நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் முழுவதும் ஜாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்-கு மாறிய பாதிப்பு இராமநாதபுரம் மாவட்டம், மற்ற இடங்களிலும் கேட்கும் என்று அஞ்சி இந்து மதத் தலைவர்கள், சனாதனிகள், ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பார்ப்பனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ‘விடுதலை’யில் 10.07.1981 அன்று “மதமாற்றமும் தாழ்த்தப் பட்டோரும்’’ என்று தலைப்பிட்டு முக்கிய தலையங்கம் எழுதியிருந்தேன். அதில் மதமாற்றம் பற்றி இன்று பதறித் துடிக்கும் இந்த மாமேதைகள் சங்கராச்சாரியிலிருந்து சாதாரண இந்துமத சனாதனி வரையிலும் _ ஜாதியின் கொடுமைக்கு என்ன பரிகாரம் தேட முனைந்தனர்?
சுடுகாட்டிலும்கூட, “பார்ப்பான் சுடுகாடு _ பறையன் சுடுகாடு’’ உள்ளதே _ அதை மாற்றினார்களா?
தாழ்த்தப்பட்டவர் போஸ்மாஸ்டர் ஆனால், அவர் கிராமத்திற்குள் அலுவல் பார்க்க வீடு கொடுக்க மாட்டோம், ஊருக்கு வெளியே வேண்டுமானால் அந்த அஞ்சல் நிலையம் இருக்கட்டும் என்று கூறும் ஜாதி வெறித்தனத்தை இன்று இந்து மதாபிமானிகள் கண்டித்து ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா? என்று பல்வேறு சம்பவங்களைக் குறித்து அந்தத் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன்.
வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அஇஅதிமுக அமைச்சராக இருந்த திரு.ஹண்டே மீது (சுகாதாரத்துறை)ம், டைரக்டர், செயலாளர் ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி அட்மிஷனில் முதலில் ரிசர்வேஷன் வகுப்புகளுக்கான இடங்களை நிரப்பிவிட்டு அதன் பிறகு பொதுத் தேர்வுக்கான இடங்களைப் பூர்த்தி செய்தார்கள்.
இதனால் ரிசர்வேஷன் வகுப்பினர் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. வழக்கமாக பொதுத் தேர்வுக்குப் பின்னரே ரிசர்வேஷன் வகுப்புக்கான தேர்வு நடக்கும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போட்டியிட வாய்ப்பு இல்லை. இதுபோன்ற தேர்வு முறை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்குத் தொடுத்தேன். (11.07.1981) வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபன், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கழகத்தின் சார்பில் வேலூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
22.07.1981 அன்று கோவை மாநகராட்சியைத் துவக்கி வைத்து முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். பேசுகையில்,
“தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தற்போது ஜாதி அடிப்படையில் செய்யப்படும் இடஒதுக்கீடுகள் _ கல்வி, உத்யோகத்திற்கானவைகள் _ அவர்களுக்கு உதவுவதாக இல்லை. எனவே, 9,000 ரூபாய் வருமானவரம்பு ஆணையை மீண்டும் கொண்டு வரத்தயாராக இருக்கிறேன். மக்கள் ஆதரவு காட்டினால் அதைச் செய்வேன்’’ என்று பேசினார்.
இதனைக் கண்டித்து 24.07.1981 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் “இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வரின் போர்ப் பிரகடனம்’’ என்று தலைப்பிட்டு விளக்கி எழுதியிருந்தோம்.
தமிழ் மக்களுக்கு வரவிருக்கும் மிகப் பெரும் ஆபத்து என்னவென்பதை அவரது பிரகடனம் மிகவும் தெளிவாக தெரிவிப்பதாகவே இருக்கிறது.
இதனை எதிர்த்துப் போராட கட்சி வேறுபாடு இன்றி தாய்மார்களும், தோழர்களும், இளைஞர்களும் எப்போதும் தயார் நிலையிலேயே இருந்தாக வேண்டும். “சமூகநீதிப் போராட்ட அணி’’ என்ற ஓர் அணி தமிழ்நாடு முழுவதிலும் உடனே ஊர்தோறும் பட்டிதொட்டி நாடு நகரெல்லாம் உருவாக்கப்பட வேண்டும். சாகடிக்கப்பட்ட 9,000 ரூபாய் பாம்புக்கு மீண்டும் உயிர் வந்தால் அதனை ஒழிக்க உடனே தயாராக வேண்டும்! என்று அந்த அறிக்கையிலே தெரிவித்திருந்தேன்.
தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு முஸ்லீம் மதத்தில் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமத்துக்கு 25.07.1981 அன்று சென்று மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களையும், மதம் மாறாத தாழ்த்தப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தேன்.
நான் அங்கு சென்றவுடன் என்னை வரவேற்க ஏராளமான தாழ்த்தப்பட்ட சமூகச் சகோதரர்கள் ஊரின் வாயிலிலே காத்திருந்தனர். நாங்கள் சென்றவுடன் எங்களுக்கு தேநீர் அளித்து உபசரித்தனர். மதம் மாறியவர்கள், மதம் மாறாதவர்கள் அனைவரிடமும் 2 மணி நேரம் பேட்டி கண்டேன்.
இதில், துரைராஜ் என்ற பி.ஏ. பட்டதாரி இப்போது மதம் மாறி உமர்செரீப் ஆகியிருக்கிறார். இவர் ஓர் ஆடிட்டர்.
ஜெயமணி என்ற விவசாயி மதம் மாறி ஜெபர் உல்லாஹான் ஆகியுள்ளார். ராசையா என்ற 70 வயது முதியவர் அப்போது மதம் மாறி இப்ராகிம் ஆகியுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்கள் அனைவரும் என்னிடத்தில் மதம் மாறியதற்கான நிலைமைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள். மதம் மாறிய காஜாமைதீன் என்பவரும் என்னிடத்தில் நிலைமைகளை விளக்கினார். அப்போது அண்மையில் மடாதிபதிகள் இங்கு வந்து சமபந்தி போஜனம் நடத்துவதாகக் கூறினார்கள். ஆனால், சமயலறைக்குள் வேலை செய்ய சென்ற தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே விட மறுத்தனர்! தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த மடாதிபதிகள் இப்போது சமமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்? எனவே மடாதிபதிகள் சமபந்தி போஜனம்தான் வெற்றிகரமாக நடந்தது.
இந்தப் பகுதியில் உள்ள அனந்தராமசேஷன் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்தான் இந்த கிராமத்தில் நடந்த கொடுமைகளுக்கு எல்லாம் மூலகாரணம். அவர்தான் இங்கே பல்வேறு பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
வாஜ்பாய் இங்கே வருகை தந்தபோது மதம் மாறிய எங்களையெல்லாம் சந்திக்கவே இல்லை.
மத்திய அமைச்சர் மக்வானா வந்தபோது தான் எங்களை எல்லாம் சந்தித்து பல மணி நேரம் விசாரித்தார்.
அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இங்கு வந்தபோது அவருடன் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். காரர்களும் உடன் வந்தார்கள். அவர் சரியான முறையில் எங்களிடம் விசாரிக்கவில்லை.
நான், அவர்கள் இடத்தில் பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறினீர்கள் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்டபோது அவர்கள் கடுமையாக மறுத்தனர்.
இந்த மதமாற்றத்தினை, “இதயம் பேசுகிறது’’ மணியன் கட்டுரையில், “மீனாட்சிபுரத்தில் அரசியல் இல்லை’’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரையை அந்த இதழில் வெளியிட்டிருந்தார்.
அதனை மறுத்து நான், 01.08.1981 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில், “மணியன் அய்யரே, பதற வேண்டாம்!’’ என்று தலைப்பிட்டு, எழுதிய தலையங்கத்தில், “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய நூல் வெளிவந்ததே அதை இந்த மணியன் அய்யர் கூட்டம் அறியுமா?
20.10.1929இல் சீலையம்பட்டியில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அங்கேயே சென்று வாழ்த்து தெரிவித்து பாராட்டினார் தந்தை பெரியார் என்பதை இந்து “புதுமை ஜெர்னலிஸ்ட்’’ அறிந்தவரா?
மற்றவர்களைப்போல் எங்களை நினைத்துக் கொண்டு படம் எடுத்தாடாதீர்! படம் எடுத்த பல பாம்புகளின் நச்சுப் பைகள் நசுக்கப்பட்ட பெரியாரின் கைத்தடி இன்னமும் பாதுகாப்பாகவே இருக்கிறது! என்று அந்த அறிக்கையில் கண்டனத்தைப் பதிவு செய்தேன்.
தமிழ்நாட்டில் மருத்துவ என்ஜினியரிங் மற்றும் தொழிற்பட்டப் படிப்புக்கான மாணவர் தேர்வில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நேரடிப் போட்டி (Interview) மார்க் 75ஆக இருப்பதை 30ஆக திடீரெனக் குறைத்து இவ்வாண்டு திரு.எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனைக் கண்டித்து 3.8.1981 அன்று ‘விடுதலை’யில் “இண்டர்வியூ மார்க்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானதல்ல!’’ என்று தலைப்பிட்டு அந்த அறிக்கையை எழுதியிருந்தேன். அதில், இண்டர்வியூக்கு என்று போடும் மார்க் 150ஆக 1950 முதல் இருந்து வந்தது. ஆச்சாரியார் முதலமைச்சராக வந்தவுடன் 150ஆக இருந்த மார்க்கினை 50ஆக குறைத்து உத்தரவிட்டார்.
இதை தந்தை பெரியார் அவர்களும் ‘விடுதலை’யும் இடைவிடாமல் கண்டித்தது.
காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக வந்தவுடன், 50ஆக ஆச்சாரியார் குறைத்த மார்க்கினை மீண்டும் 150ஆக உயர்த்தி உத்தரவு போட்டார்!
அது தொடர்ந்த நிலையில் காங்கிரசு ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர்களே 75ஆகக் குறைத்துவிட்டனர்.
பலருடைய சரியான கவனத்தை அது ஈர்க்காத காரணத்தால் 75 மார்க் இண்டர்வியூக்கு என்று நிலைத்துவிட்டது.
இப்போது 30ஆக திடீரெனக் குறைத்து அஇஅதிமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பார்ப்பனரல்லாத பிள்ளைகள் _ குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிள்ளைகள் “நெட்டுரு’’ (மனப்பாடம் செய்வதில்) அவ்வளவு வல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம்; பொது அறிவு, உடற்கட்டு, பொதுத் தகவல்கள், நுண்ணிய அறிவுக் கூர்மை இவைகளில் சிறந்து விளங்குபவர்கள். ஆதலால் அவர்களுக்கு நேரடிப் போட்டியில் அதிக மார்க்கு வைக்கப்பட்டால் வாய்ப்பு அதிகம்.
18 சதவீதம், 50 சதவீதம் இடஒதுக்கீடு போக எஞ்சிய 32 சதவீதம் “Open Competition” என்ற “திறந்த போட்டியாளர்கள்’’ அதிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் ஏராளம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதைத் தடுக்கவே இந்த “இண்டர்வியூ மார்க்’’ குறைப்பு சூழ்ச்சியாகும். இதற்குக் கடுமையான கண்டனத்தை அதிமுக அரசுக்குத் தெரிவித்தேன்.
திண்டுக்கல்லில் 08,09.08.1981 அன்று நடைபெற்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். மாநாட்டு மேடையில் எனக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான தோழர்களும் தாய்மார்களும் தந்தை பெரியார் வாழ்க என வாழ்த்தொலி எழுப்பினர். ரூ.6,500 ஒரு ரூபாய் நாணயங்கள் எடையில் போடப்பட்டன.
எனது எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள் அளிக்கப்பட்டாலும் அவையெல்லாம் எனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல _ இந்த சமுதாய நலனுக்கே பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘பகவான்’ இரமண ரிஷிக்கு அளிக்கப்பட்ட பொருள் எல்லாம் யாருக்குப் பயன்பட்டது? அவர் தனது சகோதரனின் மகனுக்கல்லவா உயில் எழுதி வைத்தார். அதனால்தான், நாத்திகத் தந்தை பெரியார் அவர்கள் தனது சொத்துக்களை யெல்லாம் தனது உறவினர் எவருக்கும் எழுதிவைக்கவில்லை. (திருவண்ணாமலை ரமண ரிஷி என்ற பார்ப்பனர் செய்ததைப் போல) பொதுநலனுக்காக அவை பயன்படும்படி ஏற்பாடு செய்தார்கள். மனிதாபிமானிகள் நாத்திகர்களே தவிர, ஆத்திகர்கள் அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
என்னைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர், சுயமரியாதை வீரர் மன்னை நாராயணசாமி, தோழியர் சங்கரவல்லி, குடியரசுக் கட்சித் தலைவர் பாவலர் பழனிவேலு, டாக்டர் மாறன், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் தமிழ்நாடு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
16.08.1981இல் நடைபெற்ற திராவிடர் விவசாய மகளிர் மாநாடும், எனக்கு வேன் வழங்கும் விழாவும் திருவாரூரில் தெற்கு வீதியிலும் புலிவலம் கருணாநிதி சினிமா கொட்டகையிலும் வெகுசிறப்பாக நடைபெற்றது. கருஞ்சட்டைப் பேரணி புலிவலம் தெற்கு வீதியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிவழியாக திருவாரூர் வீதியிலுள்ள மேடையை அடைந்தது. விழாவில், தி-.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மன்னை நாராயணசாமி (தி.மு.க. முன்னாள் அமைச்சர்), திண்டிவனம் இராமமூர்த்தி, தாழை மு.கருணாநிதி எம்.பி., (தஞ்சை மாவட்ட தி-.மு.க. செயலாளர்) உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.
விழாவில், நான் உரையாற்றும்போது, “தந்தை பெரியாருடைய தொண்டனாக இருக்கிற நான், மன்னிக்க வேண்டும் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டனாக இருக்கிற நான் இந்தப் பணி செய்ய, என்னை ஊக்கப்படுத்த _ உற்சாகப்படுத்த என்னிடம் வேலை வாங்க நீங்கள் இந்த வேனைத் தந்திருக்கிறீர்கள். இந்த விழாவிற்கு தலைமை தாங்கி இதனை அளித்திருக்கிறவர்கள் தந்தை பெரியார் காலத்தில் அய்யா அவர்களுக்குப் பக்கத்தில் எப்படி உரிமையோடும், அன்போடும், உண்மையோடும் அமர்ந்திருந்தார்களோ! அவர்களே இங்கு அமர்ந்திருக்கிறார்கள்.
இங்கே அளிக்கப்பட்ட வேனினுடைய சாவி என்னிடத்தில் அளிக்கப்பட்டது என்றாலும், இதை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய வேண்டினேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
அய்யாஅவர்கள் இந்தச் சமுதாயத்திலே செய்த தொண்டுக்கு உழைப்புக்கு, அறிவு ஆற்றலுக்கு அவர்களுடைய வயதுக்கு, அவர்களுடைய இமயம் போன்ற அனுபவத்திற்கு எல்லையற்ற ஆற்றலால் எப்படி மற்றவர்களை உயர்த்தினார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் வலிமை வாய்ந்த பெரியார் அவர்கள் தோள்கள் மீதுதான் _ தமிழர் சமுதாயத்தில் முன்னுக்கு வந்தவர்கள் தங்கள் கால்களை வைத்துக் கொண்டு வந்தார்கள்.
அவர்களுடைய தோள்கள் மற்றவர்களுடைய கால்கள் எல்லாம் தாங்கிக் கொண்டிருந்த காரணத்தால்தான் உயரம் குறைவாக இருப்பவர்களைக்கூட உயரம் அதிகமாகக் காட்டக்கூடிய அந்தச் சக்தியை தந்தை பெரியார் அவர்கள் பெற்றுத் தந்து அதை அவர்கள் தன்னுடைய பெரிய பணியாகக் கருதினார்கள். அந்தக் காரணத்தால்தான் இந்தச் சமுதாயம் எட்டிப் பார்க்க முடியாத செய்திகளை அவர்கள் தோளின் மீது நின்ற காரணத்தால்தான் தெரிந்துகொண்டது.
அதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் எங்கள் தோள்கள் மீது யாருடைய கால்கள் இருக்கிறது என்று பார்க்க மாட்டோம்.
இமயம் போன்ற அய்யா அவர்களே, தமிழ்ச் சமுதாயத்திற்கு அடிமையாக இருக்கும்பொழுது _ அந்த அடிமைக்கு அடிமையாக எங்கள் வாழ்நாளை ஆக்கிக் கொண்டிருக்கிற நாங்கள் _ எப்படி வார்த்தைகளாலே வர்ணிப்பது என்பதை நினைக்க முடியாதவர்களாக இருக்கின்றோம்.
அய்யா அவர்களுடைய கருத்துகளை யெல்லாம் அப்படியே ஆட்சி பீடத்திலே இருந்தபோது செய்துமுடித்த பெருமைக் குரியவர்கள் டாக்டர் கலைஞர் என்பதால்தான் அவர்களுடைய கரங்களாலே நான் இந்த சாவியைப் பெறுவதிலே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அய்யா அவர்களுக்கு அவர்கள் வழங்கினார்கள் என்பது மாத்திரமல்ல, அப்போது அவர்கள் அமைச்சராகக் கூட இருந்தவர்கள். பதவிச் சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறாரா என்பதைவிட இனமானச் சிம்மாசனத்திலே உட்காரத் தகுதி படைத்தவராக அவர் இருக்கின்ற காரணத்தால் அவருடைய கரங்களாலே இந்தச் சாவியைப் பெற்றுக் கொள்வதிலே மிகப் பெரிய வாய்ப்பு என்று கருதி அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்னும் வாழ்நாளிலே மறக்க முடியாத திருப்பிச் செலுத்த முடியாத நன்றி என்னவென்றால் தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அரசு மரியாதையோடு அடக்கம் செய்தார்களே அதற்காக தமிழ்ச் சமுதாயம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
பெருந்தலைவர் காமராசர் சொன்னார்; நான் முதலமைச்சராக இருந்தால்கூட இப்படிச் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். கலைஞர் கருணாநிதி ஒருவரால்தான் இவ்வளவு துணிச்சலான முடிவெடுத்து செய்ய முடியும்.
அதுவும் செய்ய வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டிய வகையிலே, செய்ய வேண்டியவர் செய்தார் என்று அழகாகச் சொன்னார்கள்’’ என்பதை எடுத்துக்காட்டி, மேலும் பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி நீண்டதோர் உரையை நிகழ்த்தினேன்.
தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் வேன் சாவியை வழங்கியதுடன், உரை நிகழ்த்தனார். அப்போது, “தந்தை பெரியார் அவர்களுக்கு வழங்கிய அதே கையால் இன்று தந்தை பெரியார் அவர்களுடைய இளம் வாரிசாகத் திகழ்கின்ற என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்களுக்கும் வேனை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதோடு மெத்தப் பெருமையும் கொள்கிறேன்.
பெரியாரின் பேருழைப்பால் _ அண்ணாவின் அயராத தொண்டினால், சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளிகள் ஆற்றிய பணியினால் திராவிடர் இயக்கம் ஓங்கு புகழ் எய்தி வளர்ந்திருக்கிறது.
அந்த வளர்ச்சியின் அடையாளம்தான் இந்த வீதி கொள்ளாத அளவிற்கு மாபெரும் கூட்டத்தை நாம் காண்பதாகும்.
நாற்பதாண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் மாணவர் பயிற்சி முகாம்களை ஆங்காங்கு உருவாக்கி அதிலே பயிற்சிபெற்ற மாணவர்களையெல்லாம் மாவட்ட வாரியாகப் பிரித்தனுப்பி சுயமரியாதைக் கொள்கைகளை சாமான்ய மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று ஆணையிட்ட நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் இளம் மாணவர்களாக இருந்த நானும், வீரமணியும் வேறு சில நண்பர்களும், மறைந்த என் அன்பிற்குரிய தோழர் வி.எஸ்.பி.யாகூப் அவர்கள் முன்னின்று நடத்திய சுற்றுப் பயணத்திலே கலந்துகொண்டு பேருந்து வண்டிகளில் ஏறிச் செல்வோம். ஆனால், பேருந்து நிலையங்களிலிருந்தும், புகைவண்டி நிலையங்களிலிருந்தும் நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய இலட்சியங்களை எடுத்துக் கூற வேண்டிய கிராமங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் கிடையாது.
கட்டை வண்டிகளில்தான் ஏறிக்கொண்டு போவோம்; அந்தக் கட்டை வண்டிகளுக்கு கூண்டு இருக்காது. கூண்டு இல்லாத கட்டை வண்டி அல்லது மொட்டை வண்டிகளில் ஏறிக்கொண்டுதான் போவோம்.
இன்றைக்கு திராவிடர் இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது என்றால் கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் மாறி வேன் தருகிறோம். அதிலே வேகமாய்ப் போய் பகுத்தறிவு இயக்க கொள்கைகளைப் பரப்பி விட்டு வாருங்கள் என்று சொல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது’’ என்று பல்வேறு சம்பவங்களை எடுத்துக் கூறினார்.
05-.09.1981 அன்று ‘தினகரன்’ திருச்சிப் பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். “தினகரனுடைய நான்காம் பதிப்பு இன்று முதல் திருச்சியிலிருந்து வெளியிடப்படுகின்றது. இந்த பெருமைக்குரிய விழாவில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அவர்களை ஊக்கப்படுத்த உற்சாகப்படுத்த வேண்டுவதற்காகத்தான் இத்தனைப் பெருமக்களும் இங்கே கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மேடையில் இருக்கின்றவர்கள் உருவத்தால் மாறுபட்டி ருந்தாலும் அணுகுமுறையிலும் மாறுபட்டி ருந்தாலும்கூட சமுதாயத்தினுடைய, இனத்தினுடைய தன்மானம், உரிமை என்று வருகின்றபோது பொது இலக்கோடு பணியாற்றக் கூடியவர்கள்’’ என்று அப்போது தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்திக் கூறினேன்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 24.09.1981 அன்று நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சேலத்தில் 19, 20.09.1981 ஆகிய தேதிகளில் கூடிய “சேலம் மாவட்ட பிராமணர் சங்க’’ மாநாட்டில் பிராமணர்களது கல்வி, உத்யோக உரிமைகள் தமிழ்நாட்டில் வெகுவாக நசுக்கப்படுவதாகவும், அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக வரும் நவம்பர் 11ஆம் தேதியை “பிராமணர் விழிப்பு நாளாக’’(Brahmins Awakening Day) நாடு முழுவதும் நடத்தப்பபோவதாகத் தீர்மானித்து, அத்தீர்மானம், கொட்டை எழுத்துத் தலைப்புடன் “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’’ (The Hindu) ஏட்டில் மகிழ்ச்சி பொங்க வெளியாகியுள்ளது.
அது மட்டுமா? அவர்களது மற்றொரு முக்கியக் கோரிக்கை என்ன தெரியுமா? “It is the duty of Government to provide education to every Brahmin child”. அதாவது, “ஒவ்வொரு பிராமண குழந்தைக்கும் கல்வியைத் தரவேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும்’’ என்பதே!
இதனை விளக்கி நான் ‘விடுதலை’யில் 25.09.1981 அன்று இரண்டாம் பக்கத்தில் விளக்கியிருந்தேன். இப்போதுதான் பார்ப்பனரின் ஒப்புதல் மூலம் போன்ற பதில் அதற்குக் கிடைத்துள்ளது.
எல்லோரும் வகுப்புவாத அடிப்படையில் அவரவர் சங்கங்களை அமைத்துக் கொண்டதால், இவர்களும் வேறு வழியின்றி வகுப்புவாத அடிப்படையில் (On Communal line) சங்கம் அமைக்க வேண்டியதாயிற்றாம்.
இதனை விளக்க பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு வாரம் ஒன்றினை நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை தமிழ்நாடு எங்கணும் நடத்த தோழர்கள் இப்போதிருந்தே ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!! என்ற அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.
சென்னைப் பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கும் முறையே டாக்டர் சாந்தப்பா, டாக்டர் வி.சி.குழந்தைசாமி ஆகியோரும், தஞ்சையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சுப்ரமணியம் அவர்களும், துணை வேந்தர்களாக நியமிக்கப் பட்டதை நாம் பாராட்டி வரவேற்கிறோம் என்று ‘விடுதலை’யில் இரண்டாம் பக்கத்தில் (29.09.1981) “மூன்று துணை வேந்தர்கள்!’’ என்று தலைப்பிட்டு வரவேற்று அறிக்கையை வெளியிட்டு நமது பாராட்டுதலை தெரிவித்து இருந்தோம்.
திருச்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நிறுவனர் நாள் விழாவும், பெரியார் பிறந்த நாள் விழாவும் வெகு சிறப்புடன் நடைபெற்றது. தந்தை பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து, விரைவில் பெண்கள் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகளை அன்றே முன்வைத்தோம். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் என்ற முறையில் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினேன்.
விழாவிற்கு தலைமை வகித்த நாடாளுமன்ற துணைத் தலைவர் (Deputy Speaker of Lok Sabha) மாண்புமிகு ஜி.லட்சுமணன் அவர்கள், மதுரை பே.தேவசகாயம் _ அன்னத்தாய் மன்றத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது, பெரியார் பெரியாரால் பெரியாருக்கு ஒரு சரியான நினைவுச் சின்னமென்றால் பெண்கள் கல்விக்காக யுனிவர்சிட்டி உருவாக்கப் படுவதுதான் உண்மையான நினைவுச் சின்னம் என்கிற வகையிலே தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநர்களும் உதவி செய்ய வேண்டும்.
நானும் என்னாலான தொண்டினை அய்யா அவர்கள் பெயராலே பெண்கள் யுனிவர்சிட்டி ஒன்று ஏற்படுவதற்கு நிச்சயமாகப் பாடுபடுவேன். இந்தப் பணிகளையெல்லாம் செய்வதென்றால் சாதாரணமான விஷயமல்ல. இதையெல்லாம் ஒரு தொண்டுள்ளம் படைத் தவர்கள் _ தியாக உணர்வு படைத்தவர்கள் தங்களைத் தாங்களே எல்லா வகையான சவுகரியங்களையும் மறுத்துக் கொள்பவர்கள் தான் இத்தகைய தொண்டைச் செய்ய முடியும். இதற்காக அவர்கள் ரிஷிகளாக ஆக வேண்டியதில்லை என்று எடுத்துக் கூறினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்கள் உரையாற்றும்போது, “நண்பர் வீரமணி அவர்கள் பெரியார் வாரிசு என்றால் மனித உறவின் அடிப்படையில் அவர் வாரிசாக அவர் வரவில்லை! பெரியாரின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும் அவர் நடத்திய இயக்கத்திற்கும் வாரிசாக வந்தார். ஆகவே அந்த அறக்கட்டளையை நடத்தி வைப்பதற்கு ஒரு தகுதி பெற்றார். அந்தத் தகுதியின் காரணமாக அறக்கட்டளைகள் முறையாக, சரியாக நடத்தி சமூகத் தொண்டாற்றுகிறார். எனவே, அவர் நம்முடைய பாராட்டுதலுக்குரியவர்’’ என்றார்.
விழாவில் கலந்துகொண்ட செல்வி சாந்தாஷீலா நாயர் அய்.ஏ.எஸ். அவர்கள், “உலக சீர்திருத்த வாதிகளில் தனிச்சிறப்பு பெற்றவர் தந்தை பெரியார். “தோன்றின் புகழோடு தோன்றுக’’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு எடுத்துக்காட்டாக, தோன்றி வாழ்ந்தவர் பெரியார். சீர்திருத்தவாதிகளில் பலர் பேசுவார்கள்; எழுதுவார்கள்; பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் செயல்படுவதில் சிரமம் இருந்தால் செயல்படுத்தாமல் விட்டு விடுவார்கள். பெரியார் மட்டும்தான் உலக சீர்திருத்வாதிகளில் ஒரு இயக்கத்தை நடத்திக் காட்டினார். பல லட்சியங்கள் நிறைவேற பல நிறுவனங்களை அமைத்தார். மறைந்த பிறகு அவரது லட்சியங்கள் நிறைவு பெற்று வருகின்றன. தனது சொத்துகள் அனைத்தையும் பொதுச் சொத்தாக மாற்றினார்’’ என்று குறிப்பிட்டார்.
விழாவில், நான் பேசுகையில், “5000 ஆண்டுகால தமிழக வரலாற்றில் மிக நீண்ட கால இருண்ட காலத்தை மாற்றி அமைக்க வந்தவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதுபோல், “பெரியார் தனிமனிதரல்ல. அவர் ஒரு சகாப்தம் _ அவர் ஒரு காலகட்டம்.’’ தந்தை பெரியார் அவர்கள் நமக்குச் சுயமரியாதை வேண்டும். சுயமரியாதையுடன் தான் வாழ வேண்டும். ஆனால், பொதுநலத்திற்கு, இனநலத்திற்கு தன்மானத்தைக் கூட விட்டு தொண்டு செய்ய வேண்டும் என்றார்’’ என்று எடுத்துக்கூறினேன்.
விழாவில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மாண்புமிகு க.ராசாராம் அவர்கள் பெரியார் துவக்கப் பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். அவர்களே இல்லாம லிருப்பார்களேயானால் இங்கே மேடையிலே இருக்கிற நாங்கள் அத்தனைப் பேரும் இவ்வளவு பெரிய பொறுப்புகளிலே இருக்க முடியுமா?’’ என்று கேட்டு பெரியாரின் அரும்பணியை விளக்கினார்.
விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள் பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.