காமராஜர் பதவி விலகல் பற்றி
அய்யாவின் தொலைநோக்கு!
காமராசர் அவர்கள், ‘கே_பிளான்’ என்று ஒரு திட்டத்தைக் கூறினார். அதன்படி வயதால் முதியவர்கள் பதவி விலகி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாய் நானே பதவி விலகுகிறேன் என்று சொல்லி பதவி விலக முடிவெடுத்தார்.
அப்போது தந்தை பெரியார், “நீங்கள் பதவியை விட்டுச் சென்றீர்களேயானால், அது உங்களுக்குத் தற்கொலை முயற்சி. இந்த நாட்டிற்கும் கேடு!’’ என்று அவசரத் தந்தி கொடுத்தார் பெரியார்.
அன்றைக்குக் காமராசர் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு அதே காமராசர் அவர்கள் திடலுக்கு வந்து, தந்தை பெரியார் அவர்களைப் பார்த்தார். அப்போது பெரியாரிடம் அவர், “நீங்கள் சொன்னீர்கள். நாங்கள் கேட்கவில்லை அதுதான் இப்பொழுது நாங்கள் அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று, ஒரு தந்தையிடம் மகன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் போல, காமராசர் அவர்கள் சொன்னார்கள்!
விடுதலை நாள் துக்க நாள்:
இந்திய விடுதலை நாளை, “துக்க நாள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் 1947ஆம் ஆண்டு சொன்னார்களே, நடைமுறையில் எல்லோரும் துக்க நாளாகத்தானே கொண்டாடுகிறார்கள். யாருக்கு நிம்மதி?
மிகப்பெரிய அளவிற்கு நம்முடைய நாட்டில் காட்சிகள் மாறியிருக்கின்றன ஆனால், மக்களின் அவலங்கள் தீரவில்லை நம்முடைய குறைகள் நீங்கவில்லை. நம்முடைய இழிவு போகவில்லை. இவையெல்லாவற்றையும் பார்க்கும்பொழுது தந்தை பெரியார் அவர்களுடைய அந்தத் தொலைநோக்கு என்பதை எண்ணி எண்ணி வியத்தற்குரியது.
ஆணும் பெண்ணும் சம உரிமைபெற வேண்டும்:
1929 ஆம் ஆண்டு; நம்மில் பலர் பிறக்காத காலம்; அப்படிப்பட்ட அந்த காலகட்டத்தில் தான் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பெண்கள் சொத்துரிமை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பிறகுதான், 1989ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் சொத்துரிமை எல்லாம் வந்தது. அந்தச் சொத்துரிமைகூட முழுமையாக வரவில்லை. அண்மையில், கலைஞர் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் பங்கேற்ற அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கான சொத்துரிமை நிறைவேற்றப்பட்டது. ஆண்களுக்கு என்ன சொத்துரிமையோ, அதுவே பெண்களுக்கும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தோழர் ஆர்.கே.சண்முகம் தலைமையில் 1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம்:-
பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்பொழுது எடுப்பது போதாது, அவர்களைப் போலிஸ் இலாகாவிலும், இராணுவத்திலும் சேர்க்க வேண்டும்.
பெண்கள் விடுதலைக்கும், அறிவுப் பயிற்சிக்கும் பிள்ளைப் பேறு தடையாயிருப்பதாலும், எதிர்காலத்தில் நாகரீக வளர்ச்சிக்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகும் குழந்தைகளைப் போதிய போஷாக்குடனும், கல்வியுடனும் வளர்க்க வேண்டியது அவசியமானதாலும் பிள்ளைப் பேற்றை அவரவர்கள் தங்கள் தேகநிலை, பொருள் நிலை, அறிவு நிலைமைகளுக்குத் தக்கவாறு அடக்கியாள வேண்டுமென்று இம்மாநாடு கருதுவதோடு, கர்ப்ப ஆட்சிக்கு வேண்டிய சாதனங்களையும் முறைகளையும் பற்றிய அறிவை போதிக்கத்தக்க ஸ்தாபனங்களை அரசாங்கத்தாரும் பொதுநல சேவைக்காரரும் ஏற்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
அதில் ஒரு கேள்வி, உடை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்களேன்?
பெண்ணுக்கும், ஆணுக்கும் உடையில் வித்தியாசம் இருக்கக்கூடாது என்று அய்யா சொன்னார்.இப்பொழுது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பாருங்கள். அய்யா சொன்னதுபோல் ஆண்களைப் போலவே பெண்கள் உடை அணிகிறார்கள்!
பெண்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால் 500 ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார் ஒரு திருமண விழாவில். இன்றைக்குப் பெண்கள் ஆண்களைப் போல முடிவெட்டிக் கொள்கிறார்கள் அவர்களே விரும்பி. இது தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனையின் சிறப்பைக் காட்டுகிறது!
இலாபத்தில் தொழிலாளருக்கு பங்கு தந்த செயல் வீரர்
தொழிலாளிகள் பங்காளிகளாக மாறவேண்டும்; முதலாளி – தொழிலாளி என்கிற பேதம் இருக்கக்கூடாது. பங்காளி ஆக்கவேண்டும், என்பது அவரது முக்கிய கோட்பாடுகளில் ஒன்று. மிக முக்கியம். அதனை அவர்களே செய்து காட்டினார். அவர் வியாபாரத்தில் ஈரோட்டில் ஈடுபட்டிருந்தபொழுது, தன்னுடைய தொழிலிலேயே தந்தை பெரியார் அவர்கள் செய்திருக்கிறார்.
தடையின்றிச் சிந்தித்து நடுநிலையில் முடிவு எடுக்கும் பெரியாரின் தன்மை, காலப்போக்கில் அவரைச் சமனியச் சமுதாயத்தையும் பொதுவுடைமைப் பொருளாதாரத்தையும் நிறுவுவதற்கான வழிவகையைக் காணத் தூண்டியது. இதற்கான கருவை 1900ஆம் ஆண்டுவாக்கில் காண்கிறோம். தன் குடும்பத்தின் வணிக இலாபத்தை 49 பகுதிகளாக்கி, ஒரு பகுதியைச் சாமிக்கு எனப் பொதுவில் வைத்து, மீதி 48 பகுதிகளை தொழிலை தொடங்கித் தொடர்வோர், முதலீட்டாளர், உழைக்கும் கூட்டாளிகள் என்போரிடையே சம அளவில் மூன்றாகப் பங்கிட்டார். பாட்டாளிகளைத் தொழிலில் கூட்டாளிகளாக்க வேண்டும் என்பதை, பிற்காலத்தில் அவர் உருவாக்கிய தொழிற்சங்கத்தின் அடிப்படைக் கொள்கை யாக்கினார். இன்றைக்கு தொழிற்சங்கவாதிகள் இதை ஏற்றுப் போராடுவதை நாம் காண்கிறோம்.
பயன்பாட்டுப் பொருட்கள்:
“அநுபோகப் பொருள்களும் வெகுதூரம் மாற்றமடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.
மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் – பெருகும். விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன்படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையும்.இவ்வளவு மாறுதல்களோடு இனிவருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள அரசு, உடைமை, நீதி, நிருவாகம், கல்வி முதலியன பல துறைகளிலும் இப்போது எவையெவைப் பாதுகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டு வருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துகள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.
தந்தை பெரியார் அவர்கள் கூறியதுபோலவே இன்று எல்லாம் சிறு வடிவில், எடை குறைந்த பொருளாய்க் கிடைக்கின்றன. சிந்தனை மாற்றமும் ஏற்பட்டு வருகின்றன.
(தொடரும்)