மகாபுஷ்கர முழுக்கு மந்திரிகளுக்கே இழுக்கு!

அக்டோபர் 01-15

 

 

இந்துமதப் பண்டிகைகள் அனைத்தும் அறிவுக்குப் புறம்பான, வெட்டி விரயப் பண்டிகைகளே என்பதை தந்தை பெரியார் அடுக்கடுக்கான புராண ஆதாரங்கள் மூலமே அம்பலப்படுத்தியுள்ளார். அவற்றை இதுவரை எந்தப் பண்டிதர்களாலும் மறுத்துரைக்க இயலவில்லை.

தற்போது செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ‘மகாபுஷ்கரம்’ எனும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா காவிரி நதிக்காகக் கொண்டாடப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. மானிடர்களுக்கு நட்சத்திரமும், ராசியும் பொருத்தி ஜாதகம் கணிப்பது போன்று இந்தக் காவிரி நதிக்கும் ராசியும் நட்சத்திரமும் கணித்துள்ளனர். காவிரி நதிக்குரிய ராசி துலா ராசியாம். இந்தத் துலா ராசிக்கு இந்த ஆண்டு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார் என்றும், அதை முன்னிட்டு இந்தக் காவிரி நதிக்காக மகாபுஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறதாம். இந்த விழா மாயூரத்திலும், ஸ்ரீரங்கத்திலுமாக இரண்டு இடங்களில் காவிரியாற்றில் பக்தர்கள் நீராடி புனிதம் பெறும் சடங்காகக் கொண்டாடப்படுகிறது.

எந்த விழாவானாலும் அதில் ஆதாயம் பார்ப்பது ஆரியப் பார்ப்பனக் கூட்டம் என்பதும், அல்லற்பட்டு அயராது உழைத்த காசை அழுதுத் தொலைப்பது அப்பாவி பக்தர்கள் கூட்டம் என்பதும்தானே இந்துமதக் கட்டளை. இந்த விழா மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுமா என்ன?

இந்த விழாவை முன்னிட்டு 12 நாட்கள் யாகம். யாகம் என்றாலே உழைப்பின் பயனால் விளையும் பொருட்களை தீயிட்டுப் பொசுக்குவதும் அதற்காக பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளில் பெரும் பகுதியை பார்ப்பனக் கூட்டம் பதுக்குவதும்தானே!

இந்த வாடிக்கை நிகழ்வினை நிவர்த்திக்க மகாபுஷ்கர கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. சடகோப ராமனுஜ ஜீயர் என்றும் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் என்றும், சுந்தர் பட்டர் என்றும், பார்ப்பன புரோகிதர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான துணைப் புரோகிதப் பார்ப்பனர்கள் பங்கு கொண்டு, தங்கள் தொந்தி தடவி, பூணூல் உருவி, உச்சிக்குடுமி முடித்துக் கட்டி பக்தர்களுக்குப் புரியாத மொழியில் உளறிக் கொட்டி செய்யப்படும் யாகசாலை நிகழ்வுகளாலும் இந்த யாகசாலைகளில் பக்திப் பரவசமாகத் தெண்டனிட்டு வணங்கி நீர் வற்றிய காவிரியில் தற்காலிகமாக தோண்டப்பட்டுள்ள குளங்களிலும் பம்ப்செட் மற்றும் பைப் லைன் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீரில் உடல் கழுவிக் குளித்து விடுவதால் அவர்கள் பெறப்போகும் பலன்கள் என்ன? பம்ப்செட் தண்ணீரும் பைப்லைன் தண்ணீரும் அந்த தினத்தில் மட்டும் என்ன புதுமை பெற்று புண்ணியம் அளித்துவிடப் போகிறது என்கிற சிந்தனை வேண்டாமா?

காவிரி ஆற்றுக்காகக் கொண்டாடப்படும் விழா என்கிறார்களே! இந்த விழாவில் அந்த காவிரியாறுதான் என்ன மாற்றம் கண்டுவிடப் போகிறது? கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேல் போதுமான நீரின்றி வறண்டுதானே கிடக்கிறது. வறண்ட மனம் படைத்த கர்நாடக அரசாலும், அரசியல் கட்சிகளாலும், அனைத்து ஒப்பந்தங்களும் நீதிமன்றத்தீர்ப்புகளும் மதிக்கப்படாது காவிரி வறண்டுவிட்ட நிலையில், இந்த விழாவால் இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறதா? மாதக்கணக்கில் நாட்டின் தலைநகரில் பற்பல நிலைகளில் (அம்மணநிலை உட்பட) போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்காத ‘மான் கீ பாத்’ புகழ் மோடிக்குப் பினாமியான பழனிச்சாமி, நீரற்ற காவிரியில் செயற்கையாய் நீர் நிரப்பி குளித்து மூழ்கிக்  களிப்பது வெட்கக்கேடு அல்லவா?

இந்தப் புஷ்கர விழாவால் காவிரியில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது. தண்ணீர் கரைபுரண்டு இருகரையும் தொட்டு ஓடி விவசாயிகளை மகிழ்விக்கப் போகிறதா? இல்லையே! மாறாக அங்கே குவிகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு அவர்கள் நோய்வாய்ப்படுவது தான் பலனாக இருக்கப் போகிறது.

கும்பகோணம் மகாமகா விழா முடிந்தபின் நடந்த சுகாதார ஆய்வில் அந்தக் குளத்து நீரில் கலந்துகிடந்த மனிதக் கழிவுகளும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட அசுத்தமும் வெளிப்பட்டு நாறினவே! அங்கு செல்கிற மக்களிடம் செயின் திருடர்களும் ஜேப்படித் திருடர்களும் பறித்துச் சென்றவையும் கொஞ்சமல்லவே. அது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறும் அசிங்கம் என்றால், இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் மாஅசிங்கம் என்பதுதானே உண்மை!

அட்சய திரிதி என்றால் அலைமோதுவதும், குரு பெயர்ச்சி என்றால் கூட்டம் கூடுவதும், குமபாபிஷேகம் என்றால் கும்பல் கூடுவதும், மந்தைச் செயல்பாடாகவே இந்த மகாபுஷ்கரக் குளியலிலும் மகத்துவம் தேட மந்தையாய் மூழ்கியது, அதற்கு மந்திரிகளே வழிகாட்டுகின்றனரே, காவிரியில் தண்ணீர் கொண்டுவர வக்கற்ற மந்திரிகள் மகாபுஷ்கர முழுக்குப் போடுவது மகா மகா இழுக்கல்லவா?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *