– ஆறு.கலைச்செல்வன்
சென்னையிலிருந்து தன் மகள் மணிமேகலையுடன் சொந்த கிராமமான கோலப்பட்டிக்கு ஒரு வார விடுமுறையில் வந்தான் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இராஜசேகர். வீட்டிற்குள் நுழைந்ததும் இராஜசேகரின் அப்பா கோபாலும் அம்மா மரகதமும் தங்கள் பெயர்த்தி மணிமேகலையைக் கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்தனர்.
“வாடா என் செல்லமே! தங்கமே! எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து!’’ எனக் கண் கலங்கியவாறு இருவரும் பெயர்த்தியைக் கொஞ்சினர்.
இராஜசேகரன் உடைமாற்றிக் கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான்.
அம்மா அவர் களுக்காக ஆசையாக செய்து வைத்திருந்த தின் பண்டங்களை பெயர்த்திக்கும் மகனுக்கும் கொடுத்தார்.
‘தம்பி’ என மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் அம்மா.
“நீ என்ன கேட்க வர்ரேன்னு எனக்குப் புரியுதும்மா’’ என்றான் இராஜசேகர்.
“அதாம்பா, உன் மனைவி…’’ பேச்சை நிறுத்திவிட்டு மகனை நோக்கினார் மரகதம்.
இராஜசேகர் மிகுந்த சோகத்துடன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கை கழுவினான்.
“இதை ஏன் இப்போது கேட்டுத் தொலைத்தோம், சாப்பிட்ட பின் பொறுமையாகக் கேட்டிருக்கலாமே’’ எனத் தனக்குத் தானே நொந்துகொண்டார் மரகதம்.
அப்பா கோபால் கவலை எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் பெயர்த்திக்கு தின்பண்டங்களை ஊட்டிவிடுவதிலேயும் விளையாடுவதிலேயேயுமே கவனத்தைச் செலுத்தினார்.
சற்று நேரம் கழித்து பெயர்த்தியிடம், “அம்மா, மணிமேகலை நீ இப்ப எட்டாவது படிக்கிறியாம். அப்புறமா பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு என்ன வேலைக்குப் போவே’’ என்று வாஞ்சையுடன் கேட்டார் கோபால்.
“மனசுக்குப் பிடிச்ச வேலை எதுவானாலும் போகவேண்டியதுதானே தாத்தா’’ என்று பட்டதும் படாததுமாக பதில் கூறினாள் மணிமேகலை.
“ஏங்க புள்ளய இப்படியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்தறீங்க. முதல்ல நல்லா படிக்கட்டும். மனசு நல்லா இருந்தாலே போதும்’’ என்று கணவனைச் சற்று கடிந்து கொண்டவாறே பேசினார் மரகதம். அவர் பேச்சில் சோகம் ததும்பியது.
மறுநாள் பொழுது புலர்ந்தது. காலை உணவிற்குப் பின் மணிமேகலையை எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல முடிவு செய்தான் இராஜசேகர்.
காரில் மணிமேகலையை உட்கார வைத்து கிராமத்தையெல்லாம் சுற்றிக் காட்டினான். கிராமத்தில் சிறுவர், சிறுமிகள் எல்லாம் தங்கள் பெற்றோர்களுடன் செல்வதைக் கவனித்தாள் மணிமேகலை. பசுவும் கன்றும் அங்கே துள்ளிக் குத்தோடின. குரங்குகள் தங்கள் குட்டிகளை வயிற்றில் பாதுகாப்பான நிலையில் சுமந்து சென்றன. இவைகளையெல்லாம் கூர்ந்து கவனித்தாள் மணிமேகலை. அவள் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தன. அவளது உணர்வுகளைப் புரிந்துகொண்ட இராஜசேகர் ஒரு நெடிய பெருமூச்சு விட்டவாறே காரை ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தினான்.
“ஏம்பா காரை நிறுத்திட்டீங்க?’’ எனக் கேட்டாள் மணிமேகலை.
“எங்காவது அழைச்சிகிட்டு போங்கப்பா’’
“சரிம்மா. நான் படிச்ச பல்கலைக்கழகத்திற்கு போவோம். இங்கிருந்து 20 கி.மீ. போகணும். போயிட்டு வரலாமா?’’
“சரிப்பா’’
காரை பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரை நோக்கிச் செலுத்தினான் இராஜசேகர்.
பல்கலைக்கழகத்தை அடைந்ததும் அங்குள்ள கட்டிடங்களையெல்லாம் மணிமேகலைக்குக் காட்டினான். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல் போன்ற துறைகளையெல்லாம் மணிமேகலை ஆர்வத்துடன் பார்த்தாள்.
விடுதிகள், அரங்கங்கள், பரிசோதனைக் கூடங்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கல்வியின் மீது தன் மகளுக்கிருந்த ஆர்வத்தை எண்ணி மகிழ்ந்தான் இராஜசேகர். “அப்பா, அப்பா! நீங்க படிச்ச கிளாஸ்ரூமைக் காட்டுங்க’’ எனக் கேட்டாள் மணிமேகலை.
‘வேதியியல் துறை’ என்ற பெயர்ப் பலகைத் தாங்கிய கட்டிடத்தின் முன் நின்று மணிமேகலையிடம் காட்டினான் இராஜசேகர்.
பிறகு நூல் நிலையம் அமைந்துள்ள இடத்திற்குச் சென்றான். அங்கு சென்ற இராஜசேகர் நூல்நிலையத்தையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தான். அவன் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது. மணிமேகலைக்குத் தெரியாமல் மறுபக்கம் திரும்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டான். ஆனால் மணிமேகலை அதைக் கவனித்துவிட்டாள்.
“ஏம்பா, என்னாச்சுப்பா?’’ என வினவினாள். அவளுக்கும் அழுகை வந்தது.
“ஒண்ணுமில்லைம்மா. பழைய நினைவுகள் என் உள்ளத்தில் வந்து அலைமோதுகின்றன. அம்மா மணிகேலை, இந்த இடத்தில்தான் உன் அம்மாவை முதன்முதலாகப் பார்த்தேன்’’ என்று மெதுவாக தன் நினைவுகளைப் பகிர்ந்தான் இராஜசேகர்.
தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் மணிமேகலை. அவள் விழிகளில் மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆவல் பளிச்சிட்டது.
“அப்புறம் என்னப்பா ஆச்சு?’’ என வினவினாள்.
“அவகிட்ட பேசினேன். நன்றாகப் பேசினாள். பிறகு பலமுறை சந்தித்தோம். எனக்கு உன் அம்மாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை வந்தது.’’
“அப்புறம்’’
“என் எண்ணத்தைச் சொன்னேன். அவளும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பினாள்.
படிப்பு முடிந்ததும் எங்கள் பெற்றோர்கள் மறுப்பேதும் சொல்லாமல் எங்களது திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஆனால்…!’’ என்று கூறிய இராஜசேகர் பேசுவதை சற்று நேரம் நிறுத்தினான். எவ்வளவு மறைக்க முயன்றாலும் அவன் முகத்தில் பரவிய சோக ரேகைகளை அவனால் மறைக்க முடியவில்லை.
“ஆனால் என்னப்பா?’’ ஆவல் பொங்கக் கேட்டாள் மகள்.
“திருமணத்திற்கு முன்பே உன் அம்மா கபட சாமியார் சச்சிதானந்த சாமியாரின் பக்தையாக இருந்திருக்கிறாள். திருமணத்திற்குப் பின் சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அங்க போக வேண்டுமென்றாள். அழைத்துச் சென்றேன். அதற்குப் பிறகு தனியாகவே பலமுறை அங்கு சென்றாள். இந்நிலையில் நீயும் பிறந்தாய். உனக்கு ஒரு வயது ஆவதற்குள் அந்தச் சாமியார் மடத்திற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டாள்’’ என்று கூறி பேச்சை நிறுத்தினான் இராஜசேகர்.
“அப்புறம் என்னாச்சுப்பா? திரும்பி வரவே இல்லையா?’’ ஆர்வம் மேலிட வினவினாள் மணிமேகலை.
“இல்லையம்மா’’
“நீங்க போய் கூப்பிட்டீங்களா அப்பா?’’
“நான் மட்டும் இல்லேம்மா. உன்னோட தாத்தா, பாட்டி எல்லோருமே போய் கூப்பிட்டோம். உன் முகத்தைக் காட்டி கெஞ்சினோம். ஆனாலும் உங்கம்மா ஒரே அடியா வரமுடியாதுன்னு சொல்லிட்டா. முடியை வெட்டிக்கிட்டு, கழுத்தெல்லாம் ருத்திராட்ச மாலையைப் போட்டுக்கிட்டு ஆளே மாறிப்போய் அலங்கோலமா இருந்தா உங்கம்மா.’’
“அம்மாவை விடச் சொல்லி அந்த சாமியார்கிட்ட கேட்டீங்களா அப்பா?’’
“அவன் எப்படிம்மா விடுவான்? உன் அம்மாபோல பல பெண்களை ஏமாற்றி பக்தைகளாக்கி அடைச்சி வைச்சிருக்கான். போலீசில் புகார் செய்தேன். எந்தப் பயனும் இல்லை.’’
“போலீஸ் வந்து விசாரிச்சாங்களா அப்பா?’’
“விசாரிச்சாங்கம்மா. ஆனா, உங்கம்மாவும் அங்கிருந்த மற்ற பெண்களும் நாங்க விருப்பப்பட்டுத்தான் அங்கே இருக்கோம்னு வாக்குமூலம் கொடுத்துட்டாங்க. என்ன செய்வது! அது மட்டும் இல்லேம்மா! எல்லா போலீசையும் மந்திரிகளையும் அவன் தன் கைக்குள் வைச்சிருக்கான். அவர்களில் பலரும் அவனது பக்தர்களாக இருக்கிறார்கள். எல்லாம் பணத்திற்காகத்தான். அந்தத் துணிச்சலில் அந்த சாமியார் பயமில்லாமல் எதுவும் செய்கிறான்.’’ என்று கூறிவிட்டு மணிமேகலையின் விழிகளை நோக்கினான் இராஜசேகர்.
கண்ணீர் நிரம்பிய அவள் விழிகளில் கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது..
“அப்பா, என்னை வளர்க்க நீங்க ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பீங்க’’ நா தழுதழுக்க தட்டுத்தடுமாறிப் பேசினாள் மணிமேகலை.
“உன்னோட தாத்தா, பாட்டியோட பங்குதாம்மா அதிகம். ரொம்பக் கஷ்டப்பட்டாங்க’’ என்று தன் அம்மா, அப்பாவை பெருமையுடன் தன் மகளுக்கு எடுத்துரைத்தான் இராஜசேகர்.
“அப்பா, இப்ப நான் சொல்றேன். இது என்னோட சபதமா எடுத்துக்கலாம். பெண்களையும் என்னைப் போன்ற மாணவிகளையும் வருங்காலத்தில் ஒன்று திரட்டி இப்படிப்பட்ட சாமியார்களின் அயோக்கியத்தனங்களை ஒழித்துக் கட்டுவேன். நீ என்ன வேலைக்குப் போகப் போறேன்னு தாத்தா கேட்டாங்க இல்லையா? என் படிப்பும் வேலையும் பெண்கள் விழிப்புணர்வு பற்றியதாகவே இருக்கும். அப்பா! நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச காலம் பொறுமையா இருங்க. அம்மாவை அந்தக் கபட வேடதாரி கூட்டத்திடமிருந்து மீட்டுக்கிட்டு வர்றேன். அம்மாவை மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லாப் பெண்களையும் மீட்பேன். இது உறுதி!’’
இவ்வாறு கூறிய மகளின் முகத்தில் தெரிந்த தன்னம்பிக்கையையும், உறுதியையும் பார்த்த இராஜசேகர் மிகவும் நெகிழ்ச்சியடைந்தான். நிச்சயமாக தன் மகள் அவளின் சபதத்தை நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கை ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.