(நினைவு நாள்: 08.01.1642)
மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டி யிட்டுத் தான் தீர வேண்டும். அப்படி மண்டியிடச் செய்தவர்களுள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர்.
வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் கலிலியோ. இசைக் கலைஞரின் மகனாகப் பிறந்தவர். கணிதத் துறைப் பேராசிரியராக பைசா பல்கலைக் கழகத்திலும், படூவா பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார். ஏற்கெனவே இருந்து வந்த தொலைநோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார். வியாழனைச் சுற்றியுள்ள துணைக் கோள்கள் வியாழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.
பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக் கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை. பைபிள் கோட்பாடும்கூட சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன்றைக்கு இருந்த அவர்களின் அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ். சூரியனை மய்யப்படுத்திய அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார்
புரூனோ. மத உலகைப் பொருத்த வரை இது ஓர் அதிர்ச்சியான தகவலாகும்.மதவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. கொலை காரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றனர். புரூனோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதே கருத்துகளைத்தான் கலிலியோவும் கூறினார். மதம் மருண்டது என்றாலும், உயிருக்கு ஆபத்தில்லை; மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.விண்ணைப் பார்த்துப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகளோ படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரானார்! 1642 சனவரி 8இல் மரணமுற்றார். 360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங்களில் ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் கணித வல்லுநர் வானியல் விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது.
குழு ஒன்றை அமைத்து கலிலியோ சொன்னதுபற்றி ஆய்வு செய்யப் பணித்தது. ஆம், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. கலிலியோ கண்டுபிடிப்பு சரியே என்று அவர்கள் தெரிவித்தனர். கலிலியோவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது கத்தோலிக்க மதப்பீடம்!
(செய்தி 1992 அக்டோபர் 31)