– தந்தை பெரியார்
புது பக்தன்:- சிவனுக்குத் திருப்பணி செய்பவர்கள்; அதாவது கல்லினால் கோவில் கட்டுபவர்கள், கும்பாபிஷேகம் செய்பவர்கள் பழைய கோவில்களை ரிப்பேர் செய்து புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்பவர்கள் ஆகிய எல்லோரும், கைலாயத்தில் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து கற்பகோடி காலம் வாழ்வார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்களே, இது மெய்தானா?
பழைய பக்தன்:- அட பயித்தியமே! எந்த மடையன் சொன்னான் உனக்கு இந்தப்படி?
புது பக்தன்:- ஏனய்யா! சந்தேகம் கேட்டால் கோபிக்கிறீர்கள்? விவரம் சொல்லுங்கள்.
பழைய பக்தன்:- இதற்கு சந்தேகம் என்னப்பா வந்தது? சொல்லுகிற மடையனோ, அயோக்கியனோ சொன்னால், கேட்கிறவனுக்குப் புத்தி வேண்டாமா? எவனாவது மலத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அய்யா, இது ஜவ்வாது என்று சொன்னால், மூக்கு நன்றாய் இருக்கிற ஒருவன் அதில் சந்தேகப்பட்டு, ஏனய்யா இது ஜவ்வாதா என்று கேட்பானா?
புது பக்தன்:- இது என்ன உபமானமய்யா! எனக்குப் புரியவில்லையே.
பழைய பக்தன்:- அட முண்டமே, இந்த உலகத்தில் சிவனுக்குக் கல்லில் கோவில் கட்டித் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து, சிவனுக்குக் கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணி, தினம் மூன்று வேளை, ஆறு வேளை பொங்கல் படைப்புக்கு பூமி எழுதி வைத்த பக்த சிகாமணிகளை, இந்த உலகத்திலேயே இவற்றையெல்லாம் சிவன் நேரில் கண்ணில் கண்டுகூட அப்படிப்பட்டவனைத் தன் கிட்ட வந்து தொட்டுக் கும்பிடவோ, தன் பக்கத்தில் நின்று நேரில் பிரார்த்தனை செய்யவோ அந்த சிவன் சம்மதிப்பதில்லையே, பக்தன் பாஷையே சிவனுக்குப் புரிவதில்லையே. அப்படி இருக்க, இவற்றையெல்லாம் நேரில் காண முடியாத இடமாகிய கைலாயத்தில் இருக்கும் சிவன் திருப்பணி செய்தவனைக் கிட்டச் சேர்க்குமா? இவன் செய்த திருப்பணி சங்கதி சிவனுக்கு எப்படித் தெரியும்?
தெரிந்தாலும் இங்கே சேர்க்காத சிவன் அங்கே சேர்க்குமா? அதுவும் இங்கு கல்லில் இருக்கும் சிவன் சேர்க்கவில்லை என்றால் நிஜமா இருக்குமா? சிவன் சேர்க்குமா? இது தெரியாமல் ஒரு சந்தேகம் என்கிறாயே! சந்தேகமா; மடத்தனமா?
புது பக்தன்:- அய்யய்யோ. நீங்கள் சொல்லுவது பார்க்கிறதுக்கு நிஜமாய் இருந்தாலும், அது உண்மையல்ல. ஏனென்றால், இங்கு இருக்கும் பார்ப்பனர்கள் அப்படிச் செய்து நம்மை அவமானப்படுத்துகிறார்கள். சிவபெருமான் அப்படிப்பட்டவரல்லவே.
பழைய பக்தன்:- அட மடக் குன்றே! பார்ப்பனர் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள், சிவபெருமான் கூடவே கைலாயத்தில் இருந்து இங்கு வந்தவர்களும், பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களுமாவார்கள். சாஸ்திரங்கள் அந்தப்படி, அதாவது இந்த மக்களைக் கிட்ட நெருங்கிவிடக் கூடாது என்று சொல்லுவதனால் பார்ப்பனர்கள் அப்படிச் செய்கிறார்கள். ஆதலால், பார்ப்பனர்கள் மீது குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ளவோ, சிவனைக் காப்பாற்றவோ பார்க்க வேண்டாம்.
புது பக்தன்:- அய்யய்யோ, அந்த சாஸ்திரம்கூட இந்தப் பார்ப்பனர்கள் எழுதியதுதானே. இதற்கு சிவன் என்ன செய்வார்?
பழைய பக்தன்:- அட களிமண் உருண்டையே, அந்த சாஸ்திரத்தை நீ எப்போதாவது பார்த்தாயா? நான் பார்த்து இருக்கிறேன். நீ சொல்லும் அந்த சாஸ்திரம் பார்வதிக்குப் பரமசிவனே நேரில் சொன்னது, அதை நந்தி கேட்டிருந்து நமக்குச் சொல்லப்படுவதாகும். அதிலேயே அப்படி இருக்கிறது. ஆதலால், சாஸ்திரத்தில் அவநம்பிக்கை வைக்க வேண்டாம்.
புது பக்தன்:- அய்யா நீங்கள் வேண்டுமென்றே பேசுகிறீர்கள் போல் தெரிகிறது. பார்ப்பனர் தங்கள் பிழைப்புக்கும், மேன்மைக்கும் எழுதி வைத்த ஏடுகளை எடுத்துக் கொண்டு அதை சாஸ்திரமென்றால் செல்லுமா? அப்படி எந்தக் கடவுளாவது சொல்லி இருக்குமா? என்ன அய்யா இப்படிப் பேசுகிறீர்கள்?
பழைய பக்தன்:- நான் பேசுவது தப்பு என்கிறாய், – அப்படியானால் நீ யோசித்துப் பார். என்னை எதற்கு ஆக ஒரு சந்தேகம் என்று கேட்க வந்தாய்? சாஸ்திரங்களில் சொல்லப்படுவது உண்மையா என்றுதானே கேட்க வந்தாய்?
புது பக்தன்:- இப்போது நீ குறித்துக் கொண்டு வந்த சாஸ்திரம் மெய்யா, பொய்யா என்று தெரிந்து கொண்டாயா? அதை யார் என்ன காரியத்திற்கு எழுதினார்கள் என்றும், அதை நம்பலாமா, வேண்டாமா என்றும் தெரிந்து கொண்டாயா? சாஸ்திரம் என்றால், கல்லில் கோவில் கட்டினவர், கற்பகோடி காலம் கைலாயத்தில் சிவனோடு கலந்திருப்பார்கள் என்று எழுதப்பட்டிருப்பதும், சூத்திரர்கள் கோவில் கட்டியவர்களாயிருந்தாலும், (சிவனையே) செய்து வைத்தவர்களாயிருந்தாலும் சிவனைத் தொட்டுவிட்டால் _ உள்ளே நுழைந்துவிட்டால் மகா பாவம் என்பதல்லாமல் சிவனும் தீட்டுப்பட்டுவிடுவான் என்று எழுதப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இந்த இரண்டும் ஒருத்தன் எழுதியதுதான்.
புது பக்தன்:- சரி சரி, இப்போது தெரிந்து கொண்டேன்.
பழைய பக்தன்:- அப்படி வாப்பா! இப்போது புரிந்ததா என் உதாரணம்.
புது பக்தன்:- புரிந்தது புரிந்தது. எல்லாம் புரட்டு என்பதும், இந்தத் திருட்டுப் பசங்கள் எழுதினதென்பதும் நன்றாய்ப் புரிந்தது.
பழைய பக்தன்:- அய்யனே! உனக்கு அறிவு இருக்கிறது, கண் இருக்கிறது, அனுபவம் இருக்கிறது. இவ்வளவையும்விட்டு, மனுஷ னுக்குப் பிறக்காத நிஜமாய் இருந்திருக்காத, எவனோ ஒரு மடையன் எப்போதோ, எதற்காகவோ சொன்னதை, நம்பினதை எடுத்துக் கொண்டு, என்னிடம் வந்து பொய்யா, மெய்யா, சந்தேகம் என்கிறாயே? இப்படித்தானே மனிதரில் பெரும்பாலோர் இதுபோல் ஒன்றுக்கொன்று முரணான எத்தனையோ காரியங்களை நம்பியும், சந்தேகப்பட்டும், பேராசைப்பட்டும் மாடுகளாக ஆகிவிட்டார்கள். போ, இனியாவது இம்மாதிரிக் காரியத்துக்குச் சந்தேகம் கொள்ளாதே.
புது பக்தன்:- சரி புத்தி வந்தது. போய் வருகிறேன்.
பழைய பக்தன்: போய்த் தொலை.
சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
(விடுதலை 2.3.1950)