புதுடில்லியில் செப்டம்பர் 7 அன்று காலை டில்லி உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகில் குண்டு வெடிப்பு திடீரென்று நிகழ்ந்துள்ளது மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
தலைநகரில், அதுவும் டில்லியில் நாடாளுமன்றம் நடைபெறும் நிலையில், இப்படி ஒரு பயங்கரவாதம் கொடுமையானது. சுமார் 65 பேர்கள் காயம் அடைந்து மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 11 பேர் பலியாகியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் 2001 இல் செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட சம்பவ மாதத்தின் போது வெகு கவனமாக இருப்பது அரசுகளின் கடமையல்லவா?
உளவுத் துறை, காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
அப்பாவி மக்கள் இப்படி உயிர்ப் பலியாகும் கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டாமா?
இதுபற்றி டில்லியின் சட்டம் – ஒழுங்கு கண்காணிப்பு என்பது மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகும்!
எனவே, இதுபற்றி தவறிழைத்த தீவிரவாதிகள் யாராயினும் சட்டத்தின் முன் கொண்டு வந்து உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவ தோடு, இந்த பயங்கரவாதிகள் தலையெடுத்து விடக்கூடாது என்பதை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதோடு, திராவிடர் கழகத்தின் சார்பில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் – மதவெறிதான் தீவிரவா தத்தின் மூலவேர். அதனை வெட்டி எறிய வேண்டும்.
கி. வீரமணி,
ஆசிரியர்