டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம்
பிறந்த நாள் : டிசம்பர் 25 (1919)
ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் /
நினைவு நாள் : டிசம்பர் 19 (2014)
திராவிடர் இயக்க வரலாற்றில், சிறுமியாக இருக்கும் போதே சமூகப் புரட்சிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட வீராங்கனையாகப் பதினெட்டு வயதில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வாழ்வை ஏற்ற தியாகப் பெண்மணி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார். பெயர்ப் பலகைகளில் ‘பிராமணாள்’ அழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக சட்ட எரிப்பு, இந்திய யூனியன் பட எரிப்பு எனத் தொடங்கி தமது இறுதி மூச்சு அடங்கும் வரை கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று கைது செய்யப்பட்டவர். சிறை தண்டனை பெற்றவர்.
சிறுமியாக தூத்துக்குடி மாநாட்டில் முழங்கியவர், தொடர்ந்து தமது இறுதிக் காலம் வரை திராவிடர் கழக மேடைகளில் முழங்கியவர். கட்டுரைகளை எழுதியவர். வாழும் வீராங்கனைகளின் வரலாற்றை எழுதியவர். அந்நாளில் ‘கடல் வெடிகுண்டுப் பேச்சாளர்’ எனப் பொருள்படும் ‘டார்பிடோ’ என்று முன்னொட்டுக் கொடுத்து பெருமை படுத்தப்பட்டவர் ‘டார்பிடோ’ ஏ.பி.ஜனார்த்தனம்.தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த புலமை மிக்கவர். இரு மொழிகளிலும் பலமணி நேரம் உரையாற்றும் ஆற்றல் மிக்கவர். திராவிடர் கழக தளபதிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர். தந்தை பெரியாரின் ஆணையேற்று பல்வேறு போராட்டங்களில் சிறை சென்றவர். இவர்களின் திருமணத்தை திருச்சியில் தந்தை பெரியார் 1956இல் நடத்திவைத்தார். திருமணம் ஆன சில நாட்களிலேயே தந்தை பெரியார் அறிவித்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று இருவரும் தனித்தனிச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.