லிங்காயத்தும் வீரசைவமும் ஒன்றா? வீரசைவம் இந்து மதத்தின் ஓர் அங்கமா? லிங்காயத்துகள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று விவாதித்து வருகிறார்களே அது உண்மையா?
-இத்தகைய கேள்விகள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் மிகவும் கொந்தளிப்பான விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
லிங்காயத்தும் வீரசைவமும் முற்றிலும் வேறு வேறானவை. லிங்காயத்துகள் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியும், இந்து மதத்தில் நிலவி வந்த சாதி பேதங்கள் மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும் கலகம் செய்தவரான பசவண்ணரின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களாவர். வீரசைவர்கள் என்பவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டு, அதை பின்பற்றுபவர்களாவர். இந்து மதத்தின் இரு பிரிவுகளான சைவமும் வைணவமும் சனாதன தர்மத்தையும், வேத, சாஸ்திரங்களையும் பின்பற்றுபவையே.
வீரசைவம் வேத சாஸ்திர, புராணங்கள், சாதி மற்றும் பாலின பேதங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதாகும். ஆனால் லிங்காயத்து மார்க்கத்தைத் தோற்றுவித்த பசவண்ணர், சாதி மற்றும் பாலின வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமின்றி, இந்து மதத்தின் உட்கருவான சனாதன தர்மத்திற்கு மாற்றான சித்தாந்தங்களை முன்மொழிந்தார்.
இத்தகைய இருவேறு நம்பிக்கைகளையும் மார்க்கங்களையும் ஒன்றாக இந்து மதத்திற்குள் இணைத்தது யார்?
பசவண்ணரின் சித்தாந்தக் கருத்துக்கள் புரட்சிகரமானதாகவும், பகுத்தறிவு மிக்கதாகவும் இருந்துள்ளது. அவர் சமூக அரசியல் சீர்திருத்தங்களை 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் நிகழ்த்தியுள்ளார். அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு சாதி மக்கள் அவருடைய பசவ அல்லது சரணா இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பிற மாநிலங்களைச் சார்ந்த குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சைவ பார்ப்பனர்களும் இதில் அடக்கம். அவ்வாறு இணைந்த அனைவரும் லிங்காயத்துகளாக மதமாற்றமடைந்தனர்.நூற்றாண்டுகள் பல கடந்த பிறகு, லிங்காயத்துகளாக மதம் மாறிய பார்ப்பனர்களின் சந்ததியினர், பார்ப்பன வழிபாட்டு முறைகளை லிங்காயத்து சமூகத்தில் கடைப்பிடித்தனர். இதே காலகட்டத்தில் லிங்காயத்துகளின் பசவ இயக்கம், பல சரண எழுத்தாளர்களையும், அறிவு ஜீவிகளையும் ஒருங்கிணைத்து வளர்ந்து வந்தது. பிற்காலத்தில் இவர்கள் பிஜல அரசுகளால் வேட்டையாடப்பட்டும், பல சரண இலக்கியங்களும் அழிக்கப்பட்டதும் வரலாற்றில் நிகழ்ந்தது.
இவ்வாறு சரண இலக்கியங்கள்அழிக்கப்பட்டது, லிங்காயத்து சமூகத்தின் அறிவுத் தளத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது. இது வீரசைவர்களின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைய காலகட்டத்தில் வேத சாஸ்திரங்கள் மட்டுமே குருகுலங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இதன்பால் வீரசைவர்களும் லிங்காயத்துகளும் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு, அனைவரும் பார்ப்பனியத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார வாழ்வு முறையைப் பின்பற்றுபவர்களாக மெதுவாக மாறினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் லிங்க வடிவத்தையே வணங்கி வந்த லிங்காயத்துகளும் வீரசைவர்களும் ஒன்றே என வீரசைவத்தைத் துவக்கிய பஞ்சச்சார்யார்கள் பரப்பி வந்தார்கள். இந்த பஞ்சச்சார்யார்களே பஞ்சபீடம் என்றழைக்கக்கூடிய சிவ திருத்தலங்களைத் தோற்றுவித்து, வீரசைவர்களின் தலைவர்களாக தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டனர். பசவா இயக்கத்திற்கு முன்னரே வீரசைவம் வழக்கில் இருந்தது என்றும், வீரசைவர்களின் குருக்கள் மூலமே பசவண்ணர் லிங்காயத்து மதத்தைத் தோற்றுவித்தார் என்றும் வீரசைவர்கள் வாதிட்டு வந்தனர். வீரசைவர்களின் இக்கூற்றுகளை உண்மையென்று நிறுவ எந்தவொரு நிரூபணமும் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைத்ததில்லை.
வீரசைவர்களின் புனித நூலான “சித்தாந்த சிகாமணி’’ உள்ளடக்கிய கருத்துகளும்
அதன் தோற்றமும் விவாதத்துக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றறிஞர் சித்தானந்த மூர்த்தி என்பவர் 1998 ஆம் ஆண்டு வீரசைவர்களின் புனித நூல் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில், பசவா இயக்கத்திற்குப் பிறகு இயற்றப்பட்டது என்றும், நிச்சயமாக பசவண்ணரின் காலத்திற்கு முன்பு எழுதப்பட்டது அல்ல என்றும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளார். இவ்வாய்வுக் கட்டுரை வெளிவந்து ஓர் ஆண்டு காலத்தில் காசி பீடத்தின் தலைவரான சந்திரசேகர சுவாமி என்பவர் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில், சித்தாந்த சிகாமணி இராமாயண காலகட்டத்திற்கு முன்பே இயற்றப்பட்டது என்று வாதிட்டார். இந்துத்துவா சார்புடைய வரலாற்றறிஞர் சித்தானந்த மூர்த்தி தன்னுடைய நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக் கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இத்தோடு நில்லாமல் நாம் ஆச்சரியப்படும் வண்ணம் சித்தாந்த சிகாமணி நூலை எழுதிய சிவயோகி சிவாச்சார்ய, பஞ்சச்சார்யார்களின் முன்னோடிகள் கிருதயுகம், தீத்ரயுகம் மற்றும் துவாபரயுகம் போன்ற யுகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ராமாயணத்தில் வருகின்ற விபீஷணனுக்கு அறிவுரை வழங்கியவர்கள் என்றும், அகத்திய முனிவர் மற்றும் சிவனாரின் புகழைப் பாடியும், சங்கராச்சாரியாருக்கு சந்திரமௌலீஸ்வர லிங்கத்தை அளித்தவர்கள் இவர்கள்தான் என்றும் பலவாறு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பஞ்சச்சார்யார்களின் இத்தகைய சாகசங்கள் வேத நூல்கள், ஆகமங்கள், உபநிஷங்கள் என எந்த நூல்களிலும் இடம் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பஞ்சச்சார்யார்கள் என்றழைக்கக்கூடிய குருக்கள்தான் லிங்காயத்துகளும், வீரசைவர்களும் ஒன்றே என்றும், லிங்காயத்துகள் வேத சாஸ்திர, ஆகம மற்றும் உபநிஷங்கள் போன்ற இந்து மத நூல்களைப் பின்பற்றுபவர்கள் என்றும் திரித்து கூறியுள்ளனர். இவற்றிலிருந்து பஞ்சச்சார்யார்கள் பசவண்ணரின் காலத்திற்குப் பிறகே தோன்றியவர்கள் என்பது தெளிவு. மேலும் தங்கள் முன்னோர்கள் பற்றிய நிகழ்வுகள் யாவும் கற்பனையிலிருந்து தோன்றிய புனைவுகளேயாகும்.
லிங்காயத்துகள் என்பவர்கள் யார்?
லிங்காயத்துகள் பசவண்ணரையும் அவருடைய சித்தாந்த கருத்துக்களை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான சரணங்களைப் பின்பற்றுபவர்களாவர்.
இந்தச் சரணங்கள் யாவும் வேத சாஸ்திர சம்பிரதாய மற்றும் உபநிஷங்களை முற்றாக மறுக்கிறது. அத்தோடு நில்லாமல் வர்ணாசிரம அடிப்படையிலான சாதிய சமூக அமைப்பினையும், சாதிய அடுக்குமுறை அடிப்படையிலான கர்மவினையையும், கர்மவினையை அடிப்படையாகக் கொண்டுள்ள பாவம் மற்றும் புண்ணியம் போன்ற கருத்துக்களையும் முற்றிலுமாக நிராகரிக்கிறது. மேலும் சொர்க்கம், நரகம் போன்றவற்றையும் பசவண்ணரின் சித்தாந்தங்கள் நிராகரிக்கிறது. இனப்பெருக்க குறி (ஆண்குறி) வடிவிலான லிங்க வழிபாட்டை தவிர்த்து உள்ளுணர்வை (மனசாட்சியை) குறிக்கின்ற இஷ்ட லிங்க வழிபாட்டை மேற்கொண்டனர். பசவண்ணரின் பசவ இயக்கம் சாதிய அடுக்குமுறையை தகர்க்க வேண்டி அனைத்துச் சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி முறையையும், பாலின வேறுபாடுகளைத் தகர்க்கவும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பல போராட்டங்களை ஆரம்ப நாட்களிலேயே நடத்தியுள்ளனர். பசவண்ணரின் சரணங்கள் வெகுசிலரே புரிந்து கொள்ளக் கூடிய சமஸ்கிருத மொழியில் பாடப்படாமல் கன்னட மொழியிலேயே இயற்றப்பட்டன. முக்கியமாக பசவண்ணரின் சரணங்கள் இந்து மதத்திற்கும் அதன் பிற்போக்கு கூறுகளுக்கும் எதிராகக் கலகம் செய்தன.
இத்தகைய காரணங்களால்தான் லிங்காயத்துகள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல கூட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்றிருந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களான எஸ்.நிஜலிங்கப்பா, எச்.சித்தவீரப்ப, பி.என்.மணவாலி மற்றும் ரத்தனப்பா கும்பர் போன்றோர்கள் லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று விவாதித்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திடமும், கணக்கெடுப்பின்போது லிங்காயத்துகள் தனி மதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று லிங்காயத்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர். இந்து மதத்திற்கு எதிராகக் கலகம் செய்து உருவாகிய புத்தமும், சமணமும், சீக்கிய மதமும் தனி மத அந்தஸ்து பெற்றிருக்கும் போது, லிங்காயத்து ஏன் தனி மத அந்தஸ்து பெறக் கூடாது?
12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பசவண்ணரின் சரணங்கள் பல ஆரம்ப காலகட்டத்திலேயே அழிக்கப்பட்டன, சில சரணங்கள் கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழகப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டன. சுமார் 8 நுற்றாண்டுகளுக்கு மேலாக பசவண்ணரின் சரணங்கள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்றி யிருந்ததே இத்தகைய குழப்பங்களுக்கான மிக முக்கியக் காரணம். 1880_1964ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பகிரப்பா குருபாசப்பா ஹால்கட்டி என்பவர் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்த பசவண்ணரின் 22 ஆயிரம் சரணங்களைத் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பசவண்ணரின் சரணங்களின் மீதும் தீவிரமான பல ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக எம்.எம்.கல்புர்கி, வீரண்ணா ராஜு, டி.ஆர்.சந்திரசேகர் போன்றோர்களின் ஆய்வுக் கட்டுரைகள் லிங்காயத்துகள் மற்றும் வீரசைவர்கள் என்பவர்கள் யார், லிங்காயத்துகளின் தத்துவக் கருத்துக்கள் எவ்வாறு இந்து மதத்திலிருந்து முரண்பட்டும் வேறுபட்டும் உள்ளன என்று மக்களுக்குத் தெளிவான புரிதலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
அண்மைக்காலமாக லிங்காயத்து சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பசவண்ணரின் சித்தாந்தங்களை ஏற்றுப் பின்பற்றுவோர்களும் லிங்காயத்துகளை இந்துக்கள் என்று அழைக்கக்கூடாது என்றும் தனி மத அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 2016 ஆகஸ்ட் 10 அன்று பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் லிங்காயத்துகளுக்குத் தனி மத அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வீரசைவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
சமீபத்தில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் எழுதி ‘தி வயர்’ இணைய இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழில் : ரகுராம் நாராயணன்
நன்றி : தீக்கதிர்