கடவுள், மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்வி எழுப்பிவிட்டால் அதற்கு நேர்மையாக, நேரடியாக மதவாதிகள் பதில் சொல்வதில்லை. சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவார்கள். மக்கள் ஒழுக்கத்துடன் வாழத்தான் மதங்கள் உருவானது என்று சொல்வார்கள். மதக்கடவுள்களின் கதைகளில் உள்ள ஒழுக்கச் சிதைவுகளையோ, மதவாதிகளின் ஒழுக்கக் கேட்டைப் பற்றியோ எடுத்துக்காட்டுகளுடன் கேள்வி கேட்டுவிட்டால் சப்பைக்கட்டுக் கட்டுவார்கள்.
தம் இளம்பருவத்திலிருந்தே மத நம்பிக்கை திணிக்கப்பட்ட நிலையில், சுயஅறிவை முன்னிறுத்தி கேள்வி கேட்டுப் பழக்கப்படாத மத நம்பிக்கையாளர்களால் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள இயலாது. மதம் என்பது பெரும்பான்மை மக்களைச் சிந்திக்கவிடாமல் மயக்கி வைத்திருக்கும் ஒரு கருத்தியல் என்பதை ஏற்க மறுப்பார்கள். தம்மைக் காட்டிலும் தமது மதத்திற்கும் கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மூர்க்கமான மனநிலை கொண்டவர்களும் உண்டு.
கடவுள் நம்பிக்கை மீதான எதிர்க் கேள்விகள் கேட்கப்படும் போது நான் நம்பும் ஒன்றை நீ இல்லை என்பதா? என்ற எண்ணம் மேலோங்குவதால்தான் அவர்களுக்குக் கோபம் வருகிறது. இங்கே கடவுள், மதம் மீதான பற்று என்பது நான் என்கிற மனிதனின் தன் முனைப்பு(தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை)க்குள் வந்துவிடுகிறது. அதனால்தான், கடவுள் நம்பிக்கை மீதான கேள்வி என்பது தன்மீதான கேள்வியாகி கோபத்தைத் தூண்டுகிறது.
இந்த அளவுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இடைவிடாது பரப்பப்பட்ட மதத்தின், கடவுளின் இன்றைய நிலை அய்ரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் எப்படி இருக்கின்றது? மிக வழுவாகக் கட்டி எழுப்பப்பட்ட கிறித்துவ மதம் இருக்கும் இந்த நாடுகளில் இப்போது மதத்தின் மீதான பிடிப்பு குறைந்து கொண்டே போவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி, இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் பற்றிய செய்திகளையெல்லாம் உலகச் செய்திகளாகத் தரும் முன்னணி இதழ்கள் இந்த ஆய்வு பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை, இணையதள செய்தி ஊடகங்கள்கூட வெளியிடவில்லை. அவர்களுக்கு வணிகம் செய்ய மதமும் கடவுளும் வேண்டுமே? தமிழில் ஒரே ஒரு ஆறுதல், தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியது. தி இந்து இங்கிலீஷ் நாளிதழ் போப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வு இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்கிறது.
இதற்கு என்ன காரணம் என்பதையும் அந்த ஆய்வு மாணவர்கள் கூறுகின்றனர். மதத்தைச் சார்ந்திருப்பதால் நமக்கு நன்மை உண்டாகிறது என்ற எண்ணம் மக்களிடம் குறைந்து வருகிறது. மதத்தைச் சார்ந்திருந்து, அதன் போதனைகளைப் பின்பற்றாமலேயே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செக் குடியரசில் நடந்த கணக்கெடுப்பில் அறுபது சதவீதம் பேர் தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மதத்தின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் நடக்கின்றன என்பது இவர்களின் எண்ணம் என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
மதத் தலைவர்களின் முரண்பாடுகளும் இதற்கு ஓரளவு காரணமாக இருக்கலாம். மதத் தலைவர்கள், மத அமைப்புகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது; நான் சொல்வது போல நட, கடவுளுக்கு இதுதான் பிடிக்கும் என்று கட்டளையிடுவது இன்றைய புதிய தலைமுறைக்குப் பிடிக்கவில்லை என்பதும் இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. நான் நல்லது செய்தால் எனக்கு நல்லது நடக்கும்; நான் ஏன் ஒரு மதத்தைப் பிடித்துக் கொண்டு அலைய வேண்டும் என்பதும் இந்த இளைய தலைமுறையின் எண்ணம் என்கிற கருத்தும் வெளிவந்திருக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகளை ஒத்துக் கொள்வதுபோல உள்ளது போப் பெனடிக்டின் பேச்சு. கடந்த மாதம் கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் பெனடிக்ட் 16, ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்தார். ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமான, எல் எஸ்கோரியல் துறவிகளின் மடத்தில் சில நூறு இளம் கன்னித் துறவிகளிடம் பேசும் போது, மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை பலமான பிடிமானத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, கடவுளைப் பற்றி நமது நவீன சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு மறதி ஏற்பட்டிருக்கிறது என்று போப் பெனடிக்ட் 16 தமது கவலையை வெளியிட்டுள்ளார். மேற்சொன்ன அந்த 9 நாடுகளைப் போலவே ஸ்பெயினிலும் கடந்த பத்து ஆண்டுகளில் கிறித்துவ மத நிறுவனங்களான தேவாலயங்களின் செல்வாக்குக் குறைந்துவருவதே போப்பின் இந்தப் பேச்சுக்குக் காரணம் என்று அந்நாட்டுச் சமூக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. மத நம்பிக்கை அடுத்த மனிதனைத் தன்னிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மத ஆதிக்கங்களும், மத வெறியும் தலைதூக்கும்போதுதான் மனிதம் உணரப்படுகிறது. மதம் என்பது அபின் போன்றது என்று காரல் மார்க்ஸ் சொன்னதும், மதம் மக்களுக்கு விஷம் என்று பெரியார் சொன்னதும் மனிதநேயத்தின் அடிப்படையில்தான்.
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தல் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார். இன்றைய அறிவியல் அற்புதமான இணையம் உலகைச் சுருக்கி நம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனித இனம் தம்மை முதலில் மனிதராக உணரும் எண்ணம் தொடங்கிவிட்டது. மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டியவன் என்கிற உணர்வு வந்துவிட்டால் தேவையற்ற கட்டுக்களான கடவுளும், மதமும் மாளவேண்டியதுதான். அதன் தொடக்கப் புள்ளிதான் இந்த ஆய்வு முடிவுகள்.
- மணிமகன்