அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்?
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை, -களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று, திட்டமிட்டு நடத்தப்பட்டது 2-_ஜி வழக்கு.
உயர்ஜாதி ஆதிக்க அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினர் ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டுச் சதி!
இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றி விட இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
‘டிராய்’ என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது -_ பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?
இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் ஆ.இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?
இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெருவருவாய் தந்தாரே _- அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?
மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சித்தது எந்த வகையில் ஜனநாயகம் – அமைச்சரவையின் அறம் ஆகும்?
மத்திய அரசின் பதில் மனு என்ன கூறுகிறது?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும், மதிப்புத் தொகையும் அரசின் கொள்கை முடிவுகளில் வருபவை. இவற்றை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.
1999ஆம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. அய்ந்தாண்டுத் திட்டங்களில். அடையாளம் காணப்பட்ட நெறிமுறைகளும் டிராய் (ஜிஸிகிமி) அமைப்பின் பரிந்துரைகளும் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன.
செல்பேசிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நெருக்கடியான அலைவரிசைகள் இலகுவாக்கப் பட்டு, சேவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் புதிய போட்டியாளர்களை அனுமதித் ததற்கான காரணம். -இதனால் கட்டண வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுள்ளது.
இப்புதிய முறையினால், அரசின் வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2002-_03ஆம் ஆண்டில் ரூ.5,384 கோடியாக இருந்த ஸ்பெக்ட்ரம் உரிமக் கட்டணம் 2009_-10ஆம் ஆண்டில் ரூ.13,723 கோடியாக உயர்ந்து வந்துள்ளது. அரசின் வருவாய்ப் பங்கு 2010 மார்ச் வரை ரூ.77,938 கோடி வசூலாகியுள்ளது. அரசின் துறைகளில் மிக அதிகமான வரியில்லாத வருவாயாகவும் இதுவே அமைந்துள்ளது.
இதனால் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்றிருந்த செல்பேசிக் கட்டணம் வெறும் 30 பைசாவாகக் குறைக்கப் பட்டுள்ளது. நொடிக்கு நொடி கட்டண முறை எல்லா நிறுவனங் களிலும் அறிமுகமாயுள்ளது. உரிமங்கள் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகள் 2003 நவம்பர் மாதத்திலிருந்து வெளிப்படையான முறையில் கடைப்பிடிக்கப் பட்டுவரும் முறையாகும். 31.-10.-2003இல் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி எத்தகைய மாறுதலும் இல்லாமல் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகும்.
இம்முறைதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நாட்டின் பொருளாதார நிலைகளுக் கேற்ப, தனியார் துறையினர் அனுமதிக்கப் படுகின்றனர். 1994இல் நம் நாட்டில் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை தனியார் துறையினரும் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படக் கூடாது எனும் முடிவு 10, 11 ஆம் அய்ந்தாண்டுத் திட்டங்களின் முடிவுகளின்படி நடந்துள்ளது.
முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்று வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்படவில்லை
பிரதமரின் கருத்து அலட்சியப் படுத்தப் பட்டது என்பது கற்பனை. உரிமம் வழங்குவது பற்றிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பிரதமரின் முதன்மைச் செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
26.-12.-2007இல் அமைச்சரே பிரதமருக்கு எழுதி தாமதமோ, விதி மீறலோ இல்லாதவகையில் அரசின் முடிவுகள் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துள்ளார்.
பொய்ப் பரப்புரை
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்தன. ஏகபோக முதலாளித்துவ ஏடுகளும் மின்னணு ஊடகங்களுமே ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டின. அரசின் கொள்கை முடிவுப்படியும், 5 ஆண்டுத் திட்ட நெறிமுறைத் திட்டங்களின் படியும், டிராய் அமைப்பின் பரிந்துரைகளை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்ட முடிவுகளின்படியும் 2 ஜி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியது போல், அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போட்டது.
மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப்புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவறான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. இதைப் பொறுக்க முடியாத ஆரிய ஆதிக்கக் கூட்டம் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை -2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்ததை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, அதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கிக் காட்டினர்.
பார்ப்பனச் சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!
இதற்காகவே சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சாரக் கருவிகளாக்கி, தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறின. அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங் களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்கள் விவாதம் நடத்த முன்வரப் பயந்தனர். நேர்மை, உண்மை இல்லை அவர்களிடம். நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?
J.P.C. (Joint Parliamentary Committee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே _- அதனால் ஏற்பட்ட பலன் என்ன?
1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் -_ 1987ஆம் ஆண்டு
2. பங்குச் சந்தை ஊழல் -_ அர்ஷத் மேத்தா 1992 (ரூ.1000 கோடி ஊழல் – அனுமானம் அல்ல, நடந்தது)
3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை
4. பூச்சிமருந்து கோக்கோகோலா ஊழல்_2004 (ஜே.பி.சி. _- விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?) இல்லையே!
2ஜி ஊழல் என்பது ஒரு கற்பனை
2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக்குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண்ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள்களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் – படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்தனர்.
தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!
ஆ.இராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி, மண்டல் கமிஷன் ஆணையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத்தினார். அப்பொழுது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா? இட ஒதுக்கீடு தொடர விட்டு விடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடகமாடுங்கள். உங்களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் உள்ளன.
தாழ்த்தப்பட்ட சகோதரன் பெரிய பதவியில் இருப்பதா?
ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் ஆ.இராசா உயர்ந்து அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா? அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்த சதி இது.
வாதாடத் தயாரா?
எங்களோடு வாதாட யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலமுறை சவால் விட்டாரே, எவராவது முன்வந்தார்களா? இல்லையே!
உலகத்திலேயே இங்குதான் குறைந்த கட்டணம்
அது மட்டுமல்ல; தொலைப்பேசி கட்டணம் உலகத்திலேயே மிகவும் மலிவாக இருக்கக்கூடிய ஒரு நாடு என்றால் அது நம்முடைய நாடுதான் என்கிற பெருமை யாரால் உருவாக்கப் பட்டது? அமைச்சர் ஆ.இராசாவால் உருவாக்கப்பட்டது. அவருடைய குருவின் பேனாவால் உருவாக்கப்பட்டது.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றுதான் சொல்லுகிறீர்கள். அப்படியானால் அது எப்படி ஊழலாகும்? ஆ.இராசா யாரிடமாவது பணம் வாங்கினாரா? ஆதாரம் உண்டா? வீடியோ ஆதாரம் உண்டா? பா.ஜ.க. பங்காரு லட்சுமணன் மற்ற அமைச்சர்கள் பணம் வாங்கியதற்கு வீடியோ ஆதாரம் இருந்ததே! (டெகல்கா வெளியீடு)
தொலைதொடர்புத் துறையில் ஆ.இராசா பதவி வகித்த காலத்தில் உத்தேச இழப்பு. இது அனுமானமானதே தவிர, கற்பனையே தவிர உண்மையிலேயே பணமில்லையே.
பா.ஜ.க. ஆட்சியில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு
பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தொலை தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரி 50,000 கோடி ரூபாயை அரசு பணத்தை எடுத்துத் தந்திருக்கிறாரே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி யிருக்கிறாரே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
1999ஆம் ஆண்டில் -பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில் -கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆ.இராசா காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் 2001இல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகள் இருந்தனர்; 2009இல் (அமைச்சர் இராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட் சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல்.
சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை குடை என்று குடைந் திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு. காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம்.
நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்
நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம்தான் கோபாலபுரம். அதைச் சந்தித்தவர் கள்தான் தி.க. மற்றும் தி.மு.க.வினர்.
மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திடலுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டினார்கள்.
இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதியின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.
தி.க.விடம் ஏது கருப்புப் பணம்? இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும், வேண்டும் என்றே அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள். அவ்வளவு கேவலப் படுத்தினார்கள். பார்ப்பனர்களே, நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறீர்களோ அந்தளவுக்கு அடிக்க அடிக்க எழும் பந்துபோல எழுந்து மக்கள் மனுதர்மத்தை, ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.
எப்படியும் நீதி வெல்லும் என்பது 2ஜி வழக்கில் நடந்துள்ளது. காரணம், ஒரு நல்ல நேர்மையான நீதிபதியிடம் இவ்வழக்கு வந்ததுதான். இந்த வழக்கை வைத்து அரசியல் ‘சித்து’ ஆட நினைத்த அதிகார வர்க்கத்திற்கெல்லாம் அஞ்சாது, உண்மை அறிந்து நீதி வழங்கி யிருப்பது மதித்து, பாராட்டத்தக்க மாண்பமை நீதியாகும்!
அடிப்படையற்ற ஆதார மற்ற, புனையப்பட்ட உள்நோக்கம் உடைய வழக்கு என்று நீதிபதி கண்டித்துள்ளார். க ணக்குத் தணிக்கை உயர் அலுவலர், உள்நோக்கத்துடன் கற்பனையாய் கூறிய குற்றச்சாட்டு இது என்றும் நீதிபதி சாடியுள்ளார். அபாண்டமாக உள்நோக்கத்தோடு பழி போட்ட 2ஜி வழக்கில் அனைவரும் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்யப் பட்டிருப்பதும், அந்த நீதியைப் பெற மன உறுதியுடன் பல ஆண்டுகள் போராடிய வர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரியன!
தொடக்கம் முதலே இது புனையப்பட்ட மோசடி வழக்கு என்று பல கட்டங்களில் ஆதாரங்களோடு சவால்விட்டு விளக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்தத் தீர்ப்பு. இது திராவிட இயக்கங்களுக்கே கிடைத்த வரலாற்று வெற்றி!
இராஜீவ்காந்தி கொலைப்பழி போல
இராஜீவ்காந்தி கொல்லப்பட்டவுடன் ஆரிய பார்ப்பனர்களும் அவர்களின் ஊடகங்களும் தி.மு.க.வினர்தான் இராஜீவ்காந்தியை கொன்று விட்டனர் என்று ‘தினமலர்’ போன்ற ஆரியப் பார்ப்பன ஊடகங்கள் பொய்யான தகவலைப் பரப்பி அத்தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடித்தனர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் அழிக்கப்பட தி.மு.க. காரணம் என்று ஒரு பொய்யான கருத்தைப் பரப்பி அடுத்தத் தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடித்தனர்.
2ஜி என்ற பொய்யான வழக்கைத் தொடுத்து அதற்கடுத்த தேர்தலில் தோற்கடித்தனர். ஆக அபாண்டமாய் _ மோசடியாய் கருத்து பரப்பியே தி.மு.க.வை வீழ்த்தி வருகின்றனர்.
ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வீர்களா?
இப்போது தீர்ப்பில் இராசா, கனிமொழி உட்பட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அவர் இழந்த பதவியை, அவர்கள் அடைந்த தண்டனையை, அவமானத்தை, மன உளச்சலை, உடல்நலக் கேட்டை, தி.மு.க.வின் இழப்பை – தோல்வியை அதன் வழி தமிழ்நாடும், தமிழக மக்களும் அடைந்த பாதிப்பை இந்த மோசடி வழக்கு புனைந்த ஆரிய ஆதிக்கக் கூட்டத்தால் ஈடு செய்ய முடியுமா? திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்த ஊடகங்களால் ஈடுசெய்ய முடியுமா? உங்களுக்கெல்லாம் உள்ளம் என்று ஒன்று இருந்தால், அதில் உளச்சான்று ஓரளவாவது ஒட்டிக் கொண்டிருந்தால், உண்மை உணர்வு, சூடு சொரணை இருந்தால் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! மக்களுக்குச் சொல்லுங்கள்!
அடுத்து வரப்போவது தி.மு.க. ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையை இப்போது எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத்தின்மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள்!
– மஞ்சை வசந்தன்