ஜாதி ஒழிப்பா?
ஏமாற்றும் பித்தலாட்டத்தில் முக்கியமானது இந்துத்வா ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது என்கிற பித்தலாட்டம். இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்புதான். எவ்வளவோ தத்துவங்கள் அழிந்துபோன நிலையிலும் சனாதனத் தத்துவம் (இந்து மதம்) நீடித்து இருப்பதற்குக் காரணம் அவற்றில் இல்லாத ஏதோ ஒன்று சனாதன மதத்தில் இருப்பதுதான். அந்த ஏதோ ஒன்றுதான் ஜாதிமுறை என்று சிலாகிக்கிறார் சங்கராச்சாரி.
இது எதைக் காட்டுகின்றது? ஜாதி ஒழிப்பை முன்னெடுத்தது இந்துத்வா என்பதற்கு ஆதாரம் கூறுவார்களா? நாளைக்குச் சொல்லட்டுமே, ஆர்எஸ்எஸ். ஜாதியை ஒழிக்கப் போகிறது என்று! இவர்களிடம்தானே ஆட்சி இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் கூறு, “தீண்டாமை ஒழிக்கப்பட்டது, அதனை எவ்விதத்தில் கடைப்பிடித்தாலும் தண்டனைக்குரிய குற்றம்’’ என்றுள்ளது. அதனைச் சிறிது திருத்தி தீண்டாமை என்பதற்குப் பதில் ஜாதி என்று மாற்றுவார்களா? இதைச் செய்து இந்துத்வாவின் அந்தரங்க சுத்தியை நிரூபிப்பார்களா? ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது; அதனைக் கைக்கொண்டு எவராவது ஏதாவது செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறட்டுமே! செய்வார்களா? அதைச் செய்யாமல் அம்பேத்கரை இந்துத்வா “முத்திரை குத்தி ஏமாற்றப் பார்ப்பது கடைந்தெடுத்த கயமை!
இந்துத்வத்தை அம்பேத்கர் கடைப் பிடித்து வந்தார் என்பது மோசடித்தனம்!
புராணப் புரட்டு போலவே…
இந்து மதமே “ஆத்மா’’ என்ற பொய்மையை மய்யமாகக் கொண்டு இருந்துவரும் கேடு கெட்ட மதம். இந்த ஆத்மாவை புத்தரோ, பவுத்தமோ ஏற்றுக்கொள்ளவேயில்லை. அப்படியிருக்கும் போது பவுத்தம் எப்படி இந்து மதத்தின் கிளை?
பவுத்த நெறியைத் தழுவும்போது அம்பேத்கர் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகளைப் பற்றியும் திரித்துப் பேசுகிறார்கள் ஆர்எஸ்.எஸ்காரர்கள்.
சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்க வேண்டாம் என்று மட்டுமே சொன்னார் என்கிறார்கள். இது அப்பட்டமான பொய். காரணம், ராமனையோ, கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன், வணங்க மாட்டேன். இந்து மதத்திலுள்ள கவுரி, கணபதி அல்லது எந்தக் கடவுளையும் ஏற்க மாட்டேன், வணங்க மாட்டேன். (முழுமுதல் கடவுள் என்பதாக கணபதி இருக்கிறது. மராத்திப் பார்ப்பனர்களின் முக்கிய கடவுளையே தூக்கிப் போட்டுப் பந்தாடுகிறார்) கடவுள் அவதாரம் எடுத்த கதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். (கடவுள் விஷ்ணு 21 அவதாரம் இதுவரை எடுத்துவிட்டது. 22ஆம் அவதாரமாக கல்கி அவதாரத்தை இனிமேல்தான் எடுக்க வேண்டுமாம். ராமன், கிருஷ்ணன் ஆகிய இரண்டும் பூர்ணாவதாரங்களாம். மற்றவை அம்சாவதாரங்களாம் எந்த வெங்காய அவதாரத்தையும் அவர் ஏற்கவில்லை.) புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது அவர் எடுத்துக்கொண்ட அய்ந்தாம் உறுதிமொழி. இந்த நிகழ்ச்சிக்குச் சில ஆண்டுகள் கழித்துத்தான் சாரநாத் ஒப்பந்தம் நடந்தது. (மேலே விவரம் தரப்பட்டுள்ளது.) சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் போடுவது போன்ற சடங்குகளைச் செய்ய மாட்டேன்.
பவுத்தத்தின் தம்மத்திற்கு எதிரான எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டேன். பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் எதிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமத்துவமாகக் கருதுவேன். (இது ரிக்வேதம், பகவத் கீதை, மனுசாஸ்திரம் ஆகியவற்றிற்கு எதிரானது) நான் சமத்துவத்திற்காகத்தான் பாடுபடுகிறேன். புத்தர் சொன்ன எட்டு வழிகளைக் கடைப்பிடிப்பேன். புத்தர் சொன்ன பத்து உறுதி மொழிகளை நான் ஏற்பேன். எல்லா மனிதர்களிடமும் கருணை காட்டி அவர்களைப் பற்றிச் சிந்திப்பேன். நான் திருடமாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். போதைக்கு ஆளாக மாட்டேன். (கஞ்சா புகைப்பதும் அபினி தின்பதும் இந்துமதச் சாமியார்களும் அகோராக்களின் உறுப்பினர்களின் கடமை) மது குடிக்க மாட்டேன். தியானம், சீலம், கருணை எனும் மூன்றைக் கடைப்பிடித்து என் வாழ்வை அமைப்பேன். இந்து மதத்தை நான் துறக்கிறேன். காரணம், அது மனித இனத்தின் பழமையான குடியானவரின் முன்னேற்றத்தைத் தடுத்தும் அவர்களை இழிவாகவும் சமஉரிமை அற்றவர்களாகவும் ஒடுக்கியதே இந்துமதம்தான். இந்து மதத்தைத் துறப்பதுதான் உண்மையான தம்மம் எனப் புரிந்துகொள்கிறேன். இன்று நான் புதுப்பிறவி எடுத்துள்ளேன். (பவுத்தத்தைத் தழுவியதன் மூலம்) இந்த நேரம் முதல் புத்தருடைய போதனைகளின்படியே நடந்துகொள்வேன். புத்தமே எனக்கு அடைக்கலம். (புத்தம் சரணம் கச்சாமி), தம்மமே எனக்கு அடைக்கலம் (தம்மம் சரணம் கச்சாமி), சங்கமே எனக்கு அடைக்கலம் (சங்கம் சரணம் கச்சாமி) என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரை இந்துத்வர் என்பவர்கள் அவர் எடுத்த 25 உறுதிமொழிகளையும் கூற வேண்டாமா? கூறினால் அவர்கள் கதையும் இந்து மதத்தின் கதையும் கிழிந்து கந்தலாகிவிடும். அதனால் ஒன்றை மட்டும் கூறி மற்றவற்றை மறைக்கிறார்கள்.
அல்லா உபநிடதம் உண்டே
இவ்வளவும் சொன்னவர், உபநிஷத்களை யாரும் பின்பற்ற வேண்டாம், ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுக்கச் சொல்லவில்லையே என்று வாதிடுகிறார்கள். உபநிஷத்களில்தான் விஷயம் அடங்கியிருக்கிறதாம்! என்ன விஷயம் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்! நாம் அறிந்த வரையில் எத்தனை உபநிஷத் உள்ளன என்று காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திர சங்கராச்சாரியே கூடத் தெளிவாகச் சொல்லவில்லை. அல்லா உபநிஷத் என்றுகூட ஒன்று உண்டு. இந்துத்வ வக்கீல்களுக்கும் தெரியும். 1450 ஆண்டுகளுக்கு முன்புதான் அல்லா எனும் அரபிச் சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (அல்லா என்றால் அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும்.) அரபு நாடுகளில் முகமது நபிகளின் பிரச்சாரத்திற்கு முன்பு காட்டுவிலங்காண்டி களாகக் கண்டதையும் கும்பிட்டுக் கிடந்தார்கள். அதனைக் கண்டித்து அந்த உருவங்களை உடைத்து ஒரு கட்டடத்தில் போட்டு மூடித் திறக்க முடியாமல் செய்து, உருவமற்ற கடவுள் என்று நபிகள் பரப்புரை செய்தார் என்பது வரலாறு. அந்த அல்லா பெயராலே உபநிஷத் இந்து மதத்தில் இருக்கிறதென்றால்… உபநிஷத் பித்தலாட்டம். இந்து மதமே பித்தலாட்டம். இது புரிந்ததனால்தான் அம்பேத்கர் வேண்டாத குப்பையைத் தள்ளுவதைப் போலத் தள்ளியிருப்பாரோ!
கடவுள் என்பதே மாயை அல்லது அறியாமை எனக் கூறிய ஆதிசங்கரனின் அத்வைத வேதாந்தத்தின் முதுகெலும்பை முறித்துப் போட்டவர் மத்வர். துவைதம் பேசியவர். அத்வைதத்தைக் குழிதோண்டிப் புதைக்கக் கடவுளே பிறப்பெடுத்து வந்துள்ளதாக எதிர்க்குரல் எழுப்பினாரே மத்வர்! இந்திய ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவரானாரோ! இந்துத்வவாதிகள் விளக்குவார்களா?
என்ன உபநிடதம்?
இவர்களை ஒரு பக்கத்தில் உபநிடதப் பெருமை பேசுகிறார்கள். மறு பக்கத்தில் அத்வைதத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். இரண்டும் மாறுபாடு கொண்டவை ஆயிற்றே! உபநிடதங்களில் சிறப்பான ஸ்வேதஸ்வதார உபநிடதம் கடவுள் நம்பிக்கையை அதிகமாகப் பேசுகிறதே! மாயை எனக் கூறித் தள்ளி விடவில்லையே! அனைத்தும் அறிந்த மிகப்பெரும் ஆற்றல் பெற்ற கடவுளாக வருணிக்கிறதே! எதை ஏற்றுக் கொள்வது?
அதர்வ வேதப்பாடல் (19-_54) படைப்புச் செயல் தொடங்கப்பட்டு, காலம் செல்லச் செல்ல, பேரண்டம் முழுவதும் உருவான பின்னர், உருள வைத்ததால் அதுவே பிரமன் என்கிறது. காலமே பிரமன் என்பதை பெரும்பாலான உபநிடதங்கள் ஏற்கவில்லை. காலமே அனைத்தின் மூலம் என்பதை வேதப் புரட்டு எனக் கூறிவிட்டது ஸ்வேதஸ்வதா உபநிடதம். எதனை ஏற்பது? இந்துத்வர் எதனை ஏற்கின்றனர்? அம்பேத்கரை விடுங்கள். இவர்கள் எந்தப் பக்கம்?
பல இந்துத்வர்கள் அம்பேத்கரின் நண்பர்களாம். நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாம். அவர்கள் யார், யார் எனத் தெரிவித்தால் நாமும் அவர்களைத் தெரிந்து கொள்ளலாம். மதிக்கத் தொடங்கலாம். எழுதுபவர்களும் பேசுபவர்களும் எந்த ஆதாரத்தையும் தராமலே உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாதிகளை ஒழிக்க வருவார்களா?
இந்து ஒற்றுமைக்கு ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமென அம்பேத்கர் சொன்னார் எனக் கூறுகிறார்கள். சரி, வைத்துக்கொள்வோம். இதனை இந்துத்வர்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினரா? ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கூறினார்களா? பார்ப்பனர்களில் 1886 உள்பிரிவு ஜாதிகள் உள்ளன. அவற்றை மாநிலங்கள்வாரியாக, மாவட்ட வாரியாகப் பட்டியலிட்டுள்ளாரே அம்பேத்கர்! அதையாவது ஒழித்தார்களா? காயஸ்தாவில் சுமார் 600 ஜாதிகள் உள்ளன. ஒழித்தார்களா? ஒழிக்க வேண்டும் என்றாவது சொன்னார்களா? உதட்டளவிலாவது சொன்னார்களா? அப்படி ஏதும் செய்யாத நிலையில் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புக் கருத்தை சிலாகித்துப் பேசும் தார்மீகத் தகுதி இவர்களுக்கு ஏது?
பாகிஸ்தானில் உள்ள இந்து, கஷ்மீரில் உள்ள இந்து, பவுத்த, சீக்கியர்களின் எதிர் காலப் பாதுகாப்பு பற்றி அம்பேத்கர் கவலைப்பட்டார் எனத் திசைதிருப்புகிறார்கள்! கஷ்மீரில் உள்ள மூன்று மதத்தினரின் பாதுகாப்பின்மைக்கு யார் காரணம்? காஷ்மீரின் ராஜாவாக இருந்து சரியான முடிவைச் சரியான நேரத்தில் எடுத்து அறிவிக்காத இந்து மன்னன் ஹரிசிங்தானே காரணி? சுயராஜ்ஜியத்தைக் காப்பாற்றுவதைவிட இந்துக்களைக் காப்பது முக்கியமென்று அம்பேத்கர் அக்கறைப்பட்டாராம்? எங்கே ஆதாரம்? இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு விடுதலை தந்தால் இந்தியாவை நேபாள மன்னரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துத்வ நாயகன், வார்த்தையை வடிவு அமைத்தவன், தத்துவங்களை வரையறுத்தவன் என்ற ‘பெருமை’ பெற்ற சாவர்க்கார் சொன்னது உண்டா? இல்லையா? நாட்டைப் பற்றியோ, நாட்டின் இறையாண்மை பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் மதம் பற்றியே நினைத்துப் பிதற்றிய சாவர்க்கரைப் போற்றுபவர்கள் அம்பேத்கரைப் பற்றி எதையும் பேசிடக் கொஞ்சமும் அருகதையற்றவர்கள்! சொந்தம் கொண்டாடத் தகுதியற்றவர்கள். இவர்கள் எப்படி அவரை இந்துத்வ அம்பேத்கர் என்று பேசலாம்? எழுதலாம்? அறிவு கெட்ட செயல். நாணயம் இல்லாச் செயல். அறிவு நாணயம் இல்லாத செயல்.
(கேள்விகள் தொடரும்…)
– சு.அறிவுக்கரசு