திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சியின் 101ஆம் ஆண்டுவிழா சிறப்புக் கூட்டம் 18.11.2017 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேனாள் முதல்வருமாகிய பி.டி.ராசன் அவர்களின் பெயரனும், தமிழக சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் மகனுமாகிய மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் பி.டி.ஆர்பி.தியாகராசன் அவர்கள் மிக ஆழமாய் நேர்த்தியாய் கருத்துரை வழங்கினார்.
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் அறிமுக உரையாற்றினார்.
பேராசிரியர் க.அன்பழகன்
நீதிக்கட்சித் தலைவர்கள் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களைத் திறந்து வைத்து திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் இரத்தினச் சுருக்கமாய் சிறப்புரையாற்றினார்.
இனமானப் பேராசிரியர் உரையில் குறிப்பிட்டதாவது:-
நான் எதிர்பாராத நிகழ்ச்சி இது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீதிக்கட்சித் தலைவர்கள் நமக்கெல்லாம் ஆக்கம் கொடுத்தவர்கள், துணை நின்றவர்கள், நீதிக்கட்சியினர் கொள்கை தந்தவர்கள். அவர்கள் இல்லையென்றால், இந்த இயக்கம் இல்லை. கொள்கைப்படி, அவர்கள் வாழ்ந்து வழிகாட்டியவர்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நீதிக்கட்சித் தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்து உரையாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு உளமாற நன்றி. அதிகம் பேசமுடியாத இக்கட்டான உடல்நிலை எனக்கு உள்ளது. உள்ளார்ந்த நிலையை உணர்ந்து ஏற்பீர்கள். நன்றி. இவ்வாறு சுருக்கமாய் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா என்பது வெறும் பெருமைகளை மட்டும் பேசுவதற்கு அல்ல. சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, நீதிக்கட்சி, திராவிட இயக்க கொள்கைகளுக்கு அறைகூவல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கும்தான் இவ்விழா.
நீதிக்கட்சியின் முதல் தலைமுறையைச் சார்ந்த இனமானப் பேராசிரியர் எப்போதும் எங்களுடன் இருப்பவர். அவரைத் தொடர்ந்து நாங்கள் இளைய தலைமுறைக்கு கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். வாரிசு அரசியல் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். கொள்கையை சுவாசமாகக் கொண்டிருப்பதால் வாரிசு அரசியலுக்கு பெருமையேயாகும். நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராசன், அவர் மகன் பிடிஆர்.பழனிவேல்ராசன், அவர்களைத் தொடர்ந்து தற்போது பிடிஆர்பி.தியாகராசன் வந்துள்ளார். Survival in the fittest என்கிற வகையில் தியாகராசன் இருக்கிறார் என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி. நாடெல்லாம் நாசம் செய்தது போதாது என்று இப்போது புரோகிதம் தமிழக தலைமைச் செயலகத்திலும் நுழைந்திருக்கிறது. படித்தவர்களைவிட படிக்காதவரான தந்தை பெரியார் அவர்கள் துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர். Original Thinker Periyar பெரியார் சுயசிந்தனையாளர் ஆவார்.
காங்கிரசில் பெரியார் இருந்தபோது, நீதிக்கட்சி ஆட்சியில் கோயில் பெருச்சாளிகளை ஒழிக்க, 1922ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1924ஆம் ஆண்டில்தான் இந்து அறநிலைய சட்டம் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் தனக்கு ஆட்சி இல்லை கொள்கைதான் பெரிது என்றார். அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அறநிலையத் துறைக்கு நாவலரை அமைச்சராக்கினார். சிதம்பரம் சென்ற நாவலரை நடராசர் கோயிலுக்குள் அழைத்தார்கள். அங்கு சென்று ஆய்வு செய்துவிட்டு மாணவர்கள் மத்தியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசியபொழுது கோயிலுக்குச் சென்றதால் நெடுஞ்செழியன் மாறிவிட்டான் என்பது பொருளல்ல, கோயில் கணக்குகளைப் பார்வையிடவே அண்ணாவின் ஆணையேற்றுச் சென்றேன். நெடுஞ்செழியன் எப்போதுமே இயக்கக் கொள்கைகளை மறக்காதவன், மாறாதவன் என்றார்.
கேரளாவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகின்றனர். கர்நாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பதவியைக் காத்துக் கொள்ளவே அடிமையாய் இருந்து சுகம், சுவை காண்கிறார்களே ஒழிய இதுபோன்ற நன்மைகளைச் செய்ய அவர்களுக்கு நேரமில்லை. இந்து மதம் மக்களை ஜாதியால் பிரித்தது, பிரிக்கப்பட்ட மக்களை ஒன்றாக்கிய இயக்கம் திராவிட இயக்கம். நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்கு சலாம் குலாம் போடுபவர்களை வைத்து தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுக்கலாம் என எண்ணாதீர்கள். இது பெரியார் மண் எந்தப் பழைய, புதிய புரோகிதர்கள் வந்தாலும், எந்தச் சங்கடங்கள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது. இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
நூல் வெளியீடும் கோ.அண்ணாவிக்கு இரங்கலும்
நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் நீதிக்கட்சி தொடர்பான மலிவுப் பதிப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நீதிக்கட்சி வரலாறு (ரூ.25), நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக? (ரூ.11), ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் (ரூ.70), திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் தேவையும் (ரூ.15) ஆகிய நூல்கள் மொத்த விலையில் ரூ.21 கழிவு அளிக்கப்பட்டு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டன. பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத்தலைவர் கோ.அண்ணாவி மறைவுற்ற தகவலையடுத்து, கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மரியாதை செலுத்தினர்.
நன்றியுரை:
நீதிக்கட்சியின் 101ஆம் ஆண்டு விழாவில் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் முனைவர் ஏ.தானப்பன் நன்றியுரை வழங்கினார்.