கே: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கேரளா சாதித்ததை தமிழக அரசு செய்யத் தயங்குவது ஏன்? அவர்களைத் தடுப்பது எது?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப: எடப்பாடி அரசு ‘அம்மாவின் அரசு’ என்றும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலை உண்மையென்றால், அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி (Assurance committee) சட்டப்படி செயல்படுத்த வேண்டும். இதில் போதிய கவனஞ்செலுத்திட துணிவோ, தெளிவோ இதுவரை இவர்களிடம் ஏற்படவில்லை. எனவே, தொடர் போராட்டங்கள் தவிர்க்க இயலாதது!
கே: பட்டினியால் வாடும் உலகநாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இதுதான் மோடியின் பி.ஜே.பி. ஆட்சி தந்த வளர்ச்சியா?
– வி.நிலா, மயிலாப்பூர்
ப: ‘விகாஸ்’ (development) -_ வளர்ச்சி என்பதற்கு பிரதமர் மோடி அரசின் அர்த்தம் அதுதான்?
கே: வன்முறை, மிரட்டல், கண்ணைத் தோண்டுவோம்’ என்று சரோஜ் பாண்டே போன்ற பா.ஜ.க முக்கியத் தலைவர்களே பேசியதும், அதை மோடி அனுமதிப்பதும் அசல் பாஸிச அடையாளமல்லவா?
– ம.விக்ரம், காட்டாங்கொளத்தூர்
ப: ‘ஆம் என்’
கே: கமல்-ரஜினி அரசியலில் ஈடுபடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் சேர்ந்து 10% வாக்கு கூட கிடைக்காது என்று சாருகாசன் கூறியிருப்பது பற்றி தங்கள் கருத்து?
– மூ.வசந்த், விழுப்புரம்
ப: அவரது அனுபவம் -_ சரியான பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் அதனை நோக்கியதன் விளைவு.
கே: ‘தீபாவளி பட்டாசு வெடிப்பால் ஏற்படும் காற்று மாசு, ஒலி மாசு பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் நிலையில் அதைச் சட்டரீதியாக நீதிமன்றம் மூலம் தடுக்க முடியாதா?
– க.தென்றல், ஆவடி
ப: நீதிமன்றங்கள் _ உச்சநீதிமன்றத் தீர்ப்பையே பா.ஜ.க.வினர் மட்டுமல்ல சில கவர்னர்களும், பா.ஜ.க. முதல்வர்களும்கூட மதிக்கவில்லையே! ‘பட்டாசு கொளுத்துவேன்’ என்று வீம்புடன் பேசி நடந்து கொண்டார்களே! அவர்கள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது? ஒன்றும் இல்லையே!
கே: பரிசு கொடுத்து, பக்தியைப் பரப்ப வேண்டிய பரிதாப நிலைக்கு ஊடகங்கள் வந்துள்ளது எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: ஆசை வெட்கமறியாது! பண வருவாய் _ ஆசை, மானத்தையும் பகுத்தறிவையும்கூட ‘தியாகம்’ செய்துவிடுகிறதே!
கே: அறிஞர் அண்ணா ஒரு அக்னாஸ்டிக் (கடவுள் கவலையில்லாதவர்) என்று சிலர் சொல்கிறார்கள். அண்ணா அக்னாஸ்டிக்கா? நாத்திகரா?
– கதிர்நிலவன், கல்லல்.
ப: ‘நாத்திகர்’ என்று அவரே எழுதியுள்ளார். ஆனால், அவர் கட்சிக்கு வாக்கு வாங்குவதற்கு ‘ஒருவனே தேவன்’ என்றார் என்பதே அப்பட்டமான உண்மை!
கே: பஞ்சாப் மக்களவை இடைத்தேர்தல், கேரள சட்டசபைக்கான இடைத்தேர்தல் இவற்றில் ஏற்பட்ட பா.ஜ.க.வின் தோல்வி தொடர முனைப்பான நடவடிக்கைகளை அகில இந்திய அளவில் முடுக்கிவிட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முனையுமா? அதற்குத் தங்கள் ஆக்கப்பணி தொடருமா?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப: “காலத்தின் கட்டாயம் அது; எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் புரிந்து செயல்படுகிறார்கள்’’ என்பது போகப் போகத் தெரியும். தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர்வதுதானே புத்திசாலித்தனம்.
கே: ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம், “இடைநில்லாது நடக்கவும், தாங்கள் கூறியபடி நீதிமன்றம் மூலம் தீர்வு பெறவும் ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கையை தாங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்’’ என்ற எங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறுமா?
– பெரியார் பித்தன், சென்னை-51.
ப: நிச்சயமாக! நீதிமன்றக் களத்தையும் நாடித்தான் உரிமையை நிலைநாட்ட முடியும். செய்வோம் நம்புங்கள்!