குர்து மக்களின் போராட்டம்
மா. அன்பழகன், சிங்கப்பூர்
ஒரு மக்களின் மொழியையும், பண்பாட்டையும் அழிப்பதும் படுகொலைதான். அது மனிதப் படுகொலைக்கு இணையானதே.
தமிழ் பேசும் மொழியினருக்கென்று ஒரு நாடு இல்லாவிட்டாலும், இந்திய யூனியனுக்கு உட்பட்ட ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் அதிகாரத்துடன் தமிழ் அரசோச்சுகிறது.
சிறீலங்காவின் வடக்குப் பகுதியில் தமிழ் பேசும் மொழியினரின் தனிநாடு கேட்கும் போராட்டம் பல காரணங்களால் அதிகார வர்க்கத்தால் அநேகமாக நசுக்கப்பட்டுவிட்டது.
அதற்கான விலை பல லட்சம் உயிர்கள். நாடு கிடைத்திருந்தால், நேபாளம் தன்னை உலகின் ஒரே இந்துநாடு என்று எப்படிப் பறைசாற்றிக் கொண்டதோ, அதேபோல் நாமும் உலகின் ஒரே தமிழ்நாடு என பெருமை கொண்டாட வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். நம்மைப்போலவே குர்து இன மக்களும் போராடி வருகின்றனர். கி.மு. காலத்திலிருந்து பேசிவரும் மொழி குர்துமொழி. இம்மொழி பேசும் இனத்தவர் வாழும் பிரதேசங்கள், சிரியா, ஈராக் நாடுகளின் வடபகுதி, ஈரான் அர்மேனியா நாடுகளின் மேற்குப் பகுதி, துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதி – ஆக ஒரு நீண்டு வளைந்த கத்தரிக்காய் போன்ற நிலப்பரப்புகளில், மலைவாழ் மக்களாக வாழத் தலைப்பட்டனர். இப்பிரதேசத்தை குர்திஸ்தான் என அழைத்துக் கொண்டனர். 7,400 சதுர மைல் பரப்பளவில் 5 நாடுகளில் ஒரே தொடர்ச்சியாக குவிந்து கிடந்தனர். நாட்டின் எல்லைக் கோடுகள், இவர்களுக்குக் கோடுகளாகத் தென்படவில்லை. ஆய்வாளர்கள் அர்மேனியாவில் 1%, சிரியாவில் 2%, ஈரானில் 9%, ஈராக்கில் 20%, துருக்கியில் 20% குர்திஷின் மக்கள்தொகை இருப்பதாகச் சொல்கிறார்கள். மொத்த குர்திஷின் தொகை 30 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில்தான் தங்களை ஒரு தேசிய இனமாக எண்ணலாயினர். ஈரானில் உள்ள பஃலவி மொழியும் குர்துவும் ஒரே சாயல் உடையது என்பர். ஈரானின் பாரசீகக் கிளையான ஆரியர்களின் ஓர் இடைப்பட்ட இனம்தான் குர்தியர் என்றும் சொல்வர். மொழியைக் கொண்டே ஓரினத்தை அளவிடுகிறார்கள். இவ்வினத்தில் யஷ்டி எனும் 50,000 மக்களைக் கொண்ட இனம் மயிலைத் தெய்வமாக வணங்குபவர்கள் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவர்களுடைய திருமண முறையில் பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை வீட்டாரைப் பிடித்திருந்தால்தான், பெண் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய்க் கொடுப்பாள். மாப்பிள்ளை தண்ணீர் குடிக்கும் வரை அவள் காத்திருப்பாள். ஏனென்றால், மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருந்தால்தான் நீர் பருகுவார். திருமணத்தில் புத்தாடை அணிகலன்கள், மருதாணி, குதிரைமீது ஊர்வலம் உண்டு. தந்தையின் சகோதரர் பிள்ளையைத் திருமணம் செய்வர். முதல் மோதிரம் உறுதிக்காகவும், இரண்டாம் மோதிரம் உரிமைக்காகவும் அணிவிக்கும் பழக்கம் உண்டாம். 17_18 வயதுகளில் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கிவிடுவார்கள்.
மார்ச் 21ஆம் நாள் அவர்களுடைய புத்தாண்டு தினம். அதை நவ்ரஸ் என்று அழைப்பார்கள். புத்தாடை, சிறப்பான பலகாரங்கள், வாணவேடிக்கை, பாடல் நடனம் என்று இருக்கும். மண்பானைக் கலயங்களை உடைத்தால் நல்லது நடக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. இறந்துபோன மூதாதையர் கல்லறைகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். 13ஆவது நாளில் உறவினர்கள் இல்லத்திற்குச் சென்று கலந்துரையாடுவார்கள். அதன் மூலம் கசப்புணர்வுகளைத் தீர்த்துக் கொள்வார்களாம். பிள்ளை 10 வயதை அடைந்தவுடன் ஒரு விழா சிறப்பாக எடுத்துக் கொண்டாடுவார்கள்.
வீடு களிமண், செங்கல் சுவர்களாலானது. மேற்கூரைக்கு மரத்தைப் பயன்படுத்துவார்கள். பனிக்காலத்தில் வீட்டுக்குள் உள்ள நிலத்தடி அறையிலும், கோடைக்காலத்தில் வீட்டின் மேற்கூரையிலும் படுத்துக்கொள்வார்கள். ஏழைகள் டெண்ட் கொட்டகையில் வசிப்பார்கள். குர்திஷ் செய்யும் சீஸ் சுவையானது; கார்பட் அழகானது. லாஜ் எனும் இதிகாசப் பாடல்கள் அகம், புறம் இரண்டையும் கொண்டது, எல்லோரும் பாடக்கூடிய இனிமையானது.
குர்து மொழியிலும் பல பிரிவுகள் இருந்தன. குறிப்பாக கெர்மான்ஜி, ஃஜாஜா ஆகிய இரு மொழிகளைச் சொல்லலாம். இதில் கெர்மான்ஜியே இலக்கண இலக்கியங்களைக் கொண்ட வளமான மொழி; பெரும்பாலோர் பேசும் மொழியும் அதுவே. குர்து மொழி பாரசீக மொழியை வேராகவும், அரேபிய மொழியின் வடிவத்தையும் கொண்டது.
நிருவாகம், தொழில்நுட்பம், மற்றும் விஞ்ஞானச் சொற்களை அரேபிய மொழியிலி ருந்து பெற்றுக் கொள்கின்றனர். குர்து மொழியைக் குரானியர்களும், குரானிய மொழியை லோரிகளும், லோரியை பாரசீகர் களும் புரிந்து கொள்கின்றனர். குர்துவில் டர்கிஷ் சொற்களும் கலந்திருக்கின்றன.
மாரிக் காலத்தில் மலையடிவாரங்களில் உள்ள சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் கோடைக்காலத்தில் மலையுச்சியிலும், உச்சியின் சமவெளிகளிலும் தங்கள் ஆடு மாடுகளை மேய்த்து உயிர் வாழ்வர். பனிக்காலத்தில் பனியுருகிய பின்பே இலைதழைகள் செடிகளே கண்ணுக்குப் புலப்படும். மற்றும் அடிக்கடி நிகழும் மலைச்சரிவுகளாலும், குர்து இனத்தின் உயிர்கள் சேதமுறுகின்றன. அவர்களின் விவசாயத்தில் ஓக், பாதாம், பிஸ்தா, ஹேசல் போன்ற மரங்களும், தேயிலை, திராட்சை, ஆலிவ், வெள்ளரி, கோதுமை, மற்றும் காய்கனி தரும் செடிகொடிகளும் அடங்கும். அவர்களு டைய உணவு வேபர் பிரட், தானியக் கஞ்சி, சீஸ், உடைத்த கோதுமை, வேகவைத்த தானியங்கள், மாமிசம், தேயிலை-_பழரசம் போன்றவையாகும்.
அக்காலத்திய அடிக்கடி படையெடுப்பின் போது, ஏற்பட்ட இனக்கலப்பில் உருவானது குர்திய இனம் என்றும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்தந்த இனங்களை மூலமாக வைத்தே குர்தியர்கள் உடல்வாகும் வீரமும் உடையவர் களாக விளங்கினார்கள். நாடோடி வாழ்க்கை போல, மலையடிவாரங் களில் ஆடு மாடுகள் மேய்ப்பது, விவசாயம் செய்வது, சீஸ் செய்வது, கார்பட் நெய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். குட்டையான குதிரைகளில் நெடிய உருவமான இவர்கள் மலையுச்சியில் மறைந்திருந்தும், பள்ளத்தாக்கு களில் ஒளிந்திருந்தும், சிறிய வாள்களைக் கொண்டும், துப்பாக்கிகளைக் கொண்டும், போக்குக் காட்டி எதிரிகளைத் தாக்கும் கலையைக் கொண்டவர்கள். காலத்திற்கேற்ப வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வாழ்க்கையில் முன்னேறியவர்களும் தொழில் செய்து பொருளீட்டியவர்களும் தற்போது பரவலாகக் காணப்படுகின்றனர்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் முன்னேறியவர்கள் தற்போது குரல் கொடுக்கத் தொடங்கினாலும், அந்தந்த ஆளும் வர்க்கமான சன்னி, ஷியா முஸ்லிம்கள், ஆட்சியிலும், சம அந்தஸ்தில் இடம் கொடுப்பதாக இல்லை. மாறாக அவ்வினத்தை அழிப்பதிலும், ஒடுக்குவதிலுமே குறியாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், அந்த அய்ந்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்கின்றன.
சிறுபான்மையின ராகிய -குர்துகளைத் தங்களின் அடிமைகளா கவும், பணிபுரியும் ஏவலாளாகவுமே நினைக்கிறார்கள். இந்நாட்டை ஆளப்பிறந்தவர் களாகவும் அதற்கான உரிமை படைத்த இனங்கள் தாங்கள்தான் என்றும் அந்த மேல்மட்ட இஸ்லாமியர்கள் எண்ணுகிறார்கள். ஆளும் கட்சிகள் மாறினாலும் ஆளவந்துவிட்டால் பூஷ்வா குணம் படைத்தவர்களாக மாறிவிடுகிறார்கள்.
துருக்கியில் நீங்கள் துருக்கியர்களே! இங்கு குர்திஷ்கள் என்று யாரும் இல்லை என அடிக்கடி அவர்கள் சொல்கிறார்கள். குர்து மொழியை அழித்து குர்தியரின் பண்பாட்டை அழிக்க வேண்டும். குர்து மொழியை வீட்டிலே வேண்டுமானால் பேசிக்கொள்ளட்டும். ஆனால், வெளியில் பேசுவதைக் குற்றமாக அறிவித்தார்கள். அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதை அந்தந்த அரசுகள் தடை செய்து பல ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எதிரி நாட்டுடன் சண்டையிடுவதைப்போல பீரங்கிகளை வைத்து, அப்பாவி குர்திஷ்களைச் சுட்டுப் பொசுக்கினர். இதனால் பல இடங்களில் பல நேரங்களில் குர்திஷ்கள் பூதாகரமாகக் கொதித்து எழுந்து கொரில்லா போல சண்டை போடத் துவங்கினார்கள். எந்த ஆயுத பலமும் இல்லாதவர்களால் வெற்றிபெற முடிவதில்லை. எதிர்பலனாக பல்லாயிரமவர் உயிர்கள் பறிபோயின. தங்கள் உடைமைகளையும், விவசாய நிலங்களையும், ஆடு மாடுகளையும் இழந்து மலைப் பிரதேசங்களுக்கு ஓடி ஒளியும் அவல நிலை ஏற்பட்டது. ஏன் என்று கேட்கும் பி.கே.கே. என்கிற குர்து தொழிலாளர் கட்சித் தலைவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்; அல்லது நாடு கடத்தப்பட்டார்கள். பல தலைவர்கள் பிறநாடுகளில் ஒளிந்து கொண்டு குரல் கொடுக்க விரும்பினாலும் முடியவில்லை. அதற்கு எந்த நாடும் அனுமதிப்பதில்லை. காரணம், தொடர்புடைய நாடுகளுடனான ராஜதந்திர உறவைத் தேவையின்றி முறித்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
உலகத்தின் சட்டாம்பிள்ளை நாடு அமெரிக்கா. அது எண்ணெய்க்காக ஈராக்குடன் சண்டையிடும்போது குர்துகளின் ஆதரவைக் கோரிப் பெற்றது. குர்துகளும் சண்டை முடிந்த பின்பு தங்களுக்கு உதவுவார்கள் என எதிர்பார்த்து உதவினர். வழக்கம்போல் சண்டை முடிந்தவுடன் கைகழுவி விட்டனர். அமெரிக்கா விற்கு எண்ணெய் வேண்டும் என்பதற்காக எந்த மத்தியதரைக்கடல், அல்லது எந்த அரபு நட்பு நாடுகளுடனும், விரோதித்துக் கொள்வதாக இல்லை என்கிற கொள்கையை குர்திஷ்கள் கடுமையாகச் சாடுகின்றனர்.
அய்.நா.விற்கு, வெளிநாட்டில் வாழும் குர்துகள் தங்கள் பிரச்சினையை எடுத்துச் செல்ல முயன்றால், நுழையவிடாமல் முளையிலேயே கிள்ளி விடுகின்றனர். அமெரிக்க ஆதரவு வல்லரசுகள், சுமார் ஒரு லட்ச அர்மேனியர்கள் கள்ளத்தனமாக துருக்கி நாட்டில் வந்து வேலை செய்கிறார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாத அரசு, இந்த நாட்டில் பிறந்த எங்களை அழிப்பதிலேதான் முழுக்கவனம் செலுத்து கிறார்கள் என குர்துகள் அரசைக் குறை சொல்கிறார்கள். துருக்கியின் கிழக்குப் பகுதியில் குர்து பாட்டுப் பாடக்கூடாது எனத் தடை போட்டார்கள்.
காரணம், அப்பாடல் பிரிவினையையும், இன உணர்வினையும் தூண்டுகின்றது என பொய்க் குற்றச்சாட்டு களைச் சுமத்தி, பல நூறு குர்துகளைக் கைது செய்து, சிறையில் வைத்துக் கொன்றனர். குர்துகளின் அடையாளங்களைக் காட்டும் பெயர்களை வைத்தால், அது துருக்கியினரின் பண்பாடு, நீதி, மரபுக்கு எதிரானது என்று விளக்கம் தரப்பட்டு, 1587 ஆவது சட்டப் பிரிவின்கீழ் தடைசெய்யப்பட்டதாக அறிவித்தார்கள். பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு மறுபெயர் சூட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. குர்துகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு, தாங்கள் விரும்பும் பெயர்களைக்கூட வைத்து அழகு பார்க்க முடியவில்லையே என அழுகிறார்கள்.
1973இல்தான் பி.கே.கே. கட்சி முதலில் தொடங்கப்பட்டது. குர்திஷ் மக்களுக்காகப் பாடுபடும் கட்சிகளில் பெரிய கட்சி அதுதான். 1997இல் துருக்கி இராணுவத்துக்கும், பி.கே.கே. போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற சிறுசிறு மோதல்களில் ஒரே கால கட்டத்தில் 5,000 பேர் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட் டார்கள்.
குர்திஷ்களுக்கு எதிராக துருக்கி கையாண்ட முறைகளை புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் டேவிட் மெக்டோவால், முதலில் குர்திஷ் பண்பாட்டை அழிக்க முயன்றனர். பின்னர் 1983 அக்டோபரில் குர்திஷ் மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் 2932 ஆம் சட்டப்பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டது என்று கூறுகிறார். 1923 லாசூன் உடன்படிக்கை ஒன்றை அய்ரோப்பிய நாடுகளுடன் துருக்கி மற்றும் அரபு நாடுகள் செய்து கொண்டன. அதன் அடிப்படையில்தான் குர்திஸ்தானை சிரியா, ஈரான், ஈராக், துருக்கி, அர்மேனியா ஆகிய நாடுகள் பிரித்துப் பங்கு போட்டுக் கொண்டன.
1992 குர்திஷின் நவ்ரஸ் கொண்டாட் டத்தின்போது, அப்பாவி குர்துகளை இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டு பல்லாயிரம் பேர் மரணத்தையும் காயங்களையும் அடைந்ததைப் பார்த்து நடுநிலையாளர்கள் கண்ணீர் வடித்தனர். இடைப்பட்ட சிறிது காலம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஓரளவு சுதந்திரக் காற்றைச் சுவாசித்த குர்துகள், இனி எப்போதாவது அக்காற்று வீசாதா என ஏங்குகிறார்கள். ஒருசிலர் தனி நாடு கிடைக்காவிட்டாலும், சம உரிமையாவது கிடைக்காதா என்று புலம்ப ஆரம்பிக்கிறார்கள். தமிழினத்தைப் போலவே உலகத்திலேயே நாடு இல்லா பெரிய இனத்திற்கு என்றைக்குத்தான் விடிவு பிறக்கும்?அண்மையில் தெற்கு சூடான் மலர்ந்தது. வாழ்த்தினோம். குர்தியருக்காக நாமும் குரல் கொடுப்போம். ஏனென்றால், அவர்களும் நம்மைப்போல அகதிகள்தான்.