17.12.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், “சேலம் உருக்காலை தமிழர்களுக்குக் கிடையாதா?’’ என்ற நீண்டதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சேலம் உருக்காலை அமைய வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் நமது இயக்கமும் ஏனைய தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒருமனதாகக் குரல் கொடுத்தன. நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு அங்கே ஒரு உருக்காலையை அமைக்க முன்வந்தது மத்திய அரசு.
அறிவித்துப் பலகாலம் ஆகியும், பணிகள் தொடராமல் இருந்தன. அதற்காகவும் கூக்குரல் கிளம்பியது; பிறகு ஆமை வேகத்தில் பணிகள் நகர்ந்தன.
இப்படி துவக்கப்பட்டு நடைபெற்றுவரும் உருக்காலையில் சேலம் உருக்காலைக்காக தங்களது விவசாய நிலங்களை எல்லாம்கூட அரசுக்கு மகிழ்ச்சியுடன் தர முன்வந்த சுற்றுவட்டார கிராம மக்களின் குடும்பத்தினருக்குக் கூட வேலைவாய்ப்பில் முன்னுரிமை தராமல், வாய்ப்புகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து விரிவாகவும் விளக்கமாகவும் அந்த அறிக்கையில் விளக்கியிருந்தேன்.
இதனை விளக்கி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, முக்கிய வீதிகளின் வழியாக மக்கள் ஊர்வலம் நடத்தி, விளக்கி உரையாற்றினேன்.
தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவருமான உண்மைத் தியாகியான திரு. கக்கன் அவர்கள், 23.12.1981 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் காலமானார். இதனைக் கேட்டு ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் இரங்கல் செய்தி அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், பொது வாழ்வில் எளிமையும், தூய்மையும் நிறைந்த திரு.காமராசரின் அரிய லட்சியத் தொண்டரான அவரது மறைவின் மூலம் தமிழ்நாட்டுப் பொதுவாழ்வு ஒரு நல்ல மனிதரை, ஒரு பெரியாரை இழந்துவிட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுடன், சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
23.12.1981 அன்று, “சென்னை உயர்நீதிமன்றமும் புது நீதிபதி நியமனங்களும்’’ என்ற தலைப்பில் முக்கியமான தலையங்கம் ஒன்றை நான் எழுதியிருந்தேன். அதில் மத்திய, மாநில நீதிமன்ற பொறுப்பாளர்களுக்கு முக்கியமான வேண்டுகோளும் விடுத்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி தற்போது காலியாகவே இருக்கிறது. மாண்புமிகு ஜஸ்டிஸ் திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அவர்கள் இன்னமும் பொறுப்பு வகிக்கும் தலைமை நீதிபதியாகவே (Officiating Chief Juistice) பணியாற்றி வருகிறார். இத்துடன் 3 நிரந்தர பதவிகளும் 4 கூடுதல் நீதிபதி பதவிகளும் நிரப்பப்பட வேண்டி உள்ளது.
இவைகளை நிரப்ப அரசு, உயர்நீதிமன்ற பரிந்துரைகள் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது உள்ள 20 நீதிபதிகளில் (இன்னும் சில நாட்களில் ஒரு பார்ப்பன நீதிபதி ஓய்வு பெறப் போகிறார்.) பார்ப்பனர் எண்ணிக்கை நான்கு ஆகும். அதேநேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் விகிதாச்சாரப் (தவறான புள்ளி விவரப்படி 18 சதவீதத்திற்குள் என்றாலும் நடைமுறையில் அவர்கள் உண்மை நிலவரப்படி சுமார் 22 முதல் 25 சதவீதம் வரை இருக்கக் கூடும்) படி அவர்களுக்கு அவர்களது பதவி கிடைக்க வேண்டாமா?
ஒழுக்கம், அறிவு, அனுபவம், சட்டஞானம் உள்ள தமிழர்கள் மாவட்ட நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் இன்னும் ஏராளம் இருக்கின்றனர். (From the bench and from the bar) ஆகவே, அவர்களது வாய்ப்பு தரும்போது சமூகநீதிக் கண்ணோட்டம் மிகவும் அவசியமாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டேன்.
01.01.1982 அன்று மதுரையில் நடைபெற்ற தந்தை பெரியார் 103ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டமும், எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும், இரவு மதுரை வடக்கு மாசி_ மேலமாசி வீதி சந்திப்பில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி அம்சவல்லி கோபால் நினைவு மேடையில் சிறப்புடன் துவங்கியது.
வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினிடையேஎன்னை தராசின் தட்டில் உட்காரவைத்து மறுதட்டில் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஒவ்வொருவராக வந்து ரூபாய் நாணயங்களை அள்ளிப் போட்டனர். மதுரை வடக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வள்ளல் பே.தேவசகாயம் முதலாவது ரூபாய் நாணயத்தை தராசுத் தட்டில் அள்ளிப் போட்டுத் துவக்கி வைத்தார். தொடர்ந்து புலவர் கண்மணி டி.சுப்பிரமணியம், அன்னத்தாய் தேவசகாயம், எடிசன், ம.நடராசன், திருமதி நடராசன், செயலட்சுமி, சேர்மக்கனி, சிம்மக்கல் பாண்டியன், வடக்குவீதி வரதராசன், பழங்காநத்தம் தெட்சிணாமூர்த்தி, மேலூர் வழக்குரைஞர் கி.மகேந்திரன், திண்டுக்கல் பெ.கு.பூமண்டலம், பே.செல்வராசு, வாடிப்பட்டி சுப்பையா, டி.டி.வீரப்பா, கா.மா.குப்புசமி, கு.இராம கிருட்டிணன், க.பார்வதி, கோ.சாமிதுரை, குணசீலன், ச.இன்பலாதன் மற்றும் ஏராளமான கழக முன்னணித் தோழர்கள், தோழியர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வாழைப்பழத்தார், கடிதம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களையும் எனக்கு அன்று வழங்கினார்கள் என்பது மகிழ்வுடன் நினைவுக்கு வருகிறது.
அகில இந்திய முஸ்லீம் லீக்கின் சென்னை மாவட்ட மாநாடு 02, 03.01.1982 அன்று பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நான்கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
காயிதேமில்லத் அவர்கள் இருந்தபோது தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் எவ்வளவு அன்போடு நெருக்கமாக இருந்தார்கள் என்ற பழைய வரலாற்றை மாத்திரம் உங்களுக்கெல்லாம் சொல்வது போதாது என்றும், திராவிடர் இயக்கம் எப்போதும் இஸ்லாமியச் சமுதாய நண்பர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய சமுதாய நண்பர்கள் திராவிடர் இயக்கத்தோடு ஒன்றிப் போயிருப்பார்கள் என்பது வரலாறு.
6, 7, 8.01.1982 ஆகிய மூன்று நாட்கள் (மதுரை) எழுமலை, கோம்பை, சின்னமனூர் என்று மூன்று ஊர்களுக்கு மட்டும் மூன்று நாள்களுக்குத் தேதி தந்து சென்றேன்.
06.01.1982 உசிலம்பட்டியிலிருந்து உள்பகுதியாகச் செல்லவேண்டிய ஊர் எழுமலை. அவ்வூலிலிருந்து மனுதர்மத்தினை எரித்து சிறை சென்ற தோழர்கள் அய்வருக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ள இடம் உள்அடக்கிய பகுதி. இதற்கு முன் நமது கழகப் பிரச்சாரமோ, கொடிகளோ பறந்திடாத பகுதி.
இப்போது ஏராளமான இளைஞர்கள் அவ்வூரிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் வந்துள்ளனர்.
பேசச்சொல்லி அன்பு மறியல்!
‘தந்தை பெரியார் நகர்’ என்றே ஒரு புதிய பகுதிக்குப் பெயர் வைத்து திறக்கும்படிச் செய்தனர்!
கொடியேற்று விழா என்ற நிகழ்ச்சியோடு மிகவும் உற்சாகமான வெடி, தாரை, தப்பட்டைகளுடன் வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பு கொடுத்து முடித்து மேடைக்கு அழைத்துச் சென்றனர். மின்சாரம் இல்லை. இருள்! சுமார் இரண்டரைமணி நேரம் மின்சாரம் இல்லாமலேயே மாலை 7.30 மணியிலிருந்து 10 மணிவரை மேடையிலே அமர்ந்து இதோ இப்போது வரும், இதோ வந்துவிடும் என்று எதிர்பார்த்தே அமர்ந்திருந்தோம். ‘எத்தனை மணியானாலும் மின்சாரம் வந்து, வெளிச்சத்தில் நீங்கள் பேசிவிட்டுத்தான் செல்ல வேண்டும்’ என்று கூறி மறியல் செய்பவர்களைப் போல, அவ்வூரில் கூடிய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அப்படியே அமர்ந்திருந்தது உள்ளபடியே வியக்கத்தக்கதொரு காட்சியாகும்.
அவ்வூரில் உள்ள திரு.சொக்கரும், அவருடன் இணைந்து பணியாற்றிய நமது கழக இளைஞர்களும், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு.தங்கராசு (நீதிபதி சத்தியேந்திரன் அவர்களது நெருக்கமான உறவுக்காரர்) அவர்களும் மற்றும் கட்சி வேறுபாடு இன்றி பல கட்சித் தமிழர்களும் மிகவும் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
இரவு 12.30 மணி அளவில் கூட்டம் முடிவடைந்து திரு.தங்கராசு அவர்களது இல்லத்தில் உணவு அருந்தி புறப்பட்டு, மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் திரு.தேவசகாயம் அவர்களுடனும், மேற்கு மாவட்டச் செயலாளர் ரகுநாகநாதன் அவர்களுடனும் உத்தம பாளையம் பயணர் விடுதிக்கு விடியற்காலை 3.30 மணி அளவில் வந்து படுத்தோம்.
அடுத்த நாள் 07.01.1982 அன்று பகல் 3.30 மணி அளவில் உத்தமபாளையம் கருத்தா ராவுத்தர் கலைக் கல்லூரியில் ‘திட்ட அரங்கு’ சார்பில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, சென்று கலந்துகொண்டபோது ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர்.
45 மணித்துளிகள் பேச்சும் மற்றொரு 45 நிமிடங்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பது என்று அறிவித்து அதன்படி பேசினேன்.
மாணவர்கள் ஏராளமான கேள்விகளை _ சந்தேகங்களை எழுதி அனுப்பிக் கேட்டனர். பதிலளித்ததை மிகுந்த உற்சாகத்துடன் மாணவ மணிகள் வரவேற்றனர். கல்லூரி நுழைவில் கழகக் கொடியேற்றி வைக்கப்பட்டது.
பிறகு மாலை 6 மணி அளவில் சுமார் 40 மாணவமணிகள் (எல்லாம் பட்டப்படிப்பு வகுப்புகளில் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலுபவர்கள்) வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு, திராவிட மாணவர் கழகம் அமைத்தனர்.
கொள்கை வேட்கையுடன் மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொருவரும் கருத்துரையாற்றினர்.
07.01.1982 அன்று கோம்பை நகரக் கூட்டத்திற்குச் சென்றோம். இரவு 7.30 மணி அளவில், அவ்வூரில் மிகப் பெரிய கூட்டம் அது. எல்லாக் கட்சித் தமிழர்களும் கூடியிருந்தனர்.
கூட்டத்தில் முக்கியப் பேச்சாளர் பேசுமுன்பு, அவ்வூர் கழகச் செயலாளர், அக்கூட்டத்திற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல், கூட்டச் செலவு, இருப்பு எல்லாம் படித்து முடித்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் இவர்கள் இப்படிச் செய்வது வழமையாம். இந்த முறை போடியிலும் உண்டு என்றார் வட்டச் செயலாளர்!
மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தோழர் அரசுத் தந்தை எம்.ஏ., அவர்கள் இளைஞர்களோடும் தோழர் களோடும் மிக நன்றாகப் பழகும் உழைக்கும் தகையாளர்; அவரும் எங்களுடன் இருந்தே சிறப்பான ஆக்கப்பணி புரிந்தார்.
07.01.1982 அன்று உத்தமபாளையம் ஹாஜி கருத்தா ராவுத்தர் ஹவ்தியா கல்லூரியில் திட்ட அரங்கின் சார்பில் நடந்த விழாவில், நான் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்.
எடுத்துக்காட்டாக,
வினா: இயற்கை சக்திகளையெல்லாம் அடக்கி ஆள்பவன் இறைவன்: அந்த இயற்கை சக்திகளுக்குள் ஒன்றான நிலவைத் தன்னுள் கொண்டிருப்பதில் என்ன தவறு?
என்று ஒரு மாணவர் கேட்டார். அதற்கு,
நிலவுக்கு 27 மனைவிகள்! நிலவுக்கு சிவன் தலையில் இடம் என்றால், 27 மனைவிகளுக்கு அங்கே இடம் உண்டா? என்று கேட்டு மாணவர்களைச் சிந்திக்கச் செய்தேன்.
08.01.1982 அன்று காலை சீலையம்பட்டியில் கடை வீதியில் கூட்டம். மின்சாரம் வழக்கம்போல் இல்லை. ஒலிபெருக்கி வைக்கப்பட்டு தேர்தல்கால கூட்டம்போல கடைவீதியில் பல நூற்றுக்கணக்கில் வெய்யிலையும் பொருட்படுத்தாது கூடினர் மக்கள்!
பெரியார் களஞ்சியத்தில் இடம்பெற்ற ஊர்!
1929ஆம் ஆண்டு சீலையம்பட்டியில் தாழ்த்தப்பட்டோர் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்ததை வரவேற்று அவ்வூரிலேயே அய்யா அவர்கள் பேசி அது பெரியார் களஞ்சியம் நூலில் இடம் பெற்ற ஊர்.
அங்கு 40, 45 மணித்துளிகள் பேசி, சுமார் பகல் 11.30 மணி அளவில் கோட்டூர் அடைந்தோம்.
நுழைவு வாயிலில் வரவேற்று கொடியேற்றச் செய்தனர்.
எதிரில் சங்கராச்சாரியார் அனுப்பிய அய்யப்ப உருவம் உள்ள ஜீப்பும் காரும் அவ்வூருக்குச் சென்று திரும்பி வந்தது. எங்களை கருஞ்சட்டையினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். பகல் 12 மணி அளவில் ஏராளமான கூட்டம்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்களே சுமார் 10,000 பேர் கொண்ட, சுமாரான வசதிபடைத்த கிராமம். 400 பட்டதாரிகள் அங்கே உள்ளனராம்!
மிகவும் உற்சாகமான வரவேற்பினை அளித்த நமது தோழர்கள் ரெங்கசாமி, சின்ன சொக்கர் போன்றவர்கள் முன்னின்று நடத்திய அக்கூட்டத்திற்கு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு.வேலுசாமி தலைமை தாங்கினார்.
நான் பேசத் துவங்குமுன் சவால் நிதிக்கு என தி.க., தி.மு.க., அ.தி.மு.க., கா.கா.தே.கா., இ.காங்கிரஸ், அய்யப்ப பக்தர்கள் உட்பட சுமார் 50, 60 ரூபாய் அளவுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நன்கொடை அளித்து உணர்ச்சியைக் காட்டினர்.
திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு தோழர் ரெங்கசாமி இல்லத்திற்கு திருநெல்வேலி மாநாட்டின் காரணமாக செல்ல இயலவில்லை.
இப்போது அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று வந்திருந்த அனைவருக்கும் அவர் உற்சாகமுடன் வரவேற்பு தந்தனர்.
பிறகு 1.30 மணிக்கு கூட்டம் முடிந்தது. பிறகு சீப்பாலக்கோட்டை திரு.துரை அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம்.
உற்சாகத்துடன் ஒரு கலந்துரையாடல்
அடக்கமும் அமைதியும் கொள்கை உணர்வும் கொண்ட சீரிய பகுத்தறிவுவாதியான அவர் தி.மு.க. செயல்வீரர்களில் ஒருவர்!
அவரது இல்லத்தில் உரையாடி, பகல் உணவு உண்டு சுமார் 4 மணிக்கு உத்தமபாளையம் பயணர் விடுதிக்குத் திரும்பினோம். மாவட்ட கழகத் தோழர்களின், பகுத்தறிவாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது.
அப்பகுதியில் சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி முதலிய ஊர்களில் அய்யா சிலை வைக்கவும் மாவட்ட மாநாடு நடத்தவேண்டும் எனவும் கேட்டு வற்புறுத்தினர் தோழர்கள்.
அய்யாவின் குடும்பம் அரியது; பெரியது!
சின்னமனூர் பொதுக்கூட்டம் அங்கே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அமைப்பாளர்களின் சலசலப்பு காரணமாக, வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரண்டது. சுமார் 2 மணிநேரம் உற்சாகத்துடன் பேச முடிந்தது!
பல ஊர் தோழர்களை திருப்தி செய்ய பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மூன்று நாள்கள் மீண்டும் வருகிறேன் என்று கூறியே திரும்பினேன். அவ்வளவு உற்சாக வெள்ளம்.
பகுத்தறிவு ஆசிரியர் அணியைச் சார்ந்த கோம்பை இரட்டையர்கள் தோழர் தங்கமுத்து, சாமிநாதன் போன்றோரின் அடக்கம் நிறைந்த உழைப்பு, அமைதியே உருவான மாவட்டத் தலைவர் பெரியகுளம் முத்துக்கருப்பையா அவர்களது துல்லியமான தொண்டு, 73 வயது பெரியவர்கள் வீரபத்தினார், தம்பிநாயக்கன்பட்டி வெள்ளைச்சாமி அய்யா போன்றவர்களது ஆர்வம் எல்லாம் அய்யாவின் குடும்பம் எவ்வளவு பெரியது; அரியது என்பதைக் காட்டியது. உற்சாக வெள்ளத்தில் மிதந்தே திரும்பினோம்.
வரவேற்கத்தக்க துணைவேந்தர் நியமனம்
12.01.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக பேராசிரியர் பி.எஸ்.மணி சுந்தரம், பேராசிரியர் சுப்பையா நியமனத்தை வரவேற்று முதல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் திருச்சியிலும், கோவையிலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் வரவேண்டும் என்று முதன்முலாக எழுதிய ‘விடுதலை’க்கு இந்த அறிவிப்புகள் உள்ளிட்டவையே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் இந்த இரு புதிய பல்கலைக்கழகங்களும் எல்லார்க்கும் கல்வி பயன் தரத்தக்க கல்வியைத் தரும் என நம்பி அவ்விரு பெருமக்களையும் மனதாரப் பாராட்டி மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்திருந்தேன்.
25.01.1982 அன்று “மதச்சார்பின்மையும் ஒழுக்க போதனையும்!’’ குறித்தும், மதச்சார்பின்மை (ஷிமீநீuறீணீக்ஷீவீsனீ) என்று கூறிக்கொள்ளும் இந்தியத் துணைக்கண்ட அரசின் போக்கு எவ்வளவு தலைகீழாக மதவெறித்தனமான தாண்டவமாக இருக்கிறது என்பதற்கு அண்மையில் மத்திய கல்வி பண்பாட்டுத்துறை அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையைக் காணும் எவரும் வேதனை அடையவே செய்வர். பகுத்தறிவாளர் அனைவரும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கவே செய்வார்கள்! என்று விடுதலை அறிக்கையில் விளக்கி எழுதினேன்.
‘இந்து’வின் ஒப்பாரி
02.02.1982 அன்று ‘விடுதலை’யில் “இடஒதுக்கீட்டுக்கு எதிராக ‘இந்து’வின் ஒப்பாரி!’’ என்ற தலைப்பிட்டு தலையங்கம் எழுதியிருந்தேன்.
கல்வி, உத்தியோகத் துறைகளில் இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை (ஸிமீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ) எப்படியும் ஒழித்துக்கட்டிவிட வேண்டுமென்று இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் வெகுநீண்ட காலமாக ஒற்றைக்காலில் நின்று “தவம்’’ புரிந்து வருகின்றனர்.
குஜராத்தில் முன்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கலவரங்கள், வன்முறைகள் ஏற்படுவதற்கு மூலக்காரணம் அங்கேயுள்ள உயர்ஜாதியினரின் இடஒதுக்கீடு கூடாது என்ற ஏடுகளின் தூண்டுதலே காரணம் என்பதைப் பார்ப்பன ஏடான ‘துக்ளக்’ போன்றவைகளே கூட சென்ற ஆண்டு படம் பிடித்துக் காட்டியதை இந்த நேரத்திலே நினைவூட்ட வேண்டியது நமது கடமையாகும்!
நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில்சிங் அவர்கள், ‘இடஒதுக்கீடு குறித்து இனி மறுபரிசீலனை, விவாதம் என்பதற்கு இடமே இல்லை. விவாதத்திற்கு அப்பாற்பட்டதொரு பிரச்சினை (ஜிலீமீ ஸிமீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ வீssuமீ வீs ஸீஷீt ஸீமீரீஷீtவீணீதீறீமீ) என்று அறிவித்ததை ‘இந்து’ ஏடு குறிப்பிட்டு, மற்றவரின் துன்பத்தைப் போக்க மத்திய, மாநிலஅரசுகள் முன்வர வேண்டும் என்று எழுதுகிறது.
மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரையை ஏற்காமல் தடுப்பதுதான் இந்த முயற்சியாகும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி முடிவு சொல்ல வேண்டியது நியாயமான ஒரு அரசின் கடமையே தவிர இதைப்பற்றி அது எவ்வளவு அளவு இருக்க வேண்டும்? எத்தனை விழுக்காடு இருக்க வேண்டும்? என்று அரசுக்கு ஆணை பிறப்பிப்பதுகூட நீதிமன்றங்களின் பணி அல்ல என்பதை அரசியல் சட்டம் பற்றி ராஜீவ் தவான் அவர்கள், “இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்’’ என்ற நூலில் 436-_437 பக்கங்களில் எழுதியுள்ளார் என்பதை எல்லாம் எடுத்துக்காட்டி ‘இந்து’ ஏட்டிற்கு நமது கண்டனத்தையும், காரணத்தையும் விளக்கி எழுதியிருந்தேன்.
சிங்காரவேலு – சரோஜி வாழ்க்கை ஒப்பந்தம்
சென்னை அயன்புரம் இணைப்புப் பெட்டி தொழிலகம் கம்பர் அரங்கில் 03.01.1982 அன்று சிங்காரவேலு _சரோஜினி ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழாவை நான் முன்னின்று நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றும்போது, இந்த இயக்கம் மாத்திரம் கொள்கைக் குடும்பம் அல்ல, இந்த இயக்கம் கொள்கைக் குடும்பமாக இருந்து பணியாற்றுவதே தமிழ்ச் சமுதாயம் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுக்காகத்தான். எனவே, இது ஒரு குடும்ப விழா. நாளைக்கு அவர் செய்யப்போகும் பணியும் ஒரு குடும்பப் பணியும்தான் காரணம். இந்தச் சமுதாயமே ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடு இருக்கக் கூடிய நிலை என்று விளக்கினேன். மணவிழாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், கழகத் தோழர்கள், தோழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
13.02.1982 அன்று சாத்தூரில் கருத்தரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் என மிளிர்ந்த கழக இளைஞரணியின் மாநாடு தனலட்சுமி திரை அரங்கில் விறுவிறுப்போடு நடந்தது. நகரச் செயலாளர் செல்வம் தொடங்கி வைக்க, மருதுபாண்டியன், பாஸ்கரன், கதிரவன், சுந்தரபாரதி, தங்கசாமி, கலைமணி ஆகியோரும், மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மகேந்திரன் பி.ஏ.பி.எல்., தலைமையேற்று நடைபெற்றது. என்னுடைய தலைமையில் நடந்த கருத்தரங்கில், இராசபாளையம், டாக்டர் மாறன் அவர்கள், “பெரியாரும் காந்தியாரும்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
உணவு இடைவெளிக்குப் பிறகு பட்டிமன்றம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது, “பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்தறிவா?’’ என்ற தலைப்பில் தொடங்கிய பட்டிமன்றத்திற்கு மதுரை யாதவ கல்லூரி முதல்வர் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் எம்.ஏ., அவர்கள் நடுவர் பொறுப்பை ஏற்றார்கள்.
‘இனநலமே’ என்ற அணியின் தலைவராக புலவர் கண்ணையன் வாதிட, அந்த அணியில் மூ.மைதீன், சேலம் புலவர் அண்ணாமலை ஆகியோர் கருத்துகளை எடுத்து வைத்தார்கள்.
‘பகுத்தறிவே’ என்ற அணியின் தலைவராக புலவர் மணி வாதிட அந்த அணியில் சேலம் அருள்மொழி, அருபை லட்சமி ஆகியோர் இணைந்து வாதிட்டார்கள்.
இறுதியாக சிறப்புரையாக நான் உரையாற்றினேன். எனது உரையில், “பொதுவுடமை கட்சிக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டையும், நமது அணுகுமுறையின் சிறப்பையும் அவர்களின் மண்ணுக்கு ஏற்பில்லா அணுகுமுறையும் விளக்கினேன்.’’ எல்லோருக்கும் எல்லாமும் ஆன இடம் நோக்கி இவ்வையம் நடக்க வேண்டும் என்னும் பொதுஉடமைக் கொள்கை நம்முடையது. வர்க்கப் பார்வையோடு வர்ணப் பார்வையை முன்னிறுத்திப் போராடுபவர்கள் நாம் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறினேன்.
மாநாட்டில், சுப்புலெட்சுமி ஜெகதீசன் அம்மையார் அவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கிடையே கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மாநாட்டில், கட்சி வேறுபாடு, சாதி, மத வேறுபாடு இன்றி வரவேற்றனர் மக்கள். மேற்கு முகவை மாவட்டச் செயலாளர் செயல்வீரர் பன்னீர்செல்வத்தின் பணியும், சாத்தூர் இளைஞர்களான அருமைச் சகோதரர்களின் ஊக்கமும், உழைப்பும் மிகவும் மேலோங்கி நின்றன.
(நினைவுகள் நீளும்…)