ரைன் நதி
“ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள்போல்’’
என்ற பாடல் வரிகள் நடிகர்திலகம் நடித்த ‘சிவந்த மண்’ படத்தில் வரும். அப்போது பெரும்பான்மையான மக்கள் அதை நைல் நதி என்றே நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்பாடல் வரிகளில் வருவது எகிப்தின் நைல் நதி அல்ல. அய்ரோப்பாவின் ரைன் நதி ( (Rhein River) ஆகும்.
இந்த நதியானது சுவிஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகி ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வழியாகப் பாய்ந்து நெதர்லாந்தின் வடக்குக் கடலில் (North Sea) கலக்கிறது. இதன் மொத்த நீளம் 1,230 கி.மீ. ஆகும். அய்ரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறும் இதுவே. உலகின் அதிக அளவிலான மிக முக்கிய கப்பல் போக்குவரத்து நடைபெறும் நதியாகவும் இது விளங்குகிறது.
இந்த நதிக்கரையில் பல முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. அதில் ஜெர்மனியின் நான்காவது பெரிய நகரமான கொலோன் (Cologne) நகரமும் ஒன்றாகும். 2017 ஜூலை 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு கொலோன் பல்கலைக் கழகத்தில் நடந்து முடிந்தபின் கடைசி நாளான 29ஆம் தேதி மாலை ரைன் நதியைப் பார்க்கக் கிளம்பினோம்.
பேருந்தில் சென்று இறங்கியவுடன் நதியைக் கண்ணுற்றேன். என் கண்ணெதிரில் மிகப் பெரிய பாலம் ரைன் நதியின் மீது காணப்பட்டது. அது முற்றிலும் இரும்புத் தூண்களால் ஆனது. பாலம் நடுவில் அகன்ற சாலையுடன் இருபுறமும் தொடர்ச்சியான அரைவட்ட வடிவிலான அமைப்புடன் பாலம் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. அந்தப் பாலத்தின் அருகில்தான் நதியில் படகுச் சவாரியும் தொடங்குகிறது. படகில் செல்ல நுழைவுச் சீட்டு பெற்று சுமார் ஒரு மணி நேரம் படகில் ரைன் நதியின் இருபுறமும் சென்று வரலாம்.
பாலத்தின் அருகில் படகுத்துறை அமைந்துள்ள பகுதி மிக அழகாகக் காட்சியளிக்கிறது. நிறைய மக்கள் அங்கே குழுமியிருந்தார்கள். இளம் பெண்களும் ஆண்களும் மகிழ்ச்சியுடன் உலாவிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர். இளம் பெண்கள் சிலர் விரைவில் திருமணமாக உள்ள தங்கள் தோழி ஒருத்தியைக் கிண்டல் செய்யும் விதமாக ஒருவர் ஆடையை ஒருவர் பிடித்துக் கொண்டு தொடர்வண்டிபோல் வளைந்து நெளிந்து சிரிப்பொலியுடன் ஓடிக் கொண்டிருந்தனர். சற்று தொலைவில் கொலோன் கத்தீட்ரல் உயர்ந்து காணப்பட்டது.
படகுப் பயணத்திற்குத் தயாரானோம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் சோம.இளங்கோவன், லண்டன் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம், கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவுச் செயலர் வீ.குமரேசன் மற்றும் பலரும் பயணித்தனர்.
படகு புறப்பட்டது. பெரிய படகு. இருநூறு பேர்களுக்கு மேல் பயணம் செய்யலாம். படகின் உள்ளேயும் மேல் தளத்திலும் அமர்வதற்கு இருக்கைகளும் மேசைகளும் போடப் பட்டிருந்தன.
நான் மேல்தளத்தில் சென்று அமர்ந்து கொண்டு ஆற்றின் அழகையும் கரையின் இருபுறமும் காணப்பட்ட நகரின் அழகையும் வெகுவாக இரசித்துக் கொண்டே பயணித்தேன். படகு முதலில் தெற்கு நோக்கிச் சென்றது. நதியின் அகலம் சுமார் அய்நூறு மீட்டர் இருக்கலாம். தண்ணீர் நதியின் முழுக் கொள்ளளவுடன் விரைந்தோடிக் கொண்டிருந்தது. கரையின் ஒருபுறம் உயர்ந்த பிரமாண்டமான கத்தீட்ரல் காணப்பட்டது. மறுபுறம் அழகிய கட்டிடங்கள் காணப்பட்டன. படகு சென்ற திசையிலும் எதிர்த் திசையிலுமாக மேலும் ஆறு பாலங்கள் காணப்பட்டன. ஆனால், அவை இரும்பால் ஆனவை அல்ல. இந்த இரும்புப் பாலம் உட்பட பல பாலங்கள் இரண்டாம் உலகப் போரின்போது பலத்த சேதமடைந்தனவாம். அவைகளைச் சரி செய்து சிறப்பாக வைத்துள்ளனர்.
கரையின் இருபுறங்களிலும் பல்வேறு இடங்களில் மக்கள் சிலர் உட்கார்ந்துகொண்டு நதியை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டி ருந்தனர். எங்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கரையில் அடர்ந்த மரங்களும் பசும்புல்வெளிகளும் காணப்பட்டன.
படகு விரைந்து சென்று கொண்டிருந்தது. என் எதிரில் கணவன், மனைவி தங்கள் சிறு வயது பையனுடன் அமர்ந்திருந்தனர். பையனின் அப்பா என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
“நீங்கள் யார்?’’ என்றார்.
“நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளோம்’’ என்றேன்.
“இந்தியாவில் இருந்தா?’’ என மறுபடியும் கேட்டார்.
“ஆமாம். ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்தேன்’’ என்றேன்.
அதற்கு அவர்,
“பெரியார் என்பவர் யார்?’’ எனக் கேட்டார்.
“சுயமரியாதையோடு வாழக் கற்றுக் கொடுத்தவர். அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டவர். ஜாதி சமயங்களைச் சாடியவர். அவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர்.’’ என்று சுருக்கமாகச் சொன்னேன்.
“உங்கள் நாட்டில் ஜாதிப் பாகுபாடு அதிகம் உண்டு எனக் கேள்விப்பட்டேன்’’ என்றார்.
“ஆமாம். உண்மைதான். நால்வகை வருணங்கள் உண்டு.’’
“அதை விளக்க முடியுமா?’’
இவ்வாறு அவர் கேட்டதும் நான் அவருக்குச் சில விளக்கங்களைக் கொடுத்தேன். பிராமணன் என்பவன் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் என்றும், சூத்திரன் காலில் பிறந்தவன் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்ததை விளக்கினேன்.
அடுத்து அவர் கேட்ட கேள்வி எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
“நால்வகை ஜாதியில் நீங்கள் எந்த ஜாதி?’’ எனக் கேட்டார்.
“நாங்கள் ஜாதியை ஏற்றுக் கொள்ளாதவர்கள்’’ என மறுமொழி கூறினேன்.
மேலும், “சுயமரியாதையுடன் வாழ்வதே எங்கள் நோக்கம்’’ என்றேன்.
திடீரென அடுத்த கேள்வியைக் கேட்டார்.
“நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்பீர்களா?’’
“அப்படி நாங்கள் கூறுவதில்லை. காலையில்கூட மாட்டுக்கறி சாப்பிட்டேன்’’ என்றேன். மேலும் அவ்வாறு கூறுபவர்கள் யார் என்பதையும் விளக்கினேன்.
“பெரியார் இன்னும் என்ன செய்தார்?’’ என்று மேலும் வினா எழுப்பினார்.
“பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் நிறையச் செய்துள்ளார். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். ஒரு காலத்தில் ‘சதி’ என்ற ‘உடன்கட்டை ஏறும் கொடுமை’ இருந்தது’’ என்றேன்.
“ஆமாம்! ஆமாம்! அதுபற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள்?’’ என்றார்.
“தமிழ்மொழி’’ எனக் கூறி அதன் பெருமைகளை எடுத்துச் சொன்னேன்.
பிறகு அவரிடம், “நீங்கள் யார்? என்ன பணி செய்கிறீர்கள்?’’ எனக் கேட்டேன்.
“நான் துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு சோஷியல் ஒர்க்கர். என் பெயர் முஸ்தபா’’ என்றார்.
“உங்கள் துணைவியார் சாதாரணமாக உள்ளாரே! பர்தா அணியவில்லையே’’ என்றேன்.
“அது தேவையில்லை. அணிய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை’’ என்று பதிலளித்து கைகுலுக்கி விடைபெற்றார். நான் கையில் இருந்த புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன்.
அரைமணி நேரம் தெற்காகச் சென்ற படகு மீண்டும் மறுகரையை ஒட்டி அரைமணி நேரம் வடக்குத் திசையில் சென்றது. ஆறு பாலங்களையும் கடந்து சென்றது. ஒவ்வொரு பாலத்தின் அடியில் படகு சென்றபோதும் படகில் இருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இரண்டாம் உலகப் போரில் பாழ்பட்ட அந்தப் பாலங்களின் தற்போதைய அழகிய தோற்றங்களும், தத்தளித்து ஓடும் நீரைக் கொண்ட ரைன் நதியின் அழகும் என்றென்றும் மறக்க இயலாதவையாகும்.