நாட்டில் எண்ணற்ற வார-மாத இதழ்கள் கடை வீதிகள் மற்றும் பேருந்து-ரயில் நிலையங்களில் கண்கவர் வண்ணங்களில் தோரணங்களாய் அணிவகுத்து நின்றாலும், அவற்றில் உண்மைச் செய்திகளை மட்டுமே தாங்கி வெளிவருகின்ற மாதமிருமுறை இதழான “உண்மை’’ இதழை தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு, இணை ஏதுமில்லை. இளைஞர்களுக்குப் பயன்படும் சமுதாயச் சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள் தாங்கி வெளிவரும் இதழ் ‘உண்மை’ மட்டுமே!
“அமைதிப் பூங்காவில் வம்பை விதைக்கலாமா?’’ ஆசிரியரின் தலையங்கம் இன்றையச் சூழலில் பா.ஜ.க. நடவடிக்கைகளுக்கு கடிவாளமிட உதவும்.
காட்டுமிராண்டித்தனங்கள் என்ற தலைப்பில் பெரியாரின் முழக்கம் பெரியாரை நேரில் பார்த்திராத இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நல் அறிவுரையாகி அவர்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
இந்து அறநிலையத் துறையிடமிருந்து ஆலயங்களை மீட்டு, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் கருத்து வெளியிடுவோருக்கு, மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை நல்லதொரு சாட்டையடி.
‘நீட்’ எதிர்ப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் உரை ‘நீட்’ எதிர்ப்புக் காரணங்களை விளக்கிடும் தெளிவான உரையாகும்.
எத்தர்களை முறியடிக்கும் எதிர் வினையில் தந்தை பெரியாரின் தமிழ்ப் பணிகள் பட்டியலிட்டுள்ளமை சிறப்பே. அய்யாவின் அடிச்சுவட்டில்… “நான் இல்லறத்தில் இருக்கும் துறவறவாதி’’ என ஆசிரியர் கூறுவது மிகச் சரியே. தன் மூச்சு அடங்கும் நேரத்திலும் சமுதாயச் சிந்தனையே சிந்தையில் நிற்கும் எனக் கூறியிருப்பது நமக்கும் உத்வேகமளிப்பதாகும். விந்து வங்கி பற்றிய பெரியார் செய்தி அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்குச் சிறந்த சான்று.
‘குடிஅரசு’ ஏட்டின் செய்திகளை மீள்பதிப்பு செய்வது இளைஞர்கள் அவ்வேடு ஆற்றிய சீரிய பணியை அறிய உதவுகிறது. சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவியின் சாதனைச் செய்தியை வெளியிட்டிருப்பது மற்ற மாணவர்களுக்கும் ஊக்கம் தருவதாக அமைகிறது.
மொத்தத்தில் ‘உண்மை’ இதழ் சமுதாய உயர்வுக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் அடக்கிய தலைப்புகளில் கட்டுரைகள், செய்திகளைத் தரும் ஒரு சிறந்த இதழ். இதன் வளர்ச்சிக்கு துணை நிற்போம்.
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45.