தவறுகள் செய்திருக்க வாய்ப்புண்டு. அதனால் மாற்றங்கள், திருத்தல்கள், திரித்தல்கள் ஏற்பட்டு மாறுதல்களுக்கு வாய்ப்பும் உண்டு.

சந்தனு எனும் மன்னன் தன் மனைவி சத்தியவதியுடன் வாழ்ந்து இரு மகன்களைப் பெற்றுக் கொள்கிறாள். இந்த சத்தியவதிதான் பராசர முனிவனுடன் கலவி செய்து வியாசனைப் பெற்றவள். வியாசனைப் பெற்றபோது பராசரனுடன் கள்ளக்காதல்தான். பிறகுதான் சந்தனுவுடன் மணம், வாழ்க்கை எல்லாம். பின்னால் பார்க்கலாம்.

சந்தனு-_சத்யவதி தம்பதியர்க்குப் பிறந்த இருவரில் முதலாமவன் சித்திராங்கதன். ஆணவம் பிடித்தவன். ஒரு வீரனுடன் சண்டை போட்டதில் இறந்துபோனான். மற்றவன் விசித்திரவீரியன். அவனுக்கு இரு மனைவிகள். அம்பிகா, அம்பாலிகா. ஒரேநேரத்தில் இருவர் கழுத்திலும் தாலி கட்டினான். என்றாலும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.

சந்தனுவுக்குப் பிறகு சித்திராங்கதனும் இறந்துபோக, ஆட்சியில் அமர்ந்தவன் விசித்திரவீரியன். ஆட்சியும் நடந்தது. வம்சம் வளரப் பிள்ளைகள் இல்லை.
வம்சம் வளர்ந்து தன் பிள்ளைகள் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையினால்தான் மச்சகந்தி எனும் சத்யவதி தன்னைப் பெண் கேட்டுவந்த பீஷ்மனிடம் வாக்குறுதி கேட்டாள். பீஷ்மன் தந்தான். தான் திருமணமே செய்து கொள்வதில்லை என்றே உறுதி கூறிவிட்டான். திருமணம் நடந்தது என்றாலும், விசித்திரவீரியன் சாவுக்குப் பிறகு வாரிசு இல்லாமல் போன நிலை.

சந்தனுவுக்குப் பிறந்த பீஷ்மன் வாக்குறுதிப்படியே திருமணமின்றி இருந்தான். வம்ச விருத்திக்காகத் தம் மருமகள்கள் இருவரையும் கூடிப் புணர்ந்து புத்திர பாக்கியம் தருமாறு கேட்கிறாள் சத்யவதி. பீஷ்மனையே அரசனாக முடிசூடிக்கொள்ளவும் வேண்டினாள்.

பீஷ்மன் ஒப்பவில்லை. சத்யவதியும் முயற்சிப்பதை நிறுத்தவில்லை. கள்ள உறவில் பிறந்த மகனைக் கூப்பிட்டுத் தன் மருமகள் இருவரையும் புணர்ந்து புத்திரதானம் செய்து வம்சத்தை வளர்த்திடவும் நாட்டை ஆள்வதற்கு வழி செய்திடவும் கேட்டாள்.

வியாசனோ முனிவன். முறைப்படி திருமணம் புரிந்து கொள்ளாதவன். கருப்பன். எந்தப் பெண்ணாலும் விரும்பப்படாத ஆண். என்றாலும் இச்சை இருக்காதா? தாய் சொல்லைத் தட்டாதவனானான்.

முதலில் அம்பா. வியாசன் கட்டிப் பிடித்தபோது, அருவருப்பு அதிகமாகித் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பிறந்த குழந்தை ஆண். பார்வையற்ற குருடன். திருதராஷ்டிரன்.

இரண்டாவதாக அம்பாலிகை. அவனைப் பகலில் கூடினாள்.

 பிறந்த குழந்தை ஆண். உடல் முழுக்க வெள்ளை நிறம். பாண்டு. லுக்கேடெர்மா என்று ஆங்கில மருத்துவம் கூறும் வெண்குஷ்டம்.

ஒன்று நொள்ளை. மற்றொன்று வெள்ளை. இரண்டுமே தோஷம். அரச பதவிக்கு ஆகாது. மூன்றாவதாக முயற்சித்தாள் சத்யவதி.

வியாசனைத் தூண்டுகிறாள். அம்பாவும் அம்பாலிகாவும் வியாசனைக் ‘கூட’ விருப்பமில்லை. மாமியார் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல், அரண்மனைச் சேடிப் பெண்ணை அனுப்பி வைத்தனர். யார், எவர் எனப் பார்க்காத வியாசன் அவளைப் புணர்ந்தான். சேடிப் பெண்ணோ, அரண்மனையின் சப்ர மஞ்சத்தில் அறிவு நிரம்பிய முனிவனுடன் கலவி செய்கிறோம் எனும் மகிழ்ச்சியில் மிதந்தாள். விதுரன் பிறந்தான்.

பார்ப்பனர் பண்பாட்டில் பிள்ளையில்லாதவள், ஏழு தலைமுறை ஆண் எவனுடனும் புணர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளும் வகை இருந்தது. (இருக்கிறதா என்று தெரியவில்லை) இதற்குச் சாஸ்திர சம்மதமும் உண்டு. ஒரேயொரு நிபந்தனைதான். புணரும்போது உடலில், (குறிப்பாகக் குறியில்) நெய் பூசிக்கொள்ள வேண்டும். இப்படிப் புணர்ந்து, பிறந்த பார்ப்பனர்களுக்கு ‘நியோகி’ என்று பெயர். ஆந்திர மாநிலத்தில் அதிகம். அவர்களில் ஒருவர் அய்ந்து ஆண்டுக்காலம் இந்தியப் பிரதமராகவே இருந்தார்.
                (தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *