கனன்றெழுவீர் இளையோரே!

நவம்பர் 01-15

இருட்டை ஒளியென ஏய்த்துப் பிழைத்தனர்
திருட்டை மறைக்கத் தீயன புரிந்தனர்
வெந்திறல் மறவர் வெற்றிவாய்ப் பிழந்திடச்
சிந்தனை மலடுகள் சிலிர்த்துக் கிளம்பினர்;
அரைகுறை எல்லாம் ஆடின ஆட்டம்
வரைமுறை கடந்து வாயைப் பிளந்தன;
மக்க ளால்நான்; மக்களுக் காகநான்
முக்கியே நாட்டை மொட்டை போட்டனர்!
உங்கட் குரைப்பேன்! ஒற்றை உருவா
திங்கள் ஊதியம் போதும் என்றவர்
ஆயிரம் கோடிக் கதிபதி ஆனதும்
வாயுரம் மிக்கவர் வழியில் நடப்பவர்
எப்படி என்பதை இயம்பிடு வாரா?
செப்படி வித்தை சிலநாள் நிற்கும்!
சீரும் சிறப்பும் சிதைந்திட விளம்பரத்
தேரும் உருட்டித் தேய்த்தனர் பொழுதை!
வையம் ஆண்ட வண்டமிழ் மரபோ
கையிருப் பெல்லாம் தொலைத்து விட்டதோ?
உருப்படி யாக ஒன்றும் நடவா
வருத்தம் பலரை வாட்டி வதைத்திடச்
சிறுமை யாவும் சிரித்தே ஆர்த்தன!
வறுமை ஏழ்மை வளைத்துக் கொள்ளவே
இற்றைத் தமிழகம் சரிந்தே வீழ்ந்தது
முற்றும் நொறுங்கி முடங்கிப் போனது
சிலரோ கொழுத்தனர்; செல்வம் குவித்தனர்;
பலர்மனம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தன;
இழிந்த போக்கினை எவரே மறப்பர்?
அழிந்தவைஅனைத்தும் மீண்டும் புதுக்கிடத்
தொலைந்தபண் பாட்டைத் தூக்கி நிறுத்திடத்
தலைகீழ் மாற்றம் தகர்த்தே மீண்டிட
அடலே றனையீர்! அரிமா இளையீர்!
கடலென ஆர்த்தே கனன்றெழு வீரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *