சிகரம்
நிலவு இப்படித்தான் உருவானதா?
அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட பிரம்ம தேவர் தேவதாஸ்திரீகளை அழைத்து அந்த சோம ரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர். ஆனால், அதன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான். பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக்கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர். பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தோரு முறை சுற்றிவர ஓஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன.
சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
தக்ஷன் நக்ஷத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான். ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப் போர் நடந்தது.
இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மாவும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக்கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுவிட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புறற்றனர்.
பின்னர் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான் என்கிறது இந்து மதம்? நிலவு கோளும், புதன் கோளும் இப்படித்தான் உருவானதா? இப்படிப்பட்ட மடமைக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அகலிகை கல்லானாள்
கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.
தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.
முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.
கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.
அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்துவிட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், “இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான். அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.
இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர், எதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.
கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்து வணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.
ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலைகுனிந்து நின்றான்.
எனினும் கோபம் அடங்காத முனிவர் அவனை“உன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’’ என்றும் “வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’’ என்றும் சபித்தார்.
அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் “ஸ்ரீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுயஉருவைப் பெறுவாய்’’ என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.
சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவலநிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் “இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார். இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று, ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்த பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.
எனவே, அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது என்கிறது இந்து மதம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனாக எப்படி மாற முடியும்? இது அறிவியல்படி முடியாதே! ஆனால், அறிவியலுக்கு புறம்பான கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்? அது மட்டுமல்ல, ஒரு சாபத்தால் பெண் கல்லாக மாறுவாளா? அறிவியல்படி இது சரியா? அறிவியலுக்கு முரணான இக்கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(தொடரும்)