பொங்கல் ஒரு பண்பாட்டு ஆயுதம்!

ஜனவரி 16-31

– மேனா.உலகநாதன், இதழாளர்

“பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்த விதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும்.’’

பொங்கல் திருநாள் குறித்து 13.10.1970ஆம் அன்று விடுதலையில் பெரியார் எழுதியுள்ள கட்டுரையின் தொடக்கம் இது.

பெரியாரின் இந்தக் கருத்து எத்தனை சத்தியமானது என்பதை என் சொந்த வாழ்விலேயே அனுபவித்தறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டி இருந்தது.

ஆம் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை, அண்ணா என்று நான் இப்போதும் அழைக்கும் அயூப்கான் என்ற எங்களது குடும்ப நண்பருடன் சேர்ந்து கொண்டாடிய பொங்கல் நினைவுகள் இப்போதும் எனக்குள் மறையாத சித்திரமாக ஆழப் பதிந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேப்பங்குளம் என்ற எனது கிராமத்திற்கு, பொங்கல் திருநாளன்று ஆண்டுதோறும் குடும்பத்துடன் வந்து பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அண்ணன் அயூப்கான்.   எல்லாக் கிராமங்களிலும் நடப்பதைப் போல எங்கள் கிராமத்திலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவோம். இப்போதும் நடத்தி வருகிறோம். அயூப்கான் அண்ணன் வரும் போதெல்லாம், அவரது குழந்தைகளையும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வார். அவர்கள் பரிசுகளும் வாங்கி மகிழ்ந்ததுண்டு. இஸ்லாமியர் ஒருவர் சாதி இந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் நடைபெறும் திருநாள் ஒன்றில் பங்கெடுக்க முடியும் என்றால், அது பொங்கலைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. தமிழர்களின் திருநாளாக தொன்றுதொட்டு வந்த பொங்கல் திருநாள்,  பின்னாளில் உழைக்கும் மக்களின் கொண்டாட்டமாகவே நமது சமூகத்தில் நிலைபெற்றுவிட்டது. வழக்கம்போல, இந்தப் பொங்கலுக்கும் இந்திரன், கிருஷ்ணன் என்று பல கதைகளைச் சொல்லி அதனைச் சங்கராந்தியாக மாற்ற, புராணிகர்கள் இன்றுவரை பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனைத்தான் பொங்கல் திருநாள் குறித்த தனது கட்டுரையிலும் பெரியார் விவரித்திருக்கிறார்.

இயற்கை வழிபாட்டையும், தைத் திங்கள் சிறப்பையும் பேசாத சங்க இலக்கியங்களே இல்லை என்பதுதான் உண்மை.

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு

மேருவலந் திரிதலான்”

என்ற மங்கல வாழ்த்துடன் சிலப்பதி காரத்தைத் தொடங்கும் இளங்கோவடிகள், அத்துடன் திங்கள், மழை, கடல் என இயற்கையின் விரிவைத்தான் போற்றுகிறாரே தவிர, எந்தக் கடவுளையும் வணங்கவில்லை, தமிழர்கள் இயற்கையின் வழிப்பட்டும், அதனையே வழிபட்டும் வாழ்ந்த மூத்த குடிகளாகத்தான் தங்களது நாகரிகத்தை வளர்த்து வந்திருக்கின்றனர் என்பதற்கு வேறு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டுமா என்ன அத்தகைய ஞாயிறு (சூரியன்) போற்றும் திருநாளாகத் தானே பொங்கலைத் தமிழர்கள் இன்றுவரை கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமன்றி,  “தைஇத் திங்கள் தண்கயம் படியும்’’ என்று நற்றிணையும்,

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’’ என்று குறுந்தொகையும்,

“தைஇத் திங்கள் தண்கயம் போல்’’ என்று புறநானூறும்,

“தைஇத் திங்கள் தண்கயம்போல’’ என்று ஐங்குறுநூறும்,

“தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ’’ என்று கலித்தொகையும்,

தைத் திங்களின் பெருமிதங்களைப் பாடிக் களித்திருப்பதையும் தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவற்றை யெல்லாம்விட முற்றிலும், தலைவன், தலைவியின் அக வாழ்வைப் பேசும் அகநானூறிலும்கூட, தைத் திங்கள் பெருமிதமும், பொங்கல் வழிபாட்டுப் பழக்கமும் குறித்த பாடல்கள் விரவிக் கிடப்பதைக் காணமுடிகிறது.

“பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,

எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,

துவலை தூவல் கழிய, அகல் வயல்

நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்

கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”

எனத் தலைவியின் பிரிவாற்றமையைக் கூறும் இந்தப் பாடல் கரும்புப் பூக்களையும், கோடையை வரவேற்கும் பொங்கலையும் குறிப்பிட்டுக் காதல் உணர்வு பீறிடப் பிரிவாற்றாமையைப் பேசுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில் பொங்கல் திருநாள் எப்படிப் பார்க்கப்படுகிறது. அது சமூகத்தில் என்ன மாதிரியான நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் இப்போது நம் முன்னே எழுந்து நிற்கும் கவனத்திற்குரிய பிரச்சனை.

பொங்கல் என்ற சொல்லே எத்தகைய புத்துணர்வைத் தரக்கூடிய சொல்லாக இருக்கிறது! தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்த பூர்ணிமா என இந்தியாவில் கொண்டாடப்படும் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதன் பின்னால் ஒரு மதமும், அதன் அடிப்படையிலான காரணங்களும் கூறப்படுகின்றன. தமிழர்களின் பொங்கல் திருநாளுக்கு மட்டும்தான் இத்தகைய விளக்கங்கள் எதுவும் இல்லை. பண்டைத் தமிழர்களுக்கு மதம் இல்லை, மடமை இல்லை, மூடத்தனம் இல்லை என்பதன் பண்பாட்டுச் சான்றாக எஞ்சி நிற்பது இந்தப் பொங்கல் திருநாள் மட்டும்தான். அதனால்தான், இந்தப் பொங்கல் திருநாள் என்ற தமிழரின் பண்பாட்டுத் திருநாளை வரலாற்றுத் திரிபுகளைக் கூறியேனும் அழித்தொழித்துவிட அனைத்து இந்துத்துவ சக்திகள் துடியாய்த் துடிக்கின்றன. இந்துவல்லாத பிற மதத்தினருக்கு பொங்கலின் மேல் எந்தக் கோபமும் பொங்கி வராததற்கு என்ன காரணம்? அது அவர்களை எந்த வகையிலும் பேதப் படுத்தவில்லை. உழைப்பையும், அதனால் கிடைத்த பலனையும் சேர்ந்துக் கொண்டாடி மகிழ்வோம் வா என இருகரம் நீட்டி அழைக்கும் அன்புத் திருநாள் மீது அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும்?

தமிழர்களிடம் எஞ்சி இருக்கும் ஒரே பண்பாட்டு ஆயுதம் பொங்கல் திருநாள்தான். அதனால்தான் எதையுமே பெரிதாகக் கொண்டாட விரும்பாத தந்தை பெரியார் பொங்கலைக் கொண்டாட விரும்பினார். இதோ, பொங்கலைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதியில் அதற்கான காரணத்தை அவரே கூறுகிறார்

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரமக் காரியங்களில் இருந்துவிடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவருந்துவதையும், நல்லுடை உடுத்து வதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும், நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச் சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

பெரியாரின் இந்த வேண்டுகோளை விட பொங்கலைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேறு காரணங்களும், விளக்கங்களும் தேவையா என்ன?  ஒரே மதம், ஒரே நாடு என்ற மூர்க்கக் கனவைத் தகர்த்தெறியும் வலிமை, பொங்கல் என்ற பண்டைத் தமிழனின் பண்பாட்டு ஆயுதத்திற்கு மட்டுமே உண்டு. எனவே, மதத்திற்கு எதிராக மனிதத்தை ஏந்தும் புதிய உலகைப் படைக்க பொங்கலைக் கொண்டாடுவோம்! 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *