மார்ச் 16-31, 2018 உண்மைஇதழில் வெளிவந்த சிறப்பான கருத்துகள் பாராட்டத்தக்கதாய் உள்ளது. நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் நினைவேந்தலும், தமிழர்களின் வேளாண்மைக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு மறுப்பதும் ஏன் என ஆசிரியர் கி.வீரமணி சுட்டிக் காட்டுவதும், இது பெரியார் மண்; எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி என மஞ்சை வசந்தன் தந்த எழுத்தோவியமும், உடுமலை வடிவேலுவின் கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணலும் – அருமையோ அருமை. மேலும் நீட் அடுத்தகட்ட நகர்வு சிறப்புக் கருத்தரங்கம் பற்றி தமிழோவியன் தந்ததும், ஈழத்தந்தை செல்வா பற்றியும் அறிவியல் மேதை திரு.ஜி.டி.நாயுடு பற்றியும் அரிய தகவல்கள் தந்து இவ்விதழை வெளியிட்டுத் திராவிடத் தமிழருக்கு விழிப்பூட்டியதற்கு வாழ்த்தி மகிழ்கின்றேன். நன்றி!
இப்படிக்கு,
வி.பி.மாணிக்கம், நெல்லித்தோப்பு, புதுச்சேரி-5
சமுதாய மாற்றத்திற்கான வாழ்வியல் மாதமிருமுறை இதழான உண்மை (மார்ச்
16-31) இதழில், இது பெரியார் மண் – எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி என்ற மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை மிகவும் எழுச்சிகரமானதும், ஆணித்தரமானதும் இன எதிரிகளுக்கு ஆரிய சூழ்ச்சிகளுக்கு சரியான எரியீட்டி, சவுக்கடியாக இருந்தது. அதுபோல் உண்மை முழுவதும்- அருமையான கட்டுரைகள் – ஆசிரியர் அவர்களின் கேள்வி பதில்களில் ஆதாரப்பூர்வமான பதில்கள்- அட்டைப் படத்தில் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலை மிகவும் சிறப்பு. உண்மை தமிழர்களின் பகுத்தறிவு உதயசூரியன்- சமுதாய வாழ்வின் விடிவெள்ளி!
தங்கள் அன்புள்ள,
திண்டுக்கல் தி.க.பாலு
காலத்தை வென்ற வெற்றியாளர்
உண்மை இதழில் (ஏப்ரல் 1-15, 2018) உலகம் கடவுள் படைப்பல்ல, உறுதி செய்த உலகச் சாதனையாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களின் ஒளிப்படம் முகப்பு அட்டையில் தத்ரூபமாக இருந்தது.
ஸ்டீஃபன் ஹாக்கிங் 1942இல் ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அண்டத்தில் உலா சென்றவர். ஆல்பெர்ட் அய்ன்ஸ்டீனுக்குப் பிறகு உலகெங்கும் உள்ள கோடானுகோடி மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆவார்.
இயலாமை என்பது உடல் சார்ந்ததல்ல, மனம் சார்ந்ததே என்ற உண்மையை இறுதிவரை தன் வாழ்நாளில் நிரூபித்துக்காட்டிய இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை உலக மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன்படும்விதமான மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை விரிவாகவும் விளக்கமாகவும் இருந்தது. உன்னதமான செய்திகளை உடனுக்குடன் தந்துகொண்டிருக்கும் உண்மை ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45