உடுமலைப்பேட்டையில், 2016ஆம் ஆண்டு சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரை விடுதலை செய்தும் திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இதுபற்றி கவுசல்யா கூறுகையில்,
“என்னுடைய போராட்டம் வீண்போகவில்லை. இந்தத் தீர்ப்பு, சாதி வெறியர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும்; ஒரு மனத்தடையை உருவாக்கும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். அதேநேரத்தில், அந்த மூவரின் விடுதலை என் சிறகுகளை முறித்துவிட்டது போன்ற உணர்வைத் தருகிறது. அதற்காக முடங்கிவிட மாட்டேன். நீதிக்கான சட்டப் போராட்டத்தையும், களப் போராட்டத்தையும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வேன்’’ என்றார்.
உங்கள் தாய்க்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு,
“அவரை தாய் என்று அழைக்க விரும்பவில்லை. ஆனாலும், அவருக்குச் சில கேள்விகளை முன்வைக்கிறேன். ‘உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் நீங்கள் இழந்ததே அதிகம். அந்த சாதி வெறியால் இனி நீங்கள் பெறப்போவது ஒன்றுமில்லை. இதை இப்போதாவது உணர்கிறீர்களா? உங்களுடைய சாதிக் கூட்டத்தில் நீங்கள் கவுரவமாகப் பார்க்கப்படலாம். ஆனால், பொதுச் சமூகத்தில் நீங்கள் வெறும் கொலையாளிகளாக மட்டுமே பார்க்கப்படுகிறீர்கள். அதை, இப்போதாவது புரிந்து கொண்டீர்களா?’ இனியாவது சாதியைத் தூக்கியெறிந்துவிட்டு, மனிதர்களாக மறுபிறவி எடுப்பீர்கள் என நம்புகிறேன்.’’
இந்த ஒன்றரை ஆண்டு வாக்கில் அவருக்குள் பல மாற்றங்கள் பற்றி கேட்டதற்கு,
“சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய கொள்கைகள் இப்போது என்னுள் நிறைந்துள்ளன. முன்பு, ரத்த உறவுகள் மட்டுமே என் ஒரே சொந்தபந்தங்களாக இருந்தனர். ஆனால், இப்போது எனக்குக் கொள்கைவழி உறவுகள் நிறைய பேர் கிடைத்துள்ளனர். ரத்த உறவைத் தாண்டி, இந்த உறவுதான் இறுக்கமாகவும், ஆழமாகவும் தொடர்கிறது. உறுதியான மனிதர்கள் சூழ்ந்ததாக என் வாழ்க்கை மாறியிருக்கிறது. அதற்கேற்ற வகையில், உடையிலிருந்து உள்ளம் வரை கம்பீரமானவளாக, நிமிர்ந்து நிற்கும் பெண்ணாக நான் உருமாறியிருக்கிறேன் என்றார்.
பெரியார், அம்பேத்கர் வழியில்…
“பறை இசை பயில்கிறேன். கராத்தே கற்கிறேன். பெரியார், அம்பேத்கர் நூல்களைத் தினமும் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ‘சங்கர் தனிப் பயிற்சி மையம்’ மூலமாக குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தருகிறோம்; பறை, சிலம்பம் உள்ளிட்ட தமிழ்க் கலைகளையும் கற்றுத் தருகிறோம். இந்தச் சமூகத்தை மாற்றும் ஒரு சிறு புள்ளியாக இதைப் பார்க்கிறேன். இப்போது, தாழ்த்தப் பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, காதலர்களின் பாதுகாப்புக்காக, சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்கும் வேலைகளில் இருக்கிறேன்.’’
சாதியை எதிர்த்துப் போராடி வருகிறேன். என் சங்கரின் படுகொலைக்கு நீதி கிடைக்க, முன்பின் தெரியாத பலரும் கடுமையாக உழைத்தார்கள். அதேபோல நானும், முன்பின் அறியாத, எந்தவித உறவுமில்லாத மனிதர்கள் மீது நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக உழைக்க விரும்புகிறேன். இது என் வாழ்நாள் கடமை. நான் ஒரு போராளியாக, ‘தோழர் கவுசல்யா’வாக வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான போராட்டக் களத்தில் நிற்பேன்.’’
“சாதியை மறுத்து காதல் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன என்று கேட்டதற்கு,
“உங்கள் காதலில் அசைக்க முடியாத உறுதியுடன் இருங்கள். யாருக்காகவும், எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக் காதீர்கள். முடிந்தவரைப் பெற்றோரின் சம்மதம் பெறப் போராடுங்கள். போராடிப் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டால், துணிவுடன் முடிவெடுங்கள். திருமணம் செய்து கொண்டு, சாதியற்றவர்களாக வாழுங்கள். பிள்ளை களையும் சாதியற்றவர்களாய் வளருங்கள்’’ என்று தெளிவாகத் திடமாகப் பதில் சொன்னார்.