சக்கர நாற்காலியில் சாதனைகள் படைத்த தன்னம்பிக்கைச் சரித்திரம்

ஏப்ரல் 01-15

ஸ்டீஃபன் ஹாக்கிங்

மஞ்சை வசந்தன்

சக்கர நாற்காலியிலே வாழ்க்கை. கழுத்துக்கு மேலே தலை சாய்ந்து கிடக்கும்! கண்களிலும், உதடுகளிலும் அவ்வப்போது அசைவு தெரியும்! கைகால்கள் செயலிழந்துவிட்டன. உணவை ஊட்டிவிட வேண்டும். அதிலே முக்கால் பங்கு கீழே விழும். வாய்க்குள் சென்ற சிறு அளவு உணவையும் மென்று விழுங்க அவர் பெருமுயற்சி எடுப்பார். உணவு ஊட்டுபவர் அவரின் மாணவர்தான்.

இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கணிதப் பேராசிரியராகப் பணி. இப்படிப்பட்டவர் சாதாரண மனிதரல்ல. உலகின் உச்சநிலை

விஞ்ஞானி! நியூட்டன், ஐன்ஸ்டீனுக்குப் பின், இந்த நூற்றாண்டின் இணையில்லா விஞ்ஞானி. ஐன்ஸ்டீன் செய்த தவறுகளையே சுட்டிக்காட்டிய அறிவுநுட்பம் மிகுந்த

விஞ்ஞானி. அவரது ஆராய்ச்சி இப்பிரபஞ்சம் பற்றியது.

“இந்தப் பிரபஞ்சம் எப்போது எப்படித் தோன்றியது? அது இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும்? எப்போது முடியும்? இந்தப் பிரஞ்சத்தின் உருவாக்கத்தில் ஆண்டவனுக்கு ஏதேனும் பங்கிருக்கிறதா? இருந்தால் அது என்ன? இந்தப் பிரஞ்சத்தையும், அதில் உள்ள கோடிக்கணக்கான கோள்களையும், நட்சத்திரங்களையும், இந்த பூமியையும், சந்திர சூரியர்களையும் அவர் ஏன் கன்னா பின்னாவென உருவாக்காமல், ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் உருவாக்கி இருக்கிறார்? அவர்தான் அப்படிச் செய்தாரா? அப்படியானால் அவருடைய மனதில் இருந்தது என்ன? அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், இப்பிரஞ்சம் தானாகவே ஒரு ஒழுங்கில் உருவானதா? காலம் என்பது என்ன? அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? அது எப்போது தோன்றியது? தோன்றியிருந்தால், அது எப்போது முடியும்?’’

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயற்சிப்பது தான் அவருடைய ஆராய்ச்சிகள்! கிட்டத்தட்ட எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளையும் அவர் கண்டுபிடித்து விட்டார். அந்த ஆராய்ச்சியில் நியூட்டன் என்ன தவறு செய்தார், அய்ன்ஸ்டீன் என்ன தவறு செய்தார், அவற்றையெல்லாம் எப்படிச் சரி செய்யலாம் என்றெல்லாம் அவர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமும் புத்தகங்கள் மூலமும் விரிவாக எடுத்துக் கூறினார். தன் கண்டுபிடிப்புகளைக்கூட எழுதிவைக்க முடியாத அளவிற்கு உடல் உறுப்புகள், நரம்பு நோயால் செயலிழந்து, மூளை மட்டும் செயல்பட்ட நிலையில் சாதனைகள் பல புரிந்து தன்னம்பிக்கை சரித்திர நாயகராக நிலைத்து விட்டவர். இவ்வளவு வியப்பிற்கும் சாதனைக்கும் உரியவர்தான் ஸ்டீஃபன் ஹாக்கிங்!

உலகின் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான சூத்திரங்கள், வரைபடங்கள் பலவும் இவருடைய சிந்தனையில் விளைந்தவையே! இவர் பெற்ற விருதுகள் ஏராளம்!  ‘A Brief History of Time’ என்ற இவரது நூல் இலட்சக்கணக்கான படிகள் விற்பனையாகிச் சாதனைப் படைத்தது. எளிய மனிதர்களும் படித்துப் புரிந்துகொள்ளும்படி எழுதப்பட்ட நூல் இது!

1942 ஜனவரி 08 அன்று இசபல் ஹாக்கிங், ஃப்ராங் ஹாக்கிங் ஆகியோருக்கு முதல் குழந்தையாக ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தார். விஞ்ஞானி கலிலியோ பிறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்திருந்தார். ஸ்டீஃபனின் அம்மா அந்தக் காலத்திலேயே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமே அவர் சேர்வதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் பெண்களைச் சேர்க்க ஆரம்பித்திருந்தது. ஸ்டீஃபனின் அப்பா ஃப்ராங்க்கும் ஆக்ஸ்ஃபோர்டில் மருத்துவம் படித்தவர். 1939இல் இரண்டாம் உலகப் போர் வந்தபோது அவர் கிழக்கு ஆப்பிரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்

ஸ்டீஃபன் இயற்பியல் கோட்பாடுகளில் சிறப்புப் படிப்பை மேற்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் செயிண்ட் அல்பான்-ஸில் இருந்த பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளியில் ஸ்டீஃபன் சேர்க்கப்பட்டான். ஆனாலும், ஆண்களுக்கென்று தனியான பிரிவு இருந்தது. அங்கே ஸ்டீஃபன் படித்தான்.

அல்பான்ஸ் பள்ளியில் இலவசமாகப் படிக்கும் அளவுக்குத் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெற்றான். மாதிரி ரயில்களைப் பார்த்து மகிழ்ந்தான். கடிகாரங்கள், வானொலிப் பெட்டிகள் போன்றவற்றை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தெடுப்பதில் மகிழ்ச்சி கொண்டான். ஸ்டீஃபனும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1958இல் ஒரு கம்ப்யூட்டரை வடிவமைத்தார்கள். பள்ளிப் பருவம் முடிந்துவிட்டது. எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்ற பிரச்சினை இப்போது எழுந்தது. தான் படித்த ஆக்ஸ்ஃபோர்டின் யுனிவர்சிட்டி காலேஜில் மகன் படிக்க வேண்டும் என்று ஃப்ராங்க் விரும்பினார்.

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி காலேஜில் சேர்ந்தபோது ஸ்டீஃபனுக்கு பதினேழு வயதுதான். மற்ற மாணவர்களைவிட வயதில் கொஞ்சம் இளையவராக இருந்தார். மின்சாரம், மின்காந்தவியல் ஆகிய பாடங்களில் தீர்க்க வேண்டிய 13 வீட்டுப் பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்திருந்தனர். அந்த வார முடிவில் ரிச்சர்ட், டெரக் ஆகிய மாணவர்கள் ஒன்றரைப் பாடங்களைத்தான் முடித்திருந்தனர். கார்டன் என்ற மாணவரோ ஒரேயொரு பாடத்தைத்தான் முடித்திருந்தார். ஸ்டீஃபனோ எதையுமே ஆரம்பிக்கக்கூட இல்லை. அடுத்த நாள் பேராசிரியரின் விரிவுரை வகுப்பைத் தவிர்த்த ஸ்டீஃபன், அந்த இடைவெளி நேரத்தில் அவராகவே, பகல் உணவுக்கு முன்பே பத்து ‘ப்ராப்ளம்‘களைத் தீர்த்து எழுதிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்த நண்பரும் மாணவருமான டெரக் ஸ்டீஃபன் பற்றி ஒரு வாக்கியத்தைக் கூறினார். அது மறக்க முடியாத அற்புதமான வாக்கியமாகும். அவர் சொன்னார்: “ஸ்டீஃபனும் நாங்களும் ஒரே தெருவில் வசிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒரே உலகத்திலும் நாங்கள் வசிக்கவில்லை!’’ எவ்வளவு உண்மை!

ஸ்டீஃபனுக்கு பிரபஞ்சவியல் பற்றிய படிப்பிலும் ஆராய்ச்சியிலும்தான் அதிக ஆர்வமிருந்தது. ஆனால், ஆக்ஸ்ஃபோர்டில் பிரபஞ்சவியல் (காஸ்மாலஜி) பற்றிய படிப்பு இல்லை. அது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்தான் இருந்தது. ஆனால், அங்கே சென்று படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும்.

பிரபஞ்சம் பற்றி ஏற்கனவே ஐன்ஸ்டீன் வரையிலான கருத்துக்கள் மட்டுமே உலகுக்குத் தெரிந்தன. அது அவரின் ‘ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’ அடிப்படையிலானது. இந்தப் பிரபஞ்சம் நிலையானது, அதில் மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என்று ஜய்ன்ஸ்டீனின் கோட்பாடு கூறியது. ஆனால், ‘பிக் பாங்’ (big bang) எனப்பட்ட பெருவெடிப்புக்குப் பிறகுதான் இந்தப் பிரபஞ்சம் உருவானது. காலமும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்தப் பிரபஞ்சம் மாறிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பிரபஞ்சமும் காலமும் முடிவுக்கு வந்துவிடும் என்பது ‘க்வாண்டம் மெகனிக்’ஸின் கருத்து. இவை இரண்டையும் இணைத்து ஒரு புதுக் கோட்பாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஸ்டீஃபனின் கருத்து.

ஸ்டீஃபனின் நம்பிக்கை வீண் போகவில்லை. முதல் மதிப்பெண் வாங்கி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்டீஃபன் சேர்ந்தார். அவர் நடக்க முடியாமல் விழுந்தார். ஏன் விழுந்தோம் என்று அவருக்குப் புரியவில்லை. ஆனால் இதை அவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்தார். ஒருமுறை ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்டீஃபன் அப்படியே ஐஸ் கட்டியின் மீது குப்புற விழுந்தார். ஆனால், அவரால் அதிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. குடும்ப மருத்துவரிடம் காட்டினார்கள்.

செயிண்ட் பார்த்தலோமியோ மருத்துவமனையில் ஸ்டீஃபனை பரிசோதனை செய்தார்கள். அங்குதான் ஸ்டீஃபனின் சகோதரி மேரியும் மருத்துவராவதற்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அங்கே இரண்டு வாரங்கள் ஸ்டீஃபன் தங்கி வேதனையூட்டக்கூடிய பல தொடர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.  அவருக்கு வந்திருப்பது அமியோட்ரோஃபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்ற நோய். ஏ.எல்.எஸ். என்று சுருக்கமாகவும், லூகெஹ்ரிக் என்ற ‘பேஸ் பால்’ விளையாட்டு வீரருக்கு வந்ததால்

லூகெஹ்ரிக்-கின் நோய் என்றும் அழைக்கப்பட்ட அது மிகவும் கொடுமையானது. என்றாலும் நம்பிக்கை முழுமையாக அவரை விட்டுப் போய்விடவில்லை. இறுதியில் மருத்துவர்கள் ஸ்டீஃபன் விஷயத்தில் தங்கள் கைகளைக் கழுவிவிட்டார்கள். இனி அவருக்குத் தங்களால் உதவ முடியாது என்று கைவிரித்தனர். அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

1963 ஜூன் மாதத்தில் பேராசிரியர் ஹோய்ல் பிரபஞ்சவியல் பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். அதன் முடிவுகளில் தவறு உள்ளது என்று ஸ்டீஃபன் கூறினார். எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு, தான் ஏற்கனவே அதுபற்றி யோசித்து வைத்துவிட்டதாகக் கூறினார். நர்லீகர் என்ற சக ஆராய்ச்சி மாணவரோடு பலநாள் ஸ்டீஃபன் அதுபற்றி விவாதித்து வைத்திருந்தார்.

ஸ்டீஃபனும் ஜேனும் மிகவும் நெருக்கமாயினர். அந்த நெருக்கம் ஒரு உறவாகப் பரிணமிக்குமானால் அது தன் வாழ்க்கையை மலர வைக்கும், மணக்க வைக்கும் என்று ஸ்டீஃபன் நம்பினார். உங்கள் மகளை எங்கள் மகனுக்குத் தரமுடியுமா? என்று ஜேனுடைய தந்தையிடம் ஸ்டீஃபனுடைய பெற்றோர் முறைப்படி கேட்டனர். ஒரு நிபந்தனையின் பேரில் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதாவது, ஜேன் படிப்பை முடிப்பதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

பொறுப்புகளையும், தடைகளையும், சவால்களையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இருந்தாள். ஆனால், அவை காலம் செல்லச் செல்ல மிகவும் கடினமானதாக மாறிக்கொண்டே போயின. இவ்வளவுக்கும் அவள் ஸ்டீஃபனிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் அன்பு ஒன்றுதான்.

“ஜேனோடு எனக்கேற்பட்ட அந்த நிச்சயதார்த்தம் என் வாழ்க்கையை மாற்றியது. நான் ஏன் வாழவேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதிலைக் கொடுத்தது’’ என்று ஸ்டீஃபன் கூறினார்.

1965ஆம் ஆண்டு, ஜூலை 14ஆம் தேதி கேம்ப்ரிட்ஜின் ட்ரினிட்டி ஹாலில் இருந்த ஒரு தேவாலயத்தில் எளிமையாக ஸ்டீஃபன் ஹாகிங் மற்றும் ஜேன் வைல்ட் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாயினர். திருமணம் முடிந்து ஒரு வாரம் புதிய தம்பதிகள் சஃபோக் என்ற ஊருக்கு தேனிலவுக்குச் சென்றார்கள். இயற்கை அழகு கொட்டும் ஒரு இடம் சஃபோக். அதன் கடற்கரையும் மலைகளும் கண்கொள்ளாக் காட்சி.

அதன்பிறகு நியூயார்க்கில் இருந்த கார்னல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோடைகால வகுப்புகளுக்கு ஸ்டீஃபனும் ஜேனும் சென்றனர். தன் எதிர்கால புகழுக்கான தொடர்புகள் ஸ்டீஃபனுக்கு அங்குதான் கிடைத்தன. ஆனால், அங்கிருந்தபோதுதான் ஸ்டீஃபனுக்கு மூச்சடைக்கின்ற, கழுத்தை யாரோ நெரிப்பது போன்ற வகையிலான வலிப்பு வந்தது.

1965 அக்டோபரில் ஸ்டீஃபனுக்கு கான்வில் அண்டு கயஸ் காலேஜ் என்ற கல்லூரியில் ஒரு வேலை கிடைத்தது. ஸ்டீஃபனுக்கு அவ்வளவாகக் கணித அறிவு கிடையாது. அது இப்போது அவரது பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அவசியம் தேவைப்பட்டது. அதனால் கணித அறிவை தானே வளர்த்துக்கொள்ள அவர் தனக்குத்தானே ஒரு ஆக்கப்பூர்வமான ஏற்பாடு செய்துகொண்டார். கல்லூரியில் இளங்கலை கணிதப் படிப்புக்கான மாணவர்களை மேற்பார்வை செய்யும் வேலை இருந்தது. அதைப் பயன்படுத்தி அவரே அவருடைய கணித அறிவை மேம்படுத்திக் கொண்டார். ஒரு பேராசிரியராகவும் ஒரு மாணவராகவும் ஒரே நேரத்தில் இருந்துள்ளார்.

அவர் எழுதிய  “Singularities and the Geometry of Space-Time” என்ற கட்டுரைக்கு ஆடம்ஸ் ப்ரைஸ் என்ற பரிசு கிடைத்தது. அவருக்கும் ரோஜர் பென்ரோஸ் என்பவருக்கும் சேர்த்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செய்ண்ட் ஜான் கல்லூரியால் வழங்கப்பட்ட அந்தப் பரிசு மிகவும் கவுரவமானது. நெப்டியூன் என்ற எட்டாவது கிரகத்தைக் கண்டுபிடித்திருந்த ஜான் கௌச் ஆடம்ஸ் என்பவரின் பெயரால் அது வழங்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஆராய்ச்சிகளுக்காக ஒரு இளம் விஞ்ஞானிக்கு அது வழங்கப்பட்டது. மார்ச் 1966இல் ஸ்டீஃபனின் முனைவர் பட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவதற்கான விழா நடந்தது. அதன் பிறகு

இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரானமியின் உறுப்பினரானார் ஸ்டீஃபன்.

1967 மே 28ஆம் ஸ்டீஃபன் ஹாகிங்கிற்கும் ஜேனுக்கும் முதல் குழந்தை, ஆண் குழந்தை, ராபர்ட் ஜார்ஜ் பிறந்தார்.

அவரது ஆராய்ச்சிகளுக்கான ‘ஃபெலோஷிப்’ மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. ‘சிங்குலாரிட்டி’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச நிகழ்வுகள் பற்றிய ஸ்டீஃபனின் ஆராய்ச்சியின் காரணமாக அவரது புகழ் மேலும் மேலும் பரவ ஆரம்பித்தது. உதாரணமாக, ‘பிக் பாங்’ (big bang) என்று சொல்லப்படும் பெரு வெடிப்பிற்குப் பிறகுதான் இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதை ஸ்டீஃபன் நிரூபித்தார்.

என்றாலும் அவரால் பேராசிரியர் தொழிலைத் தொடர்ந்து செய்வதில் பிரச்சினைகள் இருந்தன. அவரால் மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாகப் பேச முடியவில்லை. அவருடைய பேச்சு குளறிக்குளறித் தெளிவில்லாமல் வந்தது. எனவே அவரால் வகுப்புகளில் தொடர்ந்து விரிவுரை செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் 1970இன் ஆரம்பத்தில் ஜேன் மறுபடியும் கர்ப்பிணியானார். நவம்பரில் லூஸி என்ற பெண் குழந்தை பிறந்தது.

அவரது மனம் பூராவும் பிரபஞ்ச வெளியிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவருடைய கவனம் இப்போது ‘ப்ளாக் ஹோல்ஸ்’ என்று சொல்லப்பட்ட பிரபஞ்ச வெளியில் தோன்றக்கூடிய சில அல்லது பல ‘ஈர்ப்புவிசை ராட்சசர்க’ளைப்பற்றித் திரும்பியது. ஒரே ஆண்டுக்குள் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவர் சமர்ப்பித்தார். அவர் எழுதிய ‘ப்ளாக் ஹோல்ஸ்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மிகப்பெரிய விருதும் பெரிய தொகையும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தரையில் நடப்பதே ஒரு சவாலாகிப் போனது. இறுதியாக வேறு வழியில்லாமல் ஒரு சக்கர நாற்காலியில் அவரை உட்கார வைத்துவிட்டார்கள். அந்த நாற்காலிதான் அவர் உலகமாகிப் போனது.

1973இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலம், இடம், வெளி பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். ஜார்ஜ் எலிஸ் என்ற நண்பரோடு நீண்ட நாட்களாக செய்த விவாதங்கள், கலந்துரையாடல்களின் அடிப்படையில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது ஒரு ‘க்ளாசிக்‘ (முதல்தரமான, ஆதாரப்பூர்வமான) புத்தகமாகக் கருதப்பட்டது.

‘க்வாண்டம், மெகானிஸ்’ இரண்டையும் இணைத்து ‘க்வாண்டம் க்ராவிட்டி’ என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.  பிரபஞ்சத்தின் துவக்கம், இப்போதைய நிலை, முடிவு பற்றிய உண்மைகளை விளக்க இதுவே சரியான கோட்பாடாக இருக்கும் என்பது ஸ்டீஃபனின் வாதம்.

விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னேற்றம் நிகழ்ந்துகொண்டே இருந்தது. அதேவேகத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது. முக்கியமாக ஸ்டீஃபனுடைய பேச்சு புரிந்துகொள்ள முடியாததாகிப் போனது. ஒவ்வொரு உடல் தொடர்பான இயக்கத்துக்கும் யாருடைய உதவியாவது தேவைப்பட்டது. முக்கியமாக குளிப்பது, சாப்பிடுவது போன்ற காரியங்களுக்கு மற்றவர்களின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் அவர் கருப்பு ஓட்டைகளான ‘ப்ளாக் ஹோல்ஸ்’ பற்றி மிக முக்கியமான உண்மைகளைக் கண்டுபிடித்தார். ப்ளாக் ஹோல்ஸுக்கு உஷ்ணம் இருக்கிறது என்றும், அவைகளிலிருந்து ஒருவிதமான ‘ரேடியேஷன்’ (கதிர்வீச்சு) இருக்கிறது என்றும் கண்டுபிடித்தார்.

‘ப்ளாக் ஹோல் ரேடியேஷன்’ பற்றிய அவருடைய ஆராய்ச்சி வெளியான பிறகு அவருக்கு சில விருதுகளும் பதவிகளும் கிடைத்தன. அதனால் அவருடைய வருமானமும் அதிகரித்தது. நல்ல சம்பளம், ஒரு வீடு, ஒரு கார் இவற்றோடு ஒரு மின்சக்கர நாற்காலியும் ஸ்டீஃபனுக்கு வழங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி ஸ்டீஃபன் புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக, ‘ஃபெலோ’வாக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அப்போது அவருக்கு வயது 32. அவ்வளவு சின்ன வயதில் ‘ஃபெலோ’வான ஒரே விஞ்ஞானி அவர்தான்.

கலிஃபோர்னியாவின் கால்டெக் (கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) பல்கலைக்கழகத்திலிருந்து 1974_75ஆம் ஆண்டுக்கான விசிட்டிங் பேராசிரியர் பதவிக்கான அழைப்புக் கடிதம் வந்தது. புகழ்பெற்ற அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது ஸ்டீஃபனுக்குப் பெருமையாக இருந்தது.

இயற்பியலில் பெரிய நிபுணர்களையும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கின்ற விஞ்ஞான மனம் கொண்ட மாணவர்களையும் ஸ்டீஃபன் அங்கே சந்தித்தார். அதில் ஒருவர்தான் டான் பேஜ் (Don Page) என்பவர். அவரும் ஸ்டீஃபனும் சேர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். காமா கதிர்களின் உதவியைக் கொண்டு ப்ளாக் ஹோல்களை கவனிக்க முடியும் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

ப்ளாக் ஹோல்கள் கதிர்வீச்சு கொண்டவை என்பது ஸ்டீஃபனின் முக்கியமான கண்டுபிடிப்பு மட்டுமல்ல. அதுதான் அவருடைய புதிய சிந்தனைப் பரிமாணத்தின் தொடக்கமாகவும் இருந்தது. அங்கிருந்து தொடங்கி அவர் ஐன்ஸ்டீனின் ஜெனரல் ரிலேட்டிவிடி கோட்பாட்டையும் க்வாண்டம் மெகானிக்ஸையும் எப்படி இணைப்பது என்ற கேள்விக்குள் சென்றார். இந்தப்

பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அது ஏன் இருக்கிறது? ஏன் வேறுமாதிரி இல்லாமல் இப்போது இருப்பதுபோல் இருக்கிறது? போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள அவர் ஆசைப்பட்டார். இதே கேள்விகள் ஐன்ஸ்டீனுக்கும் இருந்தன. ஆனால், பதில்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கால்டெக் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது ஸ்டீஃபனுக்குப் பல விருதுகள் கிடைத்தன. 1975இல் ராயல் அஸ்ட்ரானமி சொசைட்டியின் எடிங்டன் மெடல் விருதை இன்னொரு நண்பரோடு சேர்ந்து பெற்றுக்கொண்டார். போப்பாண்டவர் ஆறாம் பால் கையால்

விஞ்ஞானத்துக்கான பதினோறாவது பியஸ் தங்க மெடலைப் பெற்றுக்கொண்டார்.

ஜூடி ஃபெலா என்ற ஒரு பெண் செக்ரட்டரியும் ஸ்டீஃபனுக்குக் கிடைத்தார். பல ஆண்டுகள் ஸ்டீஃபனோடு இருந்து அவர் அரிய பணியாற்றினார்.

ராயல் சொசைட்டி அவருக்கு “ஹ்யூஸ் மெடல்’’ கொடுத்து கவுரவித்தது. The Key to the Universe என்ற ஆவணப்படத்துக்காக ஸ்டீஃபன் பேசியதை பிபிசி தொலைக்காட்சி வீட்டுக்கு வந்து படம் பிடித்து ஒளிபரப்பியது. கணித இயற்பியலுக்காக அமெரிக்கன் ஃபிசிகல் சொசைட்டியின் விருது ஒன்றையும் அவர் பெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டீஃபன் ஒரு பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.

1978ஆம் ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எழுதிப் பார்க்காமல், கணித ஃபார்முலாக்களையெல்லாம் அவரால் எப்படி மனதுக்குள்ளேயே போட்டுப் பார்க்க முடிகிறது என்று ‘டைம்‘ பத்திரிகை ஆச்சரியப்பட்டது.

செப்டம்பரில் ஜேன் மூன்றாவது முறையாகக் கருவுற்றார். 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிமோத்தி ஹாகிங் பிறந்தார். ஸ்டீஃபனும் ரோம் போன்ற நகரங்களுக்கு ஆராய்ச்சி தொடர்பாகச் சென்று வந்தார். பிரஞ்சத்தின் எல்லையில் என்ன இருக்கும் என்ற ஆராய்ச்சியில் அவர் இறங்கியிருந்தார். கடைசியில் பிரஞ்சத்துக்கு எல்லையே இல்லை என்ற முடிவுக்கும் அவர் வந்தார்!

எல்லையற்ற பிரபஞ்சம் என்று சொல்லும்போது ஆரம்பம் என்ற ஒன்று இல்லை, அது யாராலும் படைக்கப்படவே இல்லை என்பதுதானே உட்குறிப்பு! என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறினார். இதன்மூலம் கடவுள் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.

ஃபிலடெல்ஃபியாவில் அவருக்கு இயற்பியலுக்கான பெஞ்சமின் ஃபிராங்க்லின் மெடல் என்ற விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த விருதை வாங்கியவர் மேதை ஐன்ஸ்டீன் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓராண்டிலேயே அவருக்கு இங்கிலாந்தின் மிகப் பெரிய கவுரவம் கிடைத்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில் ராணி எலிசபெத்தின் கையால் கமாண்டர் ஆஃப் த ப்ரிட்டிஷ் எம்பயர் என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. பின்னர் நாட்டர்டாம், சிகாகோ, ப்ரின்ஸ்டன் போன்ற பல்கலைக்கழகங்களால் கவுரவ முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஈர்ப்பு விசை எங்கெல்லாம் வேலை செய்யாமல் போகிறது என்பதைப் பற்றி 1982ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஹாகிங் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று சொற்பொழிவுகள் கொடுத்தார். பின்னர் அதை விரிவாக,

விஞ்ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு புத்தகமாக எழுதினால் என்ன என்று அவருக்குத் தீவிரமாகத் தோன்றியது. அதன் விளைவாக உருவானது தான்  “A Brief History of Time’ என்ற புத்தகம். அவரைப் பணக்காரராக்கிய புத்தகம். லட்சக்கணக்கில் விற்றுத்தீர்ந்த, யாருமே படிக்காத புத்தகம். ஆமாம். அப்படித்தான் அது இன்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.

ராயல் அஸ்ட்ரொனாமிகல் சொசைட்டியின் தங்க மெடல் அவருக்கு வழங்கப்பட்டது. ஸ்டீஃபனின் குரல்வளை நாளங்களுக்குக் கீழே ஒரு நிரந்தரத் துளை போட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர் விளக்கினார். இல்லையெனில் அந்த இருமல் வந்துகொண்டே இருக்கும். வேறு வழியின்றி ட்ரகியோட்டோமி என்ற அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்றிலிருந்து கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்த குரலும் நிரந்தரமாகப் போனது ஸ்டீஃபனுக்கு.

கேம்ப்ரிட்ஜுக்கு ஸ்டீஃபன் திரும்பி வந்தார். ஆனால் இனி மனிதர்களோடு எப்படிக் கருத்தைப் பரிமாறிக்கொள்வது என்ற மிகப்பெரிய கேள்வி அவர் முன் வந்து நின்றது. கண்ணுக்கு எதிரே தெரியும் எழுத்துக்களை யாராவது ஒருவர் ஒவ்வொரு எழுத்தாகப் படித்துச் சொல்ல வேண்டும். அவர் ஒரு எழுத்தை சரியாகப் படித்தால் ஸ்டீஃபன் புருவங்களை உயர்த்துவார். அந்த எழுத்து சரிதான் என்ற அர்த்தம். இப்படியே ஒவ்வொரு சொல்லுக்கும் செல்ல வேண்டும். பின்னர் ஒரு வாக்கியத்துக்கு. இப்படித்தான் அவரால் ‘பேச’ முடிந்தது.

இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஆபத்பாந்தவராக வந்தார் வால்ட் வால்டோஸ் (Walt Woltosz) என்பவர். கலிஃபோர்னியாவில் இருந்த கம்ப்யூட்டர் நிபுணர் அவர். மாற்றுத்திறனாளியான தன் மாமியாருக்காக அவர் ஒரு கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தார். சொற்களை அகராதியிலிருந்து அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதோடு ‘வாய்ஸ் சிந்தசைஸர்’ ஒன்றையும் சேர்த்திருந்தார். தலையில் பொருத்தப்பட்ட எலக்ட்ரோடுகளின் வழியாக கம்ப்யூட்டர் திரையில் தெரியும் சொற்களிலிருந்து அது தேவையான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

அந்த கம்ப்யூட்டரை அவர் ஸ்டீஃபனுக்கு அனுப்பி வைத்தார். குரல் பிரச்சினை தீர்ந்துவிட்டது ஒருவழியாக. ஸ்டீஃபன் ஹாகிங் எழுதிய A Brief History of Time என்ற நூல். Bantam Books வெளியீடாக அது வெளிவந்தது. லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. பிரபஞ்சம், காலம் இவற்றின் ஆரம்பம், முடிவு பற்றிய ஒரு விஞ்ஞான புத்தகம் அது. ஆனால் விஞ்ஞானிகளல்லாத சாதாரண மனிதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம். அதில் அச்சமூட்டும் கணித சமன்பாடுகள் எதுவும் இல்லை.

ஜேனும் ஸ்டீஃபனும் ஜெருசலம் சென்று வுல்ஃப் ப்ரைஸ் இன் ஃப்சிக்ஸ் என்ற விருது பெற்று வந்தனர். அவருடைய பழைய நண்பர் ரோஜர் பென்ரோஸுக்கும் சேர்த்து அந்த விருது வழங்கப்பட்டது. அவர் இஸ்ரேலில் இருக்கும்போது, கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். “கடவுளுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் இடமில்லை’’ என்று அதற்கு அவர் பதில் கூறினார்.

ஸ்டீஃபனின் புத்தகம் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸிலும் இடம்பெற்றது. கிட்டத்தட்ட அறுபது மொழிகளில் அது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

கலிஃபோர்னியாவிலிருந்து ஓர் அழைப்பு வந்தது ஸ்டீஃபனுக்கு. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து ஹிச்காக் லெக்சரர்ஷிப் என்ற விரிவுரையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அங்கே அவர் மூன்று உரைகள் நிகழ்த்தினார். எல்லாமே பிரபஞ்சம், ப்ளாக் ஹோல்ஸ் போன்றவை பற்றித்தான்.

இந்தப் புத்தகம் வெளியான பிறகு ஸ்டீஃபன் ஹாகிங் என்பது எல்லோருக்கும் தெரிந்த பெயரானது. கம்பானியன் ஆஃப் ஹானர் (Companion of Honour) என்ற உயரிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. ராணி எலிசபெத் அதை வழங்கினார். காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கவுரவ முனைவர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அதை ட்யூக் ஆஃப் எடின்பர்க் (Duke of Edinburg) வழங்கினார்.

இந்த நிலையில் ஜேனும் ஹாகிங்கும் பிரிந்து வாழ விரும்பினர். விவாகரத்து மூலம் பிரிந்துவிடலாம் என்று தன் நோக்கத்தை விளக்கி ஜேனுக்கு ஒரு கடிதத்தை ஸ்டீஃபன் அனுப்பினார்.

திருமணம் முடிந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1995இன் வசந்தகாலத்தில் ஸ்டீஃபன் ஹாகிங்கும் ஜேன் வைல்டும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி எளிய முறையில் ஸ்டீஃபனும் எலைனும் திருமணம் செய்துகொண்டனர்.

இவரால் பேச முடியாது, எழுத முடியாது, சைகையால் கூற முடியாது. ஆனால், எதையும் இவர் முடியாது என்று கூறியது கிடையாது!

“இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமி தாங்காது! மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டும். மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. எனவே, என் ஆய்வில் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர்ந்து வாழ வழி செய்வேன்! தன்னுடைய மிகப்பெரிய சாதனை, தான் உயிரோடு இருப்பதுதான்’’ என்று ஹாகிங் கூறினார். இதைவிட சோகமான வாழ்வு வேறு இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்வில்தான் இப்படிப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்து  சரித்திரமானார்.

அவர் அண்டம் (இப்பிரபஞ்சம்) உள்ளளவும் வாழ்வார்! காரணம், இந்த அண்டத்தையே அறிந்து சொன்ன நாத்திக அறிஞர் அவர்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *