விற்பனை செய்யப்பட்டவன்
பத்துப் பொம்மைகள்
தயாரித்தேன்
அழும்
கடைக்குட்டிக்கு ஒன்றைக்
கொடு என்று
புத்தர் பொம்மை சொன்னது;
கேட்கவில்லை நான்
பணச் செலவுக்குப்
பட்டியல் போட்டேன்
பள்ளிக்குப் போகும்
பொண்ணுக்குப்
புதுச் செருப்புகள் வாங்க
அப்பாவுக்கு
ஒரு புதிய குடை வாங்க
அம்மா கேட்ட
தோசைக்கல் வாங்க
படுத்துக் கிடக்கும்
பாட்டிக்குச்
சுமார் வகைப் புடைவை
ஒன்று வாங்க
பட்டியலில்
எனக்கு
அடுத்துப் பத்துப்
பொம்மைகள் செய்யத்
தேவையான பொருள்கள்
வாங்க
எவரிடமும் இதுபற்றி
நான் சொல்லவில்லை
எவரும் கேட்கவும் இல்லை
ஆனால்
எப்படியோ என் மனத்துள்
வந்து
எல்லாவற்றையும்
பொம்மைகள்
குறிப்பெடுத்திருக்கின்றன
விடிந்ததும்
வெள்ளிக்கிழமைச்
சென்னிமலைச் சந்தைக்குப்
புறப்பட நான்
விழித்தபோதுதான்
தெரிந்தது
பொம்மைகள் எல்லாம்
சேர்ந்து
பொம்மைகள் தயாரிக்கும்
வெளிநாட்டு நிறுவனத்திற்கு
என்னை விற்றிருந்தன.
இருட்டு விற்பனைக்கு
இடம் தராத சூரிய தேசம்
நடுகற்களின் நடுமார்பு பிளந்து
நாடெங்கும் முன்னைய வீரர்கள் திரண்டு வந்தனர்
புறநானூற்றுக்கு எப்படி இப்படிப்
புதிய மூச்சுகள் கிடைத்தன?
வியப்பில்
நெற்றியை வருடியபடி நின்றது
வரலாறு
உடையும்,
தமிழின அடையாளம்
அழிக்கும் அநீதி என்று ஆர்ப்பரித்த அவர்களோடு
கடல் அலைகள் கைகள் கோத்தன
காற்றின் குரல்வளைகள் முரசுகொட்டின
தனது சிலையைத் தானே திறந்துவந்த
கனல் பாவலன் பாரதி
பலேபையன்களா! என்று
தட்டிக் கொடுத்தான்
தனது சிலைப் பீடத்துள்
திரட்டி வைத்திருந்த கொலைவாள்களைப்
புரட்சிக்கவிஞர் எடுத்துக்கொடுத்தார்
எந்தத் தருணத்திலும்
இவர்கள் நெறிமுறை பிறழவில்லை
எந்த நிலையிலும்
இவர்கள் எவர்க்கும் விலைபோகவில்லை
இவர்கள் மாணவர்கள்
எனினும் கற்க வந்தவர்கள் இல்லை
கற்பிக்க வந்தவர்கள்
இவர்கள் மாணவர்கள்
எனினும் தேர்வெழுத வந்தவர்கள் இல்லை
தேர்வு வைக்க வந்தவர்கள்
கடலே தனது கரையைத்
தீர்மானிப்பதுபோல
யுகமே தனது வருகையை, இருப்பைக்
கடப்பைத் தீர்மானிப்பதுபோலக்
கட்டமைத்துப்
போராட்டக் களத்தைக் கண்டவர்கள் இவர்கள்
ஏறு தழுவுதல்
மஞ்சு விரட்டாய் மாறிப் பிறகு அதுவும்
விழுந்து ஜல்லிக்கட்டென்று
சொல்லுக்கட்டிக் கொண்டது
தமிழர் வீரமரபு விளையாட்டு
வேட்டு வைத்து இதனை வீழ்த்த
அதிகார அரசு ஆணையிட்டதும் ஒருகோட்டில்
அணிவகுத்து நின்றது இளைஞர் பட்டாளம்
இது சூரியதேசம்
இருட்டு விற்பதற்கு இடம்தர மாட்டோம்
இது தன்மான பூமி
அடகுக்கடைகள் திறக்க மாட்டோம்
ஆயுதம் இல்லை
ஆனால்போர் புரிந்தனர்
பிணங்கள் இல்லை
ஆனால் யுத்தம் செய்தனர்
இவர்களுக்குக் கொடிகள் இல்லை
கொள்கை உண்டு
இவர்களுக்குக் கட்சிகள் இல்லை
காரியங்கள் உண்டு
தமிழ்நாட்டின் தட்பவெப்பங்களைத்
தயாரிக்கும்
தன்னேரில்லாத் தானை மறவர்களைக் காண
மாவோ வந்தார் சேகுவாரா வந்தார்
காஸ்ட்ரோ வந்தார்
இவர்கள் கூடவே சாகாத் தமிழ்ப்போராளி
பிரபாகரன் வந்தார்
எம் இளைஞர்கள்
ஒளியின் விடுதலையாகப் புறப்பட்டு வந்தனர்
ஊரும் உலகும்
திரிகளாய் இருந்து ஏந்திக்கொண்டன
நான் என்ன செய்ய?
இவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களைத்
திறந்து வைக்கும்படி
என் கவிதைகளை அழைக்கிறேன்
இவர்களுக்குப் பாசறை விளக்குகள் தயாரிக்க
என் பகல்களுக்கு ஆணை பிறப்பிக்கிறேன்.