பறை

பிப்ரவரி 1-15

முனைவர் மு.வளர்மதி

பறையின் தோற்றம்

மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து காய், கனி, கிழங்கு, விலங்கு, பறவை போன்றவைகளை வேட்டையாடி உணவாகக் கொண்டு வாழ்ந்த காலத்திலேயே ஒரு சில இயற்கையான மழை, இடி ஆகியவற்றின் ஓசை, இலைகளின் சலசலப்பு, பறவைகளின் குரல், கடலலைகளின் பேரொலி, மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியாகச் சென்ற காற்றால் எழுந்த ஓசை ஆகிய அனைத்தையும் இசையாக உணர்ந்தான்.
“ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடி னருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் றுதைகுர லாகக்
கணக்கலை யிகுக்குங் கடுங்குரற் றூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
வின்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவள ரடுக்கத் தியலியா டுமயில்”
(அகம்.82)

என்ற அகநானூற்றுப் பாடல்வரிகள் இயற்கையொலிகள் இசையாயின என்பதற்குச் சான்றாகின்றன.

“அசைகின்ற அமை என்னும் மூங்கிலில் தானே அமைந்த துளையில் கோடைக்காற்று நுழைந்து செல்லும் ஓசை குழலோசையாக, ஒலியினிய அருவியின் குளிர்ந்த நீரினது இனிய இசை தொகுதியமைந்த முழவின் செறிந்த குரலாக, கூட்டமான கலைமான்கள் தாழவிடுகிற ஓசை கடிய குரலுடைய பெருவங்கியம் என்னும் வாத்திய ஓசையாக, மலைப்பூஞ்சாரலில் உள்ள வண்டுகளின் ஒலி, யாழ் ஓசையாக, இத்தகைய இனிய பலவாகிய ஓசைகளைக் கேட்டுக் களிப்பு மிகுந்த மந்திகளின் கூட்டம் மருண்டு பார்க்க, மூங்கில் வளர்ந்த மலைப் பாறையில் அசைந்து அசைந்து ஆடும் மயில் ஆடுகளத்தில் நுழைந்து ஆடுமகள் போலத் தோன்றும்’’ எனத் தலைவி தோழிக்குத் தன் உள்ளத்துக் காதலையும் களவொழுக்கத்தையும் வெளிப்படுத்திப் பேசும்பொழுது தலைவனுடைய நாட்டின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ள இப்பாடல் இயற்கையில் எழுகின்ற ஓசைகள் இசையாக உணரப்பட்டது என்பதை அறிவிக்கின்றது.

சத்தமிட்ட தோல்

மனிதன் விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை உணவாக்கிக் கொண்ட பிறகு அவற்றின் தோலைக் காய வைத்து இடுப்பில் ஆடையாக அணிந்துகொள்ளத் தொடங்கினான். மரக்கிளையில் விலங்குகளின் தோலை இறுக்கமாகக் கட்டிவைத்துச் சூரிய வெப்பத்தில் காயவைத்தான். அவ்வாறு தோல் மரக்கிளையில் இறுக்கமாகக் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காற்றில் மரக்கிளை அசையும்போது அது காய்ந்த தோலின் மீது உராய்ந்து ஒலி எழுப்பியதைக் கவனித்தான். உலர்ந்த தோலின் மீது சிறு தடி உராய்ந்தால் ஒலி எழுப்பும் என்ற உண்மையை அறிந்து கொண்டான். அறைந்து ஒலித்தால் உரத்த ஓசை கேட்கும் என்பதை அறிந்து வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான்.

குடத்தின் வாய்ப்பகுதியில் தோலை இறுக்கமாகக் கட்டி குச்சிகளால் அடித்து ஒலி எழுப்பியது பறையின் தோற்றத்திற்கு முதல் முயற்சியாக அமைந்தது.

விலங்குகளின் தோலைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்திக் குடத்தின் வாயில் கட்டி இரு குச்சிகளால் அறைந்து ஒலி எழுப்பியது பறையின் தோற்றத்திற்கு இரண்டாவது முயற்சியாக அமைந்தது. “மாட்டுத் தோல்களைப் பதப்படுத்தி மென்மையாகத் தேய்த்து அதனைக் குடத்தின் வாயில் கட்டி அடித்தனர். தோலின் மென்மையினால் அதில் அடித்து முடித்த பின்னரும் அதன் அதிர்வு சில நொடிகள் நீடிக்கக் கண்டனர். இதன் பின்னர் பெரிய பெரிய உருளைகளில் இணைத்துப் பேரதிர்வுடன் கூடிய ஒலிகளை எழச் செய்தனர். இது ‘பறை’ என வழங்கப்பட்டது.

இதற்கு அடுத்த நிலையில் உடைந்த பானை வாய்ப்பகுதியில் தோலைக் கட்டி இரு குச்சிகளாலும், தோல்வாரினாலும் அடித்து ஒலி எழச் செய்தனர். முழுமையான பானை அல்லது குடத்தில் அடித்தபொழுதும், உடைந்த பானை, உருளையில் தோலைக் கட்டி அடித்தபொழுதும் எழுந்த ஓசைகளின் வேறுபாடுகளை மனிதன் உணர்ந்தான். ‘உடைந்த குடத்தின் வாயின் மேல் ஆட்டுச் சவ்வுத்தோலை ஒட்டவைத்து இன்றும் மலைவாழுநரின் சிறுவர்கள் பறை செய்து முழக்குவதைக் காணலாம். இது ‘பறையின் தோற்றம்’ எனத் தமிழிசைக் கலைக் களஞ்சியம் (தொ.3. ப.312) குறிப்பிடுகிறது. சிற்றூர்ப் புறங்களில் உள்ள சிறுவர்கள் உடைந்துபோன மண் குடத்தின் அல்லது பானைகளின் வாய்ப் பகுதியினை (கலவடை) மட்டும் எடுத்துக் கள்ளிப்பாலினை அதன் மேல்தடவிப் பசைபோல் சிறிது நேரம் பதப்படுத்தி அதன் மீது தாள்களை ஒட்டி, வெயிலில் காய்ச்சி விளையாட்டாக முழக்குவதைத் தமிழகத்தின் பல பகுதிகளில் காணலாம். சான்றாக பெரம்பலூர் மாவட்டம் செயங்கொண்டம் பகுதிகளில் இதனை இன்றும் காண முடிகிறது. உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பானை, பிறகு பறையாக மாறியுள்ளது என்பதை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

செய்தி அனுப்பல்

மக்கள் ஒலியின் வேகம், ஒலியுணர்வு, ஒலியின் ஈர்ப்பு ஆகியவற்றைப் ‘பறை’ எனும் கருவியின் மூலம் அறியத் தொடங்கியுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக சர்.சி.வி.இராமன் ஒலி அதிர்வைப் பற்றிச் சோதனை செய்தபொழுது பறைக் கருவியில் சத்தமிடும் தன்மை வெகுவாகக் குறைந்து, அதிலிருந்து சுருதியுடன் சேரும் சீரான ஒலிகள் பிறக்கின்றன என்பதைக் கண்டறிந்தார் என்ற கருத்துமுண்டு. ‘தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன், மிக விரைந்து ஓடும் மனிதனைவிட _ குதிரையைவிட _ ஒலி இன்னும் மிக விரைவாகச் செல்லும் தன்மையது என்பதை அறிந்திருந்தான். பறை அல்லது ‘டாம்_டாம்’ இவற்றில் அடிக்கும் குறியீடுகள் (சிஷீபீமீs) மூலம் செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினர். ஒவ்வொரு குறியீட்டைக் குறிக்கவும் ஒவ்வொரு வகையாக அடித்தனர். வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில் ஒருவன் இவ்வாறு பறையறைந்து செய்தி அறிவிப்பான். அடுத்த மலையில் உள்ளவன் அதைக் கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதேபோல் செய்தியைக், குறியீடு மூலம் அனுப்புவான். இவ்வாறு தொடர்ந்து அனுப்பப்படும் செய்தி பல நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மக்களைச் சென்றடைந்தது. பறையின் தோற்றம் மனிதனுக்கு இயற்கை வழங்கிய கொடை. ஒரு மனிதன் தொலைவிலுள்ள மனிதனை அழைக்க, குரல்கொடுக்க முதன்முதலில் வன்மை ஒலியெழுப்பும் கருவியாகப் பறை தோன்றியுள்ளது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் ‘சொல்லுதல்’, ‘அறிவித்தல்’, ‘அறிவிப்பு செய்தல்’, ‘சாற்றுதல்’ எனும் பல பொருள்கள். ‘பறை’ என்ற பெயருக்கு உண்டு. இசையில் தாளத்தின் முக்கியப் பங்கை உணர்ந்தபொழுது ‘பறை’ தாளக் கட்டுடன் இசைக்கப்பட்டது.
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *