பிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா?

ஏப்ரல் 01-15

‘ஹிந்து’ மதம் என்ற அந்நியரால் பெயர் சூட்டப்பட்ட பார்ப்பன சனாதன வேத மதமதில் வைஷ்ணவக் கடவுள் மஹாவிஷ்ணு! சமஸ்கிருத பண்பாட்டுப் படைப்பினில் இறக்குமதிக் கடவுள் இது!

அவர் 10 அவதாரங்கள் எடுத்தாராம்; அதில் இராம அவதாரமும் ஒன்றாம்! இராவணனை அழிப்பதற்கும், அசுரக் கூட்டத்தை அழித்து, தேவர்களாகிய ஆரியர்களையும் அவர்களது தர்மமான வேத, சனாதன, வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றுவதற்கே இந்த அவதாரமாம் இதிகாச கதைப்படி.

‘அவதார்’ என்ற வடமொழி சமஸ்கிருதச் சொல்லுக்குப் பொருள். “கீழே இறங்குதல்’ என்பதாகும்! எனவே, அவதாரம் எடுத்து இறங்கியவர் எப்படி மற்றவர் வயிற்றில் கருத்தரித்துப் பிறந்திருக்க முடியும்?

ஒன்றுக்கொன்று முரண் அல்லவா? அப்படி பிறந்த கதைகூட அருவருப்பும் ஆபாசமும் கொண்டதாகவல்லவா இருக்கிறது!

அஸ்வமேத யாகம் _ புத்திரகாமேஷ்டியாகம் செய்து குதிரைகளோடு இணைந்தும், புரோகிதர்களுடன் கூடியும் பிறந்த பிள்ளைகளில் ஒருவன் இராமன் _ கடவுள் என்பது இராமாயண இதிகாசம்!

பிறகு இந்தக் கதையின் அருவருப்பு அம்சத்தை மாற்றி, யாகத்திலிருந்து பூதம் கிளம்பியது _ பாயாசம் தந்தது, அதைக் குடித்து கர்ப்பமாயினர் _ என்று கதை மாற்றப்பட்டது.

(ஆதாரம்: அமிர்தலிங்க அய்யர் என்ற சமஸ்கிருத பண்டித, கல்வியாளர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இராமாயண விமிரிசா’ (‘Ramayana- Vimarisa’) என்ற சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.)

பாயாசம் குடித்தால் வயிற்றுக்குள் செல்லும், கருப்பைக்குள் சென்று கருத்தரிக்க வாய்ப்பு உண்டா? பகுத்தறிவாளர்களின் இந்தக் கேள்விக்கு விடை ஏதும் கிடைக்காது.

‘எங்கள் நம்பிக்கை அது’ _ ஆணியடிக்கப்பட்ட ஒரே பதில்.

பிறக்காத இராமனுக்குப் பிறந்த நாளாம். இது வெறும் மூடநம்பிக்கை பரப்பும் பக்தி போதையூட்டிடும் பிரச்சார உத்தி அல்லாமல் வேறு என்ன?
இராமன் பிறந்தது ‘நவமி’யில்!

கிருஷ்ணனும் _ அவனும் அவதாரம் _ பிறந்தது ‘அஷ்டமி’யில்!

இந்த இரண்டு நேரங்களும், பக்தர்களுக்கும் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கும் கெட்ட நேரம். ‘நல்ல நேரம் அல்ல’ என்று, ‘சுப’ காரியங்களை அதில் பக்தர்களும் நம்பிக்கையாளர்களும் செய்வதில்லையே! கடவுள்கள் பிறந்த காலம் கெட்ட காலமா என்னே முரண்பாடு! கேலிக்கூத்து!

அப்படிப்பட்ட இராமன் உண்மையில் ‘புருஷ உத்தமனா?’ _ துளசிதாஸ் இராமாயணப்படி ஹிந்தி ‘ராமசரிதமனாஸ்’ கூறுகிறபடி?

அவதார இராமனிடம் ஒரு சராசரி மனிதனிடம் உள்ள குணங்களைவிட கீழான நடத்தைகளும், பண்புகளும்தானே _ கதைப்படி  காணப்படுகின்றன.
கற்பனை என்றாலும் இப்படியா இருப்பது?

1.    தன்னை விரும்பிய ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்து எறிந்தான் _ இதுதான் இராவண (அவன் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால்) பகைமைக்கு மூலகாரணமாக அமைந்தது!

2.    கடவுள் அவதாரத்திற்கு எப்படி, வந்தது ‘மாயமான்’ என்று தெரியாமல் போனது?

3.    போர் முடிந்த பிறகும் உடனடியாக _ 10 மாதத்திற்கும் மேல் இலங்கையில் இருந்த சீதையை ஏன் சந்தித்து அழைத்து வரவில்லை.

4.    நான் என் அபவாதத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளவே சண்டையிட்டேன். உன் பொருட்டு அல்ல. _ உன்னைப் பற்றி பலவித சந்தேகங்கள் _ பேச்சுக்கள் உள்ளன. எனவே, ‘அக்கினிப் பிரவேசம்’ செய்து உன்னைத் தூய்மையானவள் என்று காட்டிவிட்டு வா? என்று கூறுவது _ நெருப்பில் குளிக்கச் செய்வது நியாயமா?

இன்றைக்கு அப்படி எந்தக் கணவனாவது கேட்பானா? கேட்டாலும் மனைவிகள் உடன்படுவார்களா? விளைவு கணவனை அல்லவா நெருப்பில் முதலில் இறங்கி வா என்று கூறுவாள்? காவல்துறையும் சட்டமும் வேடிக்கை பார்க்குமா? எல்லாவற்றையும் விட இது மனிதப் பண்புதானா?

கடவுள் அவதார இராமன் சீதை கெட்டுப் போனவளா? இல்லையா என்பதைக் கண்டறிய முடியாதா? என்பது நியாயமான கேள்வி அல்லவா?
அதன்பிறகு நிறைமாத கர்ப்பிணி சீதையைக்  காட்டுக்கு அனுப்பும் செயல் இன்றைய சமுதாயம் மட்டுமல்ல, மனித நாகரிகம் தழைத்த ஒரு சமுதாயத்தில் ஏற்கத்தக்கதா?

மனிதர்கள் செய்தாலே ஏற்காத சட்டம், சமூகம் எப்படி கடவுளின் செயல் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வது?

வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து அம்பு எய்திக் கொன்றதை _ ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று இராமாயணம் எழுதிய சி.இராஜகோபாலாச்சாரியார்கூட நியாயப்படுத்த முன்வர முடியவில்லை. அநியாயம் _ கோழைச் செயல். ‘இராமன் வீரனல்ல’ என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல அவனது ராமராஜ்யத்தில் _ ஆளுமையில், “குற்றமே செய்யாத, தவம் செய்த சூத்திர சம்பூகன் தலையை வெட்டி வீழ்த்தியது, மனுதர்மப்படி சூத்திரர்கள் கடவுளை நேரே காண முயலக் கூடாது. பார்ப்பனர்கள் மூலம்தான் வணங்க வேண்டும் என்பதனால்தான் _ இறந்த பார்ப்பனச் சிறுவன்  இதற்குப் பிறகு உயிர்பெற்று எழுந்தான்’’ என்ற “உத்தரகாண்ட கதை’’ இராமஇராஜ்ஜியம் என்று மனுதர்மம் _ வர்ணாஸ்ரம ராஜ்யம் என்பதைத்தானே காட்டுகிறது!

எனவே, இராமனை வணங்கும் பக்தர்களே _ பக்தியைச் சற்று தள்ளி வைத்துவிட்டு புத்தியைக் கொண்டு யோசியுங்கள்! புரியும் இப்புரட்டின் தன்மை!

— கி.வீரமணி, ஆசிரியர்,
உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *