அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

டிசம்பர் 01-15

 

 

ஆரியர் வேறு – திராவிடர் வேறு

இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார் என்று அவரை இந்துத்வா அம்பேத்கர் என்று காட்ட முயலுவோர் கூறுகின்றனர். ஆரிய_திராவிட என்கிற கண்ணோட்டத்தில் செய்யப்படும் அணுகுமுறையை அவர்கள் மனதில் கொண்டு கூறுகிறார்கள் எனக் கருதலாம். அப்படியாயின் அவரது அணுகுமுறைகள் சற்று மாறுதலுடன் இருந்தன என்று ஏற்கலாம். அவரது ஆய்வுகள் பெரும்பாலும், ஏன் முழுவதுமே, இந்து மதத்தின் நால் வருணமுறை, அய்ந்தாவதாகக் கற்பிக்கப்பட்ட தீண்டாதார் முறை பற்றியே அமைந்திருந்தன எனலாம். அந்தக் கண்ணோட்டத்தில் அவரது கருதுகோள்கள் பின்வருமாறு அமைந்தன. “ஆரிய இனம் என்ற கோட்பாடு அனுமானமே! 1835இல் டாக்டர் பாப் என்பார் தெரிவித்த கருத்தின்படி, அய்ரோப்பிய மொழிகள், ஆசிய மொழிகள் இந்தோ ஜெர்மன் மொழிகள் எனப்பட்டன. இவையே ஆரிய மொழிகள் எனப்பட்டன. இந்த அனுமானமே ஆரிய இனக் கோட்பாட்டுக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.’’

ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனம் இருந்திருக்க வேண்டும். அந்தத் தாய்மொழி ஆரிய மொழி என்கிறபோது அதனைப் பேசிய இனம் ஆரிய இனமாக இருக்க வேண்டும் என்று வாதிக்கப்படுகிறது. ஒரு தனியான ஆரிய இனம் இருந்தது. இவ்வாறு ஓர் அனுமானமே தவிர வேறல்ல’’ என்பது அவரது முடிவு. அத்தகைய வாதத்தின் அடிப்படையில், திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் திராவிட இனம் என்பதுவும். (பார்க்க: அம்பேத்கர் நூல் தொகுப்பு 13, பக்கங்கள் 118, 119) இதுபோலவே மற்றவர்களைவிட முன்னதாகவே இந்தியாவில் குடியேறிய இனக் குழுதான் சூத்திரர்கள் என்று கருதக்கூடியவர்களின் கண்ணோட்டத்துடன் நான் உடன்படுகிறேன். (பக்கம்: 214)

ஆரிய இனத்தவரின் முதல் தாயகம் அய்ரோப்பாவில் ஏதோ ஓரிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது ஓர் ஊகம் என்பதுதான் அம்பேத்கரின் அனுமானம். அண்மைக்கால ஆய்வு முடிவுகளின்படி, ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மூத்த தாயின் வழித்தோன்றல்களாகிய மானுட சமுதாயம் பிரிந்து அய்ரோப்பிய பக்கமும் ஆசிய, ஆஸ்திரேலியப் பக்கமும் சென்றனர் என்பது அனுமானம். ஆசியப் பக்கம் வந்தவர்கள், “முன்னதாகவே குடியேறியவர்கள்’’ என்று அம்பேத்கரால் குறிப்பிடப்படுகின்றனர். அய்ரோப்பிய பகுதியிலிருந்து தாமதமாக ஆசியா பக்கம் திரும்பியவர்கள் ஆரிய மொழியைப் பேசியதால் ஆரியராகினர். முன்னதாக வந்து திராவிட மொழியைப் பேசியவர்கள், ஆய்வாளர்களின் அனுமானப்படி தஸ்யூக்கள், தாசர்கள், சூத்திரர்கள் எனப்பட்டனர் என்பதும் அனுமானம்தான். ஆக, ஆரியம் என்பதும் திராவிடம் என்பதும் மொழி அடிப்படையில் அமைந்த இனங்களின் பெயர்கள்.
திராவிடர்கள் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்ந்தவர்கள் என்பதற்குத் தென்னாட்டில் கிடைக்கும் நியாண்டர்தால் நாகரிகச் சின்னங்களே சாட்சியம் அளிக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதோரா அகழ்வுகள் திராவிட மொழி எழுத்துகள், திராவிடர் நாகரிகச் சின்னங்கள் போன்றவை அதனை எண்பிக்கின்றன. தொடர்ந்து ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்து கின்றன. அழுக்காறு கொண்ட ஆரியர்கள் என்.எஸ்.ராஜாராம் போன்றவர்களைக் கொண்ட தற்காலத்திய கணினி வரைபடக் கலையின் துணை கொண்டு காளையைக் குதிரையாக்கிக் காட்டி, ஆரிய திராவிடக் கற்பனை எனத் தெரிவித்து முட்டாள்களின் சொர்க்கத்தில் மிதந்தனர். 100 நாள்களுக்கு முன்வந்த அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் அவர்கள் முகத்தில் கருஞ்சாந்து பூசியதால் எல்லோரும் க்ருஷ்ணர்களாக (கறுப்பர்களாக)க் காட்சி தருகின்றனர். அந்த வகையில் இந்துத்வச் சாயம் வெளுத்துப் போய்விட்டது. இனிமேல் அவர்களின் ஏமாற்றுவேலைகள் எடுபடாது. மூட்டைகட்டிக் கொள்ள வேண்டும் இந்துத்வ எழுத்தாளர்கள்.

ஆரிய சமாஜிகள் என்பவர்கள் ஏதோ பெரிய சீர்திருத்தக்காரர்கள் எனவும், ஆராய்ச்சி யாளர்கள் என்பது போலவும் இந்துத்வர்கள் பேசித் திரிகின்றனர். “ஆரிய சமாஜிகளுக்கு மிக ஆதாரமாக விளங்கும் “புருஷசூக்தம்’’ பார்ப்பனர்கள் தமது சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புனைந்து உருவாக்கியவையேயன்றி வேறல்ல என்பதை அம்பேத்கர் நிலைநாட்டியுள்ளார். (தொகுப்பு நூல்: 13, பக்கம் 9) எனவே, ஆரிய சமாஜிகள் இந்துக் கடவுள்களை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பேசுவது சரியல்ல. அவர்கள் எடுத்துக் காட்டானவர்களோ முன் மாதிரியானவர்களோ அல்ல. பார்ப்பன மேலாண்மையை விரும்பிய, விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் செய்து வந்த சில வாழ்க்கை முறைகளை பலரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யக்கூடிய தகுதி படைத்தவர்களாகவோ இருந்ததில்லை. எனவே, அது காலப்போக்கில் மறைந்துவிட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவன் வைக்கோலைப் பற்றிக் கரையேற முயற்சிப்பதைப் போல இந்துத்வர் ஆரிய சமாஜிகள் பற்றிப் பேசுவதை விட்டு வேறு செய்யலாம்.

கர்வாபசி முடியாது

இந்து என்பது (முன்பே எடுத்துக் காட்டியபடி) அன்னியப் பெயர். அன்னியர் வைத்த பெயர். இந்து சமூகம் என்பதே கற்பனை. இந்துக்களின் குழு உணர்வு அறவே இல்லாத ஒன்று. இந்துக்கள் அனைவரும் ஒன்றே எனும் (சங்காத்தான்) உணர்வே அவர்களிடம் கிடையாது. இந்துக்கள் ஒரு சமூகமாக அமைகின்றனர் என்னும் முடிவு ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்பதை அம்பேத்கர் 1935இல் கூறியவை (தொகுப்பு நூல் 1, பக்கங்கள் 72_73) “இந்து மதம் ஜாதிகளின் தொகுப்பாக இருப்பதாலும் மதம் மாறி வருபவர்க்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை. இந்து மதம் விரிவடையவும் மற்ற மதத்தவரை இந்து மதத்திற்குள் ஏற்று இணைத்துக் கொள்ளவும் தடையாக இருப்பது ஜாதியே. ஜாதிகள் இருக்கும்வரை இந்து மதத்தை மிஷினரி மதமாக்க முடியாது. சுத்தி (ஷிலீuபீலீவீ) என்பது மடத்தனமானது, பயனற்றது’’ என்றார் அவர். கர்வாபசி என்பது மடத்தனம் என்றவரை இந்துத்வ அம்பேத்கர் என்பதைவிட ஏமாற்று ஏதாவது இருக்க முடியுமா? இந்துக்கள் தமது ஜாதிகளின் நலன்களைப் பெரிதாகக் கருதித் தமது நாட்டுக்கே துரோகம் செய்யவில்லையா? என்று கேட்டவர் அவர். (அதே நூல் பக்கங்கள் 79, 83) அம்பேத்கர் இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வதில் அக்கறை காட்டியவர் என்று கயிறு திரிக்கின்றனர். நால்வருணப் பெயர்களும் அமைப்பு முறையும் இருக்கின்றவரை எந்தச் சீர்திருத்தமும் வெற்றி பெறாது என்றவர் அவர். அதனை ஏற்று பெயர்களையாவது மாற்றியிருக்கிறார்களா? (பக்கம் 86). அந்தப் பெயர்களினாலும் சதுர்வர்ண முறைகளினாலும் தான் சூத்திர சம்பூகன் கொலை செய்யப்பட்டான்? பார்ப்ன வகுப்பில் நுழைய முயன்றதுதானே அவன் குற்றம்? (பக்கம் 89).

ஸ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும் என்றவர் அம்பேத்கர். (பக்கம் 109). வேறு எதுவும் பயன்தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு (பக்கம் 109) என்றவரை திருத்த நினைத்தார் என்று கூறுவது பெரும் மோசடி. இந்தக் கருத்தை மாற்றவும் வாசகங்களை மாற்றிடவும் அவர் ஒத்துக் கொள்ள மறுத்துத்தானே மாநாட்டுக்கே போகவில்லை? நடப்பு இப்படி இருக்க மாற்றிப் பேசுவது நாணயமற்ற மோசடிச் செயல்தானே! அவர் தெரிவித்த நிபந்தனைகளை இந்துமதம் ஏற்கவில்லை. இந்துத்வரும் ஏற்கவில்லை. இந்நிலையில் எப்படி அவரை இந்துத்வர் எனலாம்?’’

                                                                                (கேள்விகள் தொடரும்)
                                                                                      – சு.அறிவுக்கரசு

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *