கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணல்

மார்ச் 16-31

கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல்: உடுமலை வடிவேலு

(சென்ற இதழ் தொடர்ச்சி)

 

கேள்வி: குடும்பத்தில் இருந்துகொண்டே சமூகத்துக்காக போராடுகின்றீர்கள்? இதை உங்கள் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொண்டி ருக்கிறார்களா?

சல்மா: என்னுடைய வேலைகளில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாய் பார்க்க முடிகிறது. என் பணிகளில் கணவரோ, மகன்களோ எந்த குறுக்கீடும் செய்வதில்லை. கேள்வி: இன்றுவரை நிறைவேறாத ஆசையாக நீங்கள் நினைப்பது என்ன?

சல்மா: சின்ன வயதில் நிறைய ஆசை. சைக்கிள் ஓட்டணும், பைக் ஓட்டணும், கார் ஓட்டணும், நீச்சல் கத்துக்கணும் இதெல்லாம் அப்போது எங்கள் மதத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. ஒரு பெண் ட்ரைவ் பன்ன ஆரம்பிக்கிறதுதான் மிக முக்கியமான ஒன்னுன்னு நினைக்கிறேன். அவளுடைய விடுதலையுடைய உச்சம். இன்னொருவரை நம்பிக்கொண்டு இவர் நம்மை அழைத்துச் செல்வாரோ என்று காத்திருப்பது ஒருவிதமான விடுதலையின்மை என்றுதான் நினைக்கிறேன். எனக்கு அந்த மாதிரியான விஷயங்கள் இதுவரையில் கற்றுக்கொள்ள முடியவில்லை. கற்றுக் கொள்ளவும் பயமாக இருக்கிறது.  அதற்கான ஒரு மனநிலையும் இப்போது இல்லை. இருந்தாலும் அது எனக்கு இன்றுவரை நிறைவேறாத ஆசையாகத்தான் இருக்கிறது.

கேள்வி: இதுவரை திராவிட இயக்கங்கள்  செய்தது என்ன? செய்ய வேண்டியது என்ன?

சல்மா: இன்று திராவிட இயக்கம், தி.மு.க. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இவர்கள் எல்லோரும் செய்தது மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இவர்கள் பெண்களுக்காக நிறையத் திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

கேள்வி: மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?

சல்மா: பெண் என்றாலே அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியவர்கள் (அ) உடல்ரீதியான பொருளாகவோ (அ) அழகு பொம்மைகளாகவோ பார்க்கின்றனர். பெண்ணிடம் நாம் எப்படி வேண்டுமென்றாலும் வன்முறை நிகழ்த்த முடியும். நமக்கு அடங்கியவர்கள்தான் என்கிற மனநிலை இன்றும் சமூகத்தில் இருக்கிறது. அதனால்தான் இன்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை நடந்து கொண்டு இருக்கிறது. பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் வீச்சு நடைபெறுகிறது. இப்படி எவ்வளவோ விஷயங்களைச் சொல்லலாம். சிறுமி மீது  இளைஞர்கள் மையல் கொண்டு  பலாத்காரம் செய்து படுகொலை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இதற்கு பின்னணியில் பெண்ணை உடம்பாக மட்டும் பார்க்கப்படுகின்ற ஒரு மனநிலைதான் இன்றுவரை சமூகத்தில் இருக்கிறது. இதையெல்லாம்  உடனடியாக களைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெண்ணுக்கு எதிரான விஷயங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, பெண்ணை இழிவுப்படுத்தக்கூடிய விஷயம் எதுவெல்லாம் இருக்கின்றதோ அவையெல்லாம் களையப்பட வேண்டும். ஒரு சில பெண்கள் அய்.டி துறைகளில் வேலை செய்வதால் பெண்ணினமே முழுமையாக சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது. பெண் உரிமைக்காக நிச்சயமாக மிக வலிமையோடு ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்.

கேள்வி: சமீப காலங்களில் கோயில்களுக்கு பெண்களை அனுமதிக்காததை எதிர்த்து  கடுமையாக பெண்களே வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அரபு நாடுகளில்கூட பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றார்கள். முற்போக்கோடு செயல்படுகிறார்கள். இதுவெல்லாம் இத்தனை நாள்கள் நாம் போராடியதற்கு பலனா? காலத்தின் கட்டாயமா? சல்மா: இன்றைய சூழ்நிலையில் பெண்கள் தங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். அரபு நாடுகளிலும் நிறைய போராட்டங்கள், உரிமைகளை மீட்பதற்கான ஒரு சிந்தனை மாற்றம் உருவாகி இருக்கிறது பெண்களிடம். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். இது பெண்ணின் உரிமை சார்ந்த உணர்வு. சில அரபு நாடுகளில் பெண்கள் ட்ரைவ் பன்ன முடியும், பர்தா அணியாமல் போக முடியும், வேலைக்குப் போக முடியும், எல்லாமே செய்கிறார்கள். நாம் மட்டும் ஏன் பண்ணக் கூடாது என்றக் கோபமும் ஒரு விழிப்புணர்வும்தான். பல அரபு நாட்டு பெண்களைப் போராடத் தூண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன். சமீபத்தில்கூட சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டவும், விளையாட்டு மைதானங்களில் அமர்ந்து விளையாட்டைப் பார்க்கவும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஈரானில்கூட சில விஷயங்களுக்குப் போராட்டம் தொடங்கி இருக்கிறது.

கேள்வி: மத்திய பி.ஜே.பி அரசு இஸ்லாம் பெண்களுக்கான முத்தலாக் சட்டமியற்றி இப்போது பரிசீலனையில் இருக்கிறது. இந்து மதத்தில் பெண்கள் கோயில் கருவறையில் நுழையும் உரிமை பற்றிப்  பேசாமல் முத்தலாக் பற்றி இவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு செயல்படுவதின் உண்மையான நோக்கம் என்ன? இதன் பின்னணியில் ஏதேனும் உள்ளதா?

சல்மா: பி.ஜே.பி.யோ மோடியோ இஸ்லாம் பெண்களுடைய நலனைப் பற்றி யோசனை செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதே விசித்திரமான விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். இஸ்லாம் பெண்களைப் பற்றி கவலைப்படுவதற்கு முன்பு இந்து பெண்களுடைய உரிமைகளைப் பற்றி எங்காவது பேசி இருக்கிறார்களா? இன்றும் ஜாதியின் பெயரால் மிகப் பெரிய அளவிற்கு தலித் பெண்கள் ஒடுக்கப்படக்கூடிய நிலை நீண்டுகொண்டே செல்கிறது. பல கோயில்களுக்குள் பெண்கள் நுழையக் கூடாது. வாரணாசி போன்ற இடத்தில் விதவைப் பெண்கள் மறுமணம் முடிக்க முடியாத நிலையில்தான் உள்ளனர். மொத்த பெண்களின் உரிமைக்காகப் பேசினால் அது பாராட்டப்பட வேண்டியதுதான். இஸ்லாம் பெண்களில் முத்தலாக் மூலம் பாதிக்கப்படக் கூடிய பெண்கள் 0.2., 00.2% சதவீதமாகத்தான் இருக்க முடியும். அதுவும் மிகக் குறைவான அளவுக்குத்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாம் பெண்களுமே இந்த முத்தலாக் விஷயத்தில் பாதிக்கப்படுவதாகவும் அதிலிருந்து அத்தனை பெண்களுக்கும் விடுதலை வாங்கித் தரப் போகிறோம் என்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துப் பெண்களின் உரிமைகளை நினைத்துப் பார்க்காமல் முத்தலாக் பற்றி பேசுவதை நான் மோசமான அரசியலாகத்தான் பார்க்கிறேன். உண்மையிலேயே இஸ்லாமியப் பெண்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் உடனடியாக செய்ய வேண்டிய விஷயம் என்னவெனில் எச்.ஆர். கமிட்டி மூலமாக, ரங்கநாதன் கமிட்டி மூலமாக கிடைத்த ரிப்போர்ட் அரசாங்கத்திடம் உள்ளது. பல வருடங்களாக உறங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் சமூக நிலை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லி இருப்பார்கள் அந்த இரண்டு கமிஷன் அறிக்கையிலும். இந்தியாவில் தலித்துகளைவிட இஸ்லாமியர்கள் மிக மோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கி றார்கள். கல்வியிலும் பொருளாதார ரீதியிலும், பொது வாழ்க்கையிலும் அரசு வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. இதை மாற்றுவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என அந்தக் கமிஷனில் சில வழிமுறைகளும் பரிந்துரைகளும் சொல்லப்பட்டிருக்கிறது. கல்விக்கு முன்னுரிமை செய்ய வேண்டும். உண்மையிலேயே இஸ்லாம் பெண்களை மேம்படுத்துவதென்றால் எச்.ஆர். கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக நீங்கள் அமல்படுத்துங்கள். இதன்மூலம் இஸ்லாம் பெண்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களும் நல்ல நிலைக்கு வருவார்கள். இந்தியாவில் இதுவரையில் சட்டமன்றத் திலும் பாராளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு சாத்திய மில்லாத ஒன்றாகத்தான் இன்றும் இருக்கிறது. முத்தலாக் பற்றி மட்டும் பேசாமல் ஒட்டுமொத்தமாக இந்தியப் பெண்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் பி.ஜே.பி அரசு பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேள்வி: நீங்கள் ஒரு என்.ஜி.ஓ. நடத்துகிறீர்கள். அந்தப் பணிகள் எப்படி இருக்கிறது? அதில் இஸ்லாம் மக்கள் பயன் அடைகிறார்களா?

சல்மா: நான் ஆரம்பித்திருக்கும் என்.ஜி.ஓ.வில் கலைஞர் படிப்பகம் என்று ஒன்றை உருவாக்கி அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில்தான் ஒரு பேட்ஜ் முடித்திருக்கிறது. குரூப்-மிக்ஷி, வி.ஏ.ஓ., தேர்வுக்காக பயிற்சி நடந்து முடிந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்காக மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றுதான் எங்கள் கிராமத்திலேயே ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், அவர்களிடம் பெரிய அளவிற்கு ஆர்வம் இருப்பதில்லை. கல்வியின்மீது, அரசு வேலையின்மீது எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. சிறுபான்மை யினருக்கு இருக்கும் இடஒதுக்கீடு பற்றி அவர்கள் அறிந்துகொண்டதும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அடுத்து குரூப்-மிமி பயிற்சி வகுப்பு வரும் மார்ச்சிலிருந்து கொடுக்க இருக்கிறோம். மதம் சார்ந்து அதை நான் நடத்தவில்லை. அனைத்து தரப்பினரும் அங்கு வருகிறார்கள், பயனடைகிறார்கள்.

கேள்வி: இஸ்லாமிய பெண்களுக்கு உங்களைப் பார்த்தும் ஆர்வம் வருவது இல்லையா?

சல்மா: உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும். சுதந்திரத்தை விரும்பாத எந்த ஜீவராசியும் உலகத்தில் இல்லை. நிச்சயமாக அவர்களுக்கும் விருப்பம் இருக்கும். குடும்ப அமைப்பு அவர்களை இருக்கமாக வைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும்.

கேள்வி: பெரியாரைப் பற்றி நீங்கள் சொல்லும்போது ஓர் உண்மையான பெண்ணுரிமைப் போராளியாக ஓர் ஆண்தான் இருக்கிறார் என்று சொன்னீர்கள். அந்தக் கருத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

சல்மா: பெரியாரை எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. வெறுமனே அவர் கடவுளுக்கு எதிராகப் பேசியவர் இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் மனித இனத்தின் மீதும், மிகப் பெரிய அளவு பேரன்பு அவருக்கு இருந்தது. அந்த பேரன்பின் வழியாகத்தான் எல்லோரையும் நேசிக்கணும், எல்லோருக்கும் நல்ல விஷயம் நடக்கணும். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று அவர் தன் வாழ்வு முழுதும் போராடினார். எல்லோரையும் சமமாக நினைத்தார். பெண் விடுதலைக்காக எவ்வளவோ போராடினார். இந்த நூற்றாண்டில் பெண் விடுதலைக்காகப் போராடிய ஒரு மிகப் பெரிய தலைவராகப் பார்க்கிறோம். அதற்காகத்தான் அவரை தலையில் தூக்கி வைத்து ஒட்டுமொத்த பெண்களும் கொண்டாடுகிறோம்.

பெண் உரிமைக்காக ஒரு பெண் பேசுவதை விட ஒரு ஆண் பேசும்பொழுதுதான் அது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

கேள்வி: செங்கல்பட்டில் திராவிடர் கழகத்தால் போடப்பட்ட தீர்மானம் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. ஆயினும், இது மக்களிடம் அதிகம் சென்று சேரவில்லை என்று நினைக்கிறீர்களா? பெண்களுக்கு திராவிட இயக்கங்கள் செய்த விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்து?

சல்மா: செங்கல்பட்டு தீர்மானங்களை ஆட்சிக்கு வந்ததுமே ஒவ்வொன்றாக நிறைவேற்றினார்கள் அறிஞர் அண்ணாவும், கலைஞரும். பல்வேறு விஷயங்களை தொடர்ச்சியாகச் செய்தார். தந்தை பெரியாருடைய கனவுகளை இருவரும் நிறைவேற்றினர். தி.மு.க. திராவிட இயக்கங்களைப் பற்றி ஒரு விஷயம்தான் நான் சொல்ல வேண்டும். செய்ததை வெளியே சொல்லவே இல்லை. எவ்வளவோ செய்திருக்கிறார்கள். கலைஞர் நிறைய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள். பல மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டங்களை கலைஞர் செய்திருக்கிறார். இதையெல்லாம் இனி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.

ஒற்றை வரியில் சல்மா பதில்கள்:

பெரியார்: தமிழினத்தின் பெருமிதம்!

அம்பேத்கர்: ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நாயகர்.

அண்ணா: மிகப் பெரிய அறிவாளி, மேதை!

காமராஜர்: உன்னதமான மனிதர்.

கலைஞர்: இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அரசியல் ராஜதந்திரி.

சல்மா: போராளி

நேர்காணலில் உதவி : தமிழோவியன் ஒளிப்படங்கள் : சு.சுதன், ப.வேணுகோபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *